http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Thursday, August 5, 2010

நால்வர் - மணிவாசகப்பெருமான் / நாவுக்கரசர்.

                          ஓம் நமச்சிவாய  !

ஆலகாலமும் அமுதாகும்!











somaskan.jpg

பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.
நால்வர் பெருமக்கள் துதி.
இப்பூவுலகின்கண் வாழும் உயிரினங்களில் ஆறறிவுப் படைத்த மனித இனம் சாலச் சிறந்ததொரு படைப்பாகும்.ஆதி காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள், ஞானிகள் ஏனையோர், ஆலயங்களில் உருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ள களங்கமற்ற பரம்பொருளாகிய சிவத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு, நித்திய ஆனந்தம் பெற்றனர் என்றால் அது மிகையாகாது.

ஆதிகாலந்தொட்டே நாயன்மார்கள், சந்தானாச்சாரியார்கள் போன்றவர்கள் சைவத்தை ஒளியூட்டி பிரகாசிக்கச் செய்வதில் பெரும் பணியாற்றியுள்ளனர்.சைவாலயங்களின் வழிபாட்டில் பிரதோச கால வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.

மகாப் பிரதோசத்தின் மகிமை :

* சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது.

* ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும்.

* பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும்.

* நூற்று இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

* சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

* பிரதோச விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது திண்ணம்.

       துன்பங்கள் [ விக்கினங்கள் ] அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எம்பெருமான் விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார்.இம்மையிலும், மறுமையிலும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது. 

கிறித்துவ மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு.அம்முறையில், மத குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.

இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம்.

   ப்ர - தோசம் - மிக்க தோசம், எனப் பொருள்.
அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான் பிரதோச வழிபாடு. 

பிரதோச காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு நித்தியானந்தம் அளிக்கின்றார்.

பிரதோச காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும் தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம் இயம்புகின்றது.

பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும் மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அக்காலந்தொட்டு, வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவதால் இலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெரியோர் கூறுவர்.

ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோச காலத்தில். 

தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக அருள்பாலித்து, அமிர்தத்தை அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச காலமாகும்.

இப்பிரதோச நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த மறுக்க இயலாத உண்மையாகும். 

                              

பி.கு.: பிரதோச விரதம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியது. அனைத்துலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என அனைவரும் ஒன்று கூடி விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும். பிரதோச வரலாறும், விரதம் இருக்க வேண்டிய முறை குறித்தும் தொடர்ந்து காணலாம்.

http://www.youtube.com/watch?v=qhQ_lv3F4UA&feature=player_detailpage
இப்போது  சமயக் குரவர் நால்வரைப் பற்றி சிறிது பார்ப்போம். 







மணிவாசகப்பெருமான்
















மாணிக்க வாசகர் குருபூஜை நாள். - ஒரு ஆன்மீக அலசல்

வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.

தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே –எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

என்று திருவாசகம் பாடப்படும் இடம் எங்கும் போற்றித் துதிக்கப்படும் அருளாளர் திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான். இப்பெருமானின் குருபூஜைத் தினமான ஆனிமகத் திருநாள் தமிழர்கள் யாவரும் போற்றவேண்டிய நன்னாளாகும்.

மாணிக்கவாசகர் காலம்

தமிழ்ப்புலவர் பெருந்தகைகள் பலரினதும் வாழ்க்கைக் குறிப்புக்கள் தெளிவற்றதாயும் சர்ச்சைக்குரியதாயும் இருப்பது மாணிக்கவாசக சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றிற்கும் பொருத்தமாகவே அமைகிறது. இதனால் மாணிக்கவாசகப் பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகளுள் பலவும் அவரது சரித்திரத்திலேயே உள்ளவை தானா? அல்லது வேறு அருளாளர்களின் சரித்திரத்தில் உள்ளவை பிற்காலத்தில் மாணிக்கவாசகர் மீது ஏற்றிக்கூறப்பட்டதா? என்ற நிலைக்குக் கூட சில தமிழ் அறிஞர்கள் சென்றிருக்கிறார்கள்.

கடவுள்மாமுனிவர் அருளிய திருவாதவூரடிகள் புராணம் முழுவதும் மாணிக்கவாசகரின் வரலாற்றையே கூறினும், அவ்வரலாற்று எடுத்துரைப்பு முறை சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்திற்கு ஒப்பாக அமையவில்லை என்பது அறிஞர்கள் சிலரது கருத்து. இதனைத் தவிர பரஞ்சோதிமுனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்திலும் மாணிக்கவாசகப் பெருமானின் வரலாறு பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவார முதலிகள் மூவருக்கும் மாணிக்கவாசகர் முற்பட்டவரா? அல்லது மாணிக்கவாசகர் காலத்தால் பிற்பட்டவரா? என்ற வாதம் பரவலாக அறிஞர்களிடம் உள்ளது. ஒரு சாரார் மாணிக்கவாசகர் தேவாரமுதலிகள் மூவருக்கும் முற்பட்டவர் என்பர். இதற்கு திருநாவுக்கரசர் தேவாரத்தில்

”நரியைக் குதிரை செய்வானும்..” (தேவா- 4-4.2)

“மணியார் வையைத் திருக்கோட்டினின்றதோர் திறமும் தோன்றும்..” (தேவாரம் 6-18.9)


என்ற வரிகளைக் காணலாம். இவை நேரடியாக மாணிக்கவாசகர் வரலாற்றை வெளிப்படுத்தவில்லை. பத்திரிகையியலில் செய்தி என்றால் என்ன? என்ற வினாவிற்கு சுவாரஸ்யமாக “நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல. மாறாக மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி” என்று விளக்கம் சொல்லப் படுவதுண்டு. இது போல எழுமாறாக அல்லது தீர்க்கதரிசனத்துடன் நாவுக்கரசர் இவ்வாறு இறைவன் கருணையைக் குறிப்பிட்டிருக்கலாம். என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால் ஸ்ரீ கே.ஜி.சேஷய்யர் - பரிதிமாற்கலைஞர்- பொன்னம்பலம்பிள்ளை- மறைமலையடிகள் போன்ற சில அறிஞர்கள் மாணிக்கவாசகர் காலம் முற்பட்டது (பொ.பி* 4ம்நூற்றாண்டுக்கு முன்) என்றே கருதி வந்திருக்கிறார்கள். ஆனால் மாணிக்கவாசகர் வரகுணபாண்டியனின் அமைச்சராக இருந்தவர் என்றே அவர் பற்றிய வரலாறு யாவும் கூறும். ஆகவே இரண்டாம் வரகுணபாண்டியனின் காலம் பற்றியும் இவ்விடத்தில் நோக்கவேண்டும். செப்பேடுகளும் கல்வெட்டுகளும் பொ.பி 9ம் நூற்றாண்டே அவன் காலம் என்று தெளிவுறுத்துகின்றன. மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில்

“வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்”

என்று நிகழ்காலத்தில் கூறுவதும் இதை வெளிக்காட்டி நிற்கிறது.

[*: பொ.பி (CE) - பொது சகாப்தத்திற்குப் பின், Common Era, Circa]


நந்திவர்ம பல்லவன் பொ.பி 730ல் அரசனானவன். அவனே தில்லைக் கோயிலின் உள்ளே கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியைக் கட்டினான் என்று கூறுவர். திருமங்கையாழ்வார் “பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திர கூடம்” என்று போற்றுவது கவனிக்கத்தக்கது. இந்த வகையில் தேவாரமுதலிகள் கோவிந்தராஜப்பெருமாளைப் பற்றி ஏதும் சொல்லாமலிருக்க, மாணிக்கவாசகர்,


“கிடந்தான் தில்லை அம்பலமுன்றிலில் மாயவனே”

என்று பாடுவதும் இவர் பொ.பி 8ம் நூற்றாண்டுக்குப் பிந்தையவர் என்பதையே காட்டி நிற்கிறது.

மேலும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது “திருத்தொண்டர் தொகையில்” தனது காலத்திலும் தனக்கு முற்பட்ட காலத்திலும் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிக் குறிப்பிட்ட போதும் மாணிக்கவாசகர் பற்றி குறிப்பிடாமையும், இதனால் இப்பதிகத்தையே முதல்நூலாகக் கொண்டு எழுந்த பெரியபுராணத்திலும் மாணிக்கவாசர் சரிதம் இல்லாமையும் கூட, மாணிக்கவாசகர் சுந்தரர் பெருமானுக்கு காலத்தால் பிற்பட்டவர் என்ற கருத்தையே ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு மாணிக்கவாசகர் பொ.பி 9ம் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று இன்னிஸ்- நெல்ஸன், கோபிநாதராயர் போன்றோர் கருதியுள்ளனர். இதுவே தற்பொதைய ஆய்வுகளின் வண்ணம் சரியாயிருக்கும் என்று கருதமுடிகிறது.


