http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, February 19, 2011

கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி




கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி
(காஞ்சி கைலாயநாதர் ஆலயம்)



முன்னுரை

 காஞ்சி கையிலாயநாதர் ஆலயம் ஒரு பெருங்கோயில், தமிழக வரலாற்றிலேயே மிகச்சிறந்த நிலையில் இருக்கக் கூடிய கோயில். இன்று காஞ்சீபுரத்தில் இருக்கக்கூடிய கோயில்களில் மிகத் தொன்மையான கோயில் இதுதான். இதற்கு முன்னர் இருந்த கோயில்கள் பல உண்டு. நாயன்மார்களினாலே பாடல்பெற்ற கச்சி ஏகம்பரநாதர் கோயில், அனேக தங்காவதம், கச்சி மேற்றளி, திருக்கச்சி மயானம் முதலிய பல புண்ணிய கோயில்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவைகளிலே அந்த காலத்திலே எடுக்கப்பட்ட கட்டிட பகுதிகள் எல்லாம் பிற்காலத் திருப்பணிகளினால் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. ஆதலில் தொன்மையான கட்டிட பகுதி. அப்போது கட்டிய நிலையிலேயே இன்றும் எஞ்சி இருக்கிறது என்று எண்ணும்படி இருக்கக்கூடிய ஒரு கோயிலை காண வேண்டும் என்றால், அது இந்த திருக்கச்சி கையிலாயநாதர் ஆலயம்தான். 

 பல்லவர்கள் பல கோயில்களை எடுத்திருக்க வேண்டும். இராஜசிம்மனுக்கு முன்னர் ஆண்ட பரமேஸ்வரவர்மன். அவனுக்கும் முன்னர் திகழ்ந்த மாமல்லன், மகேந்திரவரமன் ஆகிய அரசர்கள் எல்லாம் இங்கே ஆண்ட போது அவர்கள் எடுப்பித்த கோயில்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவைகள் எல்லாம் இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. அவைகள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருக்கின்றன. ஒருசில கல் தூண்கள் மட்டும் மகேந்திரவர்மன் காலத்தில் எடுக்கப்பட்ட கட்டிடத்திற்கு எடுத்துக் காட்டாக கச்சி ஏகம்பரநாதர் ஆலயத்திலே காணக்கிடைத்தன. அவற்றில் மகேந்திர விக்கிரமன், மத்த விலாசன், விசித்திர சித்தன், சித்திரகாரபுலி என்ற பட்டப் பெயர்கள் எல்லாம் காணப்பட்டன. அந்த தூண்கள் இப்பொழுது சென்னையில் அரசு மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப் படுகின்றன. அதுதான் இங்கு கிடைத்த தூண்களிலே தொண்மையானவை. ஆனால் முழுமையான கட்டிட கோயில் என்று பார்த்தோமானால் இந்த கோயில் ஒன்றுதான் காஞ்சீபுரத்திலேயே மிகத் தொன்மையானது. 

கூரம் கோயில்

 இதற்கு முன்னர் கல்லை கொண்டு எடுத்த கட்டிட கோயில் கூரம் என்ற இடத்திலே இருக்கிறது. காஞ்சீபுரத்திலேயிருந்து சற்று ஏறக்குறைய ஒரு 10 கல் தொலைவில் அந்த ஊர் இருக்கிறது. கூரத்தாழ்வான் என்ற, வைணவ வரலாற்றிலே சிறந்த இடம்பெற்ற, இராமானுஜருடைய வரலாற்றோடு தொடர்புகொண்ட பெருமகன், பிறந்த இடம் கூரம். அங்கே பரமேஸ்வரவர்மன் காலத்திலே எடுக்கப்பட்ட கோயிலின் அடிப்பகுதி மட்டும் இப்போது எஞ்சி இருக்கிறது. அந்த கோயிலை வித்யாவினீத பல்லவன் என்ற ஒரு பல்லவ குறிசில், தோற்றிவைத்து இருக்கிறான். அவன் பரமேஸ்வரவர்மனுக்கு தானைத் தலைவனாக இருந்தபோது அந்தக் கோயிலை தோற்றுவித்தான். தோற்றுவித்தபோது அதற்கு தன் தலைவன் பெயரையும் தன்னுடைய பெயரையும் இணைத்தே வைத்திருக்கின்றான். ஆதலின் அந்த கோயிலுக்கு வித்யாவினீத-பல்லவ-பரமேஸ்வர கிருகம் என்று பெயர். அங்கே பினாகபாணி எம்பெருமானை பிரதிஷ்டை செய்தான் என்று கூரம் செப்பேடு கூறுகிறது. 

வித்யாவிநீத பல்லவ பரமேச்வரக்ருஹே பிரதிஷ்டா பிதஸ்ய,
பகவதஹ பிணாகபாணேஹே பூஜா, ஸநபன குசும,
கந்த, தூப, தீப, ஹவி, உபஹார, பலி, சங்க
படஹாதி பிரவர்த்தநார்த்தம், பாரத ஆக்யான நிமிர்த்தார்த்தம் ச
என்று அந்த செப்பேடு கூறுகிறது. 

 வித்தியா வினீத பல்லவ பரமேஸ்வரனால் தோற்றுவிக்கப்பட்ட வித்தியா வினீத பல்லவ பரமேஸ்வர க்ருஹத்தில் பிரதிஷ்டாபிதம் செய்யப்பட்ட பினாகபாணியாகிய சிவபெருமானுக்கு பூஜைக்கு, நீராட்டுவதற்கு, மலர் அர்ச்சிப்பதற்கு, கந்தம், தூபம், தீபம், அவி, உபகார, பலி ஆகிய அனைத்திற்கும் வழிபாட்டிற்காக இந்த நிலத்தை கொடுத்தேன் என்று அந்த செப்பேடு கூறுகிறது. 

எஞ்சியுள்ள அடிப்பகுதி மட்டும் பண்டைய பல்லவர் காலத்து கோயில். மேல்பகுதி பின்னர் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு இடிந்து சரிந்து கிடந்ததை தொல்பொருள் துறை எடுத்து பாதுகாத்து வருகின்றது. அதிலே ஆதித்தனுடைய கல்வெட்டும் இன்னும் பிற அரசர்களுடைய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. 

அதற்கு அடுத்து நாம் காண்கின்ற பெரும் கோயில் இந்தக் கையிலாயநாதர் கோயில் தான். இந்த கோயிலுக்கு சென்று பார்க்கும் போது பல அரிய செய்திகளும், கட்டிட அமைப்புகளும் விளங்கும். 

