பாடல் எண்பத்து ஏழு
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையேவிளக்கம்
தமது நெற்றிக் கண்ணால் காமதேவனை அழித்த சிவபெருமானது முடிவில்லா யோக நிலையை உலகமெல்லாம் பழிக்கும் படி செய்து அவனது இடப்பாகத்தை இடங்கொண்டு ஆளும் சிவ சக்தியே... அபிராமி அன்னையே...எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம், எளியேன் எனது கண்களிலும், செயல்களிலும் தென் படுகின்றதே... இதென்ன அதிசயம்?? மீண்டும் மீண்டும் ஈசன் அம்மையிடம் அகப்பட்டுக் கொண்டதைக் கிண்டல் செய்வதே அபிராமிப் பட்டரின் வழக்கமாகி விட்டது... ஆயினும் ஈசனுக்கு அது
பெருமையையே தருகின்றது.. தமிழால் வைதாலும் அருள் செய்யும் ஈசன் அவனது மனைவியை ஏற்றிப் பாடுவதைக் கேட்டு அருள மாட்டானா? ஒரு புதுக்கவிஞன் பாடினானில்லையா " அப்பனைப் பாடும் வாயால் தறுதலைச் சுப்பனைப் பாடுவேனோ?"என்று... அப்பாடல் முழுக்க முருக பக்தி மணக்கும்.. ஆனால் பொருள் புரியாதோர்க்கு, அது முருகனை நிந்திப்பது போல் தோன்றும்.. அதே போல்தான் இவ்விடத்தும் அப்பனைப் பழித்து அம்மையை ஏற்றுவது, அம்மையப்பன் இருவருக்குமே பெருமையைத்தான் தருகின்றது...
"விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை" தனது நெற்றிக்கண்ணால் காமதேவனைச் சுட்டெரித்த சிவபெருமானது முடிவில்லாத யோக நிலையை.. அவர்தம் தவத்தை... ஈசனது தவம் என்பது முடிவில்லாதது. பிச்சாண்டித்தேவராக வரும் நிலையில் கொடுத்தருள்பவராகவும், தனது சுடலை உலகத் தவத்தில் தன்னை யாரும் நெருங்க இயலாதவராகவும் இருக்கின்றார். தங்கள் இன்னலையெல்லாம் திருவிளையாடல்கள் மூலம் இன்புறத் தீர்த்து வைத்த ஈசன் இன்றைக்கு எங்கள் குறை தீர்ப்பாரா என்று அமரர்கள் அவர்தம் சிவலோகம் சென்று காத்திருக்கின்றனர்.. அவரோ பாரா முகமாக, மோனதவத்தில் மூழ்கியிருக்கின்றார்... சரி காம தேவனை அனுப்புவோம்... அப்பன் விழித்து இன்புற்று நம் துயரைக் களையட்டும் என முடிவாகின்றது.. காமதேவனது மலர்க்கணைகள் ஈசனுக்குக் காமத்தை வரவழைக்கவில்லை... மாறாகக் கோபத்தை வரவழைக்கின்றது.. விளைவு .. காமதேவன் தகனம்.... இப்படித் தனது தவநிலையில் தன்னையாரும் நெருங்க இயலாது என்ற நிலையில் .... உயர்ந்த நிலையில் இருக்கின்ற பரமன்.....
பரமனது விரதம் என்ன ஆனது?? “அண்டம் எல்லாம் பழிக்கும் படி “ உலகமெல்லாம் பழிக்கும் படி... இவனென்ன தவத்திற் சிறந்தவன் என்று எண்ணியிருந்தோமே....அன்று காமனை அழித்தானே.... இன்று இவன் செய்த செயல் இப்படியாகி விட்டதே.... என உலகத்தான் ஈசனைப்
பழிக்கும்படி அவன் என்ன செய்தான்...? அல்லது அவனுக்கு என்ன நேர்ந்தது? “ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே” அவ்வீசனின் ஒரு பாகத்தைக் கவர்ந்து அவ்விடத்திலிருந்து கொண்டு அவனையும் அகிலத்தையும் ஆளும் சிவசக்தியே....இவனைக் காமத்தால் வெல்ல இயலாது என்று எண்ணியிருந்த உலகத்தார் அவன் அம்மையிடம் தோற்றுப் போய் தன் இடப்பாகத்தை இழந்த நிலையக் கண்டு வியந்து
அவனைப் பழிக்கின்றனர்.. அவ்வீசனுக்கே சக்தி தரும் சிவசக்தியாகி நின்றாள் உமையாள்... “மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் “எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம்...
அன்னையின் திருவுருவைச் சொற்களால் வர்ணிக்க இயலுமா? எந்த ஒரு சொல்லால் அவளை வர்ணித்தாலும் அச்சொல்லினையும் கடந்து நிற்கும் அவளது திருவுருவம்...ஆனையைத் தடவிக்கண்ட குருடர் போலும் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு சொற்களால் அவளை வழிபடுகின்றனர்... ஆனால் அவளது திருவுருவோ எந்த ஒரு சொல்லிலும் அடைபடுவதில்லை.. யார்தம் நினைவுக்கும் அவள் எட்டுவதில்லை.... அத்தகைய பேராற்றல் கொண்டவள் அவள்.. அண்டத்தை எல்லாம் கடந்து அகிலாண்டேஸ்வரியாக நின்றவள் அவள்... அவளது திருவுருவம்..... “எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்” எனது கண்களிலும், செயல்களிலும் தென்படுகின்றதே... இதென்ன விந்தை...? அன்னையே அபிராமிப் பட்டரின் கண்களில் தென்படுகின்றாள்... அன்னையே அவர்தம் செயலாகவும் செயல்படுகின்றாள்.. இதென்ன அதிசயம் என அதிசயித்துப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர்...
பாடல் எண்பத்து எட்டு
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே
விளக்கம் :
தரமற்ற செயல்கள் புரிந்த அசுரர்களின் முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்தவனும், திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிர்ம்மனின் சிரத்தில் ஒன்றைக் கொய்து தம் கையில் ஏந்தியவனுமான ஈசனது இடப்பாகத்தில் சிறப்பாக இணைந்திருப்பவளே... தனியனாகிய நான் உன்னையே கதியென்று சரணடைந்தேன்... உன் பக்தர்கள் கூட்டத்தில் தரமில்லாதவன் என்று என்னைத் தள்ளிவிடாதே....
அன்னையின் அருள்கிடைக்க அருமருந்தான பாடல் இது... தினந்தோறும் அன்னையை நாடி வரும் பக்தர்கள் கோடி... அப்பக்தர்கள் கூட்டத்தில் தன்னைத் தரமற்றவன் என்று தள்ளிவிடாதே என்று அன்னையிடம் அபிராமிப்பட்டரே கெஞ்சுகின்றார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? தண்டிப்பது தந்தையின் குணம்.. மன்னித்து அணைப்பது அன்னையின் குணம். தரமற்ற செயல்கள் புரிந்த அசுரர்களின் முப்புரத்தை எரித்தவன் தந்தை... அகந்தையால் தன் உண்மை நிலை மறந்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து தண்டித்தவனும் அவனே...
