http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Thursday, January 26, 2017

இராமேஸ்வரம்.









*இன்றைய ஜோதிர்லிங்கத் தரிசனம்*

*ராமேஸ்வரம்*

ராமேஸ்வரம் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தீர்த்தக் கரையில் நீராடி விட்டு மேற்கே சென்றால் ராமேஸ்வரம் கோவிலின் முகப்பு மண்டபத்தை அடையலாம். சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயில் உள்ளது. அப்போது நமது கண்களில் முதலில் படுவது வலது புறத்தில் அமைந்துள்ள அனுமார் ஆலயம் ஆகும். இங்குள்ள மூலவர் தெற்கு நோக்கியவாறு நிற்கின்றார்.

இதனையடுத்து அனுப்பு மண்டபம் வழியாக சன்னதி நோக்கிச் செல்ல வேண்டும். இடையில் உயர்ந்த கொடிமரம் நிற்கின்றது. அங்குச்சுதையினாலான பெரிய நந்தியின் சிலை உள்ளது. இதற்கு இருபுறமும் தூண்களில் மதுரை ஆளுநராக இருந்த விசுவநாத நாயக்கர், அவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியவர்களது சிலைகள் சுவாமியை சேவித்த நிலையில் உள்ளன.

இதனையடுத்து சுவாமி சன்னதிக்கு இருபுறமும் கிழக்கு நோக்கியவாறு மூத்த பிள்ளையார் இளைய முருகன் ஆகியோரின் சிறு கோவில்கள் இருக்கின்றன. அடுத்து அமைந்திருப்பது முதல் பிரகாரம். இதன் தென்கிழக்கு மூலையில் சூரியன், உஷா, பிரத்யுஷா, சகஸ்ரலிங்கம் ஆகிய உருவங்களும், தேவார மூவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களும், மூலவர், உற்சவர் விக்கிரங்களும் உள்ளன.

வலதுபுறம் திரும்பினால் மேற்கு பிரகாரத்தில் வச்சிரேசுவரர், மனோன்மணி, கந்தன், சங்கரநாரயாணன், அர்த்தநாரீஸ்வரர், கங்காளநாதர், சந்திரசேகரர் உருவங்கள் காணப்படுகின்றன. பிறகு வடக்குப் பிரகாரத்தில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், விபீஷணன் முதலிய 11 சிலைகளும், விசாலாட்சி, ஜோதிர்லிங்கம், நடராஜர் ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

இதனையடுத்து கிழக்கு பிரகாரத்தின் வடபுறத்தில் சந்திரன், கிருத்திகை, ரோகினி ஆகிய உருவங்கள் உள்ளன. முதல் பிரகாரத்தின் நடுவில் கருவறை அமைந்து உள்ளது. அதில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமநாதர் கிழக்கே கடலை நோக்கியவாறு இருக்கிறார். இதன் மேற்குப் புறச்சுற்றில் கயிலாயக் காட்சி மிக அற்புதமாகப் புடைப்பு சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மேலே ஐந்து தலைநாகம் அமைந்துள்ளது. இந்தக் கருவறையின் வடபுறத்தில் காசி விசுவநாதர் சந்நிதி அமைந்திருக்கிறது. இந்த மூர்த்திக்குத்தான் முதலில் பூஜை மற்றும் அபிஷேகம் போன்ற முதல் மரியாதை நடைபெறுகிறது. இந்தச் சன்னதியின் தென்புறத்தில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமான் ஆகியோரது சிலைகள் வெகு அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

இதில் அனுமனது சிலை ராமபிரானைக் கூப்பிய கரங்களுடன் வணங்கிய நிலையில் இருப்பதாகவும், அவரது கரங்களுக்கு இடையில் காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட இரு ஆத்ம லிங்கங்கள் அமைந்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சுக்ரீவனது சிலை உள்ளது. அவர் ராமரை வணங்கிய நிலையில் தலை குனிந்து வாய் புதைத்துக் காணப்படுகிறார்.

இந்த சன்னதியின் எதிரே ஒரு தூணில் சின்னப் பிரதானி கிருஷ்ணய்யங்காரின் உருவம் இருக்கிறது. இந்த சன்னதிகளைக் கடந்து தென்புறத்திலுள்ள வாயில் வழியாகச் சென்றால் அம்பிகை சன்னதி உள்ளது. இங்கு அம்பிகையின் பெயர் மலைவளர் காதலி என்றும் பர்வதர்த்தினி என்றும் வழங்கப்படுகின்றது.

இந்த சன்னதிக்குத் தென்கிழக்கு மூலையில் கல்யாண சுந்தரேசர் சிலை இடம் பெற்றுள்ளது. அவரது அருகில் வடக்கு நோக்கியவாறு பிரம்மன். திருமால் ஆகியோரது சிலைகளும் நிலைபெற்று உள்ளன. இதனையடுத்து மேற்குப் பிரகாரத்தின் தெற்கு மூலையில் சவுபாக்கிய கணபதியும் சந்தான கணபதியும் எழுந்தருளியுள்ளனர். அதே பிரகாரத்தில் ப்ராமி, மாஹேஸ்வர, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, மாஹேந்திரி, சாமுண்டி முதலிய சப்த மாதர் சிலைகள் இருக்கின்றன.

வடமேற்கு மூலையில் பள்ளி கொண்ட பெருமாளும், வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரியும் வடகிழக்கு மூலையில் பள்ளியறையும் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்னுள்ள சுக்கிரவார மண்டபத்தில் கிழக்கு நோக்கி அஷ்டலட்சுமி விக்ரகங்கள் இருக்கின்றன. இந்த உருவங்களுக்கு எதிரே தென்புறம் உள்ள எட்டுத் தூண்களில் துவாரபாலகர், சிவதுர்க்கா, மனோன்மணி, வாகீசுவரி, சேதுபதி கடம்பத் தேவர், புவனேஸ்வரி, அன்னபூர்ணா ஆகியோர்களின் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மண்டபத்தைக் கடந்து மேற்கு நோக்கிச் சென்றால் அம்பாள் சன்னதியின் இரு பக்கங்களிலும் முறையே விஜயரகுநாத சேதுபதி, முத்திருளப்ப பிள்ளை, முத்து வடுகநாதத் தேவர், பெரிய திருவுடையாத் தேவர், சேதுபதி காத்தத்தேவர், சின்னனத்தேவர், ரகுநாத சேர்வை, இரண்டு துறவிகள் நரசிம்ம அவதாரம் ஆகிய சிலைகள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.

இரண்டாம் பிரகாரத்தில் கோபுர வாயிலுக்குள் தென்புறம் நோக்கி வல்லப கணபதியின் சிலை உள்ளது. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்திற்குச் செல்லும் வழியில் இந்தப் பிரகாரத்தை அமைத்த திருமலை ரகுநாத சேதுபதியின் திருவுருவச் சிலை அவரது மகனாகிய ஒரு சிறுவனுடன் காணப்படுகிறது. இதனையடுத்து மூன்றாம் பிரகாரத்திற்குள் நுழைந்தால் வடமேற்கு மூலையில் ராமர், ராமலிங்கப் பிரதிஷ்டை செய்யும் காட்சி இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற இந்த மூன்றாம் பிரகாரம் சுமார் 4 ஆயிரம் அடி நீளம் உள்ளதாகவும் உலக எட்டு அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமியின் கருவறைக்குப் பின்னால் மேற்கு புறத்தில் சேதுமாதவர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுவேத என்ற வட சொல்லுக்கு வெண்மை என்று பொருள். இந்தத் திருமேனியின் வெண்மை நிறத்தை ஒட்டி இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் திருமேனியை உடைய சிறு கோவில் தனுஷ்கோடியின் தீர்த்தக் கரையில் அமைந்திருந்ததாகவும் ஏற்கனவே ஏற்பட்ட கடல் கோளினால் இந்தச் சிறுகோவில் அழிந்து விட்டதால் அங்கிருந்த இந்த மூர்த்தியை ராமேஸ்வரம் திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிப்பிரகாரம் முழுவதும் 20 அடி உயரமுள்ள சுவர்களால் கட்டப்பட்டுள்ளது.

நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் கட்டப்பட்டு அவை அனைத்தும் கீழ்மட்டத்தில் இருந்து கருங்கற்களால் கட்டப்பட்டவை என்று தெரிய வருகிறது. மேலவாசல் கோபுரம் மட்டும்தான் முழுவதும் கட்டுமானம் முடிக்கப்பட்டு சாந்து பூச்சினால் வடிவமைக்கப்பட்ட சிலைகளை உடையதாய், 78 அடி உயரம் கொண்டதாய் இருக்கிறது.

வடக்கு மற்றும் தெற்கு வாசல் கோபுரங்கள் மதில் சுவற்றைக் காட்டிலும் சற்று உயரமாய்க் கற்களால் கட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன. தற்போது அங்கு புதிய கோபுரங்கள் கட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அந்த இரு கோபுரங்களும் சென்ற நூற்றாண்டில் மகாராஷ்டிரர், முகமதியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் படையெடுப்பால் சிதைத்து விட்டனர்.

ஆலயத்தின் கிழக்குப் பகுதி இருபெரும் வாசல்களைக் கொண்டது. கிழக்குப் பகுதியில் தெற்கில் உள்ள வாசல் பார்வதி கோவிலுக்குச் செல்லும் பாதையாகும். இது நன்கு கட்டி முடிக்கப்பட்டது. பெரிய பாதையுடன் கிழக்கு வாசல் வெளிப்பிரகார மண்டபத்தைக் கட்டிய பெருமை 1640-ல் இரண்டாம் சடைக்கத் தேவர் தளவாய் சேதுபதி அவர்களைச் சாரும், இதன் நீள அளவு 500 அடிக்கு மேல் 600 அடிக்குள் அளவு கொண்டது.

இவ்வளவு பெரிய அளவுள்ள மண்டபம் இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது. இந்த பிரகாரத்தின் இரு புறத்திலும் திறந்த வெளி மண்டபம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வேலைப் பாடுடைய சிற்பங்கள் ஏதும் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கின்றது. இந்தப் பிரகார அமைப்பின் பின்னால் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பொறுப்பு, கலை நுணுக்கம் ஆகியவை இந்தியாவில் உள்ள மற்ற எல்லாக் கோவில்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.

இப்படிப்பட்ட கோவில்கள் ஒரு சிலவே உள்ளன. மத்திய கருவறையானது கடுமையான சுண்ணாம்புக்கல் கொணடு 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடையான் சேதுபதி என்பவரால் கட்டப்பட்ட பெருமை உடையது. மேற்குக் கோபுரமும், அதைச் சார்ந்த திருமதில்களும் 17-ம் நூற்றாண்டைச் சார்ந்த சடைக்கத் தேவர் உடையான் என்பவருக்கு பெருமை சேர்க்கக் கூடியவை. முதற்பிரகாரமானது 190 அடி அகலமும் 307 அடி நீளமும் கொண்டது.

இதற்கு அடுத்ததாக உள்ள விமானங்கள், பிரகாரம், மதில் சுவர்கள், அதற்குட்பட்ட கருவறைகள் ஆகியவை சேது மன்னர்களின் பெருமை 17-ம் நூற்றாண்டில் மிகச் சீர் பெற்று ஓங்கி இருந்தபோது மன்னர் திருமலை நாயக்கரால் மதுரை கோபுரக் கட்டிடக் கலைக்கு இணையாக கட்டப்பட்டதாகும். இரண்டாம் பிரகாரமானது 1658-ல் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதியால் தெற்குப் பகுதி பாதி பூர்த்தி செய்யப்பட்டது.

முத்து விஜய ரெகுநாதத் தேவர் (கி.பி. 1712-1725) அவரது தகப்பனார் கடம்பத் தேவர் ஆகியோர் அம்மன் சன்னதியில் முன்புறமுள்ள மண்டபத்தையும், சில சிறிய தேவையான கட்டடங்களையும் கட்டினர். கி.பி. 1742-ல் முத்து விஜயரெகுநாத சேதுபதி மூன்றாம் பிரகார வேலையைத் தொடங்கினார். மையக் கருவறைகள் 15, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மொத்தக் கோவிலின் கட்டுமானமும் முடிவுற 170 ஆண்டுகள் ஆனது.

தல வரலாறு...........

தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ஒரு சிறிய தீவு. இத்தீவானது திருமாலின் கையில் உள்ள சங்கை போன்ற வடிவைக் கொண்டது. இத்தீவில் ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன், நடராஜபுரம், மற்றும் கோதண்டராமர் கோவில், தனுஷ்கோடி ஆகிய ஊர்களும் மற்றும் பல கிராமங்களும் அமைந்துள்ளது.

இத்தீவில் கிழக்கு பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டிக்கு இலக்கணம் வகுத்துள்ள ராமேஸ்வரம் என்ற புனிதமான கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ராமநாதசுவாமி கோவில் நம் நாட்டு மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் கவரத்தக்க வகையில் பண்டைகால திராவிட கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது.

ராமபிரானானவர் இராவண சம்ஹாரத்தினால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்திதோஷம் நீங்க அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டார். அகத்திய முனிவர் இங்கு வந்து சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் பிரம்மஹத்திதோஷம் நீங்குமென்று சொல்ல, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டனையிட்டார்கள்.

அதன்படி ஆஞ்சநேயர் கைலாசபர்வதத்திற்கு சென்றார். லிங்கத்தை கொண்டுவர சற்று தாமதமானதும் சீதாபிராட்டி விளையாட்டாக மண்ணை கையில் பிடித்து சிவலிங்கம் ஒன்றை செய்தார். குறித்த ஒரு லக்கின நேரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தாமதம் ஆகலாம்.

ஆஞ்சநேயர் வருவதற்குள் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்க அகத்திய முனிவர் ஆஞ்சநேயர் தான் வருவதற்குள் இங்கு மணலால் லிங்கத்தை பூஜை செய்வதைக் கண்ட அவர் கோபமுற்று அது விஷயமாக கேட்க ஸ்ரீராமபிரானானவர் அந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வை என்று சொன்னார்.

அதைக்கேட்ட அனுமான் தன் வாலினால் சுழற்றி அந்த லிங்கத்தை அகற்ற முயற்சி செய்தார். அம் முயற்சியில் தோல்வியுற்று, தன் வால் அறுந்து வீழ்ந்து மயக்க மடைந்தார். பின்னர் ராமபிரானாரால் எழுப்பப்பட்டு, தான் பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை செய்து பின்னர் தாங்கள் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜை நடைபெறும் என்று சொன்னார்.

இவ்வாறு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் ராமனால் உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் என்ற பொருள் கொண்ட ராமேஸ்வரம் என்ற பெயர் பெற்றது. இத்தலமானது மூர்த்தி ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது. இத்தலத்தில் உள்ள சுவாமிகள் இராமேஸ்வரர் ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயமானது தமிழகத்தைச் சேர்ந்தவரை மட்டுமின்றி வடநாட்டவரையும் கவர்ந்துள்ளது. வடநாட்டவர்கள் காசி யில் உள்ள விசுவநாதருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து பூஜை செய்து, அங்கிருந்து கங்கை ஜலத்துடன் ராமேஸ்வரம் இராமனாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, தங்கள் யாத்திரையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

அதேபோல் தமிழ் நாட்டிலிருந்து காசிக்கு செல்ல இருப்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்திற்கு வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதுடன் இங்கிருந்து மணல் எடுத்து அதற்கு பூஜை செய்து அதை எடுத்துக் கொண்டு போய் பிரயாகை திரி வேணி சங்கமம் என்ற இடத்தில் போட்டுவிட்டு காசி விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து கங்கை ஜலத்தை கொணர்ந்து ராமநாதசுவாமி அபிஷேகம் செய்து வழிபடுவதுடன் தங்களுடைய காசி, ராமேஸ்வரம் யாத்திரையை பூர்த்தி செய்வர்.