இராஜசிம்மன்

 காஞ்சி கையிலாயநாதர் கோயிலைத் தோற்றுவித்த மன்னன் பெயர் இராஜசிம்மன் என்பதாம். அவன் முதலாம் பரமேஸ்வரனுடயை மகன். அவனுக்கு அத்யந்தகாமன் என்று ஒரு பட்டப்பெயர் உண்டு. அவன் இந்த கோயிலை தோற்றுவித்து அதில் தன் பெயரை எல்லாம் பொறித்து வைத்துள்ளான். இந்தக்கோயிலை நான் தோற்றுவித்தேன் என்பதையும் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளான். 

 அந்த கல்வெட்டு இந்தக்கோயிலுனுடைய அதிஷ்டான வர்க்கத்தில் அப்படியே முற்றிலுமாக எழுதபட்டிருக்கிறது. அந்த கல்வெட்டு புண்ணிய நதியாகிய கங்கை ஆறு எவ்வாறு விண்ணிலே இருந்து கீழே பாய்ந்து இந்த நிலவுலகம் முழுவதையும் தூய்மையாக்குகிறதோ அது போல உமையோடு கூடிய அண்ணலின் அருட் பிரவாகம் உலகத்தில் பாய்ந்து உலக மக்கள் அனைவரையும் உய்விக்கிறது. அந்த கங்கை ஆறு நம்மை காப்பாற்றட்டும் என்றதான அழகிய வணக்க செய்யுளுடன் தொடங்குகின்றது. 

பூரணி வஹா புனீதா என்று தொடங்குகின்ற அந்த கல்வெட்டிலே நான் பரத்வாஜ் கோத்திரத்தை சார்ந்தவன். எனது முதியோர்கள் ஆன்றோர்களை, பெரியவர்களை, முதியோர்களை, வணங்கியவர்கள், சத்தியநெறியிலே நின்றவர்கள், தர்மத்தை பாலிப்பதிலே முதலிடம் பெற்றவர்கள். அந்தணர்களை போற்றுவதிலே முதன்மையாக நின்றவர்கள். பல்வேறு வேள்விகளை செய்து தூய்மையான குலத்தை, மரபை பெற்றவர்கள். அந்த வழியிலே தோன்றிய ரணரசிகன் ஆகிய விக்கிரமாதித்தனுடய நகரை தூள் அடித்த பரமேஸ்வரன் இடத்திலே இருந்து தோன்றியவன் யான் என்று தன்னை கூறிக்கொள்கிறான். 

ரணரசிக புரோன்-மர்த்தனாத் அக்ரதண்டாத் ஸ்ரீமான் அத்தயந்த காமஹ
என்று இவன் தன்னை கூறிக்கொள்கிறான். 

பரசமேஸ்வரன் இடத்திலிருந்து முருகப்பெருமான், குகன் எவ்வாறு பிறந்தானோ அதேபோல பரமேஸ்வரனாகிய பல்லவன் இடத்திலே இருந்து நான் பிறந்தேன் என்று கூறிக்கொள்கின்றான். 

குஹ இவ பரமாத் ஈஸ்வராத் ஆத்மஜன்மா
 சக்திக்ஷுன்னாரி வர்கஹ தன்னுடைய சத்தியினாலே அரிவர்க்கம், மாற்று அரசர்களுடைய கூட்டத்தை வெற்றி கண்டவன். 

விதித பகு நயஹ சைவ சித்தாந்த மார்க்கே,
ஸ்ரீமான் அந்தயந்த காமஹ க்ஷதஸகல மலஹ
தூர்த்தர பல்லவானாம்
சைவசித்தாந்த மார்க்கத்திலே பலவழிகளை பின்பற்றி தன்னுடைய மலங்கள் அனைத்தையும் போக்கப்பட்டவன். 

கலாசதுர யோஷிதாம் ரகசிரஞ்ஞனி மன்மதஹ
இவன் அழகிய பெண்களை தனிமையிலே இன்புறுவதிலே மன்மதனுக்கு நிகரானவன். 

திரயீபத நிஷேவினாம் சதத பாலனே வாஸஸஹ - மூன்று வேதங்களை பின்பற்றுகின்றவர்களை காப்பதிலே எவ்வாறு இந்திரனோ அதுபோல இவன் இந்திரன் போன்ற பராக்கிரமத்தை உடையவன் 

 சுரத் த்விஜ முனித் த்விஷாம் ஹ்ருதய தாரனே மாதவஹ. சுரர்கள், தேவர்கள், அந்தணர்கள், முனிவர்கள் ஆகியோரை துன்புறுத்துபவர்களை வீழ்த்துவதிலே மாதவன். 

ஸச த்ரவின சம்பதா சுஜன தோஷனே வித்ததஹ
நல்ல மக்கள் சந்தோஷம் அடைவதற்காக அனைத்து பொருள்களையும் அவர்களுக்கு உடமையாக்கியதிலே குபேரனுக்கு சமமானவன் என்று இங்கே இருக்கின்ற அவனுடைய கல்வெட்டு குறிக்கின்றது. 

பெரிய திருக்கற்றளியின் சிறப்பு

 இந்தக கோயிலை பின்னர் வந்த பராந்தக சோழனும், 200 அடிக்குமேல் கல்லினாலே ராஜராஜேஸ்வரத்தை தோற்றுவித்த ராஜராஜனும், அவனுக்குப் பின்னர் வந்தவர்களும் இந்த கோயிலை பெரிய திருக்கற்றளி என்று கூறுகின்றார்கள். பெரும் கோயிலை தோற்றுவித்த ராஜராஜனே பெரிய திருக்கற்றளி என்று கூறுகின்றான் என்றால் இதனுடைய சிறப்பும் பெருமையும் எவ்வளவு சிறந்தவை என்பது தெரியவருகிறது. 

கையிலையம் கிரியிலே சிவபெருமான் ஆடுகின்ற திருவிளையாடல்கள் மிகவும் உயர்ந்தவை என்று ஆன்றோர்களால், தவமுனிவர்களால், தூய சிந்தையுடையவர்களால் கூறப்படுகின்ற மரபு உண்டு. கையிலையின் கிரியிலே சிவபெருமானின் தோற்றங்கள் எவ்வளவு சிறந்தவையோ அதைக்காட்டிலும் சிறந்ததாக, கல்லாலேயே இங்கு தோற்றுவித்த இந்தக் கோயிலிலே சிவபெருமான் கையிலையைக் காட்டிலும் சிறப்பாக விருப்பொடு வந்து உறைகின்றார். 

சைலே கைலாசலீலாம் அபஹரதி க்ருஹே
 கைலாசத்தினுடைய அழகை, பெருமையை, சிறப்பை இந்தக் கோயில் (அபஹரதி - விஞ்சுகிறது) அதைக்காட்டிலும் மேன்மையாக இது திகழ்கிறது. 

கைலாசலீலாம் அபஹரதி சைலே க்ருஹே
சிலாமயமான இந்தக் கோயில் என்று இவன் தான் தோற்றுவித்த கோயிலை கூறுகின்றான். 

