http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html
Friday, September 10, 2021
பத்ரிநாத்
திருவதரியாச்சரமம் (பத்ரிநாத்)
திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் வடநாட்டுப் பதிகளில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிக்குன்றுகட்கு மத்தியில் பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.
வரலாறு
எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடமாகவும், பரமபதத்தைத் தரத்தக்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இத்தலம் பற்றி தனி நூலொன்றே யாக்கும் அளவிற்கு வடநாட்டுப் புராணங்களும், வடநாட்டு நூல்கள் கூறுகின்றன.
இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை நாராயணன் என்ற திருநாமத்துடனே வந்து உலகத்திற்கு உகந்தருளின இடம் இந்த தலமாகும். திருமந்திரம் பகவான் மூலமாகவே வெளியான இடம். எம்பெருமானைச் சரண்புகுந்து மோட்சம் புகும் பக்தர்கட்கு மிக எளிய வழியான திருமந்திர உபதேசத்தை போதித்துத் தன்னை காட்டிக் கொடுத்த தலம்.
மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்திரகாச்ரமம் எனப் பெயர் பெறறது. உபதேசம் செய்வதற்கு ஆஸ்ரமம் அவசியமன்றோ. எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக தேர்ந்தெடுத்ததால் பத்திரகாஸ்ரமம் ஆனதாகக் கூறுவர். இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. இதற்கு எதிர்புறம் அமைந்துள்ள நீலகண்ட பர்வதம் காண்பதற்குப் பேரெழில் பொலிந்ததாகும்.
மூலவர் - பத்ரி நாராயணன், சங்கு சக்கரத்துடன் சதுர் புஜங்களுடன் கிழக்கு
நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார் - அரவிந்த வல்லி
தீர்த்தம் - தப்த குண்டம்
ஸ்தல விருட்சம் - பத்ரி, இலந்தை மரம்
விமானம் - தப்த காஞ்ச விமானம்
சிறப்புக்கள்
1. எம்பெருமான் மலைமேல் எழுந்தருளியுள்ளான். கடல் நடுவே எழுந்தருளியுள்ளான். பரம பதத்தில் எழுந்தருளியுள்ளான். அந்தர்யாமியாக பக்தர்களின் உள்ளத்தில் எழுந்தருளியுள்ளான் அதுபோன்று இங்கு பனிபடர்ந்த சூழலிலும் எழுந்தருளியுள்ளான் சீதள மானவன், க்ஷீராப்தியாக இருப்பவன், தண் என்னும் குளிர் மலர்கள் கொண்ட மாலை பூண்டவன் பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடிவந்தவன். எம்பெருமான் எந்நேரமும் பனிகொட்டிக் கொண்டிருக்கும் இந்த இமயமலைச் சாரலில் பனிபடர்ந்த சூழலில் அமர்ந்தான் போலும்.
2. 108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் பகவான் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய ஸ்தலமாகும். மற்றெல்லா ஸ்தலங்களிலும் அவனருள் காட்டி அவனது பலத்தைக் காட்டி நின்றாலும் இங்கு மட்டும்தான் ஆச்சார்ய திருக்கோலத்தில் திகழ்கின்றான். பக்தர்களுக்காகவும் இவ்வுலகிற்காகவும், பிராட்டிக்காகவும், பிற ஸ்தலங்களில் தன்னை வெளிக்காட்டிய எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசம் செய்ய தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்திய ஸ்தலம் இது ஒன்றுதான். எனவேதான் இங்கு தனது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு ஒரு தபஸ்வியின் வடிவில் இலந்தை மரத்தடியில் பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார்.