நீயோ அவனது இடப்பாகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றாய்.. அவனது மனநிலை உனக்கு வந்துவிடுமோ?? தரந்தாழ்ந்தவன் என்று என்னைத் தள்ளிவிடுவாயோ??? அப்படித் தள்ளி விடாதே... ஏனெனில் எனக்கு வேறு எந்த கதியும் இல்லை...நீயே கதியென்று உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.. என்னைத் தள்ளிவிட்டு விடாதே... எனப்பாடுகின்றார்...“தரியலர்தம் புரம் “ தரமிழந்த செயல்களைப் புரிந்த அசுரர்களின்
முப்புரத்தினை “அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய” எரிப்பதற்காக முன்பொரு நாள் மேரு மலையை வில்லாக வளைத்தவனும் ... “போதில் அயன்” திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிரம்மனின் “சிரம் ஒன்று செற்ற கையான் “ சிரங்களில் ஒன்றைக் கொய்து தன் கையில் கொண்டவனுமாகிய சிவபெருமானின் “ இடப்பாகம் சிறந்தவளே” இடப்பாகத்தில் சிறப்புற அமர்ந்தவளே... “தமியேனும்” தனியனாகிய நானும் ... யாருமற்றவனாகிய நானும்... “பரம் என்று உனை அடைந்தேன்” நீயே கதி என்று உன்னையே சரணடைந்தேன்..”உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது “உன் பக்தர்களில் தரமில்லாதவன் இவன் என்று என்னைத் தள்ளிவிடுவது தகாது...
என்னைத் தள்ளிவிடாதே தாயே.....சுருங்கக் கூறின் “அறமல்லது அழிப்பவன் இணையாளே...அறமில்லா என்னைத் தள்ளாதே...புறமொரு கதியில்லைப் பூவுலகினிலே..மறமது மறந்தறமெனக் கருள்வாயே”
பாடல் எண்பத்து ஒன்பது
சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே
விளக்கம் : சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பெருஞ்செல்வமே...அபிராமியே... தன்னிலை கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக அமரலோகம் அருளும் உனது கணவரும், நீயும் இணைந்து வந்து, என் உடம்பிலிருந்து உயிர் பிரியும் வேளையில் நான் சுய அறிவிழந்து நிற்கும் பொழுது உனது சேவடிகளை எனது தலைமேல் வைத்தருள என் முன்னே வந்தருள வேண்டும் என உன்னை வருந்தி
அழைக்கின்றேன்...தான் மரணமடையும் வேளையில் அன்னையைத் தன் முன்னே வந்து அவள் சேவடிகளைத் தன் தலைமேல் வைக்க வருந்தியழைக்கும் அபிராமிப் பட்டர் மீண்டும் மீண்டும் இப்படி அழைப்பதற்கான காரணமும் இப்பாடலிலேயே மறைந்துள்ளது... உடலை விட்டு உயிர் பிரியும் வேளையில் தான் யார் என்பதை உயிரானது மறந்து போகின்றது..மற்ற உயிர்களைப் போலவே துடிக்கின்றது... அந்த வேளையில் அன்னையை அழைக்க இயலுமா என்பது ஐயத்துக்குரிய செயல். எனவே ... இப்போதே அவளை வருந்தி அழைத்து அச்சமயத்தில் உன் திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் என்று பாடுகின்றார் பட்டர்..
எத்தனை பெரிய பாக்கியம் இது.. அன்னையின் திருவடிகள் தலைமேல் பட்டால், அவ்வுயிர் மீண்டும் பிறப்படையுமோ???"சிறக்கும் கமலத் திருவே " சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பெருஞ்செல்வமே.... அபிராமியே... "துறக்கம் தரும் நின் துணைவரும் " வானுலகத்தை வரமாக அருளும் உன் துணைவரான சிவபெருமானும், .. "நீயும்"அன்னையாகிய நீயும்... "துரியம் அற்ற உறக்கம் தர வந்து" நான்கு
நிலைகளையும் கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக வந்து... அதென்ன நான்கு நிலைகள்.? மனித மனமானது நான்கு நிலைகளை அடைய இயலும்... விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை... விழிப்பு என்பது சாதாரண நிலை... உறக்கம் வரும் வேளையில் ஆழ்ந்த உறக்கமற்ற நிலையில் மனத்தில் உள்ள எண்ணங்கள் கனவாக வருகின்றது.. இது இரண்டாம் நிலை.. தன்னை மறந்து உறங்கும் பொழுது ஆழ்ந்த நித்திரை ஏற்படுகின்றது. இது மூன்றாம் நிலை.. சமாதி நிலை என்பது விழிப்புமற்ற, கனவுமற்ற, ஆழ்ந்த உறக்கமுமற்ற நிலை... இது ஓர் ஆழ்நிலைத் தியானம். அனுபவித்துப் பார்த்தால்தான் சமாதி நிலையின் அருமை புரியும்.. அந்நிலையில் விழிப்பும் உண்டு,,, உறக்கமும் உண்டு... நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை நம்மால் உணர இயலும்...ஆனால் நாம் அதைக் கடந்த ஒரு நிலையில் இருப்போம்.. உறங்குவது போல் இருக்கும்... ஆனால் வெளி நிகழ்வுகளை மனம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.. அந்நிலையில்தான் மனமானது தான் யார் என்பதைப் புரிந்து கொள்கின்றது.
இதை அனுபவித்தாலன்றி புரிந்து கொள்ள இயலாது..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவங்கள் சமாதி நிலையில்
கிடைத்திருக்கும்... இது நான்காவது நிலை... இந்த சமாதி நிலையையும் தாண்டிய நிலையை எனக்குத் தருவதற்காக நீயும் உன் கணவரும் என்னை நோக்கி வர வேண்டும்... எனக்கு அந்த நிலையைத் தரவேண்டும் என்கிறார். "உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது " உடம்போடு உயிரானது தான் கொண்ட உறவினை விலக்கும் சமயத்தில், நான் எனது சுய அறிவினை மறக்கும் பொழுது... அந்த
சமாதி நிலையைக் கடந்த நிலையை எனக்கு நீயும் உன் கணவரும் வந்து தந்து, என் உயிரானது பிரியும் வேளையில் என் சுயத்தை நான் இழக்கும் பொழுது....இருவித அர்த்தங்கள் இப்பாடலில் மூலம் கிடைக்கின்றன.. ஒன்று.. எனக்கு சமாதி நிலையையும் கடந்த உறக்கத்தைத் தந்து அதன் பின்னர் எனது உயிர் பிரிய வேண்டும்... இரண்டு... என் உயிர் பிரியும் வேளையில் நீ அந்த சமாதி நிலையைக் கடந்த நிலையை எனக்குத் தந்தருள வேண்டும்... வார்த்தைகள் விளையாடுகின்றன...
அபிராமிப் பட்டரின் பாடல்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலைக்கேற்ற பொருளைத் தருகின்றன.... "நின் சேவடி சென்னி வைக்க" உனது சேவடிகளை என் தலை மீது வைப்பதற்காக.. "என் முன்னே வரல் வேண்டும் " என் முன்னே நீ வர வேண்டும்... நீயும் உன் கணவராகிய சிவபெருமானும் எனக்கு அந்த ஐந்தாம் நிலை உறக்கத்தைத் தந்து அதன்பின்னர் என் உயிரானது என் உடம்பை விட்டுப் பிரியும் படி செய்ய வேண்டும்... அச்சமயத்தில் உயிர் பிரிந்து நான் என் சுய அறிவினை இழந்து கிடப்பேன்... அச்சமயத்தில் அம்மா என உன்னை அழைக்கும் அறிவும் இருக்காது... அப்பொழுது நீ உனது சேவடியை எனது தலை மீது வைப்பதற்காக என் முன்னே வர வேண்டும்.. "வருந்தியுமே" இதற்காக இப்பொழுதே உன்னை வருந்தியழைக்கின்றேன் அம்மா.....