இந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் பார்த்தோமானால் அது எவ்வளவு உண்மை என்பது தெரியும். வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாத அளவுக்கு அழகான சிற்பங்கள் உள்ளன. சிவபெருமானுடைய தோற்றங்களை எவ்வளவு வகையாக நாயன்மார்கள் எல்லாம் பாடி பரவி இருக்கிறார்களோ அத்தனை பாடல்களுக்கும் எடுத்து காட்டாக இங்கே சிற்பங்கள் இருக்கின்றன. வேறு எந்த கோயிலிலேயும் இவ்வளவு அழகை பார்க்க முடியாது என்கின்ற அளவிற்கு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, பிற கோயில்களிலே ஒரே குறிப்பிட்ட அமைப்பிலேயே எல்லா சிற்பங்களும் இருக்கும். ஆனால் இந்த கோயிலிலே கதைக்கு ஏற்ப, அந்த அந்த தோற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த கதைகளுக்கு ஏற்ப, அந்த கதைகளின் உயிர் தத்துவங்களுக்கு ஏற்ப, துடிப்புகளுக்கு ஏற்ப, சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சுற்றுப்ராகார சுவர்களிலே சிறிய அளவிலே சிற்பங்கள், கோயிலின் பக்கங்களிலே இருக்க கூடிய பக்க ஆலயங்களிலே உயர்ந்த சிற்பங்கள். வெறும் சிற்பங்கள் மட்டும் அல்ல அழகு வாய்ந்த சிற்பங்கள். ஆதலினாலே இவை தோற்றிவைத்த காலத்திலே, தமிழகத்திலே இதுபோன்ற சிற்பங்களை, அமைதியை உடைய வேறு கோயில் இல்லை என்ற அளவிற்கு இந்த கோயில் தோற்றுவிக்கப்பட்டது. 

இராஜசிம்மனுடைய சிறப்பு

 இராஜசிம்மனுக்கு ஒரு பெரிய புகழ் பெற வேண்டும். தன்னுடைய புகழ் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த புகழ் அனைத்தையும் உருவாக்கி ஒரு கோயிலாக மாற்ற வேண்டும் என்று அவனுக்கு வந்த ஆசையின் பிரதிபலிப்பு இந்த கோயில். 

யஸஸ் ஸத்ரிஸம் ஆத்மனஹ பவனம் ஏதத் உத்தாபிதம்
தன்னுடைய புகழுக்கு (ஸத்ருஸமான) சமமான, புகழுக்கு ஏற்ப. ஆத்மனஹ யசஹ ஸத்ருஸம் ஏதத் பவனம் உத்தாபிதம். இந்த கோயிலானது எடுக்கப்பட்டது என்று கூறுகிறான். அவ்வளவு ஆசை. மனதில் இருப்பதை பூராகவும் கொட்டி, தன்னுடைய பொருள் முழுவதையும் கொட்டி, இதைத்தவிர வேறு எந்த நினைப்பும் நினைக்கவில்லை என்பதாக, அப்படி தோற்றிவித்த கோயில் இந்த கோயில். 

அவனுக்கு அத்யந்தகாமன் என்று ஒரு பட்ட பெயர். அந்தம் முடிவு, அத்யந்தம் எல்லையற்ற, முடிவற்ற, இருதியே காணமுடியாதது. காமன் என்றால் மன எழுச்சி. ஆசையோடு கூடிய எல்லையற்ற எழுச்சிகளை உடையவன் என்று ஒரு பட்டப்பெயர். 

 சம்புவினுடைய பாதார விந்தங்களை, தாமரை திருவடிகளை வணங்குவதிலே, என்றும் மறவாது சிந்தனையிலே ஈடுபடுவதிலே அத்யந்த காமன் என்று வாயலூருக்கு அருகில் இருக்கும் கோயிலில் உள்ள இவனுடைய கல்வெட்டு கூறுகிறது. 

சம்போஹோ பாதாரவிந்த த்வய பரிசரணே நித்யம் அத்யந்த காமஹா
சம்புவினுடைய பாதாரவிந்த த்வயங்களை (இரு திருவடிகளையும்) வணங்குவதிலே என்றும் அத்யந்தகாமஹ, எப்பொழுதும் எல்லையில்லா ஆசையுடைய பெருமகன். சிவனடியை மறவாத சிந்தயான். அவ்வளவு ஆர்வத்தோடும், அவ்வளவு பக்தியோடும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும், சிவபெருமானின் மீது கொண்ட பக்தியினாலே அதற்கு அற்பணித்த ஒரு பெருமகன் இராஜசிம்மன். 

அவனுடைய காலத்திலேதான் மாமல்லபுரம் தோற்றி வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சி சான்றுகள் கூறுகின்றன. அதில் அவன் கூறுவதாவது. 

பக்தி ப்ரஹ்வேன மனஸா. பக்தி பெருக்கினாலே, மனம் நிறைந்து இந்த கோயிலை தோற்றி வைத்தேன் என்று கூறுகின்ற மன்னன். 

மக்கள் தொண்டு

பிரஜானாம் இஷ்டசித்யர்த்தம் சாங்கரீம்பூதிம் இச்சதா.
 தன்னுடைய குடிமக்களுக்கு என்ன, என்ன எண்ணங்கள் எல்லாம் உண்டோ , மன எழுச்சிகளெல்லாம் உண்டோ அவை நிறைவேறுவதற்காகத்தான் இந்த கோயிலைக் கட்டினேன் என்று கூறுகின்றான். சிவன்மீது கொண்ட பக்தியோடு, குடிமக்களுடைய உயர்ச்சியும் மனதில் கொண்ட ஒரு பெருமகனால் தோற்றி வைக்கப்பட்டது இந்த கோயில். 

ஒரு பெரிய முதலை யானையைக் கவ்வி இழுத்தது போல், இந்த கலியுகமானது நல்ல தூய உள்ளம் படைத்த மக்களைக்கூட பிடித்து இழுக்கிறது. அந்த யானையைக் காப்பதற்கு எவ்வாறு திருமால் தோற்றமளித்தாரோ, அது போல இந்த கலியைக்கடிந்து மக்களுக்கு நல்லதை செய்வதற்காக தோன்றிய புருஷோத்தமன் இவன். 

ஜாதோஸேள புருஷோத்தமோ ரணஜயஹ
த்ராதும் ஜனான் மஜ்யதஹ பாப அப்தேஹ
மகர க்ரஸ்தான் ஸ ஜீயாத் சிரம்
என்று கல்வெட்டு கூறுகிறது. 

