http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, February 26, 2022

தஞ்சை பெரிய கோவில் - விஸ்வரூபம்,

🌹 விஸ்வரூபம் ➖➖➖➖➖➖➖ கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது…!!! வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா. யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா…???!!! இல்லை… இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. புதுக்கோட்டைக்கு அருகே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர். எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய். குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து. வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது. எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. சாவா மூவா பேராடுகள் என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (ஈதஞுடூ). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது. விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு. இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், தென்திசை மேரு! உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது!!! விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்…!!!???

Monday, December 27, 2021

கோயில்.

கோயில்: *அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில்* *ஆலயம் தொழுவது சாலவும் நன்று* கோயில்கள் பிரபஞ்சத்தின் ஆற்றலை பூமியில் சேகரிக்க நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. *கிரகங்களின் மின்காந்த அதிர்வலைகள் பூமியை வந்தடையும் போது, மனித உயிரினங்களின் மீது பாய்கிறது* . இது 24 மணி நேரமும் நடக்கிறது. இந்நிகழ்வின் போது, நமது முன்னோர்கள் மின்காந்த அலைகளை சேமிக்கும் அறிவியல் தளமாக கோயிலை உருவாக்கினர். *கருங்கல்லால்* கோயில்களில் சிலைகள் உருவாக்கப்பட்டது. *கருங்கல் மந்திர ஒலி அலைகளை உள்வாங்கி சேமித்து வைத்து கொள்ளும்.*> உள்வாங்கப்படும் ஒலி அலைகள் கோயில் முழுவதும் மின்காந்த அலைகளாக பரவி நிற்கும். அபிேஷகம் செய்யப்படுகின்ற பால், எண்ணெய், நெய் போன்ற பொருட்கள் ஆகர்ஷண சக்தியை உள்வாங்கி கொள்கிறது. சிலையை சுற்றி அலங்கரிக்கப்படுகின்ற மலர்களானது, நல்ல மின் காந்த அலைகளை அப்பகுதியில் பரவி நிற்க உதவுகின்றது. மூலவரை நாம் தரிசிக்கும் போது, அங்கு பரவியுள்ள மின்காந்த அலைகள் நமது கண்களின் வழியாக உடல் முழுவதும் பரவுகிறது. தீபம் பார்த்தால் புண்ணியம் என்று சொல்வார்கள். தீபத்தை தொட்டு வணங்கும்போது, மூலவரின் அருகில் உள்ள மின்காந்த அலைகள், நம் கைகளின் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றது. அதே போல்தான் திருநீறு, குங்குமம் மூலம் கோயிலில் உறைந்திருக்கின்ற பிரபஞ்ச ஆற்றலான கிரக சக்திகள் நம் உடலில் இணைகிறது. *மனதின் நிலைப்பாடு :* முழுமையான நல்ல மின்காந்த அலைகள் உடலில் சேர்வதன் மூலம் பல்வேறு நலன்களை அடையலாம். அதே நேரத்தில் *கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்ற அனைவரும் துன்பம் இல்லாமல் வாழ்கின்றனரா?* என்ற ஐயப்பாடு எழக்கூடும்.ஒரு மாணவன், தன்னுடைய பாடத்திட்டம் 100 சதவீதம் இருந்தாலும், 25 சதவீத மனதை நிலைப்படுத்தி படித்தால், 25 மதிப்பெண்ணும். 