பாடல் தொண்ணூறு
வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே
விளக்கம் :
விண்ணில் வாழும் அமரர்களுக்கு விருந்தாக பாற்கடலில் தோன்றிய அமுதத்தைத் தந்திட்ட மென்மையான அபிராமியானவள் அவளே வந்து நான் வருத்தமடையா வண்ணம் என் இதயக் கமலத்தில் புகுந்து அதுவே அவளது பழைய இருப்பிடமாக எண்ணி அமர்ந்தாள்.. இனி எனக்கு கிடைக்காத பொருளென்று எதுவும் இல்லை....அன்னையே என் இதயத்தில் வந்து அமர்ந்த பின்னர் அதை விடப் பெரும் பொருள்
ஏது உண்டு? சகல செல்வங்களையும் உள்ளடக்கிய அபிராமி எனும் பெருஞ்செல்வம் என் இதயத்து வந்தமர்ந்ததே...அதுவும் தானாக வந்தாள்...நான் கொஞ்சமும் வருத்தமடையா வண்ணம் என் இதயத்தை அவள் இதுவே தன் பழைய இருப்பிடம் என்று அமர்ந்தாள்... வேறென்ன வேண்டும் எனக்கு?? இந்த பாடலைப் பாராயணம் செய்தால் பிரிந்த தம்பதியர் கூடி வாழ்வர் என்று பெரியோர் சொல்வார்கள்..
.
"விண் மேவும் புலவருக்கு" விண்ணில் வாழும் அறிவிற் சிறந்த அமரர்களுக்கு "விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே" விருந்தாக பாற்கடலில் கிடைத்த அருமருந்தான அமுதத்தை அளிக்கும் மென்மையானவளே... அமுதம் வேண்டிஅமரர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வெளிப்பட்ட வேளையில் சண்டையும் வரத் தொடங்கிற்று... அது அமரர்களுக்கா..
அல்லது அசுரர்களுக்கா... என... யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை...ஏனெனில் பாற்கடலைக் கடைந்த நோக்கமே அதுதான்.. அச்சமயத்தில் அமரர்களுக்கு நல்லுதவி புரிய திருமால் தானே மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை வஞ்சித்து அமரர்களுக்கு நன்மை புரிந்தார். அமுதமும் தேவர்களுக்குக் கிட்டியது... அம்மோகினியாக வந்தது திருமாலே ஆயினும், அத்திருமால் அன்னையின் ஒரு அம்சம் அல்லவா? திருமாலைப் படைத்தவளும் அன்னை ஆதிபராசக்தியல்லவா?? ஆக... அமரர்களுக்கு அமுதத்தை அளித்தது அன்னையே...
அப்படிப்பட்ட அன்னையாளவள்... "வருந்தாவகை என் மனத்தாமரையில் " நான் வருத்தமடையா வண்ணம் என் மனமென்னும் தாமரையில் "வந்து புகுந்து " "பழைய இருப்பிடமாக " "இருந்தாள் " தானகவே வந்து புகுந்து என் மனத்தைத் தனது பழைய இருப்பிடமாகக் கருதி இருந்தாள்...
அன்னையோ பேருருக் கொண்டவள். நானோ எளியவன். என் இதயக் கமலத்தில் அவள் அமரும்பொழுது அது வலிக்கும் என்றெண்ணியிருந்தேன்.. ஆனால் நான் வருந்தாவண்ணம், எனக்கு வலியைத் தராமல் மென்மையாக அமர்ந்தாள். அதுவும் என் மனமே அவளது பழைய இருப்பிடமாகக் கருதி அமர்ந்தாள்... "இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை " இனிமேலும் எனக்குக் கிடைக்காத பொருள் என்று எதுவும் இல்லை... எல்லாமே எனக்குக் கிட்டி விட்டது அன்னையெனும் வடிவில்..இந்த அகிலமே அவளுக்குச் சொந்தம்.
அவளோ எனக்குச் சொந்தமானாள்.. இனி இந்த அகிலமும் எனக்கே சொந்தம்...எனக்குக் கிட்டாத பொருளென்று எதுவுண்டு?? எதுவுமில்லை...அன்னையானவள் தானே தன் பழைய இருப்பிடத்தைத் தேடி அமர்ந்தது போல என் மனத்தில் குடி கொண்டாளே... ஆனந்தம் ... ஆனந்தம்.... ஆனந்தக் கூத்தாடுகின்றேன்.... வேறென்ன வேண்டும் எனக்கு... இவ்வுலகத்தோர் மதிக்கும் செல்வம் எனக்குத் துச்சம்.....
அபிராமி அந்தாதி விளக்கவுரை 25
பாடல் தொண்ணூற்று ஒன்று
மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமேவிளக்கம் :
மெல்லிய நுண்ணிய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளும், விரிந்த சடைகளைக் கொண்ட சிவபெருமானோடு இணைந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட பொன்னைப் போன்றவளுமாகிய அன்னை அபிராமியைப் புகழ்ந்து வேதங்கள் சொல்லிய
படி அவளைத் தொழும் அடியார்களைத் தொழுபவர்களுக்கு, பல்வேறு இசைக்கருவிகள் இசை முழங்க, வெண்யானையான ஐராவதத்தின் மேலேறி ஊர்வலம் வரும் இந்திர பதவி வந்து சேரும்..ஆண்டவனுக்கு சேவை செய்வதை விட அவன் அடியார்க்கு செய்யும் சேவையையே அவன் பெரிதும் மதிக்கின்றான். அதையேதான் அபிராமிப் பட்டர் இங்கு உரைக்கின்றார்... அன்னையின் அடியார்களைத் தொழுது அவர்கட்கு தொண்டு செய்வோருக்கு இந்திர பதவியே கிட்டும் என்று குறிப்பிடுகின்றார். "மெல்லிய நுண் இடை மின்னனையாளை " மெல்லிய நுண்ணிய இடையினை உடைய மின்னலைப் போன்றவளை... "விரிசடையோன் புல்லிய மென்முலைப் பொன்னனையாளை " விரிந்த சடைகளைக் கொண்ட சிவபெருமான் புணர்ந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட பொன்னைப் போன்றவளை, அன்னை அபிராமியை...
"புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு" புகழ்ந்து வேதங்கள் சொல்லும் வழியில் அவளை வழிபடும் அடியார்களை வழிபடுவோர்க்கு... அதாவது அடியார்க்கடியார்க்கு.... "பல்லியம் ஆர்த்தெழ " பல்வேறு இசைக்கருவிகள் இசை முழங்க... "வெண்பகடு ஊரும் பதம் தருமே" வெண்யானையான ஐராவதத்தில் ஊர்வலம் செல்லும் இந்திர பதவி வந்து சேரும்... அதை அன்னையே தருவாள்...ஆகையால்தான் குருபக்தி அவசியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்... சாயாண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா அவர்கள் சொல்வார்கள்.. "ஈசனுக்குக் கோபம் வந்தால் நீ குருதேவரிடம் அடைக்கலம் புகலாம். ஈசனது கோபத்தைத் தடுக்கும் ஆற்றல் குருவுக்கு உண்டு... ஆனால் குருவுக்குக் கோபம் வந்தால் அதை அந்த ஈசனாலும் தடுக்க இயலாது" என்று... ஆகவே அன்னையின் அடியார்களை வழிபடுவோருக்கு அன்னை அந்த இந்திர பதவியைத் தருவாள்....