3. இங்கு செல்வதற்கு டெல்லியிலிருந்து முதலில் ஹரித்துவார் செல்ல வேண்டும். கல்கத்தா-டேராடூன் ரயில் மார்க்கத்தில் ஹரித்துவார் அமைந்துள்ளது. எப்போதும் பனி பெய்வதால் கடுங்குளிரில் அமிழ்ந்திருக்கும் இப்பிரதேசத்திற்கு இரண்டு மூன்று உள்ளாடைகளுடனும் கம்பளிப் போர்வைகளுடனும் செல்ல வேண்டும். குளிர்தாங்கும் பருவம் இளமை என்பதால் (கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் என்றாற்போல்) மிக இளமை வயதிலேயே இங்கு சென்று வந்துவிட வேண்டும். மிக்க இளம் வயதில் இங்கு செல்ல வேண்டுமென்பதை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார். ஹரித்துவாரில் தங்குவதற்குப் பல வசதிகள் உண்டு. இங்கு தங்கி இங்குள்ள பிரம்ம குண்டம் தீர்த்தத்தில் நீராடி 15 மைல் தொலைவில் உள்ள ரிஷிகேசம் சென்று அங்கிருந்து சுமார் 80 மைல் தூரம் பேருந்து மூலம் சென்று பத்ரியை அடையலாம். ரிஷிகேசத்திலிருந்து பத்ரி செல்லும் வழியில்தான் கண்டமென்னும் கடிநகர் உள்ளது.
4. பத்ரிநாத்தானது, அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது. இந்த பத்ரிநாதனைக் குறித்து நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் ஜபம் செய்து மஹா விஷ்ணுவின் அருள்பெற்றார் என்னும் ஓர் வரலாறும் உண்டு.
5. பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார். கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர்.
6. இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக (ஸாளக்கிராமச் சிலையாக) எழுந்தருளியுள்ளார்.
7. இங்கு பெருமாளுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும் (திருமஞ்சனம்) திருவாராதனம், சாத்துமரை மக்களுக்கு எதிரிலேயே நடைபெறுகின்றன. திரைபோடுவது இல்லை. இங்கு நடைபெறும் பூஜா முறைகளை பக்தர்கள் நேருக்கு நேர் நின்று காணலாம்.
8. இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். இந்த பூஜைக்குரிய மந்திரங்களை வடநாட்டு பிராம்மணரே ஓதுவர். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள தேசத்து நம்பூதிரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து செயல்படுவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர். இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். மிகவும் நல்லொழுக்கம் வாய்க்கப் பெற்றவர்களும், சாஸ்திரங்களிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களே இந்த நிகழ்ச்சிக்கு குழுவினராக நியமிக்கப்படுவர். இந்த பூஜை நடைபெறும் சமயம் பெருமாளின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.
9. இங்கு கோவிலின் வடபுறம் கங்கை கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுகிறது. இவ்விடத்தில் சிரார்த்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோட்சம் கிடைப்பதாகவும், அதற்குப் பிறகு சிரார்த்தம் செய்ய வேண்டியதில்லை என்பதும் ஐதீஹம்.
10. இங்கு இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன.
11. இங்கு அமைந்துள்ள வசுதரா என்ற பனிமலையில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் பனித்திவலைகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை என்றும், இவைகள் மேனியில் படுதலால் புனிதம் உண்டாகிறதென்றும் நம்பிக்கை. இங்கு யாத்திரை செல்வோர் இந்த திவலைகளில் குளித்து வருவர்.
12. எல்லையற்ற பெருமைகொண்ட இத்தலத்திற்கு விசாலபுரி என்ற பெயரும் உண்டு. பாண்டவர்களின் அவதாரஸ்தலம் இதுதான் என்று ஒரு கருத்தும் உண்டு.
13. இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்துவிடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று மீண்டும் திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் இரவில் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர். அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும்போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள் மறுநாள் காலையில் பார்த்தால் எந்த அளவுக்கு லேசாக வாடியிருக்குமோ அந்த அளவிற்குத்தான் மலர்களின் வாட்டம் இருக்குமாம். அதனால் தான் மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர் என்னும் ஐதீஹம் உண்டானது. மே மற்றும் ஜூன் மாதங்களே இந்த யாத்திரைக்கு மிகவும் உகந்ததாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment