http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, August 26, 2017

தெந்திருப்பேரை திவ்ய தேசம்



குண்டலம் அணிந்த பெருமாளைத் தரிசித்திருக்கிறீர்களா???? தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத ஒதுங்கிய கருடனைத் தரிசித்திருக்கிறீர்களா??? ஏன் கருடன் ஒதுங்கி காட்சி தருகிறார்??? வாருங்கள் பெருமாளைத் தரிசித்து, அவரின் அருளைப் பெற்றிடலாம்.

அப்படி என்ன இத்தலத்தில் சிறப்பிருக்கிறது??? அறிந்திடலாமா??

பூமி பிராட்டிக்கே ஏற்பட்டுள்ள சாபத்தை நீக்கி அழகிய உடலமைப்பைக் கொடுத்த பெருமாள் அருள்புரியும் தலமாம் தென்திருப்பேரை.

நவக்கிரகங்களுடன் தொடர்புடையதாகக் கருதி வழிபடும் தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாக வழிபாடு செய்யப்படும் அற்புதத் திவ்யதேசம்.

அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில் :-
திருத்தென்திருப்பேரை.

மூலவர் : மகரநெடுங்குழைக்காதர், நிகரில் முகில்வண்ணன்

தாயார் : குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்

உற்சவர் : நிகரில் முகில்வண்ணன்

கோலம் : வீற்றிருந்த திருக்கோலம்

திசை : கிழக்கு

விமானம் : பத்ர விமானம்

தீர்த்தம் : சுக்ர புட்கரணி, சங்க தீர்த்தம்

மங்களாசாசனம் : நம்மாழ்வார்

நாமாவளி : ஸ்ரீ குழைக்காதுவல்லீ ஸமேத ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதன் ஸ்வாமிநே நமஹ.

ஊர் : தென்திருப்பேரை

🌺🌺 திருப்பேரை :-

"பேரை" என்பதற்கு "உடல்" என்பது பொருள். பூமிப்பிராட்டி இத்தல பெருமாளின் திருவருளால் சாபம் நீங்கி அழகிய உடலமைப்பைப் பெற்றதால் இத்தலத்திற்கு "திருப்பேரை" என்று பெயர். சோழ நாட்டில் "திருப்பேர் நகர்" என்ற திவ்யதேசம் ஒன்று இருப்பதால், இத்தலமானது "தென்திருப்பேரை" என்று அழைக்கப்பட்டு வருகிறது.

🌺🌺 சுக்கிரனுக்குரிய தலம் :-

நவதிருப்பதிகளில் நவக்கிரகங்களாக தொடர்புடையதாகக் கருதி வழிபடப்படும் இத்தலம் சுக்கிர பகவானுக்குரிய தலமாக வழிபடப்படுகிறது.

🌺🌺 தலவரலாறு :-

துர்வாசர் முனிவர் வைகுண்டத்திலுள்ள பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ கரிய அலங்கோலமான உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார்.

பூமிதேவியும் கரிய அலங்கோலமான உருவத்தை அடைந்தாள். அதனால் தன் பிழையை மன்னித்து, சாபவிமோசனம் அளிக்கும்படி துர்வாசரிடம் பூமிபிராட்டி துர்வாச முனிவரிடம் வேண்டினாள்.

அதற்கு துர்வாச முனிவர், "தாமிரபரணியின் தென் கரையில் உள்ள "ஹரிபதம்" என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள பெருமாளை நினைத்து தவம் செய்து வந்தால் பாவம் தொலைந்து பழைய உருவம் கிடைக்கும்" என்று விமோசனம் தந்தார்.

அதன்படி தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள "தென்திருப்பேரை"(ஹரிபதம்) என்னும் தலத்திற்கு வந்து "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது.

திருக்குளத்தில் மகர குண்டலங்கள் தோன்றியதால் சிறிதும் தாமதிக்காது மகர குண்டலங்களை இத்தல பெருமாளுக்கே சமர்ப்பித்தாள். அந்த இரண்டு குண்டலங்களையும் காதில் அணிந்து கொள்ளும் படி பெருமாளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தாள் பூமிபிராட்டி.

அந்த நேரத்தில் திருமால் பூமிதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமிதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

அந்த நிமிடமே பூமாதேவி தன் சாபவிமோசனம் அடைந்து, தனது சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம் "திருப்பேரை" என பெயர் பெற்றது.

இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவனுக்கு "மகர நெடுங்குழைக் காதன்" என்ற திருநாமம் உண்டானது.

இத்தல உற்சவருக்கு "நிகரில் முகில் வண்ணன்" என்பது திருநாமம். இத்தலத்தின் வரலாற்றை "பிரம்மாண்ட புராணம்" தெளிவாக எடுத்துரைக்கிறது.

🌺🌺 வருணன் வழிபட்ட தலம்:-

ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடனே, இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான்.

இதன் காரணாமாகவே, தற்போதும் மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

🌺🌺 விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:-

முன்பொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் "ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது". நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது.

அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார்.

அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

🌺🌺 ஒதுங்கிய கருடன் :-

ஸ்ரீமந்நாராயணன் அவதரித்துள்ள எல்லா திருக்கோவில்களிலும், வாகனமான கருடாழ்வார் மூலவர் சன்னதிக்கு நேர் எதிரில் தான் எழுந்தருளியிருப்பார். ஆனால், தென்திருப்பேரையான இத்திருத்தலத்தில் மட்டும் தான் முற்றிலும் புதுமையாக இடது பக்கமாக, அதாவது ஆழ்வார்களின் பக்கம் ஒதுங்கி நின்று சேவை சாதிக்கிறார். இது தமிழகத்தில் வேறு எங்கும் எங்கும் காண முடியாத கருடனின் திருக்காட்சி ஆகும்.

அப்படி கருடன் ஒதுங்கியிருக்க காரணம் என்ன??? அதைப்பற்றி அறியலாம்.

இந்த தென்திருப்பேரை திருத்தலத்தில் "பிரம்மனுக்கும், ஈசான்ய ருத்திரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார்".

பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோயிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தனான கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்னாராம் இத்தல இறைவன்.

பெருமாளே சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால் காரணத்தால், இத்திருக்கோயிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.

🌺🌺 மங்களாசாசனம் :-

""நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லை என் தோழிமீர்காள்
சிகரமணி நெடுமாட நீடு தென் திருப்பேரையில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்
காதன் மாயன்நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன்
நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே".
-நம்மாழ்வார்.

இத்தல இறைவனை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

🌺🌺 வழித்தடம் :-

திருநெல்வேலியிலிருந்து 39 கி.மீ தொலைவில் திருப்பேரை உள்ளது. திருச்செந்தூரிலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு குழைக்காதுவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

""ஓம் நமோ நாராயணாய நமஹ!!!"".

No comments:

Post a Comment