 கலிகால மகர - கலிகாலமாகிய முதலையினாலே, க்ரஸ்தானு - பிடிக்கப்பட்டு இழுக்கப்படுகின்ற, பாப அப்தேஹ - பாபமாகிய கடலிலே இருந்துகொண்டு மக்களை இழுக்கின்ற கலிகாலமாகிய இந்த முதலையை அழிப்பதற்காக, ஜாதஹ அசௌ புருஷோத்தமஹ - இந்த புருஷோத்தமன் பிறந்தான் என்று கூறும்போது, திருமாலை போன்ற தூய செயலிலே ஈடுபட்டவன். 

ஜாதோசௌ புருஷோத்தமஹ என்று இந்த கல்வெட்டு தொடங்குகின்றது என்றால், அவனுடைய சிந்தை முழுவதும் மக்கள் நலனாக இருக்க வேண்டும் என்ற கருத்து, அது தெய்வத்திற்கு செய்யும் தொண்டினாலே நிறைவு பெறவேண்டும் என்று இருந்த பெருமகன். 

பூசலார் வரலாறு

 சிவபெருமானிடத்தில் அளவு கடந்த பக்தியும், ஈடுபாடு கொண்ட இம்மன்னனுக்கு சிவசூடாமணி என்றொரு பட்டப்பெயரும் உண்டு. 

ராஜஸிம்மோ ரணஜெயஹ ஸ்ரீதர சித்ரகார்முகஹ
ஏகவீரஹ சிரம்பாது சிவசூடாமணிர் மஹீம்
இந்த கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நாளை நடக்க இருக்கிறது என்ற நிலை. வேத கோஷங்களும், இசைக்கருவிகளும் ஒலிக்க இருக்கும் நிலையில், அரசனின் கனவில் சிவபெருமான் தோன்றி, நாளைக்கு நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தை மாற்றி வைத்துக்கொள் என்று கூறினாராம். 

 அனைத்து கலைகளையும் உடையதாக, அனைத்து செல்வங்களும் உடையதாக, ஏக சக்ராதிபதியாக விளங்கும் அரசன் தோற்றிவைத்த கோயிலில் நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்தை சிவபெருமான் மாற்றி வைத்துக்கொள் என்றார். 

திருநின்ற ஊரிலே என்னுடைய அடியான் ஒருவன் கோயில் கட்டியிருக்கிறான். அந்த கோயிலில் அவன் நாளைக்கு கும்பாபிஷேகம் செய்யப் போகிறான். நான் அங்கே போகவேண்டும் ஆதலினால் நீ உன்னுடைய நாளை மாற்றி வைத்துக்கொள் என்று சிவபெருமான் கூறினார். 

நீ நாளைக்கு வைத்துக்கொண்டால் அங்கு போகமுடியாதே, இங்கு வரும்படியாக இருக்குமே என்று கூறுவதாகவும் தொணிக்கிறது. 

 பூசலார் என்ற நாயன்மார் அவர் தோற்றிவைத்திருக்கின்ற கோயிலில் கடவுள் மங்களம் ஏற்றுக்கொள்ள இருக்கிறேன் ஆகையால் நீ மாற்றி வைத்துக்கொள் என்றாராம். சேக்கிழார் இந்த நிகழ்ச்சியை திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நின்றஊர்ப் பூசல் அன்பன் நெடுதுநாள் நினைந்து செய்த,
நன்றுநீடால யத்து நாளைநாம் புகுவோம் நீஇங்(கு),
ஒன்றிய செயலை நாளை ஒழிந்தபின் கொள்வாய் என்று,
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண் டருளப் போந்தார்
திருநின்ற ஊரும் இவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட ஊர். அரசன் அந்த ஊருக்கு ஓடினான். அந்த கோயிலை எடுப்பித்தது யார் என்று பார்க்க ஓடினான். 

 சிவபெருமானே உகந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு தோற்றிவித்த ஒரு மகன் இருக்கின்றான் என்றால், அவன் என்னைக்காட்டிலும் தூயவனாக அல்லவா இருக்க வேண்டும். அவனை போய் பார்க்க வேண்டும் என்று ஓடினான். அரசன் வந்துவிட்டான் என்ற உடன் ஊர் சபையில் இருக்கூடிய பெரிய மக்களெல்லாம் ஓடி வந்தார்களாம். அவர்களை அரசன் முதலில் கேட்டவை. பூசலார் என்று ஒருவர் எடுத்திருக்கின்றாரே அந்த கோயிலானது எங்கே இருக்கிறது என்று கேட்டான். அவ்வாறு ஒருவரும் கோயில் எடுக்கவில்லையே, இந்த ஊரில் கோயில் கிடையாதே என்றனர் ஊரார் இல்லை. சிவபெருமானே என்னிடத்தில் கூறியிருக்கிறார். பூசலார் என்று ஒருவர் உண்டாமே அவர் எங்கே? என்று கேட்டான். நாங்கள் சென்று அழைத்து வருகிறோம் என்று கூறிய ஊர் மக்களிடத்தில், நீங்கள் சென்று அழைத்து வரக்கூடாது. அவர் இருக்கும் இடத்திற்கு நானே சென்று வணங்க வேண்டும் என்று அவர்களை செல்லவிடாமல் தானே ஓடிச்சென்று அவரைக் கண்டவுடன் அவரை முதலில் வணங்கி, என்னுடைய கனாவிலே நீர் கோயில் எடுப்பித்திருப்பதாக சிவபெருமானே வந்து கூறினார். அந்த கோயில் எங்கே இருக்கின்றது. நான் பார்க்க வேண்டுமே என்றான். அப்பொழுதுதான் அவருக்கே தெரிந்தது தான் எடுத்த கோயிலைக்கூட சிவபெருமான் ஏற்றுக்கொண்டார் என்று. 

எனக்கு கோயில் எடுக்கவேண்டும் என்று ஆசை. ஆனால், பொருள் கிடையாது. மக்கள் கிடையாது. பிற செல்வங்கள் கிடையாது. ஆகையினாலே என மனதிலேயே நானே நினைந்து கொண்டேன். அடியிலேயிருந்து, கருவாக இருக்ககூடிய கல்லிலே இருந்து, செங்கல்லைத்தேடி, உபானம், அதிஷ்டானம், சுவர், சிகரமெல்லாம் அத்தனையும் நான் மனதிலேயே நினைத்துக் கொண்டேன் மனத்தினாலேயே கோயில் எடுப்பித்தேன். அதைத்தான் சிவபெருமானே ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று அவர் கூறினாராம் அப்படிக்கூறிய உடன் மீண்டும் ஒருமுறை அவர் காலில் விழுந்து அரசன் வணங்கினான். வெளியிலே இருக்க கூடிய செல்வங்களை கொண்டு தோற்றிவிப்பதை காட்டிலும் மனதினாலே தோற்றிவிக்கக்கூடியது ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்பதற்கு சான்று தேவையில்லை என்பது போன்று அவர் காலிலே ஒரு பேரரசன் வணங்கினான். இந்த செய்தியை, வரலாற்று நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமகன் தன்னுடைய திருத்தொண்டர் புராணத்தலே, பூசலார் வரலாற்றிலே குறிப்பிடிருக்கின்றார். 