இதன்மூலம் இவ்வூரின் பெருமையால், இது அனைத்திந்திய மக்களை ஒன்றாக இணைத்து நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் மக்கட்பேறில்லாதவர்கள், இங்கு வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, சர்ப்ப சாந்தி, நாக பிரதிஷ்டை முதலியவை செய்து சுவாமி தரிசனம் செய்தால் மக்கள் செல்வம் ஏற்படுமென்ற நம்பிக்கை நம் இந்து மக்களிடம் உண்டு.

1. லட்சுமண தீர்த்தம்:- கோவிலில் மேற்கு பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகில் லட்சுமண் தீர்த்தம் உள்ளது. இது லட்சுமணர் தனக்கு ஏற்பட்ட பாவங்களை போக்கிக்கொள்ள இங்கு இத்தீர்த்ததை உண்டாக்கினார். ராமேஸ்வரத்தில் தீர்த்த ஸ்னானங்கள் செய்ய ஆரம்பிக்கையில் இந்த லட்சுமண தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து தங்கள் பித்ருக்கனான் (முன்னோர்கள்) தர்ப்பணம் செய்வர். இங்கு தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.

2.ராம தீர்த்தம்:- கோவிலின் மேற்கு பகுதியில் லட்சுமண தீர்த்தத்துக்கு கீழ்புறம் நகர் காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் ஸ்னானம் செய்வதால் பொய் சொன்னதால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும் மேலும் வஸ்திரதானம் செய்வதும் நன்மையை தரும். இவ்விரு தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்த பின் தனுஷ்கோடி சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்.

3.அக்னி தீர்த்தம் (கடல்):- கோவிலின் முன்புறமுள்ள ஸ்ரீகாஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்கு முன்புள்ள கடல் பகுதியே அக்னி தீத்தம் என்று அழைக்கப்படுகிறது. ராவணனை வதம் செய்து, இலங்காபுரியிலிருந்து சீதையை மீட்டு வந்த ஸ்ரீராமரானவர் சீதையின் கற்பை சோதிக்க வேண்டி அக்னிபிரவேசம் செய்யும்படி சொல்லி அக்னி பகவானை வரவழைத்தார். சீதையும் அக்னியில் குதித்தார்.

அக்னி அவளை தீண்டுவதற்கு பதிலாக குளிர்ந்த ஜலத்தை வர்ஷித்தார். அதுவே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தனுஷ்கோடி புயலால் அழிந்து போனதால்,இந்த தீர்த்தத்திலேயே ஸ்னான சங்கல்பம், மற்றும் இதர மத சம்பந்தமான காரியங்களையும் இங்கேயே செய்துவிட்டு, இங்கு சங்கல்பம் செய்து கொண்டு ஸ்னானம் செய்ய வேண்டியது.

36 முறை ஸ்னானம் செய்ய வேண்டுமென்பது நியதி. (36 முறை செய்ய இயலாதவர்கள் 3 முறையில் முறை 1-க்கு 12 சங்கல்பம் செய்து 12 தடவை கடலில் மூழ்கி ஸ்னானம் செய்யலாம்) இது மிகவும் புனிதமானது.

செப்பேடுகள்..........

ராமநாதர் திருக்கோவிலில் சில செப்பேடுகளும் உள்ளன. இச்செப் பேடுகள் பல்வேறு காலங்களில் செய்யப்பட்ட அறப்பணிகளை விளக்குவனாவாக அமைந்துள்ளன. முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர் சகம் 1692 (கி.பி.1770)ஆம் ஆண்டில் மக்களுக்கு உணவளிக்கவும் தண்ணீர்பந்தல் வைக்கவும் நிலக்கொடை வழங்கினார்.

திருவுடையாத் தேவர் என்ற முத்துவிஜய ரகுநாத சேதுபதி கட்டத் தேவர்(கி.பி.1709-1723) அத்திïத்து என்ற ஊரில் 14 பிராம ணக்குடும்பங்களுக்கு வீடுகளும் நிலங்களும் அளித்தார். திருமலை ரகுநாத சேதுபதி கட்டத்தேவர் ( கி.பி. 1645-1670) கௌண்டினிய கோத்திரத்து அகோ பலையாவுக்கு நிலம் வழங்கனார்.