மாணிக்கவாசகப் பெருமான் வரலாறு








திருவாதவூரடிகள் புராணம் மாணிக்கவாசகப் பெருமானின் வரலாற்றை வெளிப்படுத்தும் அற்புத நூல் ஏழு சருக்கங்களை உடைய செந்தமிழ் நூல். இந்நூலின் கதாநாயகராகிய மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூரில் செந்தண்மை பூண்ட தமிழ் அந்தண மரபில் கைலையம்பதியின் காவலாராயும் சிவபெருமானின் திருவூர்தியாயும் விளங்கும் நந்தியம் பகவானின் அம்சமாய் அவதரித்தவர்;. இன்றும் அங்கு திருமறைநாதர் கோயிலும், மாணிக்கவாசகரே கட்டியதாக நம்பப்படும் “நூற்றுக்கால் மண்டபம்” ஒன்றும் காணப்படுகின்றது. இவரது அறிவொழுக்கங்களைக் கண்ட ‘அரிமர்த்தன பாண்டியன்’ என்ற இரண்டாம் வரகுணன் இவரைத் தனது முதல் மந்திரியாக்கி “தென்னவன் பிரமராஜன்” என்ற சிறப்பு விருதும் வழங்கினான். இதைப் புராணம்,


தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்
மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக
மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு
பொன்னவிர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன்
என்று கூறுகிறது.


ஆவுடையார் கோயில் - மாணிக்கவாசகர் தீட்சை

இக்காலத்தில் தான் திருப்பெருந்துறை வழியாக அரபிக் குதிரைகள் வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் அங்கே ஞானகுருவாக எழுந்தருளியிருக்கும், எல்லா ஆத்மாக்களுக்கும் உள்ளுறையும் ஆத்மநாதனான இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். குதிரை வாங்க எடுத்துச் சென்ற பணம் யாவற்றையும் சிவசேவையில் செலவிட்டார். திருப்பெருந்துறையில் இன்றைக்கும் சிறப்போடு திகழும் ஆத்மநாத சுவாமி திருக்கோயிலைக் கட்டினார். இதனால் வந்த வேலை மறந்திருந்த வாதவூரர் மேல் பாண்டியன் கோபங்கொண்டான். பிடியாணை பிறப்பித்தான். ஆனால் குருநாதர் கட்டளைப் படி ஆவணிமூல நாளில் குதிரை வரும் என்று அறிவித்தார் வாதவூர் வள்ளல்.

இந்த வகையில் தான் ஆவணிமூலத்தில் பாண்டியனுக்குக் குதிரைகள் வந்தன. இறைவனே குதிரைச் சேவகனாக வந்தான்.

தந்தை என்பவர் மைந்தர் வாதை தவிர்ப்பதே கடனாதலால்,
அந்தமின்றிய காதல் அன்பர் அழுங்கல் கண்டபின், நரியெல்லாம்
வந்து வெம்பரியாகவும், பரி வீரர் வானவர் ஆகவும்
சிந்தை கொண்டனர், அந்த மால்-விதி தேடுவார், மதி சூடுவார்

என்கிறது இச்சம்பவத்தை திருவாதவூரடிகள் புராணம் (குதிரையிட்ட சருக்கம்- 1)
ஆனால் இரவே அப் பரிகள் நரிகளாகி காட்டிற்கு ஓடிவிட்டன. மாணிக்கவாசகர் சுடுமணலில் நிறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார். வைகை பெருக்கெடுத்தது. இதை “மதுரைப் பெருநன் மாநகரிருந்து குதிரைச் சேவகனாகிய கொள்கையும்” என்றும் ‘நரியைக் குதிரையாக்கிய நன்மையும்’ என்றும் இதை மாணிக்கவாசகர் பாடுகிறார்.
மண் சுமந்த மாதேவன்
மாணிக்கவாசகர் பொருட்டும் யாருமற்ற அநாதையாகிய செம்மனச் செல்வி என்ற வந்திக்கிழவி பொருட்டும் சிவபெருமானே கூலியாளாகி மண்சுமந்தார். ஒழுங்காக வைகைக் கரையை அடைக்காமல் அறிதுயில் கொண்டதால் பாண்டியனிடம் பிரம்படியும் வேண்டிக் கொண்டு மறைந்தருளினார். இதனை விளக்க ஆவணி மூலத்தன்று சிவாலயங்களில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா கொண்டாடும் வழக்கம் உண்டானது. இக்காட்சியை சொற்களால் வர்ணிப்பது மிகக் கடினம். சர்வலோக நாயகனான இறைவன் மண் சுமக்க வந்த காட்சியை திருவாதவூரடிகள் புராணம் (மண்சுமந்த சருக்கம் 29)
ஆடையும் துணிந்த சீரையாக்கியே கூலியாளாய்
கூடையும் தலைமேல் கொண்டு கொட்டுடைத் தோளராகிப்
பீடை கொண்டயர்வாள் காணப் பெரும்பசியுடையார் போல
வேடைகொண்டொல்லை வந்தார் வேண்டிய வடிவம் கொள்வார்
என்று விவரிக்கிறது.
வடமதுரையில் குசேலரிடம் அவல் வேண்டி உண்ட கண்ணபிரானும் தானும் ஒருவரே என்பது போல தென்மதுரையில்,
“நன்று நன்று இன்னும் அன்னே (அம்மா)
நயந்து பிட்டு அளிக்க வேண்டும்”
என்று தனது கிழிந்த சீலையில் நிறைய வாங்கி இட்டுக் கொண்டு, உண்பதும் உறங்குவதும் சிறிது வேலை செய்வதும் பின் களைத்தவர் போல நித்திரை செய்வதும் என்று விளையாடல் செய்ததால், வேலையைக் கண்காணிக்க வந்த பாண்டியன் வெகுண்டு கோபங்கொள்ள, அதனைக் கண்ட பாண்டியனின் பரிசனர்கள் பிடித்திழுத்து வந்து பாண்டியனிடம் காட்டினர். இதை திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதிமுனிவர்






வள்ளல் தன் சீற்றம் கண்டு மாறு கோல் கையரஞ்சி
தள்ளரும் சினத்தராகித் தடக்கை தொட்டிழுத்து வந்து
உள்ளொடு புறங்கீழ் மேலாய் உயிர்தொறும் ஒளித்து நின்ற
கள்வனை இவன் தான் என்று வந்திக்காளெனக் காட்டி நின்றார்
என்று பாடுகிறார்.
இதில் அவர் ‘உயிர் தொறும் ஒளித்து நின்ற கள்வனை’ என்று குறிப்பது நயக்கத்தக்கது. இச்சந்தர்ப்பத்தில் பாண்டியனிடம் பிரம்படியும் பட்டார்.
பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்
என்று உருகி உருக வைத்து இந்நிகழ்ச்சியை பாடலாக்குகிறார் மாணிக்கவாசகர். மேலும்
“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே”
என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார். இச்செயலால் வருந்திய பாண்டியன் தான் கொடுத்த தண்டனைகளிலிருந்து வாதவூர்ப் பெருமானை விடுவித்ததுடன் இனி உங்களுக்கே இப்பாண்டி நாடுடையது என்று சொன்னதுடன் ‘இனிமேல் அடியேன் தங்கள் அடிமை’ என்றும் விண்ணப்பித்தான். எனினும் ‘எனக்குப் பட்டமும் பதவியும் இனிமேற் போதும்…. அடியேனுக்கு மந்திரிப் பதவியிலிருந்து விடுதலை தந்தாற் போதும்’ என்று வேண்டிக்கொண்டு பாண்டியனிடம் விடைபெற்று துறவு வாழ்வை ஏற்று மீண்டும் தம் குருநாதரின் அருளாசியை வேண்டி திருப்பெருந்துறைக்குச் சென்றார்.


அங்கே மீண்டும் தம் குருநாதர் திருவடிகளில் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். அவரது ஞானம் முதிர்ச்சியடையவே குருந்தமர நீழலில் குருவாக வந்து ஆட்கொண்ட குருபரன் தன்னிருக்கையாகிய திருக்கைலை சென்றடைந்தார். இதன் பின் அச்சிவகுருநாதன் இட்ட கட்டளையின் வண்ணம் பல தலங்களையும் சென்று பாடிப்பரவிய பின் திருச்சிற்றம்பலமாகிய தில்லையை அடைந்தார். மாணிக்கவாசகர்.