அரசனும் அதனைக் கேட்டங் கதிசயம் எய்தி என்னே
புரையறு சிந்தை அன்பர் பெருமை! என் றவரை போற்றி
விரைசெறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசறி தானை யோடு மீண்டும் மூதுர்ப புக்கான்
கல்வெட்டுகள்

 சேக்கிழார் பெருமானின் குறிப்பு இந்த கோயிலில் இருக்கின்ற கல்வெட்டை ப்ரதிபலிப்பதைப் போலவே இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் கீழ்வருமாறு உள்ளது. 

க்ருதயுகம் என்ற ஒரு யுகம் உண்டு. க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள் உண்டு. அனைத்தும் அவற்றில் உயர்ந்த தன்மையானதும் ஸத்வங்கள் நிறைந்ததும் அனைத்தும் மங்களகரமாகவே நிகழக்கூடியதுமான ஒரு யுகம் க்ருதயுகம். அந்த க்ருதயுகத்திலே ஆண்ட அரசரர்கள் துஷ்யந்தன் போன்ற பேரரசர்கள். அவர்களும் அரசர்கள்தான் அவர்கள் ஆண்ட யுகம், நல்லதே நிறைந்து நின்ற க்ருதயுகம். 

அவர்கள் ஆண்டது மட்டுமல்ல, பெரும் ஆற்றல் படைத்தவர்கள். நினைத்தால் தேவலோகம் சென்று விடமுடியும். தேவர்களை நேர்முகமாக பார்க்கமுடியும். தேவர்களோடு நேர்முகமாக பேசமுடியும். அது மட்டுமின்றி, உயர்ந்த தவ முனிவர்கள் எல்லாம் கூட அவர்களை போற்றுகின்ற அளவிற்கு உயர்ந்த குணம் படைத்தவர்கள். அப்பேர்ப்பட்ட துஷ்யந்தனுக்கு ஒரு அசரீரி கேட்டது. சரீரம் இல்லாத தேவலோகத்திலிருந்து ஒரு ஒலி கேட்டது என்று பண்டைய காலத்து வரலாறு கூறுகிறது. அதில் என்ன ஆச்சர்யம். க்ருதயுகத்திலே ஆள்கின்ற ஒரு அரசன், அனைத்து மங்களங்களையும் பெற்றவன், தேவர்களை நேர்முகமாக பார்க்க்கூடிய ஆற்றல் படைத்தவன். முனிவர்களாலே போற்ற பட்டவனுக்கு அசரீரி கேட்டது என்றால் அது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால் நல்லது என்பதே இல்லாது எங்கோ ஓடி ஒளிகின்ற இந்த கலியுகத்திலே, இந்த கோயிலைத் தோற்றிவித்த அரசனுக்கு அசரீரி கேட்டது என்றால், அது வியக்கத்தக்கது அல்லவா! 

துஷ்யந்த ப்ரமுகைஹி ச்ருதா அம்பரகதா வாணீ ஸரீரம் வினா
க்ஷமா நதைஹி சுர த்ருஸ்விபிஹி யதி க்ருதே,
கன்வாதிபிஹி ஸ்வீக்ருதைஹி தன் நா ஆச்சர்யம்
புனஹ கலியுகே தூரீபவத் ஸத்குனே ஸோ
ரோதீஷ் தாம் விரம் மஹத் அஹோ விஸ்மாபனம் ஸ்ரீபரஹ
இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை பூசலாருக்காக பின்னர் வைத்துக்கொள், என்று கூறிய அந்த அசரீரி கேட்டது என்ற வரலாற்று குறிப்பு இந்த கோயிலில் கல்வெட்டாக காணப்படுகிறது. 

சைவசித்தாந்த மரபு

 ஒரு குடிமகன் தோற்றிவித்த கோயில், மனதினாலே தோற்றிவைத்த கோயில் என்று கேட்டபோது கூட அவர் காலிலே வீழ்ந்து வணங்கினான் என்கின்ற போது அனைத்தைக்காட்டிலும் உயர்ந்தவனாக, பக்குவம் மிகுந்தவனாக ஆகிறான். இந்த கருத்தை சைவ சித்தாந்தம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. சிவஞான போதம் போன்ற சைவ சித்தாந்த நூல்களிலே, கோயிலை எடுப்பித்து அந்த கோயிலை வழிபடுகின்ற அடியானையே கோயிலாக, பரமசிவனாக, பரமேஸ்வரனாக போற்றுகின்ற போது, இவன் சிவனோடு ஐக்கியமாகி விடுகின்றான் என்று கூறுகின்றன. 

"சிவேன ஐக்யம் கத ஸித்தஹ ததீனஹ" என்பது சிவஞான போத சூத்திரம். 

 தமிழ்நாட்டிலே சைவசித்தாந்தம் என்ற மரபு இருந்தது. அதை பின்பற்றிய பெரியவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு கிடைக்ககூடிய மிக தொன்மையான கல்வெட்டு சான்று இங்குதான் இருக்கிறது. கி.பி. 700ல் இந்த கோயில் எடுக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டால். கி.பி.700லே தமிழ் நாட்டில் சித்தாந்த மரபானது பல பிரிவுகளைக் கொண்டு இருந்தது. அந்த பிரிவுகள் அனைத்தையும் பின்பற்றியதாலே இவனுக்கு இருந்த மலங்களெல்லாம் போக்கிவைக்கப்பட்டன. 

 சைவ சித்தாந்த நூல்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மலங்களை குறிப்பிடுகின்றன. இவை மனித உள்ளத்தை உயர்நிலை அடையாது தடுக்க கூடிய அழுக்காறுகள். இந்த அழுக்காறுகள் பக்திமேலீட்டினாலேயும், பரமனையே பாடுவதாலும், பரமனடியார்களை போற்றுவதாலும், படிப்படியாக குறைந்து இறுதியிலே இந்த ஆன்மாவானது சிவனோடு ஐக்கியமாகின்ற நிலையை உருவாக்கி கொடுக்கும் என்பது சித்தாந்த மரபு. ஆதலினாலே கோயிலுக்கு செல்வது அடியவரை வணங்குவது அனைத்தும் இந்த அழுக்காறுகளை நீக்கி அதனாலே உய்வதற்காக வகுக்கப்பட்ட வழிகள். 