தளவாய் சேதுபதி கட்டத் தேவர் (கி.பி. 1604-1621) ராம நாதசுவாமி கோவிலுக்கு ஐந்து ஊர்களை அளித்தார். அவரே மேலும் 8 கிராமங்களை அளித்தார். இவ்வாறே மற் றும் பல சேதுபதிகள் காலத்தில் குருக்கள் முதலியோருக்கு நிலம், ஊர்கள் வழங்கியதும், வருகின்ற பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்ததும் கோவிலுக்கு பூஜை, திருவிழாக்கள் நடைபெற கிராமங்கள் தானம் செய்ததும், முத்துவிஜயம் சேர்வை என்பவர் சேது மன்னருடைய யானையின் வாலை பிடித்து இழுத்த வீர செயலுக்காக நாள்தோறும் கோவிலில் உணவு அளிக்க உத்தரவு செய்ததும்ஆகிய செய்திகளைச் செப்பேடுகள் விளக்குகின்றன.

சேதுபதிகளின் அறப்பணிகளே செப்புப்பட்டயங்களில் பேசப்படுகின்றன. கோவிலில் உள்ள கல் வெட்டுக்களும், செப்பு பட்டயங்களும் கோவில் திருப்பணிகளை விளக்கும் வரலாற்றின் வடிவங்களாகவும் அறப்பணிகளைக்கூறும் வரலாற்று வடிவங்களாகவும் விளங்குகின்றன.

நாள்தோறும் நடைபெறும் சடங்குகள்..........

காலை 5.00 மணி பள்ளியறை தீபாராதனை
காலை 5.30 மணி ஸ்படிகலிங்க பூஜை
காலை 5.45 மணி திருவனந்தல்
காலை 7.00 மணி விளார் பூஜை
காலை 10.00 மணி காலசந்தி
காலை 12.00 மணி உச்சிகால பூஜை
காலை 6.00 மணி சாயரட்சை
காலை 9.00 மணி அர்த்தசாம பூஜை
காலை 9.30 மணி பள்ளியறை

பூஜை வார விழாக்கள்.......

1. சுக்ரவார விழா
2. பட்சத் திருவிழா
3. பிரதோஷம்.

மாத விழா கார்த்திகை ஆண்டுத் திருவிழாக்கள்..........

1. சித்திரை மாதம் - புத்தாண்டு விழா 2
. வைகாசி மாதம் - வசந்த விழா
3. ஆடி மாதம் - அமாவாசை திருக்கல்யாணம் விழா 17 நாட்கள்
4. மாசி மாதம் - மகாசிவராத்திரி
5. ஆனி மாதம் - கோதண்டராமசாமி கோயில் விபீடன சரணாகதியும் பட்டாபிஷேகமும், இராமலிங்க பிரதிஷ்டை விழா
6. புரட்டாசி மாதம் - நவராத்திரி விழா
7. தை மாதம் - திருவாதிரை நாளன்று ஆருத்திரா தரிசனம்

இஸ்லாமியர்களால் காப்பாற்றப்பட்ட சிலைகள்........

ராமேஸ்வரத்தில் பல நூற்றாண்டுகளாக முஸ்லீம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் நல்லநேச உறவுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அதாவது டெல்லி தளபதி மாலிக்காபூரின் மதுரைக் கோயில் கொள்ளையை அடுத்து ராமேஸ்வரம் கோயிலையும் கொள்ளையிட வந்தால் என்ன செய்வது என ராமேஸ்வரம் கோயில் அர்ச்சகர்கள் பயந்து குழப்பமடைந்தனர்.