50 சதவீதம் நிலைப்படுத்தி படித்தால் 50 சதவீத மதிப்பெண்ணும், 100 சதவீதம் மனதை நிலைப்படுத்தி படித்தால் நுாறு மதிப்பெண்களும் பெறுகிறான்.அதே போல் தான் கோயிலுக்கு செல்கின்ற மக்கள், கோயிலில் தன் சிந்தனைகளை வேறு இடத்தில் வைத்தால் ஆலயம் சென்றும் பலன் இல்லை. ஒருவர் புதிய காலணியை வாங்கி கோயில் வாசலில் போட்டுவிட்டு, உள்ளே சென்று இறைவனை வணங்கும்போது, ஆழ்மனதானது இறைவன் மீது இல்லாமல், தான் வாங்கிய காலணி மீது இருந்தால், மின்காந்த அதிர்வலைகள் உடலில் இணையாது. இதன் அடிப்படை தத்துவம் என்னவென்றால், *ஆழ்மனதை ஒரு நிலை படுத்தாவிட்டால், பிரபஞ்ச பேராற்றலான கிரக சக்திகள் அந்த மனித உயிருக்கு கிடைக்காது.* *கோயில் கோபுரம் :* கோயிலின் உள்ளே நுழையும்போது, கோபுரம் பிரபஞ்ச சக்தியை உள்ளே இழுக்கிறது. கோபுர கலசத்தில் *வரகு* என்ற தானியம் கொட்டப்படுகிறது. அந்த தானியத்தின் மின்காந்த ஆற்றல், மின்னலால் ஏற்படும் மின் சக்தி, கோயிலை தாக்காமல் பாதுகாக்கிறது. கோயிலின் *ஈசான்ய பகுதி, பிரபஞ்ச ஆற்றல் நுழையும் பகுதியாக இருக்கின்றது.* ஈசான்ய பகுதியில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒன்பது நவகிரகத்தின் சக்திகளும், கோயில் முழுவதும் பரவுகிறது. *பிரபஞ்சத்திற்கும் மூலவருக்கும் இணைப்பு பாலமாக கொடிமரம்* அமைக்கப்பட்டிருக்கிறது. வான் மண்டல மின்காந்த சக்தி, கோயிலின் *கொடிமரம் மூலமே மூலவருக்கு அனுப்பப்படுகிறது.* அதனால் தான் நம் முன்னோர்கள், *கொடிமரம் அருகே சென்று நம் கோரிக்கைகளை சொன்னால், அவை வான் மண்டலத்தில் உள்ள பிரபஞ்சத்தின் மூலம் இணைவு ஏற்பட்டு, அக்கோரிக்கை நிறைவேறும்* என்றனர். அதே போல் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வ சக்தியின் மீது உறைகின்றது. *பிரபஞ்சத்தில் கலந்து வருகிற ஒன்பது சக்திகள் உறையக்கூடிய இடமாக கோயில்களை முன்னோர்கள் அமைத்தனர்.* *ராகங்கள் : பக்தி, ஞானம், கலை, இலக்கியம், வேதம்* போன்ற பல்வேறு தன்மைகளை ஒரே இடத்தில் கொண்டுவரக்கூடிய ஒரே இடமாக கோயில் திகழ்கிறது. இலக்கியமும், பண்பாடும் ஆலயத்தின் துாண்களாக உள்ளது. நமது முன்னோர்கள் *கர்நாடக இசை ராகங்களை மனம் குளிர கேட்டால் மனதளவில் பல நல்ல மின்காந்த அதிர்வுகள் இணைந்து, ஆயுளை நீட்டிக்க முடியும்,* என்பதை கண்டறிந்து இசை கச்சேரிகளை நடத்தும் இடமாக கோயில்களை தேர்வு செய்தனர்.*அமிர்தவர்ஷினி என்ற ராகம் மழைபொழியவும், 'ஹம்சானந்தி' மனஅழுத்தம் தீரவும், 'கேதாரம்' ஆஸ்துமா, தலைவலி, இருமல் போன்ற நோய்களை நீக்கவும், 'விஜயஸ்ரீ' வெற்றி கிடைக்கவும், 'அகிர் பைரவி'உயர் ரத்த அழுத்தம் தீரவும், 'ராமகளி' ராகம் அல்சர் தீரவும், 'கோலா ஹலம்' என்ற ராகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் பாடினர்.* இவ்வாறு அறிவியல் உண்மைகள் அடங்கிய இசை, கோயில்களில் இசைக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் 70-க்கும் மேற்பட்ட ராகங்களை பயன்பாட்டில் குறிப்பிடலாம். கணவன், மனைவி உறவின் அறிவியல் *உண்மைகளை தெரிந்து கொள்ள கூடிய சிற்பங்கள் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளது.* *மொத்தத்தில் அறிவியல் சிறப்பம்சம் பொதிந்து கிடக்கும் ஓர் ஆராய்ச்சி கூடம் கோயில்.*

Tuesday, December 21, 2021

சங்கரன்கோவில் கோமதி அம்மன்.