அந்த வழிகளிலே அவன் நின்ற காரணத்தினால் இவனுக்கு இருந்த மலங்களெல்லாம் போக்கிவிக்கப்பட்டன என்ற கருத்தையும், ஆதலினால்தான் பக்குவமான நிலையிலே நின்று அந்த பரமனை போற்றினான் என்ற கருத்தையும் இந்த கோயிலில் காண்பதால், 

 7ம் நூற்றாண்டு 8ம் நூற்றாண்டுக்கும் முன்னரே சைவ சித்தாந்தமானது மிக சிறந்த நிலையில் இருந்தது என்பதையும், மாமன்னர்கள் கூட அந்த வழியிலே நின்றார்கள் என்பதையும், அதனாலே அடைந்த ஒரு பக்குவமானது மக்களை காப்பதற்கும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அளிப்பதற்கும் இறுதியிலே வீடு பேறு பெருவதற்கு வழிப்படுத்தவும் உறுதுணையாக இருந்தது என்பதை எடுத்துக்கூறுகின்றது இந்த கோயிலிலே உள்ள கல்வெட்டு. 

கோயிலின் கட்டிட அமைப்பு

 இந்தக்கோயிலின் ஒவ்வொரு அங்குலமும் முன்னதாகவே தீர்மானிக்க அதன்படி அங்குலம் அங்குலமாக கட்டப்பட்டிருக்கிறது. ஒரு புறம் முழுவதும் சிவபெருமானுடைய சம்ஹர மூர்த்தங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு புரம் முழுவதும் சிவபெருமானுடைய அனுக்ரஹ மூர்த்தங்கள் காண்பிக்கப் பட்டிருக்கின்றன. 

வாஸ்து சாஸ்த்ரங்களிலில் மஹா ப்ரஸாதமாகிய மூல விமானம் சிவபெருமானாகவும் அதற்கு முன்னே இருக்க கூடிய மண்டபம் சக்தி தத்துவமாகவும் குறிக்கப்படுகின்ற மரபு உண்டு. அந்த அடிப்படையிலே, இந்த மண்டபத்தில் இருக்க கூடிய சிற்பங்கள் சக்தி தத்துவங்களாகவே இருக்கின்றன. ஜேஷ்டை, துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய நான்கு தெய்வங்களுடைய உருவங்களும் இந்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன. சக்தியினுடைய தத்துவத்திற்கு உருவகம் இந்த மண்டபம். 

தன்னுடைய 300க்கும் மேலான பட்டங்களை அவன் இக்கோவிலில் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கின்றான். இங்கு இருக்க கூடிய ஒவ்வொரு சிற்றாலயத்திலும் அவனுடைய பட்டப்பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதிலே கூட ஒவ்வொன்றும் நாகரி எழுத்து, அழகான பல்லவ க்ரந்த எழுத்து, சாதாரன பல்லவ க்ரந்த எழுத்து, அன்ன பக்ஷி போன்ற எழுத்து என்று நான்கு விதமான எழுத்துக்களிலே எழுதப்பட்டிருக்கின்றன. 

 இந்த கோயிலின் மூலமாக தான் எப்படி நிலைத்து நிற்க வேண்டும் என்று நினைத்தானோ அது போல தன்னுடைய அருமை மைந்தன் மகேந்திரனும் இருக்க வேண்டும் என்று அவனையும் இக்கோயிலின் முன்பு ஒரு அழகிய கோயில் கட்டுவதில் ஈடுபடுத்தி இருக்கிறான். மூன்றாவது மகேந்திரன் கட்டிய கோயிலுக்கு மகேந்திரவர்மேஸ்வர க்ருஹம் என்று பெயர். 

 க்ருதயுகம் என்பது எப்போதோ இருந்தது என்று நினைக்காமல், பெரும் க்ருதயுகத்தை, மாபெரும் க்ருதயுகத்தை இந்த நில உலகத்தில் இப்போதே நிலை நிறுத்துவதற்காக முயற்சி செய்த இராஜசிம்மனுடைய மகன் என்று இங்குள்ள அவனது கல்வெட்டு கூறுகிறது. 

க்ருதயுகம் அபரம் நிர்மிமானோ மஹேந்த்ரம்
தான் மட்டுமன்றி தன் மகனையும் ஈடுபடுத்திய பெரிய மன்னன் ராஜசிம்மன். தனக்கும் முன்னிலையிலே தன் மகன் நிற்க வேண்டும் என்பதற்காக, தான் கட்டிய கோயிலுக்கு முன்னேயே கட்டும்படி செய்திருக்கிறான். 

 தன், மகன் மற்றும் இல்லாமல் அவனுடன் இருந்த தேவிமார்களெல்லாம், அவன் போல் சிறப்பை பெறுவதற்கு உடன் இருந்து ஊக்கம் அளித்தவர்கள் எல்லாரும் கோயில் கட்டவேண்டும் என்று அவர்களையும் ஈடுபடுத்தியிருக்கிறான், ஒவ்வொருவரும் இங்கே ஒருசிறு கோயில் கட்டி இருக்கின்றனர். 

ரங்கபதாகை என்று அவனது தேவியுடைய பெயர். அவனது மற்ற ஒரு தேவியின் பெயர் விலாசவதி. ரங்கபதாகை என்றவள் மகளிர்க்கெல்லாம் கொடி போன்றவள் என்று புகழ் பெற்றவள். ரம்யம் ரங்கபதாகையா பதாகையா இவ நாரீனாம். 

மாற்று அரசர்களையெல்லாம் வெற்றி கண்ட நரசிம்மன் போன்ற பெரும் ஆற்றல் படைத்த இந்த மன்னனை கட்டுப்படுத்துகின்ற அளவிற்கு அன்பு படைத்தவள். 

ரங்கபதாகை என்ற தேவியால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் என்று ஒரு கல்வெட்டு குறிக்கிறது. 

பல்லவர்களும் - சாளுக்கியர்களும்

 வாதாபி வரையிலே சென்று அந்த வாதாபி மாநகரையே தோற்கடித்து தரை மட்டமாக்கிவிட்டு வந்த வெற்றி பெருமகன் மாமல்லன். அப்போது சாளுக்கியர் பெற்ற தோல்வி அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. சாளுக்கிய வம்சத்திலிருந்தவர்களுக்கு பல்லவர்கள் என்றால் பிறப்பிலேயே எதிரி "ப்ரகிருத்ய அமித்ரஹ". மாமல்ல குலம் என்றாலே நடுக்கம். 

புலிகேசிக்குபின் வந்த சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன், பல்லவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று காஞ்சியின்மீது படை எடுத்து வந்தான். படை எடுத்து வந்த போது இராஜசிம்மனுடைய தந்தை பரமேஸ்வரன் காஞ்சியை விட்டு ஓடிவிடுகின்றான். விக்கிரமாதித்தன் காஞ்சியை பிடித்து விடுகின்றான். பின் பரமேஸ்வரனை தேடிக்கொண்டு திருச்சிராப்பள்ளி வரை சென்றான் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. 