பாடல் தொண்ணூற்று இரண்டு
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே
விளக்கம் :
மும்மூர்த்திகள் முதலான தேவர்கள் யாவரும் போற்றும் புன்னகை நிறைந்தவளே... அபிராமி அன்னையே... உனது சொற்களிலே உருகி உன் திருவடிகளிலே மனம் ஒன்றி உனக்கு அன்பனாக வாழ்வதற்காக என்னை உன் அடியாக்கிக் கொண்டாய்..நான் இனி வேறு எந்த ஒரு மதத்தைக் கண்டும் மதி மயங்க மாட்டேன். அம்மதத்தைச் சார்ந்தவர் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்...அழகிய சொல் "முகிழ் நகை". தமிழில் இச்சொல் வழக்கில் இல்லாவிட்டாலும், கன்னடத்தில் "முகிழ் நகை" எனும் சொல் வழக்கில் உள்ளது... எங்கள் குருதேவர் தியானத்தில் எங்களை அழைத்துச் செல்லும் போது "முகதல்லி முகிழ் நகையிரலி" என்று சொல்வது அப்படியே நினைவுக்கு வருகின்றது. அன்னையை அழகிய புன்னகையே என வர்ணிக்கும் அபிராமிப் பட்டரின் வார்த்தைகள் நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கின்றன...
"முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே" மும்மூர்த்திகள் முதலிய தேவர்கள் அனைவரும் போற்றும் அழகிய புன்னகையே... "பதத்தே உருகி "உன் சொற்களிலே உருகி... " நின் பாதத்திலே மனம் பற்றி " உன் திருவடிகளிலேயே என் மனத்தை நிலை நிறுத்தி... :"உந்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் " உன் இஷ்டப்படி வாழ்வதற்காக... உனக்கு அன்பனாய் வாழ்வதற்காக என்னை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய்... "இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் " இனிமேல் நான் எந்த ஒரு மதத்திலும் மதி மயங்க மாட்டேன்..."அவர் போன வழியும் செல்லேன்" அம்மதத்தார் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்....அன்னை அபிராமி மதம் இருக்க அடுத்த மதம் நமக்கெதற்கு....
பாடல் தொண்ணூற்று மூன்று
நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே
விளக்கம் :
இந்த அகிலத்தையெல்லாம் பெற்றெடுத்த அன்னை அபிராமியின் திருமுலைகள் மொட்டினைப் போன்றுள்ளதென்றும் அவளது திருக்கண்கள் மான்களைப் போன்றுள்ளதென்றும் புகழ்வது நகைப்புக்குரிய செயல்.. எல்லையில்லாத வடிவையுடைய அபிராமியை மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகள் என்று விளிப்பதும் வம்பே. இவளது தகைமைகளை நாம் நாடிச் சென்று அறிய
விரும்புவதும் மிகையான செயல்களே...குருடர்கள் ஆனையைத் தடவிக் கண்ட கதைதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகின்றது... தான் அன்னையைத் துதித்துப் பாடிய பாடல்கள், அவளை வர்ணித்த வர்ணனைகள் இவையெல்லாம் நகைப்புக்குரியன என்றும், தகாதன என்றும் அவள் குணங்களை அறிய முற்படுவது மானுடரின் சக்திக்கு மிகையான செயல் என்றும் குறிப்பிடுவது நம்மை விழியுயர்த்த வைக்கின்றது..
ஒரு கோயிலைக் கட்டி அதனுள் ஒரு விக்கிரகத்தை வைத்து அதுதான் அன்னை அபிராமி என்று வழிபடுவதும் கூட ஒருவகையில் நகைப்புக்குரிய செயல்தான். ஏனெனில் அவள் முடிவற்ற வடிவுடையவள்.. அப்படியாயின் கோவிலகள் எதற்கு?? வழிபாட்டு முறைகள்
எதற்கு??? இவை அன்னையைப் பற்றிய சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்தவும், அவளே நம்மைப் படைத்தவள் என்பதை நமக்கு நினைவூட்டவும்தான்... ஆலயங்கள் மனித மனங்களை நெறிப்படுத்தவும், மனித சிந்தனைகளை ஒரே நேர்க்கோட்டில் கொணரவுமே
கட்டப்பட்டன... ஆனால் அன்னையானவளோ இவற்றையெல்லாம் தாண்டி நிற்பவள்..இருக்கும் இடத்திலிருந்து "அபிராமி" என்றழைத்தால், ஓடிவந்து கருணை செய்யும் அன்னை எளியவள்... இவள் எளியவள் என்றெண்ணி இவளை நான் அறிந்து கொண்டேன்.. என்று பெருமை பேசும் மூடருக்கு அவள் பெரியவள்.. அகிலமே அன்னையாக இருக்கையில் அங்கென்றும், இங்கென்றும் அவளைத் தேடி, அவள் அழகை
மற்றவற்றோடு ஒப்பிட்டு வர்ணித்தல் அபிராமிப் பட்டருக்கு நகைப்பை ஏற்படுத்துகின்றது...
உலகைப் பெற்றெடுத்தவளை, இவள் மலையரசன் பெற்றெடுத்த மலைமகள் என விளிப்பது தகாத செயல்.. அது வம்புக்குரிய செயல் என்று
பகர்கின்றார். பெரியோர் ஒருவரது உரையில் கேட்டது. இராமனைப் பற்றி அவர் உரைத்ததன் சாரத்தை இவ்விடத்துப் பதிவுசெய்கின்றேன்.. "எந்த இடத்தில் பெருமையும்,எளிமையும் இணைந்திருக்கின்றதோ அதுதான் இறைவன்.. இறைவன் பெருமை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். அதே சமயம் நாம் அழைத்தால் வந்து அருள் செய்யும் எளியவனாகவும் இருக்கின்றான்.. உலகத்து வழக்கில் பெருமை
இருக்குமிடத்தில் எளிமை இல்லை... எளிமை இருக்கும் இடத்தில் பெருமை இல்லை... இந்த தேசத்து உயர் பதவியில் இருப்பவர் பெருமை பெற்றவர்.. ஆனால் அவரை நம்மால் அவ்வளவு எளிதில் சந்திக்க இயலுமா? இயலாது. எனவே பெருமை இருக்கும் இடத்தில் எளிமை இல்லை... தெருவோரம் குப்பை நிறைந்திருக்கின்றது. எளிதில் நெருங்கி விட எளிமையாக இருக்கின்றது என்று அதனைப் பெருமை கொண்டாட இயலுமா? எனவே எளிமை இருக்குமிடத்தில் பெருமை இல்லை... ஆனால் இறைவனின் திருவடிகளோ மிகப் பெருமை வாய்ந்தது... அதே சமயம் நமக்கருள் செய்யும் வகையில் அத்தனை எளிமையானது...
இது அந்த பெரியவர் இராமனின் பெருமையையும் எளிமையையும் பற்றி உரைத்தது... அதையே இவ்விடத்து நினைவு கூர்கின்றேன்... அன்னையானவளை நாம் எளிமையான சொற்கள் கொண்டு வர்ணனை செய்கின்றோம்.. அது நகைப்புக்குரிய செயல்...ஆனால் அதையே ஏன் பட்டரும் செய்தார்... ? அன்னை அத்தனை எளிமையானவளாக அவருக்குக் காட்சியளித்ததால்தான். அவள் மலையரசனுக்கு மகளாகப் பிறந்தது தன் எளிமையை உலகிற்கு உணர்த்துவதற்கேயன்றி வேறெதற்கும் அல்ல..."இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு" இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்த தலைவிக்கு.. அபிராமிக்கு.... "முகையே முகிழ் முலை " அரும்பும் மொட்டினைப் போன்ற முலைகள் உள்ளன என்பதும்... "மானே முதுகண் " மருளும் மானைப் போன்ற விழிகள் உள்ளன என்பதும் "நகையே இது" நகைப்புக்குரிய செயலே இது..
"முடிவுயில் " எல்லையில்லாத வடிவுடையவளை... எங்கள் அபிராமியை..."மலைமகள்" "பிறவியும்" "என்பதும்" "அந்த வகையே" "வம்பே"
மலையரசன் பெற்றெடுத்த மகளல்லவா என்று மலைமகள் என்று விளிப்பதும் அதைப் போன்ற நகைப்புக்குரிய செயலே... மேலும் அது வம்புக்குரிய செயல்.... ஏனெனில் இந்த அகிலத்தைப் பெற்றெடுத்தவளும் அவளே.... அவளை இன்னொரு மானுடனுக்குப் பிறந்தவள் என்பது
வம்புக்குரிய செயலல்லவா?? "நாம்" "இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே""மிகையே" எளியோர்களாகிய நாம் இவளது அருங்குணங்களையும், பெருமைகளையும் நாடி விரும்பி அறிந்து கொள்ள முயல்வதும் மிகையான செயலே... ஏனெனில் நம்மால் அது இயலாது.. இவள் இத்தன்மையள் என்றுரைத்தால், இன்னோரிடத்து அவள் வேறு தன்மையளாய் நிற்கின்றாள்... ஓ அதுவே அவளது தன்மை என அவ்வழி சென்றால், பிறிதோரிடத்தில் அவள் இன்னொரு தன்மையளாய் நிற்கின்றாள்.. ஆக அவளை,.. அவளது தன்மைகளை வரையறுக்க இயலாது.. அவளை நம்மால் அறிந்து கொள்ளவும் இயலாது...
பாடல் தொண்ணூற்று நான்கு
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே
விளக்கம்
- அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள் கண்களெல்லாம் கண்ணீர் மல்கி, உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, சுய அறிவினை இழந்து, தேனுண்ட வண்டைப் போல் களித்து, சொற்கள் தடுமாறி இப்படிச் சொல்லப்பட்ட செயல்கள் எல்லாம் கொண்ட பித்தரைப் போல் ஆவார்கள் என்றால் அன்னை அபிராமியை வழிபடும் சமயம் நல்லதே....அன்னையை முழுமனதோடு எண்ணி வழிபடும் பக்தர்கள் ஆலயம் சென்று அவளைக் காணும்போது இது போன்ற செயல்களைச் செய்வது இயற்கையானதுதான்... குலசேகரன்
பட்டினத்தில் கோயில் கொண்டுள்ள முத்தாரம்மனைக் காணச் செல்லும் போதெல்லாம் நானும் இது போன்ற செய்கைகளுக்குள்ளாகின்றேன்.. காரணம் புரிவதில்லை..அதற்குரிய காரணம் அன்னை மேல் நாம் கொண்டுள்ள அதீத அன்பே... சொல்லொண்ணா ஆனந்தம் அதிகமாகி அவளையே நேரில் கண்டது போன்ற உணர்வு மேலோங்கும்போது விழி தானே நீரைச் சொரிகின்றது... மெய்யோ மயிர்சிலிர்த்து ஆடுகின்றது... சுய அறிவு அற்றுப்போகின்றது...
தேனுண்ட வண்டைப் போல் மனம் ஆனந்த நடனமாடுகின்றது... இவற்றையெல்லாம் காண்போர் இவனென்ன பைத்தியக்காரனைப்
போல் செயல்படுகின்றானே என இகழ்ந்துரைக்கின்றனர். அபிராமிப் பட்டரை அப்படித்தான் பித்தனென்றனர்.. ஆனால் பட்டரோ இப்பித்த நிலையை அபிராமி சமயம் எனக்குத் தருமானால் அது நல்ல சமயமே... என்றுரைக்கின்றார்...கிறித்தவ நண்பர்களும் இதைப் படித்து வருகின்றீர்கள்... இந்துக்களின் ஆலயங்களில் தன்னை மறந்து ஆடும் பக்தர்களைப் பேய் பிடித்து ஆடுகின்றான் எனக் கிண்டல் செய்கின்றார்கள்... ஆனால் இதையேதான் "பரிசுத்த ஆவி"நிறைந்து ஆடுவதாக அவர்களும் அனுபவிக்கின்றனர்.. ஆக ஆழ்ந்த இறையனுபவம் இதைப் போன்ற செயல்களைத் தருவதாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அது தன்னை மறந்த ஆனந்த நிலை என்பது அனுபவிக்காதோருக்குப் புரியாது...
"விரும்பித் தொழும் அடியார்" அன்னை அபிராமியை விரும்பித் தொழுகின்ற அடியவர்கள் "விழி நீர் மல்கி" கண்களில் கண்ணீர் வழிந்தோட "மெய் புளகம் அரும்பித்" உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து... (இதைத்தான் கிராமத்தில் "புல்லரிப்பது" என்பார்கள்). "ததும்பிய ஆனந்தம் ஆகி" ஆனந்தம் ததும்பி "அறிவு இழந்து" தங்கள் சுய அறிவினை இழந்து "கரும்பின் களித்து" தேனுண்ட வண்டினைப் போல் களித்து "மொழி தடுமாறி" சொற்கள் தடுமாறி "முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால்" இவ்வாறு சொன்ன செய்கைகளை எல்லாம்
செய்யும் பித்தர்கள் ஆவர் என்றால்.... உலகத்தோரின் பார்வையில் பைத்தியக்காரனைப் போல் ஆவார்கள் என்றால் "அபிராமி சமயம் நன்றே" அபிராமியை வழிபடுவதற்கு வழிகாட்டும் இந்த அபிராமியின் சமயம் மிகவும் நல்லதே.. உயர்ந்ததே....இந்த பாடலைப் பாடும்போதே அந்தப் பரவச நிலை ஏற்படுகின்றது... கண்கள் மூடி அபிராமியை மட்டுமே மனத்தில் எண்ணி அவள் திருவுருவை மனத்தில் நிறுத்தி ஒரு
நொடி இருந்தால் போதும் .. நம் கண்கள் பனிக்கும்... இதயம் இனிக்கும்.
அபிராமி அந்தாதி விளக்கவுரை 26
பாடல் தொண்ணூற்று ஐந்து
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே
விளக்கம் :
அழியாத நல்ல குணங்களின் குன்றாக விளங்குபவளே... அருள் நிறைந்த கடலாக இருப்பவளே... மலையரசன் இமவான் பெற்ற கோமளமே... எங்கள் அபிராமி அன்னையே.... எனக்கென்று உள்ளதெல்லாம் நான் அன்றே உனக்கென்று அர்ப்பணித்து விட்டேன்.. இனி எனக்கு நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.... எனக்கு நீயே கதி...அனைத்தையும் அன்னைக்கே அர்ப்பணித்து விட்ட பின்னர் நன்மையால் வரும் மகிழ்வும் இல்லை... தீமையால் வரும் துன்பமும் இல்லை.. அன்னையையே பரம் என்று கொண்ட மனம் விருப்பு, வெறுப்பு அற்ற நடுநிலை கொண்டதாகின்றது..குணங்களில் குன்றாகவும், அருட்பெருங்கடலாகவும் இருக்கும் அன்னை அத்தகைய
நல்மனத்தினை நமக்குத் தந்தருள்கின்றாள். அன்னையே நம்மை வழி நடத்தும்போது நம் வாழ்வில் தீமைகள் ஏது..? எல்லாம் நன்மையே அல்லவா?