♥ சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசிக்கும் முறை ♥ ♥♥ சங்கர நாராயணராக காட்சி தந்து கோவில் கொண்டு அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் சிவனாகவும் இடப்பக்கம் நாராயணனாகவும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். ♥♥ கோமதி அம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 பிரதான சக்தி பீட இடங்களில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும். கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது. ♥♥ சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள். புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது. ராகு கேது தோஷம் நீங்கும் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும். மனநலம் சரியாகும் அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும். சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர். இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும். நாக சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம். ஸ்தல வரலாறு:- மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதர, காட்டை அழித்து, நாடாக்கி உக்கிரபாண்டிய மன்னர் 947 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய ராஜ கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரம் தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் (கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில்) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம். காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும். சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதிக்கு செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றது. பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை அம்பாள் காலடிகளில் தான் இருக்கும். ஆனால் இங்கு கோமதி அம்மன் சன்னிதி முன் பெரிதாக சக்கரம் உள்ளது. பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம். கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று வன்மீகம் என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும். மருத்துவ குணமுடைய இந்த புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். இந்த புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும். வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது. , செல்வம் செழிக்கும் . கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கல பொருட்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். ஸ்தல வரலாறு:- சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூல காரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர். இருவரும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அன்னை அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, பொதிகை மலைப் பகுதியில் புன்னை விருட்சம் உள்ள புன்னை வனத்தில் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்” என்றார். பார்வதியும் புன்னை வனத்தில் சிவனை நோக்கி தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பவுர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக உமாதேவி, சங்கன், பத்மன் உள்ளிட்ட சகலருக்கும் காட்சி கொடுத்தார். ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவ பெரு மான் கூறினார். அம்மனின் வேண்டுகோளின்படி, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியாருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார். ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளில் ஆடித் தபசு விழா கொண்டாடப்படுகிறது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், விஷஜந்துக்கள் பயம் நீங்கும். கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள வன்மீகம் என்ற பாம்பு புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். ஒவ்ஒரு கோவிலிலும் அந்த தெய்வத்தை தரிசிக்க ஒரு முறை உண்டு. உதாரணமாக ♥ தில்லை சென்றால் காளியை தரிசித்து பின்னரே நடராஜரை தரிசிக்க வேண்டும். ♥ பெருமாளை சேவிக்கும்போது பாதாதி கேசமாக முதலில் பாதம் பின் வயிறு பின் முகம் என தரிசிக்க வேண்டும். ♥ காசி யாத்திரை சென்றால் ராமேஸ்வரத்தில் மண் எடுத்து காசியில் விட்டு பின் கங்கா ஜலத்தை ராமேஸ்வரம் கொண்டு வந்து அந்த நீரை ஸ்வாமிக்கு அபிஷேகித்து யாத்திரையை பூர்த்தி செய்வது மரபு. அது போல கோமதியை தரிசிக்க ஒரு சம்பிரதாயம் உள்ளது. ♥ கோமதியை தரிசிக்க வருவோர் முதலில் மதுரையில் மீனாட்சியை தரிசிக்க வேண்டும். மீனாட்சியை தரிசித்து அனுமதி பெற்று பின் கோமதியை தரிசிக்க வேண்டும். கோமதியை தரிசித்து அவள் அனுக்கிரகத்தை பெற்று பின் மீண்டும் மீனாட்சியை தரிசித்து நன்றி கூறிவிட்டு தம் இல்லத்துக்கு திரும்ப வேண்டும். ஏன் என்றால் கோமதி மஹாத்ரிபுரசுந்தரியாக ராஜராஜேஸ்வரியாக அன்னை ஆவுடை நாச்சியார் பாண்டியநாட்டை ஆட்சி செய்கிறாள். இவளுக்கு மந்திரியாக இருப்பவள் தான் மீனாட்சி. ராஜமாதங்கியாக இருக்கும் ச்யாமளா மீனாட்சியை தரிசித்து அம்மா நான் உனது ராணியான கோமதியை பார்க்கனும் அனுமதி கொடு என்று வேண்டி அவள் அனுமதியை பெற்று பின் கோமதியை தரிசிக்க வேண்டும். பின் மீண்டும் மீனாட்சியை பார்த்து உன் அனுமதியால் நான் கோமதியை பார்த்துவிட்டேன் நன்றி என்று கூறிவிட்டு இல்லம் திரும்ப வேண்டும். பாமர மக்கள் கோமதி அக்கா மீனாட்சி தங்கை; அதனால் தங்கையை பார்த்துட்டு அக்காவ பாக்கனும்ன்னு சொல்வது பழக்கம். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும். இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் உண்டு. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது. நடை திறந்திருக்கும் நேரம்:- காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை

Friday, December 10, 2021

சீர்காழி சட்டநாதர் .

🔯சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில். சிறப்பு பதிவு சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார். குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார். சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம். பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள். திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள். இதற்கு அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர், சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு ‘சட்டை நாதர்’ என்று பெயர். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் சின் முத்திரையைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது. இந்தத் திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது. அன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார். சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. மூன்று வயதில் தோடுடைய செவியன் பதிகம் பாடி ஈசனை ஆராதித்த சம்பந்தர், தனது சிவத்தல யாத்திரையை தொடங்கினார். அப்போது அருகில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றடைந்தார். திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியில் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே, இறைவனை துதித்து பதிகம் பாடினார். ‘மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’ என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கரங்கள் சிவக்க.. சிவக்க.. கைத்தாளம் இட்டு, தன் துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முன்வந்தார். திருத்தாளமுடையார், ஓசை கொடுத்த நாயகி அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் ‘ஹாரக்குதவனேஸ்வரர்’ கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தல அம்பிகையான அபீதகுசாம்பாள் அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்றுமுதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார். சுந்தரர் இத்தல இறைவனைப் பற்றி பாடும் போது, சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிந்துள்ளார். ஆம்! ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே' என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் பிள்ளையாரும், பழனி தண்டாயுதபாணியும் இருபுறமும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பு. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகளும் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர். மந்தாகினி என்ற பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, ஈசன்- அம்பாளை முறைப்படி வழிபாடு செய்து, பின்னர் இத்தல கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வழி பட்டுச் சென்றாளாம் மந்தாகினி. சிறிது காலத்தில் மந்தாகினியின் மகன் விஸ்வநாதன் ‘அம்மா' என்றழைத்து பேச ஆரம்பித்தானாம். மகிழ்ந்த மந்தாகினி மீண்டும் இத்தலம் வந்து நன்றிப் பெருக்குடன், 42 கிராமில் தங்கத்தால் தாளம் செய்து அதனை இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளார். இதே போல் 12 வயதாகியும் பேச்சு வராத ஒரு சிறுவனை அவனது பெற்றோர் இந்த தலத்திற்கு அழைத்து வந்து வழிபட்டு சென்றனர். பின்னர், இத்தலத்தில் சம்பந்தர் பாடிய, ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தை வீட்டிற்குச் சென்று தினமும் பாராயணம் செய்து வந்துள்ளனர். இதன் பலனாக அந்தச் சிறுவன் பேசத் தொடங்கினான். அவனின் பெற்றோரும் பொன்னால் ஆன தாளத்தை செய்து காணிக்கையாக இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளனர். இவ்வாறு அம்மனின் அருளால் பேச்சு வந்தவர்கள், தங்களின் முழு முகவரியுடன் அந்த விவரத்தை ஆலய பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவேட்டின் படி பார்க்கும்போது, அம்மன் அருளால் பேச்சு வரப்பெற்றவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல் என்பது ஓசை நாயகியின் அருளுக்கு சாட்சி. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் மற்றும் பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகளை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்து தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்து, 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, நிவேதனம் செய்யப்பட்ட தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். கருவறையில் கிழக்கு நோக்கிய சுவாமியையும், அம்பாளையும் வணங்கி ஆலயப் பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதிகளும் உள்ளன. சனிக் கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட் களின் அந்திப்பொழுதில், இத்தல சனிபகவானையும் பைரவரையும் தொடர்ச்சியாக 8 முறை வழிபாடு செய்து வர நவக்கிரக தோஷங்கள் யாவும் அகலும் என்கிறார்கள். 🔯இரண்டு அம்மன்கள்* திருக்கோலக்கா கோவிலில் ஓசை கொடுத்த நாயகி அம்மனுக்கு இரண்டு சிலைகள் உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன் புதியவராம். கருவறையின் முன் மண்டபத்தில் வடபுறமாய் தனிச் சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனை, பழைய அம்மன் என்கிறார்கள். முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் தற்போது கருவறையில் உள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு, பழைய சிலையை அகற்றிவிட்டனர். அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த ஊரார்... பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும், மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டனர். இத்தல அம்பாளுக்கு புடவை சாற்றுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்பது ஐதீகம். சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது. ஓம் நமசிவாய நமஹா ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Monday, November 15, 2021