வாதவூரர் செய்த வாதம்
திருத்தில்லையம்பலத்தே தன்னுடல் உயிர் யாவற்றையும் ஆடவல்ல பெருமானுக்கே அர்ப்பணித்து வாழ்ந்தார் மாணிக்கவாசகர். அவரது இறையனுபவங்கள் பாடல்களாக மலர்ந்து “திருவாசகம்” ஆயின. அவரது உணர்வலைகள் பாடல்களில் பதிந்தன. தனக்காகவே மட்டுமன்றி உலகத்தாருக்காயும் உருகினார் நம் பெருமானார்.


சிந்தனை நின் தனக்கேயாக்கி நாயினேன் தன் கண்ணினை நின் மலர்ப்போதுக்கேயாக்கி
வந்தனையும் அம்மலர்க்கேயாக்கி வாக்கும் மணிவார்த்தைக்காக்கி ஐம்புலங்களார
எந்தனை ஆட்கொண்டு உள்ளேபுகுந்தஇச்சை மாலமுதப்பெருங்கடலே மலையேயுன்னை
தந்தனை செந்தாமரைக்காடனையமேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே
(திருச்சதகம்)
இக்காலப் பகுதியில் ஒரு சிவபக்தன் எங்கெங்கு தமிழும் சைவமும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று “என்றென்றும் வாழி திருச்சிற்றம்பலம்” என்றும் “பொன்னம்பலம் நீடூழி வாழ்க” என்றும் கூவித் திரியலானான். இந்த வகையிலேயே ஈழநாடாகிய இலங்கைக்கும் சென்று அங்குள்ள பௌத்த நெறிமன்னன் முன்னும் இவ்வாறே கூறினான். (இன்றைக்கும் எக்காரியம் செய்யும் போதும் இவ்வாறு கூவிக்கொள்ளும் தமிழ் இந்துக்கள் இலங்கையில் உள்ளனர்). இதனால் எரிச்சலடைந்த இலங்கை மன்னன் அங்கிருந்த பௌத்தத் துறவியருடன் சிதம்பரத்தில் பௌத்தத்தை நிலைநாட்டி அங்கே புத்தரின் உருவை ஸ்தாபிக்க எண்ணி வந்தான்.






அப்பொழுது அங்கே வசித்த மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இலங்கை அரசனின் பௌத்தகுருமார்களுக்கும் இடையில் சொல் வாதம் இடம்பெற்றது. இதன் போது அவர்கள் செய்த தவறை வெளிப்படுத்தியதுடன் (அதாவது பௌத்தம் சைவத்திற்கு விரோதமல்ல, ஆனால் சைவத்திற்கு விரோதமாய் தில்லையில் பௌத்தத்தை நிலைநாட்ட முயன்றது அவர்களின் அறியாமையாகும்) அரசனின் ஊமைப் பெண்ணையும் பேச வைத்தார். இதன் போது இலங்கையினின்று வந்த பௌத்தர்களின் மனங்களிலிருந்த சைவம் பற்றிய வினாக்களை அவள் மூலமாகவே பதிலளித்து அவற்றை நீக்கியருளினார். இதுவே திருச்சாழல் என்ற பதிகமாக உருவெடுத்தாயும் கூறுவர். இதன் போது வந்தவர்கள் யாவரும் நீறணிந்து சைவராயினர் என்றும் வரலாறு கூறும்.


ஆனால் இந்த வரலாறு எந்தச் சான்றும் அற்றது என்று முக்கிய சில பெரியவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆனால் இவ்வரலாறு ‘புத்தரை வாதில் வென்ற சருக்கம்’ என்ற பகுதியில் திருவாதவூரடிகள் புராணத்தில் 96 பாடல்களில் பேசப்படுகிறது. எது எவ்வாறாகிலும் பொ.பி 9ம் 10ம் நூற்றாண்டுகளில் மாணிக்கவாசகர் வாழ்ந்திருந்தால் இலங்கையில் இரண்டு அரசுகள் இருந்திருக்க வாய்ப்புகளுண்டு. ஒன்று யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு தமிழரசர்கள் ஆண்ட யாழ்ப்பாண இராச்சியம். மற்றையது அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய அரசு. இந்த அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பெரிய அரசு சைவத்திற்கு இக்காலப் பகுதியில் மாறியதற்கு எந்தச் சான்றும் இல்லை.
எனினும் யாழ்ப்பாணத்தரசர் அக்காலத்தில் பௌத்தராக இருந்திருக்கலாம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இன்று பௌத்தசமயிகள் இல்லாதவிடத்தும் பல புராதன பௌத்தவிகாரைகள் ஆங்காங்கே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இத்தமிழ்ப் பௌத்தர்களே மாணிக்கவாசகர் காலத்திற்குப் பின்னர் தமிழ் இந்துக்களாக மாறியிருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. தவிர மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது.
திருவாதவூரடிகள் புராணம் மார்கழித் திருவாதிரைக்கு முந்தைய பத்து நாட்களாகிய திருவெம்பாவைக் காலத்தில் இன்றைக்கும் இலங்கையில் சிவாலயங்கள் தோறும் சுவாமியையும் மாணிக்கவாசகப் பெருமானின் திருவுருவத்தையும் எழுந்தருளச் செய்த பின் அத்திருவுருவங்களின் முன் படனம் (ஓதும்) வழக்கம் உள்ளது. ஒருவர் பாடலை வாசிக்க இன்னொருவர் பதம் பிரித்து விளக்குவார். ஏராளமான மக்கள் கூடியிருந்து கேட்பர். இவ்வாறாக இவ்விழாக்காலத்தில் இப்புராணம் முழுமையாகப் படிக்கப்பெறும். இதை விட இத்திருவாதிரை உற்சவகாலத்தின் நிறைவாக இலங்கைச் சிவாலயங்களில் நடைபெறும் தீர்த்தவாரியில் இறைவனின் பிரதிநிதியான “சிவாஸ்திர தேவருக்கு” பதிலாக அத்தேவருக்குச் செய்யப்பெறும் உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும் உண்டு. இது வேறு எந்த நாயன்மார்களுக்கும் செய்யப்பெறாத உபசாரமாகும்.
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கிய சிறப்பு



தில்லையிலே மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் தில்லை ஆடலரசனே வேதியருருவம் கொண்டு அவர் வாழ்ந்த குடிலையடைந்து “நீர் எழுதியுள்ள திருவாசகம் முழுமையையும் ஏட்டில் எழுத விரும்புகிறேன்” என்று பெருமானார் சொல்லச் சொல்ல திருவாசகம் முழுமையையும் தன் கையாலேயே எழுதி அதன் பின் “பாவை (திருவெம்பாவை) பாடிய வாயால் ஒரு கோவையும் பாடும்” என்று திருக்கோவையார் பாடச் செய்து அதனையும் ஏட்டில் தன் திருக்கரங்களாலேயே எழுதி அவ்வேடுகளையும் கொண்டு மறைந்தருளினார். இது இவ்வாறிருக்க…
இதன் பின் தில்லைப்பெருமான் அந்த திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று கொடுத்ததாய் திருவாதவூரடிகள் புராண ஆசிரியர் பாடம் போது அவரின் தமிழ்ப்பற்றும் வெளிப்படுவதையும் சைவம் தமிழுக்குச் செய்த உயர்வு புலப்படுவதையும் காண முடிகிறது.
செந்தமிழ்க்கு அன்பு மிக்கார் சென்று தம் மன்றிலெய்தி
அந்தரத்தவரை மாலை அயனை நன்முகத்து நாடி
நந்தமக்கு அடிமை பூண்டு நயந்தவன் ஒருவன் சொன்ன
இந்த நற்பாடல் கேண்மின் என்றவர்க்கு எடுத்துச் சொன்னார்


(திருவடி பெற்ற சருக்கம்14)
இதன் பின்னர் “வாதவூரன் விளம்பிட தில்லை அம்பலவாணன் எழுதியது” என்று கைச்சாத்திட்டு சிற்றம்பலத்து பஞ்சாட்சரப் படியிலே தில்லை மூவாயிரவர் மறுநாள் காணும் வண்ணம் வைத்தருளினார். அதிகாலையில் தில்லைவாழந்தணர்கள் இந்தத் திருவேட்டைக் கண்ணுற்று அதிசயித்து வியந்த போற்றி மாணிக்கவாசகரை அழைத்து வந்து துதி செய்து பரவி மகிழ்ந்து “இந்நூலின் பொருள் யாதோ?” என்று பணிவன்போடு வினாவினார்கள். அப்பொழுது தில்லை பொற்சபையில் நடமாடும் பெருமானைக் காட்டிய கையினராய் யாவரும் காண அத்திருவுருவுடன் மாணிக்கவாசக சுவாமிகள் மறைந்தருளினார். அத்திருநாள் ஆனி மகம் ஆகும்.
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெரியோனை
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்கு தில்லை கண்டேனே
கண்டபத்து 10)
தேன் தமிழும் தெய்வத் திருவாதவூரரும்
திருவாதவூரராகிய மாணிக்கவாசகருக்கு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பெருமரியாதையுண்டு. தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூரில் தென்திசை நோக்கி குருவடிவாய் நிற்கும் நிலையில் விளங்கும் மாணிக்கவாசகரை மூலவராகக் கொண்டு ஒரு திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமகநாளிலும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.




மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருப்பெருந்துறை யோகாம்பாள் சமேத ஆத்மநாதசுவாமி கோயிலில் மாணிக்கவாசகரின் வரலாற்றைக் கூறும் எழில்மிகு சிற்பங்கள் உள்ளன. ஆனி மகத்தன்று மதியம் கருவறையுள் மாணிக்கவாசகர் எழுந்தருளி இறைவனுடன் கலக்கும் காட்சியும் இடம்பெறுகிறது. இது தவிர மார்கழி மாதத்தில் நடக்கும் மஹோத்ஸவம் மாணிக்கவாசகருக்கேயாகும். மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி நிகழும் இவ்விழாவினை பக்தோத்ஸவம் என்று கருதமுடியாத வண்ணம் சிவமாகவே பெருமானாரைப் பாவித்து பிரம்மோத்ஸவமாகவெ கொண்டாடுகின்றனர். சுவாமி மாணிக்கவாசகருக்கு திருத்தேர் உத்ஸவமும் உண்டு.
தில்லை நடராஜர் கோயிலில் நடக்கும் மார்கழி மஹோத்ஸவத்திலும் மாணிக்கவாசகருக்கு பெரியளவு முதன்மை உண்டு. திருவிழா நிறைவில் சுவாமிக்கு விடையாற்றித் திருவிழா நிகழ்ந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாற்றி உத்ஸவம் உண்டு. ஈழத்துச் சிதம்பரம் என்ற இலங்கைக் கோயிலிலும் இவ்வாறு மாணிக்கவாசகருக்கு முதன்மை செய்கிறார்கள். கோயில் சார்ந்தவர்களாலும் குருமார்களாலும் மார்கழி மாதத்தில் மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக “மாணிக்கவாசகர் விழா”வும் செய்கிறார்கள்.


எத்தனையோ இலக்கியங்கள் இருந்தும் ஜி.யு.போப் திருவாசகத்திற்கும் திருக்குறளிற்கும் முதன்மை தந்து மொழி பெயர்த்தமை ஏன்? ஏன்ற கேள்வி பிறக்கும் போது இவ்விலக்கியங்களின் வலிமை புலப்படுகிறது. இதே வேளை முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஜி.யு.போப் அவர்கள் மொழிபெயர்ப்பின் பின் தான் எழுதிய மாணிக்கவாசகர் வரலாறு மற்றும் விளக்கங்களில் விட்ட தவறுகளை மிகத்தெளிவாக ஜி.யூ.போப் அவர்களும் திருவாசகமும் என்று எழுதியிருப்பதும் சிந்திக்கத்தக்கது. இளையராஜா அவர்களும் எத்தனையோ இசைத்தமிழ் நூல்கள் இருக்க இந்தத் திருவாசகத்திற்கு சிம்பொனி இசையமைத்ததும் இதன் வலிமையையே பறை சாற்றுகின்றது.






தாய்லாந்து முடிசூட்டு விழாக்களிலும் ஊஞ்சல் விழாக்களிலும் ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களையே திரித்துப் பாடுகிறார்கள் என்கிறது ‘தமிழ்ப் பண்பாடு’ (1955) என்ற காலாண்டிதழ். கோங்கு நாட்டிலுள்ள அவினாசியில் உள்ள சிவாலயத்தில் வரலாற்றுச் சிறப்பும் கலையெழிலும் கொண்ட மாணிக்கவாசகப்பெருமானின் செப்புத்திருமேனி ஒன்றுண்டு. ஞானமுத்திரை காட்டும் வலது திருக்கரமும் புத்தகம் ஏந்திய இடது திருக்கரமும் கொண்டு உருத்திராக்கம் தரித்த திருமேனியராய் அழகுற விளங்குகிறார் மாணிக்கவாசக மாமுனிவர். இத்திருவுருவின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள நாகரஎழுத்துக்களில் கன்னட நாட்டுப்பெண் ஒருத்தி இத்திருவுருவை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக- பழைய காலத்திலேயே மாணிக்கவாசகரின் சிறப்பு தமிழகத்திற்கு அப்பாலும் பரவி விரவி போற்றப்படுவதாயிருந்தது என்பது தெளிவு.


பண் சுமந்த பாடலுக்காய் மண்சுமந்து தன்திருவுடலில் புண்சுமந்த பெம்மானிடம்,
“…. சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது என்பால்?”
என்று வினா எழுப்பி தானே மிக்க மகிழ்வு பெற்றேன் என்று சொல்லி மகிழும் நம் பெருமானார் தனது வாழ்வில் கண்ட முக்கிய இறையுணர்வு “நாயகீ பாவம்” என்ற மதுரபாவம். அவர் பெற்ற முக்தி “சாயுச்சியம்” என்ற சிவானந்தம் என்பர் சைவச் சான்றோர். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்பது அவர் திருவாக்கு. திருவாசகம் படித்தால் அழுகை வருவது புதுமையுமல்லவே…. “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்பதல்லவா பழமொழி?
வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே
என்பது வள்ளலார் வாக்கு. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் காசியில் பத்தாண்டுகள் வசித்தவரும் 1917ல் “தேவாரம் வேதசாரம்” என்ற அரிய நூலை எழுதியவருமான சி.செந்திநாதையர் “திருவாசகம் உபநிடத சாரம்” என்று தெளிவுபடக் குறிப்பிடக்காணலாம். யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய “சிவபுராணம்” முழுமையும் பாராயணம் செய்யப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் பெரியோரும் பாடம் செய்யக் கடினப்படும் நீண்ட சிவபுராணம் யாழ்ப்பாணத்திலுள்ள கிறிஸ்தவச் சிறுபிள்ளை கூட சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு ஆறுமுகநாவலர் பெருமான் போன்றோரின் வழிகாட்டுதலே காரணம் எனலாம்.
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக நம்பியாண்டார் நம்பியடிகள் திருவாசகத்தை வகுத்திருக்கிறார். திருவாசத்தை மோஹன ராகத்திலேயே பாடி வரும் வழக்கமும் உள்ளது. திருப்படையாட்சிப் பதிகமும் அச்சோப்பதிகமும் விதிவிலக்கு. 656 பாடல்களை உடைய இந்தத் திருவாசக நூலை மாதந்தொறும் முற்றோதல் செய்யும் வழக்கத்தைக் கொண்ட பெரியவர்களும் இருக்கிறார்கள். திருவாசகம் படிப்பதையே தம் வாழ்வின் குறிக்கொளாகக் கொண்டொழுகும் அன்பர்களும் இன்றும் உள்ளனர்.


வண்டு பல்வேறு பூக்களிடத்தும் சென்று தேனை எடுப்பது போல வாதவூரராகிய வண்டு வேத உபநிடதங்களிலிருந்து திருவாசகமாகிய தேனை எடுத்து நமக்கு வழங்கியுள்ளார் என்பார் வாரியார் சுவாமிகள். இதனால் அவர் மாணிக்கவாசகரை “வாதவூர் வண்டு” என்று போற்றுவார். நாமும் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகளைப் போற்றி செய்து வாழ்வோம். சிவனருள் பெறுவோம்.