"அழியாத குணக் குன்றே " அழியாத நற்குணங்களின் குன்றே.... "அருட்கடலே" அருளெனும் கடலே... "இமவான் பெற்ற கோமளமே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த கோமளமே.. எங்கள் அபிராமி அன்னையே... "எனக்கு உள்ளதெல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் " எனக்கென்று உரிமையுள்ள அனைத்தையும் அன்றே நான் அவையெல்லாம் உனதே என்று அர்ப்பணித்து விட்டேன்.. என்று? என்றைக்கு நீ என்னை உன் மகனென்று அறிந்தாயோ அன்று... "நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை " இனிமேல் எனக்கு நன்மை நடந்தாலும், தீமை விளைந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அவற்றின் மகிழ்ச்சியோ துக்கமோ என்னைப் பாதிக்காது... "உனக்கே பரம்" ஏனெனில் எனக்கு நீயே கதி.....ஆழ்ந்த மனத்துயரில் இருக்கும்போதெல்லாம் அறியாமல் என் மனது பாடும் பாடல் இது... இப்பாடலைப் பாடும் போது மனம் இலகுவாகி நான் துயரங்களிலிருந்து எளிதில் வெளிவருவேன்.... மிக அருமையான பாடல்.
பாடல் தொண்ணூற்று ஆறு
கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே
விளக்கம் :
மென்மையானவளை, அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறப் பேரழகியை, குற்றமில்லாதவளை, எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்டவளை, சகல கலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை, எங்கள் அபிராமியை, தம்மால் இயன்ற அளவுக்குத் தொழுபவர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்...ஆலயம் சென்று அன்னையை வணங்கும் போது கண்ணீர் மல்கி, கரங்கள் கூப்பி, சிரங்குனிந்து தொழுதிடல் வேண்டும்.. ஆனால் இன்றைய கலாச்சாரமோ ஆலயத்திற்கு வெளியில் நின்று (சிலர் நிற்பது கூட இல்லை) ஒரு கையை மட்டும் தூக்கி வணங்கி விட்டு செல்கின்றனர்... இது முறையல்ல.. தம்மால் இயன்ற அளவுக்குத்
தொழ வேண்டும்... அதனால்தான் பெரியோர்கள் தரையில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்குகின்றனர்... அப்படி அவளைத் தொழுவோர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்... இது அபிராமிப் பட்டர் வாக்கு...
இன்னோர் பொருளும் கொள்ளலாம்.அதை இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் உரைத்த கதை ஒன்றின் மூலம் விளக்குகின்றேன்.... பக்தியிற் சிறந்தவர் யாரென ஒருமுறை நாரதர் திருமாலிடம் வினவினார்.. ஓர் ஏழைக் குடியானவனைக் காண்பித்து "இவனே என்
பரம பக்தன்" என உரைத்தார் திருமால். "அல்லும் பகலும் இடையறாது "நாராயணா" என உன் திருநாமத்தைச் செப்பும் என்னை விட இந்த ஏழைக் குடியானவன்எவ்வகையில் உயர்த்தியானவன்?" என நாரதர் வினவ...திருமால் புன்னகை பூத்தவாறே "நீ சென்று அவனது அன்றாட நடவடிக்கைகளை ஒரு நாள் மட்டும் கவனித்து வா" என்று அனுப்பி வைத்தார். நாரதரும் சென்று கவனித்தார். அக்குடியானவன் காலையில் எழுந்தான் "ஸ்ரீ ஹரி" என்றான்.. தனது காலைக் கடன்களை முடித்தான்.. கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான்.
வழக்கம்போல் வேலைகளைச் செய்தான்.. மாலை இல்லம் திரும்பினான்..குளித்தான். தன் மனைவி மக்களோடு உரையாடினான். ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்தான். இரவு படுக்கையில் படுக்கச் சென்றான். "ஸ்ரீ ஹரி" என்றான். உறங்கிவிட்டான்..
இது நாரதர் கவனித்த தினத்தில் நிகழ்ந்தது. திருமாலிடம் திரும்பிய நாரதர் இதை உரைத்தார். திருமாலும் சிரித்தவாறே "இன்றல்ல நாரதா.
என்றுமே அவனது வழக்கமான செயல்கள் இவைதான்" என்றுரைத்தார்.. "பின்னர் எப்படி அவனைத் தங்களது பரமபக்தன் என்று உரைத்தீர்கள்?" என நாரதர் வினவ...பகவான் நாரதன் கையில் ஒரு எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து, "நாரதா. இந்த பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இதில் உள்ள எண்ணெய் ஒரு சொட்டளவும் சிந்தாமல் இந்த வைகுண்டத்தை ஒரு முறை சுற்றி வா. பிறகு பதிலுரைக்கிறேன்" என்றார். நாரதரும் சுற்றி வந்தார். "பாருங்கள் பகவானே..ஒரு சொட்டளவும் சிந்தவில்லை.. தங்கள் ஆணையை அப்படியே நிறைவேற்றி விட்டேன். இப்போது சொல்லுங்கள் யார் பக்தியில் சிறந்தவரென்று?" என பகவானிடம் வினவினார் ..பகவான் "நாரதா.. இந்த வைகுண்டத்தைச் சுற்றி வருகையில் எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை முறை என் நாமத்தை
உரைத்தாய்?" என பதிலுக்கு ஒரு வினாவை எழுப்பினார் "அதெப்படி... என் கவனமெல்லாம் இந்த எண்ணெய் துளியளவும் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது.. ஒரு முறை கூட தங்களை நினைக்கவில்லை.. அதெப்படி நினைக்க இயலும்? என் கவனம் உங்கள் மேல் வந்து விட்டால் நான் பரவசமாகி விடுவேன். எண்ணெய் சிந்தியிருக்குமே?" என்று நாரதர் பதிலுரைக்க...
"இந்தச் சிறு பாத்திரத்தைச் சிந்தாமல் சுமக்கும் வேளையில் ஒரு முறை கூட நீ என்னை நினைக்கவில்லை...ஒரு முறை கூட என் திருநாமத்தைச் செப்பவில்லை. ஆனால் அவனைப் பார்.. ஏழை... அவனுக்குச் சுமைகள் பல... குழந்தைகள் பல... ஆயினும் காலை எழுந்தவுடன் ஒரு முறை... இரவில் உறங்குமுன் ஒருமுறை ... என நாளொன்றுக்கு இருமுறை என் திருநாமத்தையுரைத்து என்னை நினைக்கின்றானல்லவா? தனது இல்வாழ்க்கையெனும் பாத்திரத்தையும் அவன் ஏந்தி வந்த பொழுதும் அவனது கவனங்களெல்லாம் மனைவி, குழந்தைகள் என்றிருந்த போதும் தினமும் மறவாது என் நாமத்தை உரைக்கின்றானே...அவனல்லவா என் பரமபக்தன்" என சிரித்தவாறே உரைத்த திருமாலைக் கண்டு நாணிக் கொண்டே வெளியேறினார் நாரதர்..நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையைத் தொழவேண்டும். உலகின் பந்தங்களில் கட்டுண்டோம்.. சுமைகள் சுமக்கின்றோம்... அந்நிலையிலும், நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையின் நினைவில் நிற்க வேண்டும்.. அவளைத் தொழுதிடல் வேண்டும்... இவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்குத் தொழும் அடியவர்கள் ஏழுலகிற்கும் அதிபர்கள் ஆவர்...