Lord Siva பிரதோசம்

🙏**திருச்சிற்றம்பலம்**🙏 *🌹இன்று பிரதோஷம் 🌹* சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும். இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ? பிரதோஷம் மகிமை அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்; ஞாயிறு பிரதோஷம்: சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திங்கள் பிரதோஷம்: பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும். செவ்வாய் பிரதோஷம்: செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. பலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு. புதன் பிரதோஷம்: புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். வியாழன் பிரதோஷம்: குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். வெள்ளி பிரதோஷம்: சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். சனி மஹா பிரதோஷம்: சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். பலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும். கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் : வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும். தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும். *அனைவருக்கும் பிரதோஷம் நல்வாழ்த்துக்களுடன் இனிய காலை வணக்கம்.*🙏 🌹🌹🌹 *🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏* ‌*திருச்சிற்றம்பலம்* ஆதி மூலமே மூலத்திற்கெல்லாம் மூலமே 🙏நீர் சாபமே கொடுத்தாலும் உம்மை வணங்கும் படி சாபம் கொடு சிவபெருமானே.... *எம் குல காப்பானே* *வணங்குகிறேன்.* 🙏🙏🙏🙏🙏🙏 *தலைமைக்கெல்லாம் தலைமையே* *எப்பிறவி கொடுத்தாலும்* *உம்மை வணங்கும்* *படி வரத்தை* *கொடு* *சிவபெருமானே...*