அப்பொழுது ராமேஸ்வரத்து மரைக்காயர் சிலர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ராமேஸ்வரம் கோயில் திருமேனிகளையும் திருவாபரணங்களையும் குருக்களையும் தங்களது மரக்கலங்களில் ஏற்றிச் சென்று பக்கத்திலுள்ள தீவு ஒன்றில் பத்திரமாக வைத்தனர். மாலிக்காபூர் ராமேஸ்வரத்திலிருந்து திரும்பிய செய்தி கிடைத்த பிறகு அவைகளையும், குருக்களையும் ராமேஸ்வரத்தில் பத்திரமாகச் சேர்ப்பித்தார்கள்.

தல சிறப்பு.......

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியா வில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெரு மாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்.

உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக் கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது. அம்மனின் சக்தி பீடங்களில் இது சேது பீடமாகும். மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.

திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில்,
ராமேஸ்வரம் 623 526,
ராமநாதபுரம் மாவட்டம்.
போன்: +914573 221 223.

முக்கிய போன் எண்கள்..........

கோவில்- 221223
போலீஸ் (டவுன்) ஸ்டேஷன்- 221246
தீயணைப்பு நிலையம்- 221273
அரசு மருத்துவமனை- 222003
இந்தியன் வங்கி ஏ.டி.எம்.- 221234
ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.-221285
நகராட்சி அலுவலகம்-221264
ரெயில்வே ஸ்டேஷன்- 221226
தபால் நிலையம்- 222009
தொலைபேசி நிலையம்- 221198

பேருந்து நிலையம் நகரின் மேற்கு பக்கத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தில் எல்லா முக்கிய இடங்களுக்கும் செல்வதற்கு பேருந்து வசதிகள் உண்டு. பஸ் நிலையத்திலிருந்து திருக்கோவில் மற்றும் அதை சேர்ந்த கிராமப்பகுதிகளுக்கும் செல்ல நகர பேருந்துகள் வசதி உண்டு.

தாலுகா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை வசதியும் உள்ளது. காசி- இராமேஸ்வரம் யாத்திரை செய்பவர்கள் முதலில் இங்கு வந்து எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பின் அக்கினி தீர்த்தக்கரையிலிருந்து மணல் எடுத்து அதை சேது மாதவர் சன்னதியில் அந்தணர் மூலம் மூன்று பிரிவாக்கி அதற்கு பூஜை செய்து ஒரு பிரிவை சேது மாதவர் சன்னதியிலும்,

மற்றொரு பகுதியை அந்தணருக்கு தானமாக கொடுத்து, மூன்றாவது பகுதியை தன்னுடன் எடுத்துச்சென்று கங்கையில் பிரயாகையில் (திரிவேணி சங்கமம்) சேர்த்துவிட்டு, காசியில் விஸ்வநாதரை தரிசித்து விட்டு அங்கு செய்ய வேண்டிய பித்ருகருமாக்களை செய்து முடித்து கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து மீண்டும் இராமேஸ்வரம் வந்து இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து இங்கிருந்து கோடி தீர்த்ததை தங்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து தம் உறவினர்களுக்கு கொடுத்து விடுவர். இப்படிச்செய்தால் தான் காசி- இராமேஸ்வரம் யாத்திரை பூரணமாகும்.

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..?

ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ., தூரத்தில் உள்ளது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது. 22 தீர்த்தங்கள் உள்ளன. அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர்.

ஜாதகத்தில் பித்ரு தோசம் இருந்தால் அதை கழிக்க இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான்... குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டால் விபத்து,தற்கொலை, அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம்,திதி கொடுப்பது அவசியம்..அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் உண்டாகும்..