"கோமளவல்லியை " மென்மையானவளை..."அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமளவல்லியை " அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறத்தவளை...கற்பனையில் அன்னையின் திருவுருவைக் கண்டு மகிழுங்கள்... "ஏதம் இலாளை"குற்றங்குறைகள் இல்லாதவளை... "எழுதரிய சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை" எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்ட சகலகலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை... எங்கள் அபிராமி அன்னையை... "தம்மால் ஆமளவும் தொழுவார்"
தங்களால் இயன்ற அளவுக்குத் தொழுகின்ற அடியவர்கள்.. "எழு பாருக்கும் ஆதிபரே" ஏழுலகையும் ஆளும் அதிபர்கள் ஆவார்கள்.. ஏழுலகும் அவர்கட்குச் சொந்தமாகும்...அன்னையின் வழிபடுதலால் ஏற்படும் பயனைச் சொல்லும் பாடல் இது... இப்பாடலைத் தொடர்ந்து பாடி வந்தால் சென்றவிடத்தெல்லாம் வெற்றி பெறலாம் எனப் பெரியோர்கள் உரைப்பார்கள்...
பாடல் தொண்ணூற்று ஏழு
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே
விளக்கம் :
சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், அமரர்களின் தலைவன் இந்திரன், திருமாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன், முப்புரங்களை அழித்த
சிவபெருமான், முரனை அழித்த திருமால், பொதியமலை வாழ் முனிவன் அகத்தியன்,போரிடும் பெரும்படையை ஒத்த பலம் மிக்க கந்தன், அவன் அண்ணன் முதற்கடவுள் கணபதி, காமன் முதலிய சாதனை படைத்த புண்ணியம் மிக்க எண்ணற்றோர் எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்.அத்தனை தெய்வங்களையும் இப்பாடலில் குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் என் அன்னையைப் போற்றுவார்கள் எனக் குறிப்பிடுகின்றார் அபிராமிப் பட்டர்...ஒரு பாடல் உண்டு "கந்தன் காலடியை வணங்கினால், கடவுள்கள் யாவரையும்
வணங்குதல் போலே.." என்று... இவ்விடத்து அனைத்துக் கடவுள்களையும் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் அன்னையை வணங்குகின்றனர் எனக் குறிப்பிடுதலால், இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிடில் என்ன புண்ணியம் வருமோ அது அன்னையை மட்டும் வணங்கினாலே வரும் என்பது இப்பாடலின் மறைபொருள்..
"ஆதித்தன்" சூரிய பகவான், "அம்புலி" சந்திர பகவான் "அங்கி" அக்கினி, "குபேரன்" குபேரன், "அமரர் தம் கோன்" அமரர்களின் அரசன் இந்திரன் "போதிற் பிரமன்" மாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன் "புராரி" முப்புரங்களை அழித்த சிவபெருமான் "முராரி" முரன் எனும் அசுரனை வதைத்தத் திருமால், "பொதிய முனி" பொதியமலை வாழ் தமிழ் முனி அகத்தியன் "காதிப் பொரு படை கந்தன்" போரிடும் பெரும்படையை ஒத்த வலிமை மிக்க முருகன் "கணபதி" கந்தனின் அண்ணன் முழு முதற்கடவுள் கணபதி "காமன்" காமக் கடவுள் மன்மதன் "முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் " இவர்கள் முதலான சாதனைகள் பல படைத்த புண்ணியம் செய்த எண்ணற்றோர் "போற்றுவர் தையலையே" எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்...
அபிராமி அந்தாதி விளக்கவுரை 27
பாடல் தொண்ணூற்று எட்டு
தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலேவிளக்கம் : உண்மை நிறைந்த நெஞ்சத்தைத் தவிர்த்து ஒரு போதும் வஞ்சகரின் பொய் நெஞ்சில் புகுதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி
அன்னையே... உனது திருவடித் தாமரைகளைத் தனது தலைமேல் அணிகலனாகச் சூட்டிய சங்கரனாரின் கையிலிருந்த அக்கினிச் சட்டியும், தலைமேலிருந்த கங்கையும் எங்கே மறைந்தன? அன்னையை மணம் முடிக்க சங்கரனார் வருகின்றார்.. எந்நேரமும் சுடலையில்
தியானத்தில் மூழ்கியிருக்கையில் அவர் பெருஞ்சடையில் கங்கையானவள் ஒட்டிக் கொண்டாள். அவரது கையிலோ அவரது கோபத்தையொத்த அக்கினிச் சட்டி... அன்னையின் திருப்பாதங்களைத் தனது சிரசில் சூடி அவளையே மணம் முடிக்க வேண்டி
வருகின்றார்.. காண்போர் என்ன பகர்வர்? இவனா மணம் முடிக்கச் செல்லும் மணமகன்.? இதென்ன தவக்கோலம்? சுடலைக் கோலம்? என எள்ளி நகையாட மாட்டார்களா? எனவே தனது தவக்கோலத்தை மறைத்து இராச அலங்காரத்தில் வருகின்றார்...
அவர்தம் கையில் நெருப்புச் சட்டியிருந்தால் அழகிய பூங்குயில் போன்ற அன்னைக்குத் தகுமா? எனவே அதை எங்கேயோ மறைத்து விட்டார்... தனது சடைமுடிமேல் கங்கையிருந்தால் அன்னை பொறுப்பாளா? இவள் எனக்குச்சக்களத்தியா? என்று சங்கரனாரிடம் சண்டை பிடிப்பாளில்லையா? அதற்காக கங்காதேவியையும் எங்கேயோ மறைத்து விட்டார்.. இப்போது அழகிய அரசகோலத்தில் அன்னையை மணம் முடிக்க வந்து கொண்டிருக்கின்றார்... பட்டருக்கு இக்காட்சித் தென்படுகின்றது.. என்னடா இது இவர் கையில் ஓர் அக்கினிச்சட்டியைக் கண்டோமே? இவர் சடையில் கங்கை குடிகொண்டிருந்தாளே...? எங்கே போயின அவை? என் அன்னையை நீ உன் தலையில் சூடிக்கொண்டதால் அவை எங்கே மறைந்து போயினவோ?? என சங்கரனாரிடம் கேட்கின்றார்... நீ இப்படிச் செய்கின்றாயே... என் அன்னையோ உண்மை பேசுவோர் நெஞ்சத்துள் மட்டுமே குடிபுகுவாளேயன்றி ஒருபோதும் பொய்யுரைக்கும் வஞ்சசர் நெஞ்சத்தில் குடிபுகுவதே இல்லையே... உன்னை எப்படியடா தன் கணவனாக ஏற்றாள்? என ஈசனைக் கிண்டலடிக்கின்றார்...
அகிலத்தைப் படைத்த ஆதிபராசக்தியே ஆனாலும் அவளுக்கும் பெண்ணுக்குரிய குணங்கள் இருப்பதாலேயே நீ இப்படிச் செய்கின்றாயோ? எனவும் வினவுகின்றார். அன்னையிடமும் நீ உண்மை பேசுவோரை விடுத்து, வஞ்சகர்களின் பொய் பேசும் நெஞ்சத்தில் குடியிருப்பதில்லையே...உன்னை ஏய்க்கும் பொருட்டு சங்கரனார் வேடமிட்டு வந்திருக்கின்றானே... இவனை நீ எப்படி ஏற்றாய்? அன்னையிடமும் கேள்விக்கணையைத் தொடுக்கின்றார்."மெய் வந்த நெஞ்சின் அல்லால் " உண்மை பேசுவோர் நெஞ்சத்தைத் தவிர்த்து
"ஒருகாலும்" ஒருபோதும் "விரகர் தங்கள்" வஞ்சகர்களின் "பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே" பொய் பேசும் நெஞ்சத்தில் புகுவதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி அன்னையே... "தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு" உன் திருவடித் தாமரைகளைத் தனது சிரசின் மேல் அணிகலனாக சூடிய சங்கரனாரின் "கை வந்த தீயும் " கையிலிருந்த அக்கினிச்சட்டியும் "தலை வந்த ஆறும்" சடைமேலிருந்த கங்கை நதியும் "கரந்ததெங்கே?" எங்கே மறைந்து போயின? அன்னை உன்னைக் கோபித்துக் கொள்வாளென்று எங்கே மறைத்து விட்டு வநதீர் சங்கரனாரே..? உம் கோலம் எல்லோருக்கும் தெரியுமய்யா... எங்கள் தாயை நீர் எப்போதும் ஏமாற்ற இயலாதய்யா....
பாடல் தொண்ணூற்றொன்பது
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
விளக்கம் :
கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய்..அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில் காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில் குயிலாகவும், கயிலையில்
மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.
சிறு வயதில் கற்ற ஓர் பாட்ல் நினைவுக்கு வருகின்றது. "அழகிய மயிலே அபிராமி... அஞ்சுக மொழியே அபிராமி... ஆதிக்கடவூர் அபிராமி... ஆனந்த வடிவே அபிராமி" என்று தொடரும் அப்பாடல்... மதுரை மாநகரில் இன்னிசை பாடும் குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும் காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய வடிவில் தென்படுகின்றாள் அல்லவா? "அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள் கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே... "கடம்பாடவியிடை
"குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்..."இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய் இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.
பாடல் நூறு
குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே
விளக்கம் :
காதில் அணிந்துள்ள குண்டலங்களைத்த் தொடும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையை அணிந்து அம்மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே. கழையை ஒத்த நின் அழகிய நெடுந்தோள்களும், உன் கரும்பு வில்லும், இன்பப் போருக்குத் தேவையான திறனுடைய தேன் நிறைந்த ஐந்து மலர்க் கணைகளும், வெண்ணிறப் புன்னகையும், மானையொத்த விழிகளும் என் நெஞ்சத்தில் எப்போதும் இருக்கின்றன...உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கிய அந்தாதியை உதிக்கின்றவே என அழகுற
நிறைவு செய்தார் அபிராமிப் பட்டர். அன்னையின் திருவுரு எப்போதும் என் நெஞ்சத்தில் உதித்துக் கொண்டே இருக்கும். அவளை எப்போதும் நான் தொழுது கொண்டே இருப்பேன். இதை விடுத்து எனக்கு வேறு எதுவும் இல்லை என்பது பட்டரின் கொள்கை...
"குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி" காதில் அணிந்துள்ள குண்டலங்களைத் தொடும்படியான கொன்றை மாலையை அணிந்து அக்கொன்றை மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே... தடித்ததொரு
கொன்றை மாலையை அன்னை அணிந்திருப்பதாக அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். அதன் பருமனால் அது அவள் காதில் அணிந்த குண்டலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது. அவளது மார்பகங்கள் கொன்றை மாலையைச்சுமப்பதால், கொன்றை மலரின் மணம் அவளது திருமுலைகளில் வீசுகின்றது...இவ்வரிகளை இன்னொரு நோக்கிலும் பொருள் கொள்ளலாம். கொன்றை மலரினை தன்
சடையில் அணிந்த சிவபெருமான் அழகிய குண்டலங்களை அணிந்த அன்னை அபிராமியைத் தழுவும்போது அக்கொன்றை மலர்கள் இருவர் நடுவிலும் வீழும்போது அது அன்னையின் மார்பில் பட்டு அதனால் அது கொன்றை மலரின் மணம் வீசுகின்றது என்றும் பொருள் பகர்வோர் உண்டு.
"கழையைப் பொருத திருநெடுந்தோளும் "கழையை ஒத்த உனது நெடுந்தோள்களும்... கழை என்பது மூங்கிலைக் குறிக்கும். இது கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ள சொல். "கருப்பு வில்லும்" உனது திருக்கரத்தில் நீ ஏந்திய கரும்பு வில்லும், "விழையப் பொரு திறல் வேரி அம்பாணமும் " இன்பப் போருக்குத் தேவையான திறன் கொண்ட தேன் நிறைந்த ஐந்து மலர்க்கணைகளும், "வெண் நகையும்" வெண்ணிற உன் புன்னகையும்... முத்து போன்ற உன் பற்கள் உன் புன்னகையால் வெளி தோன்றுவதால் உன் புன்னகை வெண்ணிறமெனத்
தோன்றுகின்றது... "உழையைப் பொரு கண்ணும் " மருளும் மானையொத்த உன் திருவிழிகளும், "நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே" எனது நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொரு காலையும் கதிரவன் எங்ஙனம் புதிதாய்த் தோன்றுகின்றானோ, அது போல் உன் திருவுருவும் என் நெஞ்சத்து எப்போதும் புதிதாய் உள்ளது... அன்னையே நீ என் நெஞ்சத்தை விட்டு நீங்குவதில்லை... உன்னை நான் என்றும் மறப்பதில்லை...அம்மா. அபிராமியே... அபிராமிப் பட்டரின் நெஞ்சத்தில் நிலையாகக் குடிகொண்ட நீ எங்கள் நெஞ்சத்திலும் வந்து எங்களை அருளாட்சி செய்தருள்வாயாக...
நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே
விளக்கம்
- அன்னையை, எங்கள் அபிராமி தேவியை, இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்தவளை, மாதுளம் பூ நிறங்கொண்டவளை, இப்பூமியைக் காப்பவளை, ஐவகை மலரம்புகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் தன் திருக்கரங்களில் ஏந்தியவளை, முக்கண்ணியை வணங்குவோர்க்கு எந்தத் தீங்கும் இல்லை....அபிராமி அந்தாதி நூலைத் தினமும் ஓதுவதால் கிட்டும் பலனை இப்பாடல்
மொழிகின்றது... அன்னையைத் தொழுவோர்க்கு ஒரு தீங்குமில்லை...விளைவதெல்லாம் நன்மையே... ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக பலன் சொல்வார்கள்... அனைத்தும் அறியேன்.. அறிந்தவற்றை அப்பாடல்களிலேயே குறிப்பிட்டுள்ளேன். அறிந்தவர்கள் நமக்குரைத்தால் மகிழ்வேன்.
"எங்கள்" "ஆத்தாளை" எங்கள் அன்னையை "அபிராம வல்லியை" அபிராமியை "அண்டமெல்லாம் பூத்தாளை" இந்த அண்ட சராசரங்களைப் பெற்றெடுத்தவளை...."மாதுளம் பூ நிறத்தாளை" மாதுளம் பூவின் நிறங்கொண்டவளை... "புவி அடங்கக் காத்தாளை" இப்பூமியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து காப்பவளை.."ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை " தனது திருக்கரங்களில் ஐந்துவகை மலர்க்கணைகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் ஏந்தியவளை.. "முக்கண்ணியை" மூன்று நயனங்கள் கொண்டவளை... "தொழுவார்க்கு" தொழுதிடும் அடியவர்களுக்கு.. "ஒரு தீங்கில்லையே" எந்த ஒரு தீங்கும் இல்லவே இல்லை... அவர்கட்கு
விளைவதெல்லாம் நன்மையே என்னும் உறுதியோடு தனது அபிராமி அந்தாதியை நிறைவு செய்கின்றார் அபிராமிப் பட்டர்...அண்டமெல்லாம் படைத்து அதனைக் காத்து, தீயனவற்றை அழிக்கும் மூன்று நயனங்கள் படைத்த எல்லாம் வல்ல அன்னை அபிராமியே நம் அனைவருக்கும் வரும் தீங்கினை விலக்கிக் காத்திடட்டும். எங்களைக் கடைக் கண் கொண்டு பார் தாயே..... உன் திருவடி இணைகளே சரணம்... சரணம்......