திருச்சிராப்பள்ளியில் இருந்து 8மைல் தொலைவில் உள்ள பெருவளநல்லூர் என்ற ஊரில் பரமேஸ்வரன் விக்கிரமாதித்தனை தோற்கடிக்கின்றான். 

பெருவள நல்லூர் யுத்தே ஜேதா வல்லப பலஸ்ய
பரமேஸ்வரன் செய்தது ராஜதந்திரம். காஞ்சியில் அவன் படை இல்லாததால் காஞ்சியை விட்டு வெகுதூரம் மாற்றரசனை முன்னேற வைத்து பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனை தோற்கடித்ததோடு மட்டுமின்றி மற்றொரு பகுதியான தன்படையை விக்கிரமாதித்தனுக்கு தெரியாமல் வாதாபிவரை அனுப்பிவைத்திருந்தான். பெருவளநல்லூர் யுத்தத்திற்கு பிறகு விக்கிரமாதித்தன் வாதாபியை காப்பதற்காக திரும்பிச் சென்றுவிட்டான். ரணரசிகனாகிய விக்கிரமாதித்தனை அவன் தலைநகர்வரை பரமேஸ்வரன் துரத்திச் சென்று அவனை போரில் தோற்கடித்துக் கொன்றான். ஆகவே பரமேஸ்வரன் ரணரசிக-புரோன்-மர்தனன் என்ற பட்டம் பெற்றான். ரணரசிக விக்கிரமாதித்தனை தோற்கடித்த பரமேஸ்வரனுடைய மகனான ராஜசிம்மனுக்கு, ரணஜெயன் என்று ஒரு பட்டப்பெயர். 

சாளுக்கியர்களுடைய மனத்தில் இருமுறை பெற்ற தோல்வி, மாமல்லன் காலத்தில் பெற்றது ஒன்று மீண்டும் விக்கிரமாதித்தன் காலத்தில் பெற்றது இரண்டு. இவை மிகவும் ஆழமாக பதிந்திவிட்டன. 

காஞ்சியில் இந்த கோயில் கட்டி 25-30 ஆண்டுகளில் இராஜசிம்மன் மறைந்து விடுகின்றான். அவனுடைய மகனும் மறைந்து விடுகிறான். அப்போது இந்த நாட்டில் பன்னிரண்டு வயது நிரம்பாத நந்திவர்மன் என்ற ஒரு சிறுவன் பட்டத்திற்கு வருகிறான். 

சாளுக்கிய நாட்டில் 730-732ல் இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் முடி சூடிக் கொண்டு அரியணை ஏறினான். அவன் இளைஞன், அரியணையில் அமர்ந்து அவன் மீது பல்வேறு இடங்களிலிருந்து புண்ணிய நீர்களையெல்லாம் அபிஷேகம் செய்யும் போது, வாசனை திரவியங்கயுடன் தைலாபிஷேகம் செய்யும் போது, ஏற்பட்ட உணர்ச்சித் துடிப்பால், என்னுடைய மூதாதயர்களுக்கு பல்லவர்கள் தோற்றுவித்த இழுக்கை எங்கள் வாதாபி மாநகருக்கு தோற்றிவித்த இழுக்கை, பல்லவ குலத்துக்கு நான் திருப்பி ஏற்படுத்தாத வரையில், காஞ்சி நகரை, தூள் செய்கின்றவரையில் மறுபடியும் இந்த அரியணையில் நான் அமர மாட்டேன் என்று அவன் வீர சபதம் புரிந்து கொண்டானாம். இது முடி சூடும்போது அவன் எடுத்துக் கொண்ட முதல் சபதம், சத்ய பிரதிக்ஞை. 

சாளுக்கிய மன்னர்களிலே புலிகேசிக்கு பிறகு மிகவும் சிறந்தவனாக ஆண்டவன் இரண்டாம் விக்கிரமாதித்தன். புலிகேசி இறுதியில் தோற்று இறந்தான். விக்கிரமாதித்தனுக்கு தோல்வி என்பதே கிடையாது. அவ்வளவு சிறந்த வீரன். 

அவன் பட்டத்திற்கு வந்தவுடன் தனது படையை சீர் செய்தான். நேராக தொண்டை மண்டலத்தின் மீது படையெடுத்தான். கண்ணில் பட்ட இடத்தை எல்லாம் அடிப்படித்துக்கொண்டு முன்னேறி வந்தான். அவன் கால் பட்ட இடமெல்லாம் அடி பணிந்தன. வேகமாக காஞ்சியை நோக்கி வருகின்றான். உடன் வந்த தானைத் தலைவர்களெல்லாம், அவனுடைய வேகத்தை காட்டிலும், பலமடங்கு வேகத்தோடு வருகின்றனர். காஞ்சியை தரைமட்டமாக்குவதற்காக துடித்துக் கொண்டு முன்னேறி வந்து கொண்டு இருந்தனர். 

காஞ்சியின் எல்லையை அடைந்த பின்னர், சாளுக்கிய விக்கிரமாதித்தன் தானைத் தலைவர்களை காஞ்சியின் எல்லையில் இருக்கச் செய்துவிட்டு தானே முதலில் உள்ளே நுழைகிறான். மிகு வேகத்தோடு வருகிறான். தன்னுடைய மூதாதயர்களுக்கு ஏற்பட்ட இழுக்கு, தன்னுடைய தலைநகருக்கு ஏற்பட்ட இழுக்கு அனைத்தையும் துடைக்க வேண்டும் என்ற துடிப்போடு உள்ளே வருகின்றான். 

இந்த கோயில் கட்டி 30 வருடம் தான் அப்போது இருக்கும். அழகிய வண்ண ஓவியங்கள் எல்லாம் பூசப்பட்டு விளங்குகின்ற இந்தக் கோயிலை பார்க்கும்போது ஒரு மலர்போல, ஓவியம்போல நிற்கிறது. இக்கோயிலின் அழகைப் பார்த்தான். சிறப்பைப் பார்த்தான் இக்கோயில் அவன் மனதைப் பெரிதும் கவர்ந்தது. இது ஒரு மனிதன் தோற்றுவித்த கோயிலா? இந்தக் கோயில் இருக்கக்கூடிய காஞ்சியை நாம் அழிக்கலாமா? என்று எண்ணினான். ஆகவே காஞ்சிபுரத்திற்கு ஒரு இம்மியளவு கூட ஊறு விளைவிக்காமல் உள்ளே நுழையுங்கள் என்று தன் தானைத் தலைவர்களுக்கு ஆணையிட்டான். 