Tuesday, September 28, 2021

சிவபெருமான் பற்றிய 182 தகவல்கள்

சிவபெருமான் பற்றிய 182 தகவல்கள் 1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை..... திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.... ஐப்பசி பவுர்ணமி 3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்..... தட்சிணாமூர்த்தி 4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்) 5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்..... திருக்கடையூர் 6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்...... பட்டீஸ்வரம் 7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்......... திருமூலர் 8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்....... திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்) 9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது........... துலாஸ்நானம் 10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது......... கடைமுகஸ்நானம் 11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்..... கோச்செங்கட்சோழன். 12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்.... நடராஜர்(கூத்து என்றால் நடனம்) 13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்... சிதம்பரம் 14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்... காசி 15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்... திருவண்ணாமலை 16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் 17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்... மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது) 18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்... சின்முத்திரை 19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்... சுந்தரர் 20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்... ஸ்ரீசைலம்(ஆந்திரா).. 21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்... ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில் 22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.... திருவண்ணாமலை 23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்.... திருமங்கையாழ்வார் 24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்.... பரணிதீபம் (அணையா தீபம்) 25. அருணாசலம் என்பதன் பொருள்... அருணம்+ அசலம்- சிவந்த மலை 26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம் 27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்... பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் 28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு... 1997, டிசம்பர் 12 29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்... திருவண்ணாமலை (கிளி கோபுரம்) 30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன் 31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்..... 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை) 32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்.... அனுமன் 33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகம் 34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்.... அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்) 36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108 37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்... காரைக்காலம்மையார் 38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்...... அப்பர்(திருநாவுக்கரசர்) 39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்.. ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்) முயலகன் 40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்.... குற்றாலம் 41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்... சங்கார தாண்டவம் 42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? வெள்ளியம்பலம்(மதுரை) 43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்... பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்) 44. நடராஜருக்குரிய விரத நாட்கள்.... திருவாதிரை, கார்த்திகை சோமவாரம் 45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்.... களி. 46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்... தாயுமானசுவாமி 47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்.... காளஹஸ்தி 48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்... பிருங்கி 49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும் பத்தாம் திருமுறை 50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்... திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.. 51.விபூதி என்பதன் நேரடியான பொருள்... மேலான செல்வம் 52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்... கஞ்சனூர் 53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? 12 54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்.... சுந்தரானந்தர் 55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்.. . ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்) 56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி.... திலகவதி 57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்... சேரமான் பெருமாள் நாயனார் 58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்... வள்ளலார் 59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை...... மங்கையர்க்கரசியார் 60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்தனபாண்டியன் 61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்... மகேந்திரபல்லவன் 62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ... தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்) 63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? எட்டு 64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? மாசி தேய்பிறை சதுர்த்தசி 65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? 4 கால அபிஷேகம் 66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்..... நமசிவாய 67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? சிவாயநம 68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை... திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம) 69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? அருவுருவம் 70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்.... ராமேஸ்வரம் 71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்... தட்சிணாமூர்த்தி 72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? 12 73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்... குற்றாலம் குற்றாலநாதர் கோயில் 74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்... வில்வமரம் 75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி... மானசரோவர் 76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 81 77.பதிகம் என்பதன் பொருள்... பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு 78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்... சிவஞானபோதம் 79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை.... டமருகம் அல்லது துடி 80.அனுபூதி என்பதன் பொருள்.... இறைவனுடன் இரண்டறக் கலத்தல் 81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை..... மதுரை மீனாட்சி 82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்..... மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை 83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்.... தடாதகைப் பிராட்டி 84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது. நான்மாடக்கூடல், ஆலவாய் 85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்... கடம்ப மரம் 86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம். கடம்பவனக் குயில் 87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்.... திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் 88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்... குமரகுருபரர் 89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்.... மகாகவி காளிதாசர் 90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்... சித்ராபவுர்ணமி.. 91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்... ரோஸ் பீட்டர் 92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? ஜுரகேஸ்வரர் 93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்? மாணிக்கவாசகர் 94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்... இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்) 95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்.... சூலைநோய்(வயிற்றுவலி) 96.