“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” (சிவபுராணம்)
நன்றி : தமிழ் ஹிந்து



திருநாவுக்கரசர் வரலாறு

திருச்சிற்றம்பலம்
திருவவதாரம் :

திருமுனைப்பாடி நாட்டில் தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் என்னும் ஊரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார் மாதினியார் இருவரும் இணைந்து இல்லறம் நடத்தி வந்தனர். இவ்விருவர்க்கும் திருமகளாய்த் திலகவதியாரும், சில ஆண்டுகள் கழித்து மருணீக்கியாரும் உலகில் அலகில் கலைத்துறை தழைப்பவும் அருந்தவத்தோர் நெறிவாழவும் திருவவதாரம் செய்தனர். பெற்றோர் உரிய நாளில் மருணீக்கியாரைப் பள்ளியில் அமர்த்திக் கலைபயிலச் செய்தனர். எல்லாக் கலைகளையும் திறம்பெறக் கற்றுத்தேர்ந்தார் மருணீக்கியார். திலகவதியார்க்கு வயது பன்னிரண்டு தொடங்கி நடைபெற்றது.
பெற்றோர் தம்மகளார்க்குத் திருமணம் செய்விக்க எண்ணினர். அவ்வேளையில் குலம், குணம், ஆண்மை, அரன்பால் அன்பு, உரு, திரு ஆகியன ஒருங்கு வாய்க்கப்பெற்றவராய் விளங்கிய கலிப்பகையார் திலகவதியாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிப் பெரியோர் சிலரைப் புகழனார்பால் அனுப்பினார். கலிப்பகையாரின் பண்புகளை அறிந்து பெற்றோரும் இசைவளித்தனர். பெரியோர்கள் இம்மகிழ்வுச் செய்தியைக் கலிப்பகையார்க்கு அறிவித்தனர். திருமணம் நிகழ்வதற்குள் வடநாட்டு மன்னர் சிலரின் படை எழுச்சி காரணமாகத் தமிழ்நில மன்னன் ஒருவன் பேராற்றல் மிக்க கலிப்பகையாரைச் சேனைத் தலைவராக்கிப் படைகளுடன் வடபுலம் செல்ல விடுத்தனன். நீண்டநாள் போர் நடந்தது. இவ்வாறு கலிப் பகையார் போரில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் புகழனார் விண்ணுலகு அடைந்தார். கற்புநெறி வழுவாத அவர் தம் மனைவியாரும் சுற்ற மொடு மக்களையும் துகளாகவே நீத்துக் கணவனாருடன் சென்றார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருணீக்கியாரும் ஆற்றொணாத் துயரில் அழுந்தினர். 
இந்நிலையில், போர்மேற் சென்ற கலிப்பகையாரும் போர்க் களத்தில் பூத உடல் நீத்துப் புகழுடம்பெய்தினார். இச்செய்தியைக் கேட்டுத் திலகவதியார் திடுக்கிட்டார். `என் தந்தையும் தாயும் என்னை அவர்க்குக் கொடுக்க இசைந்தார்கள். அந்த வகையால் அவர்க்கே நான் உரியவள்; ஆகையால் இந்த உயிரை அவர் உயிரோடு இசைவிப் பேன்` என்று கூறி உயிர்விடத் துணிந்தார். மருணீக்கியார் தமக்கையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் புலம்பினார். `தந்தையாரை இழந்த பின் தங்களை வணங்கப் பெறுதலால் யான் இதுகாறும் உயிர் தரித்திருக் கிறேன். இந்நிலையில் என்னைக் கைவிட்டுத் தாங்கள் பிரிவீராயின் தங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன்` என்று உறுதி மொழிந்தார். 
தமக்கையார் தவநிலை :
தம்பியின் மனக்கலக்கம் திலகவதியாரின் மனத்தை மாற்றியது. `தம்பியார் இவ்வுலகில் உளராக வேண்டும்` என்று எண்ணித் தம் முடிவை மாற்றிக்கொண்டார். அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி மனையின்கண் இருந்து மாதவம் பெருக்கி மருணீக்கியாரைப் பேணி வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டார். மருணீக்கியாரும் துயர் நீங்கி மகிழ்வுற்றார். வயது ஏற ஏற உலகியல் அறிவும் நன்கு வாய்க்கப்பெற்றார். உலகின் நிலை யாமையை எண்ணி அறப்பணி மேற்கொண்டு அறச்சாலை, தண்ணீர்ப் பந்தர், சோலை, குளம் முதலிய அமைத்தார். வருந்தி வந்தோர்க்கு வேண்டியன ஈந்தார்; விருந்துபுரந்தந்தார். புலவரைப் போற்றினார். சமயங்களின் நன்னெறியினைத் தெரிந்துணர்தற்கு எண்ணினார். சிவபெருமானருள் செய்யாமையால் கொல்லாமை என்னும் நல்லறப் போர்வையில் உலவிய சமண சமயத்தைச் சார்ந்திட எண்ணினார்.
தருமசேனராதல் :
அக்காலத்தில் சமணம் மேலோங்கியிருந்தது. சமண முனிவர்கள் பாடலிபுத்திரம் போன்ற பகுதிகளில் தங்கித் தம் மதம் பரப்பிவந்தனர். பள்ளிகளும் பாழிகளும் அமைத்துக் கொண்டு பல்லவமன்னன் மகேந்திரவர்மன் ஆதரவில் சமண சமயத்தினைப் பரவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மருணீக்கியார் பாடலி புத்திரம் வந்தார். சமணரின் பள்ளியைச் சார்ந்தார். சமண முனிவரும் தங்கள் தர்க்கவாதத் திறமையால் தங்கள் சமயமே மெய்ச்சமயம் என்று கூறி அவர் அறிவைமருட்டித் தங்கள் மதத்தில் ஈடுபடுத்தினர். மருள் நீக்கியாரும் அம்மத நூல்களில் வல்லவரானார். அதுகண்ட சமணரும் `தருமசேனர்` என்னும் சிறப்புப் பெயர் அளித்து அவரைப் பாராட்டி னர். தருமசேனராகிய மருணீக்கியாரும் புத்தருள் தேரரை வாதில் வென்று சமண் சமயத் தலைவராய் விளங்கிவந்தார்.
சூலை மடுத்து ஆட்கொள்ளல் :
மனையில் இருந்து தவம்பெருக்கிவந்த திலகவதியார், தம்பி புறச்சமயம் சார்ந்த செய்தி கேட்டு மனம் புழுங்கினார். சுற்றத் தொடர்புவிட்டுத் தூயசிவ நன்னெறி சார்ந்து பெருமான் திருவருள் பெற விரும்பித் திருவதிகைவீரட்டானம் அடைந்து சிவசின்னம் அணிந்து திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், மாலை புனைதல் முதலான திருப்பணிகளை மேற்கொண்டு இறைவன் திருவருளைப் போற்றிவந்தார். தீவினைத் தொடர்பால் தம்பி, புறச்சமயம் சார்ந்ததை எண்ணி வருந்தி அதிகைப் பெருமான் திருமுன் நின்று `என்னை ஆண்டருளினீராகில் அடியேன் பின்வந்தவனைப் புறச்சமயப் படுகுழியினின்றும் எடுத்தாளவேண்டும்` என்று விண்ணப்பம் செய்து வந்தார். பெருமான் திலகவதியார் கனவில் தோன்றி `உன்னுடைய மனக்கவலையை ஒழி. உன்தம்பி முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றவன். அவனை சூலைநோய் தந்து ஆட்கொள் வோம்` என்று அருள்செய்து மறைந்தனன். அவ்வண்ணமே சூலை நோய் தருமசேனர் வயிற்றிடைச் சென்று பற்றியது.
மருணீக்கியாரைப்பற்றிய சூலை வடவைத்தீயும், வச்சிரப் படையும். நஞ்சும் கூடி வருத்தினாற்போலத் துன்பந்தந்தது. தருமசேனர் நடுங்கித் தனியறை ஒன்றில் மயங்கி விழுந்தார். சமண் சமயத்தில் தாம் கற்ற மந்திரங்களால் அந்நோயைத் தடுக்கமுயன்றும் அந்நோய் தணியாது மேலும் மேலும் முடுகிவருத்தியது. தரும சேனரின் துயர்கண்ட சமணர் நெஞ்சழிந்தனர். குண்டிகை நீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தனர். பீலி கொண்டு தடவினர். இயன்றன அனைத்தும் செய்து ஓய்ந்தனர். இவற்றிற்கெல்லாம் நோய் மேலும் அதிகரித்ததே ஒழியக்குறையவில்லை. `ஐயோ இனி என்செய்வது` என்று கலங்கி அமணர் அனைவரும் கைவிட்டகன்றனர்.
சூலை நோயினால் சோர்வுற்ற தருமசேனர்க்குத் தம் தமக்கையாரின் நினைவு வந்தது. தமக்கு அடிசில் அமைப்பவனை அருகில் அழைத்துத் தமக்கையாரிடம் நிலைமையைச் சொல்லி வரும்படி அனுப்பினார். அவனும் அவ்வாறே திருவதிகை வந்து நந்தவனத்திற்கு மலர்கொய்யச் செல்லும் திலகவதியாரைக் கண்டு வணங்கி `நும் முடைய தம்பியாரின் ஏவலினால் இங்கு வந்தேன்` என்றனன். அதுகேட்ட அம்மையார் `தீங்குளவோ` என வினவினார், அவனும் `சூலைநோய் உயிரைமட்டும் போக்காமல் நின்று குடரை முடக்கித் துன்புறுத்தலால் அமணரெலாம் கைவிட்டகன்றனர். இச்செய்தியைத் தங்கட்குச் சொல்லிவிட்டு இருளாகும் நேரத்திலேயே திரும்பி வருமாறு என்னை அனுப்பினார்` என்று கூறி நின்றனன். அது கேட்ட திலகவதியார், `நன்றறியா அமண்பாழி நண்ணேன்` இதை அவனிடம் சொல், என மறுமொழிகூறி அனுப்பினார். அவனும் தருமசேனரிடம் சென்று தமக்கையார் கூறியதை அறிவித்தான்.
தமக்கையார் மறுமொழி கேட்டுத் தருமசேனர் சோர்வுற்றார். இறையருள் கைகூட ``இப்புன்சமயத் தொழியாத என் துன்பம் அழியத் திலகவதியார் திருவடிகளை அடைவேன்`` என்று எண்ணினார். அவ்வளவிலேயே சிறிது நோய் குறைவதாக உணர்ந்தார். குண்டிகை, பீலி, பாய் முதலியவற்றை உதறி எறிந்து வெள்ளிய ஆடை உடுத்து உண்மைப் பணியாளன் ஒருவனைத் துணைக்கொண்டு நள்ளிரவில் சமண் பாழிகளைக் கடந்து திருவதிகையை அடைந்து திலகவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து `நம்குலம் செய்த நற்றவத்தின் பயன் அனையீர்! உய்ந்து கரையேறும் உபாயம் அருள்க` என வேண்டினார்.
திருநாவுக்கரசராதல் :
திலகவதியார் தம்பியை நோக்கி இறைவன் திருவடிகளை எண்ணித் தொழுது `குறிக்கோளில்லாத புறச் சமயப் படுகுழியில் விழுந்து துயருழந்தீர் எழுந்திரீர்` என மொழிய, அவ்வாறே எழுந்து தொழுத மருணீக்கியாரைப் பார்த்துத் திலகவதியார், `சூலைநோய் வருதற்குக்காரணம் இறையருளேயாகும்; தன்னைச் சரணடைந்தாரைக் காக்கும் சிவபெருமானை வணங்கிப் பணிசெய்வீராக` என்று பணித்துத் திருவதிகைத் திருக்கோயிலினுட் புகுதற்குத்தகுதி உடைய ராகும்படித் திருவைந்தெழுந்தோதித் திருவெண்ணீறளித்தனர். திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததென மகிழ்ந்து மருணீக்கியாரும் வாங்கித் தரித்துக்கொண்டு தமக்கு உய்யும் நெறிதரும் தமக்கையார்க்குப் பின் தாமும் புறப்பட்டார்.
மருணீக்கியாரின் அகத்திருள் நீங்குமாறு புறத்திருள் நீங்கிப் பொழுது புலர்ந்தது. திலகவதியார்தொண்டு புரியத் திருவலகு தோண்டி முதலியகொண்டு திருக்கோயிலுட் புகுந்தார். தமக்கையார் பின் சென்ற மருணீக்கியார் திருக்கோயிலினுட் சென்று வலஞ்செய்து நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இறைவன் திருவருளால் தமிழ்மாலை சாத்தும் உணர்வுவர, சூலையும் மாயையும் நீங்கும் பொருட்டுக் ``
கூற்றாயினவாறு`` என்று தொடங்குந் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
திருப்பதிகம் பாடும்பொழுதே சூலைநோய் நீங்கியது. சிவ பெருமான் திருவருட்கடலில் மூழ்கித் திளைத்தார். கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகத் தம்மைப் புறச்சமய இருளிலிருந்து மீட்டருளிய சூலைநோய்க்கு நன்றி தெரிவித்துத் திருவருள் இன்பத்தில் திளைத்து நின்றார். இவ்வேளையில் யாவரும் வியப்ப வானிடை இறைவன் திருவாக்கு எழுந்தது `செந்தமிழ்ச் சொல்மலராலாகிய பாமாலை பாடிய தன்மையால் நின்பெயர் `நாவுக்கரசு` என உலகேழினும் வழங்குக` என்றெழுந்த அருள்மொழி கேட்டு `இப்பெருவாழ்வு அடைதற்குரியதோ` என வியந்து இராவணனுக்கும் அருள்செய்த இறைவனது வள்ளன்மையைப் பாடுவதையே கடமையாகக் கொண்டு அதிகைப்பெருமானை வணங்கிப் போற்றினார்.
இவ்வாறு மருணீக்கியார் இறைவன் திருவருள்பெற்றுத் திருநாவுக்கரசராகப் புறச்சமய இருள்நீக்கப் புறப்பட்டதை எண்ணி உலகம் மகிழ்ந்தது. திருநாவுக்கரசர் சிவ சின்னங்கள் அணிந்து உழவாரப்படை ஏந்தி, முக்கரணங்களாலும் பக்தி செய்ய முற்பட்டார்.
திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் `சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார்` என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். `தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரையும் இழித்துரைக்கின்றார்` என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர். 
இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். `நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும்` என்றனர் சமணர். மன்னவன் அமைச்சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும் திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்து நின்றார்கள். திருநாவுக்கரசர் `சிவபெரு மானுக்கே மீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம் யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம். நமன் வரினும் அஞ்சோம்` என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய `
நாமார்க்கும் குடியல்லோம்` என்று தொடங்கும் மறுமாற்றத் திருத் தாண்டகப் பதிகம் பாடியருளினார்.
நீற்றறை குளிர்ந்தது :
அமைச்சர் அரசதண்டத்திலிருந்து நாங்கள் உய்யுமாறு தாங்கள் எழுந்தருளவேண்டுமென வேண்டினர். திருநாவுக்கரசரும் `ஈண்டு வரும் துயர்கட்கு இறைவனுளன்` என்னும் உறுதியோடு அரசன் முன் அடைந்தார். அரசன் சமணர்களைக் கலந்தாலோசித்து நீற்றறையிலிடுமாறு அவர்கள் கூறியபடியே தண்டனை விதித்தான். அவ்வாறே. ஏவலர் சிலர் அடிகளை நீற்றறையிலிட்டுத் தாளிட்டனர். நாவுக்கரசர், பெருமான் திருவடி நிழலைத் தலைமேற்கொண்டு சிவபெருமானைத் தியானித்து இனிதே இருந்தார். வெய்ய அந்நீற்றறை நிலவொளி, தென்றல், யாழிசை தடாகம் இத்தனையும் கூடிய இள வேனிற் பருவத்து மாலைக்காலமாய் இன்பம் செய்தது. ஏழு நாட்கள் சென்றன. சமணர்கள் நீற்றறையைத் திறந்து பார்த்தனர். சிவானந்த வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணரின் திருவருள் அமுதுண்டு எவ்வகை ஊனமும் இன்றி வீற்றிருந்த திருநாவுக்கரசரைக் கண்டு அதிசயித்தனர், வியந்தனர்.
நஞ்சும் அமுதாயிற்று :
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று `நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை` என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடியோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். `எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம்` என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெருமானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று.
மதயானை பணிந்தது :
நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று `நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம்,` என்று கூறினர். மதயானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் `