"காஞ்சீம் அவினாஸ்யைவ ப்ரவிஸ்ய" என்று ஆந்திர மாநிலத்தில் உள்ள காடுவால் என்ற இடத்தில் கிடைத்த விக்கிரமாதித்தனுடைய செப்பேடு இதைக் கூறுகின்றது. சாளுக்கிய விக்ரமாதித்தன் நேராக பெருங்கோயிலுக்கு வந்து நரசிங்க போத்தரையனாலே தோற்றி வைக்கப்பட்ட இந்த பெரிய திருக்கற்றளியை பார்த்து கோயிலில் மனம் லயித்து, இதற்கு இருக்கக்கூடிய நிலங்களையும் செல்வங்களையும் எடுத்துக்காட்டச் சொல்லி அதைப்போல பன்மடங்கு செல்வங்களை இவன் கொடுத்து வழிபாடு செய்யுங்கள் என்று கூறினான். 

காஞ்சியை அழிக்க வேண்டும் என்று வந்தவன் விக்கிரமாதித்தன், தான் அழியாமல், பண்பாடு அழியாமல், பண்பாடு, மிகுந்தவனாக இங்கு வந்து இந்தக் கோயிலை வணங்கிய நிகழ்ச்சியை இம்மன்னனே எழுதி வைத்த கன்னட கல்வெட்டு இந்த கோயிலில் இன்றும் இருக்கிறது. 

அக்காலத்தில் அரசர்களுடன் போருக்கு தேவிகளும் உடன் செல்லும் மரபு உண்டு. விக்ரமாதித்தனுடன் வந்திருந்தாள் அவன் தேவி லோகமகாதேவி, இந்த கோயிலின் அழகையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் காண்கிறாள். இதன் வாயிலில் உள்ள ஒரு கோயில் ரங்கபதாகை கட்டிய கோயில் என்பதையும் காண்கிறாள். தம்முடைய தலைவன் விக்கிரமாதித்தன், காஞ்சீபுரத்திலே அடைந்த வெற்றியை கொண்டாட, நம் தலைநகரில் இதுபோன்ற கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தாள். அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பாக பட்டடகல்லிலே இதே போல் ஒரு கோயில் கட்டினாள். இதே போன்ற அழகும், அமைதியும் உடையது அக்கோயில். மாளபிரபா என்ற அழகிய நதிக்கரையிலே இதேபோன்று பெரிய விமானமும், அழகிய மண்டபமும், இனிமையான ஒரு சூழ்நிலையும் கொடுக்கக் கூடிய அந்த கோயிலுக்கு பெயர் லோகமஹாதேவீஸ்வரம் என்பதாம். அத்தேவியின் பெயராலேயே எடுக்கப்பட்டது. இப்போது அந்த கோயில் விரூபாக்ஷர் கோயில் என்று அழைக்கப் படுகிறது. இதிலிருந்து இந்த கையிலாயநாதர் கோயில் எவ்வளவு உன்னத கலைக்கு அடிப்படையாக இருந்தது என்றும் தெரியவருகிறது. 

சாளுக்கியர்கள் வீழ்ந்தவுடன், ராஷ்ட்ரகூடர்கள் என்ற வம்ஸத்தை சார்ந்த கிருஷ்ணன் என்ற மன்னன் பட்டடக்கல் கோயிலை கண்டு, அதன் சிறப்பைக்கண்டு, அதேபோல் எல்லோராவிலே மலையைக்குடைந்து, அழகிய சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்த அற்புதமான கோயிலைத் தோற்று வித்திருக்கிறான். அதற்கும் கைலாயநாதர் ஆலயம் என்று பெயர். கோயிலைக்கட்டி முடித்தபின் அதன் சிற்பி "இந்த கோயில் நான் தோற்றிவித்த கோயில் இல்லை, தேவர்களே வந்து தோற்றிவித்த கோயில்" என்று நினைத்தாக அந்த கோயிலில் உள்ள கல்வெட்டு அப்படியே கூறுகின்றது. அந்த கோயிலுக்கும் அடிப்படை காரணமாக இருந்தது இந்த கைலாயநாதர் ஆலயம். 

இவ்வளவு அழகான வரலாற்று சிறப்புமிக்க, கலைச்செல்வங்கள் நிறைந்த இந்த கோயிலில் பராந்தக சோழனின் கல்வெட்டுகள் இருக்கின்றன. ராஜராஜ பெருந்தகையின் கல்வெட்டுகள் இருக்கின்றன. ராஜேந்திரனின் கல்வெட்டுகள் இருக்கின்றன. சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் இருக்கின்றன. 

மூன்றாவது குலோத்துங்கன் காலத்தில் இந்த கோயிலில் வழிபாடு தடைபட்டு விட்டது. இந்த கோயிலுக்கு இருந்த நிலம், நிலத்திலிருந்து வரவேண்டிய வரி அனைத்தும் அருகிலுள்ள அநேக தங்காவதம் என்ற கோயிலுக்கு மாற்றப்பட்டது. 

சோழர் காலம் முடிந்து, பாண்டியர்கள் சிலகாலம் ஆண்டபின், தென்னகத்து கோயில்களுக்கு, மரபுக்கு, பண்பாட்டுக்கு ஒரு பெரும் ஆபத்து வடதிசையிலிருந்து வந்த மாற்றரசர்களின் படை எடுப்பு ஏற்படுத்தியது. அங்கையர்கண்ணி அம்மையின் அருள்பெற்ற குமார கம்பனன் என்ற விஜய நகர வேந்தனின் ஆற்றலினாலே மீண்டும் தென்னகத்தில் பழைய சமய பண்பாடு, இந்து அரசர்களுடைய சிறப்பு நிலைபெற்றது. 

குமார கம்பனன் கயிலாயநாதர் ஆலயத்தின் அழகை, சிறப்பை கண்டு, இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம், நிலத்திலிருந்து வரவேண்டிய வருவாய் அனைத்தையும் திருப்பி அளித்தான் என்று அவனுடைய கல்வெட்டு கூறுகிறது. 

விஜய நகர பேரரசின் காலத்தில் மீண்டும் இந்த கோயிலின் சிறப்பு தழைத்தது. அதற்கு பின்னர் 16ம் - 17ம் நூற்றாண்டில் அவ்வப்பொழுது பெரியார்கள் வந்து வணங்கியிருக்கின்றார்கள். 

இந்த கோயிலில் மற்ற கோயில்களை போல், பிற்காலத்தில் எடுக்கப்பட்ட கட்டிடங்கள் பண்டையகாலத்து கட்டிடத்தை மறைக்க வில்லை. அமைதியை கெடுக்கவில்லை. மூலஸ்தானத்தை முன் மண்டபத்தோடு இணைக்கின்றதாக அமைந்துள்ள ஒரே ஒரு கட்டிட பகுதியை தவிர வேறு எதுவும் கிடையாது. இராஜசிம்மன் தோற்றிவித்தது போலவே இன்றும் காட்சியளிக்கும் கோயில் கையிலாய நாதர் ஆலயம். 

[ முதற்படம் நன்றி AIIS ] 

No comments:

Post a Comment