அம்பிகைக்கு உரிய விரதம்.... சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை) 97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்.... தோணியப்பர்(சீர்காழி) 98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்... திருநாவுக்கரசர் 99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்...... சுந்தரர் 100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்... சேக்கிழார் 101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்... சேந்தனார் 102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்.. சண்ட தாண்டவம் 103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்... குருந்த மரம்(ஆவுடையார்கோவில்) 104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்... திருவானைக்காவல் 105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்.... சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் 106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்... திருமூலர் 107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்.... காஞ்சிபுரம், திருவாரூர் 108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர். சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'. 109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்... பூசலார் நாயனார் 110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்.... தி ருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி) 111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் 112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்... பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்) 113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்.... அகத்தியர் 114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்.... தட்சிணாமூர்த்தி 115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்... திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் 116. தஞ்சாவூரில் உள்ள மூலவர் பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார் 117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.... சேந்தனார் 118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்... திருமூலர் 119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்.... திருஞானசம்பந்தர் 120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்... திருநாவுக்கரசர்.. 121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்.... சுந்தரர் 122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்... மாணிக்கவாசகர் 123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்.... திருமூலர் 124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்.... அபிராமி பட்டர் 125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்... குலசேகராழ்வார் 126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்.... இடைக்காட்டுச்சித்தர் 127. கோயில் என்பதன் பொருள்.... கடவுளின் வீடு, அரண்மனை 128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்.... சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் 129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்? முன்வினைப்பாவம் 130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்? சிவபெருமான் 131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்... சாமவேதம் 132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்... ஆனாய நாயனார் 133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்? பாணபத்திரர் 133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்... திருவையாறு 134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்... ராஜராஜசோழன் 135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்.... சோமாஸ்கந்தர் 136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்... விநாயகர் அகவல். 137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்.... மூர்த்திநாயனார் 138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்..... காளஹஸ்தி 139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்... திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது) 140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்... மதுரை சொக்கநாதர் 141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்... திருச்சி தாயுமானவர் 142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்... திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி) 143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்... திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) 144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்? காளஹஸ்தி 145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்... திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில் 146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்... திருவண்ணாமலை 147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்... திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்) 148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்..... திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்) 149. சிவபெருமானின் வாகனம் ரிஷபம்(காளை) 150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்.... சந்தியா தாண்டவம்.. . 151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்... கேதார்நாத் 152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்? மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்) 153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்.... திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர் 154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது.... பிட்சாடனர் 155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்.... திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) 156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்...... நமிநந்தியடிகள்( திருவாரூர்) 157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்.... திருவானைக்காவல் 158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்..... கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்) 159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்? காரைக்காலம்மையார் 160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்.... திருநாவுக்கரசர் 161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்... திருக்கருக்காவூர் 162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்.... திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் 163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள ்... ருத்ராட்சம் 164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்.... சிவன் 165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர். அனங்கன்(அங்கம் இல்லாதவன்) 166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்.... ருத்ரபசுபதியார் 167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்... ருத்ரபசுபதியார் 168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது? சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்) 169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை..... 14 170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது? கேதார்நாத் 171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்..... பதஞ்சலி முனிவர். 172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்..... வியாக்ரபாதர், பதஞ்சலி 173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்......... சிவபெருமான் 174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர் குஞ்சிதபாதம் 175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்...... ரத்தினசபாபதி 176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்.... சித்தாந்த அட்டகம் 177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்..... கோமுகி 178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்? ஆறுகாலம் 179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்....... விரைந்து அருள்புரிபவர் 180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்..... லிங்கோத்பவர் 181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை? 64 182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்.... சோமாஸ்கந்தர்