சுண்ணவெண் சந்தனச்சாந்தும்` என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
கல் மிதந்தது :
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் `இனி என்செய்வது` என்று வினவினான். `அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி` என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர்.உண்மைத் தொண்டின் உறைப்புடைய திருநாவுக்கரசர் எந்தை பிரானையே ஏத்தி இறைஞ்சுவன் என்று கூறிச் `
சொற்றுணை வேதியன்` என்று தொடங்கித் திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ``ஈன்றாளுமாய்`` என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார். அத்தலத்திலேயே சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத்தினை நகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையை அடைந்தார்.
சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். ``தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய்`` திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திரு வீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து ``வெறிவிரவு கூவிளம்`` என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சிலநாள் திரு அதிகையிலேயே தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார்.
குணபரஈச்சரம் :
சமணர் தூண்டுதலால் தீவினை செய்த பல்லவவேந்தன் தன் பழவினைப் பாசம் நீங்கத் திருவதிகை வந்து திருநாவுக்கரசரை மன்னிப்புவேண்டிப் பணிந்தான். சைவனாக மாறினான். பாடலி புத்திரத்திலிருந்த பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து திருவதிகையில் `குணபரஈச்சரம்` என்ற பெயரில் திருக் கோயில் எடுப்பித்தான். திருநாவுக்கரசர் சிவதல யாத்திரை செய்து திருப்பதிகம் பாடித் திருத்தொண்டு செய்ய விரும்பினார். திருவெண்ணெய் நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலான தலங்களுக்குச் சென்று திருப்பதிகம் பாடித் திருப்பெண்ணாகடம் அடைந்தார்.
இடபக்குறி சூலக்குறி பெற்றது :
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். ``பொன்னார் திருவடிக்கு`` என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார். சிலநாள் தங்கி உழவாரப்பணி செய்து சுடர்க் கொழுந்தீசனைப் பாடிப் பரவினார்.பிறகு, திருநாவுக்கரசர் திருவரத்துறை, திருமுதுகுன்றம் முதலான தலங்களைத் தரிசித்து நிவாநதியின் கரைவழியாகக் கடந்து தில்லையம்பதியை அடைந்தார். தில்லையில் பறவைகளும் சிவநாம முழக்கம் செய்வது கேட்டு இன்புற்று சிவனடியார் பலரும் வரவேற்க சிவமே நிலவும் திருவீதியை அடைந்து திருக்கோயிலுக்குள் புகுந்தார். தில்லையம்பலத்தில் திருநடம் புரியும் பெருமானைப் பணிந்து தெவிட்டாத இன்பம் பெற்றார். கைகளைத் தலைமேல் குவித்து, கண்கள் ஆனந்தக்கண்ணீர் சொரிய, கரணங்கள் உருக வீழ்ந்து எழுந்து என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன் திருக்குறிப்பைப் போற்றி `
கருநட்ட கண்டனை`, `பத்தனாய்ப் பாடமாட்டேன்` `அன்னம்பாலிக்கும்` முதலான திருப்பதிகங்களால் பரவிப் பணிந்தார். தில்லையில் சிலநாள் தங்கித் திருவேட்களம், திருக்கழிப்பாலை முதலான தலங்களைத் தரிசித்து உழவாரப்பணி செய்து இன்புற்றார்.
சம்பந்தர் சந்திப்பு 1 :
தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, `இவர் எம்பெருமான்` என்று சுட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞான சம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திரு வடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப் பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞான சம்பந்தர் கைகளைப்பற்றிக்கொண்டு தாமும் வணங்கி `அப்பரே` என்று அழைக்க, நாவுக்கரசரும் `அடியேன்` என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். அருட்கடல் அன்புக்கடல், சைவநெறி பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டு, சிவபிரானது அருளும் அன்னை அருளும், இவைகளின் இணைப்பை இவ்விருவர் கூட்டுறவு அன்பர் கட்கு நினைவுறுத்தியது. திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து `நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக` என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் ``
பார்கொண்டுமூடி`` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். பல நாட்கள் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரோடு உடனுறைந்து பிரியாவிடை பெற்றார். சம்பந்தரும் திருக்கோலக்கா வரை உடன்சென்று வழியனுப்பினார்.அப்பர், ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு கருப் பறியலூர், புன்கூர், நீடூர், குறுக்கை முதலிய தலங்களையும் செம்பொன் பள்ளி, மயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவாவடுதுறை, திருவிடை மருதூர் முதலிய தலங்களையும் தரிசித்துக் கொண்டு திருச்சத்தி முற்றத்திற்கு எழுந்தருளினார்.
திருவடிதீகை்ஷ :
திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து `
கோவாய்முடுகி` என்று தொடங்கி `கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக` என்று திருவடி தீகை்ஷ செய்யுமாறு வேண்டினர். சிவக்கொழுந்தீசர் `நல்லூருக்கு வருக` என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். `நினைப்பதனை முடிக்கின்றோம்` என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். ``நினைந்துருகும் அடியாரை`` என்று தொடங்கி இறை அருளை வியந்து ``நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான்`` என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.
அப்பூதி அடிகள் :
நல்லூரிலிருந்து நாவுக்கரசர் விடைகொண்டு திருப்பழனம் முதலான தலங்களைத் தரிசித்துத் திங்களூரை வந்தடைந்தார். திங்களூரில் அந்தணரில் மேம்பட்ட அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று சாலை, குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல் முதலான தருமங்ளைத் திருநாவுக்கரசர் பெயரால் அமைத்தும், புதல்வர்களுக்கு அவர் பெயரையே வைத்தும் பக்தி செய் தார். இவற்றை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகள் திருமனையை அடைந்தார். அடியார் ஒருவர் வந்துள்ளார் என்று அப்பூதிஅடிகள் வணங்கி வரவேற்றார். திருநாவுக்கரசர் அப்பூதிஅடிகளைப் பார்த்து `நீர்செய்து வரும் அறப்பணிகளைக்கண்டும் கேட்டும் இங்கு வந்தோம். நீர்செய்த அறப்பணிகளில் நும்பேர் எழுதாது வேறொரு பேர் எழுதிய காரணம் யாது?` என்று கேட்டார். அவ்வளவில் அப்பூதி அடிகள் `திருநாவுக்கரசர் பெயரையா வேறொரு பெயர் என்றீர்! அவர் தம்பெருமையை அறியாதார் யார்? மங்கலமாம் சிவவேடத்துடன் இவ்வாறு மொழிந்தீரே நீர் யார்?` என்று வெகுண்டு கேட்டனர். திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளாரின் அன்பின் திறம் அறிந்து `இறைவன் சூலைதந்து ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான்` எனப் பணிமொழி புகன்று தம்மை அறிமுகம் செய்துகொண்டார். அவ்வுரை கேட்ட அப்பூதி அடிகள் தம் குல தெய்வமே எழுந்தருளினாரென பெருமகிழ்ச்சிகொண்டு மனைவி மக்கள் உற்றார் மற்றோர் எல்லோரையும் அழைத்துவந்து வணங்கச் செய்து தாமும் வணங்கித் தம் இல்லத்தில் திருவமுது செய்தருளும்படி வேண்டினார். அப்பர் பெருமானும் அதற்கு இசைந்தருளினார்.
விடந்தீர்த்தது :
அறுசுவை அடிசில் தயாராயிற்று. தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். மூத்ததிருநாவுக்கரசும் தமக்கு இப்பணி கிடைத்ததே என்னும் பெருமகிழ்வோடு விரைந்துசென்று வாழைக்குருத்து அரியமுற்பட்டார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டியது. ஆனால் மூத்த திருநாவுக்கரசோ அதைப் பொருட்படுத்தாது திருவமுது படைத்தற்கு இடையூறு நேருமோ என்றஞ்சி ஓடிவந்து இலையைத் தாயார் கையில் கொடுத்துக் கீழே விழுந்தார். தந்தைதாயர் இருவரும் `இதனைத் திருநாவுக்கரசர் அறியின் அமுதுண்ண இசையார்` என்று எண்ணித் தன் மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகட்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். திருநாவுக்கரசர் திருவுளத்தில் இறைவனருளால் ஒரு தடுமாற்றம் உண்டாக, மூத்த திருநாவுக்கரசை அழையும் என்றார். அப்பூதியாரோ `இப்போது அவன் இங்கு உதவான்` என்று கூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் `
ஒன்றுகொலாம்` என்ற திருப்பதிகம் பாடியருளினர். உறங்கி எழுவாரைப்போல மூத்த திருநாவுக்கரசும் எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்று பணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப் பாடினார்.
திருப்பழனத்திலிருந்து திருநல்லூர், வலஞ்சுழி, குடமூக்கு முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூர் வந்தார். அடியார் பெருமக்கள் பலரும் எதிர்கொண்டழைத்துப் போற்றினர். திரு வாரூரில் புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும் பணிந்து ``
பாடிளம் பூதத்தினானும்`` என்று தொடங்கிப் பதிகம் பாடினார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் திருவுலாப் போந்தருளியது கண்டு வணங்கி மகிழ்ந்து திருப்புகலூர்க்குப் புறப்பட்டார்.
சம்பந்தர் சந்திப்பு 2 :
திருவாரூரிலிருந்து வழியில் பல சிவதலங்களையும் தரிசித்துக் கொண்டே திருப்புகலூருக்கு வந்தார். அப்பொழுது முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரும் அப்பரை எதிர்கொண்டழைத்தார். திருவாரூரில் நிகழ்ந்த சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவத் திருநாவுக்கரசர், ``
முத்து விதானம்`` என்று தொடங்கித் திருவாதிரைச் சிறப்பை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட சம்பந்தர் `நானும் திருவாரூர் சென்று மீண்டும் உம்மோடு உடனுறைவேன்` என்று கூறித் திருவாரூர் சென்றார். திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசர் பெருமானை வணங்கிப் பாமாலைகள் பாடியும், உழவாரப்பணிசெய்தும் அங்கிருந்துகொண்டே அருகில் உள்ள சிவதலங்களையெல்லாம் சென்று தரிசித்திருந்தார். திருவாரூர் சென்ற திருஞானசம்பந்தரும் திருப்புகலூர் மீண்டார். இருவரும் முருகநாயனார் திருமடத்தில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.
படிக்காசு பெற்றது :
சிலநாட்கள் தங்கியிருந்து திருப்புகலூரில் நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் சிறுத்தொண்டர், நீலநக்கர், முருக நாயனார் ஆகி யோரிடம் விடைபெற்றுப் புறப்பட்டுத் திருக்கடவூர் வந்தனர். குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் உபசரிக்கப் பெற்றுத் தங்கி அமுதகடேசரை வணங்கி இன்புற்று ஆக்கூர் முதலிய தலங்களைப் பணிந்து திருவீழிமிழலைக்கு வந்தனர். விண்ணிழி விமானத்தில் இருக்கும் இறைவனைப் பணிந்து பரவினர். பிறகு இருவேறு திருமடங் களில் திருவீழிமிழலையில் தங்கினார்கள். அந்நாளில் மழையின்மை யாலும் ஆற்றுநீர்ப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாயிற்று. இறைவன் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் கனவில் தோன்றி, `கால வேறுபாட்டால் துன்புற வேண்டாம். அடியவர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் படிக்காசு தருகின்றோம்` என்று கூறி திருக்கோயிலில் மேற்கு கிழக்குப் பீடங்களில் நாள்தோறும் படிக்காசு அளித்தான். அக் காசுகளைப் பெற்று `சிவனடியார்கள் இருபொழுதும் எய்தி உண்க` எனப் பறைசாற்றி அடியார்க்கு அமுதளித்தார்கள். திருநாவுக்கரசர் கைத்தொண்டு புரிவதால் அவர்க்கு வாசியில்லாக் காசும் திருஞான சம்பந்தர்க்கு வாசியுள்ள காசும் கிடைத்தன. சம்பந்தர் இறைவனைப் பாடி வாசி நீங்கப் பெற்றார். சிலகாலம் கழித்து எங்கும் மழை பெய்து வளம் பெருகியது.
மறைக்கதவம் திறப்பித்தது :
திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்ட இருவரும் திருவாஞ்சி யம் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருமறைக்காட்டை அடைந்து வலம் வந்து திருக்கோயிலை அடைந்தார்கள். பண்டை நாளில் வேதங்கள் இறைவனை வழிபட்டு அடைத்திருந்த திருவாயிற் கதவுகள் அந்நாள்முதல் திறக்கப்படாமலே இருந்தது. அவ்வூர் மக்கள் வேறொரு வழியே சென்று வழிபட்டு வந்தனர். இச்செய்தியை அறிந்த திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி `நாம் நேர் முகவாயில் வழியே சென்று மறைக்காட்டுறையும் பெருமானை வழிபட வேண்டும். ஆதலால் இக்கதவு திறக்கும்படிப் பதிகம் பாடியருளும்` என்று கூறினர். ஆளுடைய பிள்ளையாரின் அருள் மொழிப்படியே அப்பரும் `
பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.
வாய்மூரில் இறைவன் ஆடல் காட்டி அருளல்:
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி `நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக` என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலையில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார்.ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர். பின்பு சம்பந்தர் தெற்கு நோக்கி பயணமாக  திருநாவுக்கரசர் வடக்கு நோக்கி பயணமானார்.