காசிக்கு போய் விட்டு வந்தாலும் ராமேஸ்வரம் போய் வந்தால்தான் இந்துக்களின் இந்த ஜென்ம புனித பயணம் நிறைவடையும் என இந்துமத சாஸ்திரம் சொல்கிறது எனவே காசியில் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு யாத்திரையை முடிக்கிறார்கள்..இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய ஜோதிர் தலங்களில் இது ஒன்றாகும்..இந்தியாவின் மிக முக்கிய சிவ ஸ்தலம் என உலகெங்கும் இருக்கும் இந்து மக்கள் வழிபடும் கோயில் இது..இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்ப்படுகிறது..இந்த கடல் நீருக்கு விசேஷ சக்தி இருப்பதாகவும்,முன்னோர்களின் சாபத்தை நீக்கும் சக்தி பெற்றதாகவும் புராணம் சொல்கிறது..அதனால் இக்கடலில் நீராடுவது மிக முக்கியம்.இக்கோயிலுக்குள் அமைந்துள்ள 21 வகையான தீர்த்தங்கள் பல அபூர்வ சக்தி பெற்றவை..ஒவ்வொரு கிணற்று நீரும் ஒவ்வொரு சுவை...கொண்டது..இவற்றில் நாம் நீராடுவதால் பல புன்ணிய ஆத்மாக்களின் ஆசி கிடைக்கிறது..நம் உடல் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி பெறுகிறது

சுவாமி சன்னதியில் தினம்அதிகாலை 5.10 மணி ஸ்படிகலிங்க அபிஷேகம் முக்கியமானது. தீர்த்தங்களில் நீராட நபர் ஒன்றுக்கு ரூ.7 கட்டணம். சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.25, அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.10, ஸ்படிக லிங்க தரிசனம் ரூ.15, சுவாமி சன்னதி மேடையில் அமர்ந்து தரிசனம் செசய்ய ரூ.50, கங்காபிஷேகம் செய்ய ரூ.30, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ20,பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய ரூ 750. ருத்ராபிஷேகம் செய்ய ரூ.900, 108 சங்காபிஷேகம் செய்ய ரூ 1000,108 கலச அபிஷேகம் செய்ய ரூ.1000, 1008 சங்காபிஷேகம் அல்லது கலச அபிஷேகம் செய்ய ரூ 5,000 கட்டணமாகும். ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ளது திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 9 மணி







திருச்செங்கோடு









திருச்செங்கோடு வரலாறு சுருக்கம்..

முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடம் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது.

அவற்றில்ஒன்றுதிருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.

மலை கோவில் சிறப்புகள்(அதிசயங்கள்)

மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.

உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்

அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற பிருங்கி முனிவர் வழிபட்ட சுயம்பு மரகதலிங்கம், நாக மாணிக்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.

வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.

அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும்.

வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும்.

மூலவர் செங்கோட்டுவேலவர்
திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.

சுயம்பு மரகத லிங்கம்- வரலாறு

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, ""முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.

இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்க்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார்.(இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார். பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்க்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார் (போகர் பழனியில் புலிப்பாணி முனிவருக்கு இட்டது போலே சில விதிமுறைகள்)மீதி நேரத்தில் சதாரணமாக இந்த லிஙத்தை (மரகதலிங்கம்) வைத்து விடுங்கள் என்றார். பின் அர்த்தநாரீசர் திருவுருவத்தை முக உரு இல்லாமல் வெண்பாசாணம் கொண்டு செய்தார். பின் அங்கு ஒரு ஊற்று நீரையும் ஏற்படுத்தி அந்த நீரை பக்தர்களுக்கு கொடுக்குமாறு செய்தார்.

சுயம்பு லிங்கத்தின் மர்மம்:

யார் மார்கழி மாதத்தில் குளித்து முடித்து மலையின் மீது நடந்தே வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்கிறார்களோ அவர்க்கு வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம் அல்ல உண்மை.

குறிப்பு:குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்க்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து விடுவார்கள். இது அதை விட சற்று பெரியதாக இருக்கும் இது தான் சாதரணமான தினத்தில் வைக்கபடும் லிங்கம். இந்த உண்மை பலரும் மறைத்து உள்ளனர்.அங்குள்ள வம்சாவழிகளுக்கு மட்டுமே தெறிந்த உண்மை. மலையின் பஸ் ரூட்டு வழியாக நடந்தும் செல்லலாம்.

நாகமாணிக்கம் மர்மம்

நாகமாணிக்கம் எங்குள்ளது என்று தெரியவில்லை.சுயம்பு மரகத லிங்கத்தின் பால் அபிஷேகம் பார்பது மிகவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் .

அமைவிடம்:

திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!