Monday, September 27, 2021

ஆன்மீககுறிப்புகள்.

🌼ஆன்மீக குறிப்புகள்.🌼 🌟கடவுளின் அவதாரங்கள் ஒரு பார்வை. 1. *முருகன் - வைகாசி விசாகம்* 2. *ஐயப்பன் - பங்குனி உத்திரம்* 3. *ராமர் - புனர்பூசம்* 4. *கிருஷ்ணன் - ரோகிணி* 5. *ஆண்டாள் - ஆடிப்பூரம்* 6. *அம்பிகை - ஆடிப்பூரம்* 7. *சிவன் - திருவாதிரை* 8. *விநாயகர் - ஆவணி விசாகம்* 9. *பார்வதி - ஆடிப்பூரம்* 10. *அனுமன் - மார்கழி அமாவாசை* 11. *நந்தி - பங்குனி திருவாதிரை* 12. *திருமால் - திருவோணம்* 13. *பரதன் - பூசம்* 14. *லக்குமணன் - ஆயில்யம்* 15. *சத்ருகன் - மகம்* 16. *நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் - பிரதோச நேரம்* 17. *வீரபத்திரர் - மாசி மாதம் பூச நட்சத்திரம்* 18. *வாமனர் - ஆவணி திருவோணம்* 19. *கருடன் - ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்* 🌟33 கோடி தேவர்கள் யார் ? 1. ஆதித்தர் - 12 கோடி பேர் 2. உருத்திரர் - 11 கோடி பேர் 3.அஸ்வினி - 2 கோடி பேர் 4. பசுக்கள் - 8 கோடி பேர் 🌟பூஜை என்றால் என்ன? ஆத்ம சாதகன் அடைந்துவரும் மனபரிபாகத்தின் புறச்செயல் ஆகும் எல்லா கிரியங்களை நிறைவுபடுத்துவது ஆகும் ஆன்ம ஞானத்தை உண்டு பண்ணுவது ஆகும் இது பஞ்சபூதவகையை சேர்ந்தது ஆகும். 🌟ஆறு கால பூஜை . 1. உஷத்காலம் - காலை 6 மணி 2. காலசந்தி - காலை 8 மணி 3. உச்சி காலம் -பகல் 12 மணி 4. பிரதோசம் - மாலை 6 மணி 5. சாயரட்சை - இரவு 8 மணி 6. அர்த்தசாமம் - நடுஜாமம் 10.30 to 11.30 வரை. 🌟தீப ஆராதனை ( கிரியை) 1. கற்பூரம் - இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, சிவத்திலே ஜீவன் கரைந்து இரண்டற்ற தன்மை உண்டாக்குவது ஆகும் அத்தகைய நிலையை நாம் நமக்குள் அகக்கண்ணால் அடைய வேண்டி கற்பூர ஒளியை கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும் நமக்கு அஞ்ஞானத்தை ( அறியாமையை, இருளை) போக்கி மெய்ஞானத்தை ( ஞானஅறிவை, ஒளியை) அருளுவது ஆகும். 2. தேங்காய் - ஆன்மாவின் ( உயிரின் ) மும்மலத்தை ( ஆணவம், கன்மம், மாயை, ) நீக்கி பேரின்பம் பெறவேண்டும் என உணர்த்துதல் ஆகும் மேல்மட்டை - மாயா மலம், உரித்தெடுக்கும் நார் - கன்ம மலம், உள்ளே ஓடு - ஆணவ மலம், வெள்ளைப்பருப்பு - பேரின்பம் ( வீடுபேறு, முக்திபேறு ) ஆன்மா நீர் - ஆண்டவன் திருவருள் ஆகும். பழம் - சாதகனின்( அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டு மெய்ஞானத்தை அடைந்தவன்) நல்வினை பலன்களை குறிக்கும். விபூதி ( திருநீறு) - பசு சாணத்தை சாம்பலாக்கி செய்யப்படுவது ஆகும் உடல் சாம்பல் ( அ) மண் ஆகலாம் என்ற தத்துவத்தை குறிப்பது ஆகும் திருநீறு உடலில் உள்ள அசுத்தம் அகற்றி நோய் கிருமிகளை போக்கி பிணி அகற்றும் மருந்து ஆகும் பதி,பசு,பாசம், என்ற மூன்றாக கோடுகளை படித்த வண்ணம் சைவமும், நின்ற வண்ணம் வைணவமும் இடும் உடம்பில் திருநீறு இடும் இடங்கள் 16 ஆகும் திருநீறை பேணி அணிபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் மேலும் எல்லா நலன்களையும் தர வல்லது திருநீறு ஆகும். குங்குமம் - தேவியின் அருளையும், நிறத்தையும் குறிக்கும் நெற்றி புருவத்தின் மத்தியில் வைப்பார்கள் குங்குமம் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி இரத்தக்கொதிப்பு, இரத்த அழுத்தம் குறைவு, நினைவாற்றல் அதிகரிக்கும், வெப்பத்தைக் குறைக்கும் தன்மை குங்குமத்திற்கு உள்ளது. 🌟கோவிலில் வெள்ளை, சிவப்பு, கோடு இருப்பது எதற்கு?* வெள்ளைக்கோடு ( சுக்கிலம்) சிவமயம், சிவப்புகோடு ( சுரோணிதம்) சக்தியை குறிப்பது இரண்டும் சேர்ந்து உயிரம்சம் இரண்டும் சேர்வதால் தான் உடலும் அதனை தாங்கி இயங்கும் உயிரும் உண்டாகிறது ஆகும். 🌟திருக்கோயில் செல்வது யான், எனது, என்ற செருக்கு போவதற்காகத்தான். மேலும் வாழும்தன்மை பெறுவதற்காகத்தான் இந்த கோவில் வழிபாடுகள் எல்லாம் நம்மை செம்மையாக்கி நல் வழி படுத்துவது ஆகும்.🙏