சம்பந்தர் சந்திப்பு 3 :
மதுரை விஜயத்தை முடித்துக்கொண்டு 
 திருக்கடவூர் சென்று வழிபட்ட சம்பந்தர் பின்பு  அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்த போது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர் களை வினாவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையினின் றிறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச்சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடுசெல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக்கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்லும் விருப்புடையரானார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து யாத்திரை மேற்கொண்டனர்.
பாண்டிநாட்டுத் தலயாத்திரை : 
திருவாலவாய்க்குச் சென்ற திருநாவுக்கரசர்  செந்தமிழ்ச் சொக்கனையும் அங்கயற்கண்ணியையும் பாடி வணங்கினார். பாண்டியமன்னன் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அடிபணிந்துபோற்ற மதுரையில் சிலநாள் தங்கினார். பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருப்பூவணம் இராமேச்சுரம் நெல்லை கானப்பேர் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருப்புகலூரை அடைந்தார். நாள் தோறும் இறைவனைப் பல பதிகங்களால் பாடியும் உழவாரப்பணி செய்தும் திருப்புகலூரில் தங்கியிருந்தார்.
திருப்புகலூரில் திருவடிப்பேறு :
இறைவன் திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகிற்குக் காட்டத் திருவுளங்கொண்டான். ஆண்டஅரசு உழவாரப்பணி செய்யும் இடங்களில் பொன்னும் நவமணிகளும் கிடக்கும்படிச் செய்தான். திருநாவுக்கரசர் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்பு உடையாராதலின் அவற்றை ஏனைய கற்களோடு வாரித் தடாகத்துள் எறிந்தார். அப்பரின் தூய துறவற நிலையை மேலும் உலகிற்கு விளக்க எண்ணிய இறைவன் அரம்பையர் பலரை அங்குவரச் செய்தனன். அரம்பையர் ஆடல் பாடல்களால் பல்லாற்றானும் திருநாவுக்கரசரை மயக்க முற்பட்டனர். ஒன்றினாலும் மனம் திரியாத அப்பர் அவர்களைநோக்கி `உம்மால் இங்கு எனக்கு ஆகவேண்டியகுறை யாதுளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன்` என்னும் கருத்தமைந்த `
பொய்மாயப் பெருங்கடலில்` என்று தொடங்கும் திருத் தாண்டகத்திருப்பதிகத்தால் தெரிவித்தருளினர். அரம்பையரும் சோர்ந்து திருநாவுக்கரசரை வணங்கி அகன்றனர்.இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக்கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். முன்னுணர்ச்சியால் `புகலூர்ப்பெருமான் சேவடிக்கீழ்த்தம்மைப் புகலாகக்கொள்வான்` என்ற கருத்துப்பட திருவிருத்தங்கள் பலவும் பாடினார்.எல்லாவுலகமும் போற்ற ``எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ`` என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட திருநாவுக்கரசர்  ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார்.

