பழனி மலை முருகன் பற்றிய அதிசய தகவல்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆவது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார்.
மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.
பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது இத்தலம் ‘பழனி’ என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை ‘ஞானப் பழம் நீ’ என அழைத்ததால், ‘பழம் நீ’ என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியதே என்பர்.
இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் ‘திரு ஆ இனன் குடி’ என்று பெயர் பெற்றது.
இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு ‘திருவாவினன் குடி’ என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.
மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.
இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி – பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும் பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.
பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது.
அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய்,தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம் அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும் இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார் இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.
81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
போகர் இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
*திருத்தணி முருகன் கோவில்*
*திருத்தணி முருகன் கோவில்*
🌠 முருகப்பெருமான் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணி திருத்தலமாகும்.
🌠 தெற்கில் காஞ்சிபுரம், மேற்கில் சோளிங்கபுரம், கிழக்கில் திருவாலங்காடு, வடக்கில் திருக்காளத்தி மற்றும் திருப்பதி ஆகிய திருத்தலங்கள் சு ழ நடுநாயகமாக அமைந்துள்ளது திருத்தணி.
🌠 சுமார் 4000 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு அபராஜிதவர்ம பல்லவன், பராந்தகச் சோழன், மதுரை கண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், விக்கிரம சோழன், வீரகம்பன உடையார், வீரபிரதாப சதாசிவதேவ ராயர், விஜயநகர மன்னர்கள் மற்றும் கார்வேட் ஜமீன்தார்கள் ஆகியோரால் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தல வரலாறு :
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன், முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்டு கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலையாகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.
கோயிலின் அமைப்பு :
🌠 திருத்தணி திருக்கோவில் சாளுக்கியர் காலக் கட்டிட பாணியிலானது. தற்போது 101 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
🌠 ஆலயத்தின் கிழக்கில் இருக்கும் இந்த ராஜ கோபுரம், சுமார் 25 கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தால்கூட தெரியும் அளவுக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
🌠 திருக்கோவில் நான்கு பிரகாரங்கள் கொண்டது. மலையின் மீது படிகள் ஏறிச் சென்றால் முதலில், தேரோடும் வீதியான நான்காம் பிரகாரத்தை அடையலாம். இங்கு வாகன மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன உள்ளன. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்துக்குச் செல்லும் நுழை வாயிலின் அருகே கற்பு ர அகண்டம் உள்ளது.
🌠 நான்காம் பிரகாரத்தின் கிழக்கு வாசல் வழியாக சில படிகள் ஏறி, மூன்றாம் பிரகாரத்தை அடையலாம். இங்கு கொடிமர விநாயகர், உமா மகேஸ்வரர், உச்சிப் பிள்ளையார் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன.
🌠 இங்கு மயிலுக்குப் பதிலாக ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்கிறது. இது மூலவர் சன்னிதியை நோக்கி அல்லது கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறது.
🌠 கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சன்னிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத் சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
🌠 திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.
முருகனின் சிறப்பு :
🌠 ஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து இருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம்.
🌠 முருகப் பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள்.
🌠 தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்...