காலக் குறிப்பு :
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார்களில் சிறுத் தொண்டரும் சமகாலத்தவர் என்பது வரலாற்றால் இனிது விளங்கும் உண்மை. திருநாவுக்கரசர் முதிர்ந்தவயதிலேயே திருஞான சம்பந்தரைச் சந்தித்திருக்கவேண்டும் என்பதுதெளிவு. சம்பந்தர் நாவுக்கரசரை அப்பரே என்று அழைத்த வரலாற்றுக் குறிப்பும் இதனை வலியுறுத்தும். இவர்கள் காலங்களில் குறிக்கப்படும் மன்னர்கள் பல்லவர்களில் மகேந்திரவர்மனும், பாண்டியர்களில் நெடுமாறனும் சாளுக்கியர்களில் புலிகேசியும் ஆவர்.மகேந்திரவர்மன் கி.பி.600 முதல் 630 வரை காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தவன். சமணர் சொற்கேட்டு திருநாவுக்கரசரைத் துன்புறுத்தியவனும் பின் திருநாவுக்கரசர் பெருமையை உணர்ந்து சிவபிரான் திருவருட்பேற்றுக்குரியவனாய்க் குணபரன் என்ற தன் பெயரால் குணபரஈச்சரம் என்ற திருக் கோயிலைத் திருவதிகையில் கட்டியவனும் இம் மன்னனேயாவன். இவன் ஆட்சிக்காலம் மேலே குறித்துள்ளதாகும். சைவனாக மாறிய பிறகு சமணம் புத்தம் முதலிய மதங்களை இழித்துக் கூறியுள்ளான். தான் நிறுவிய திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலில் தான் சமணனாக இருந்து சைவனான நிகழ்ச்சியைக் குறித்துள்ளான். பாண்டியர்களில் திருஞானசம்பந்தரால் சைவனாக்கப்பெற்ற மன்னன் நெடுஞ்செழியன் கி.பி.640 முதல் 670 வரை ஆட்சி புரிந்தவன்.நரசிங்கவர்மனது படைத்தலைவராயிருந்து வடபுலத்திற் சென்று செய்த வாதாபிப்போரில் வெற்றி கொண்ட பரஞ்சோதியாரே சிறுத்தொண்டராவர். வாதாபிப்போர் கி.பி.642 இல் நடந்திருக்க வேண்டும். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள இக் குறிப்புக்களைக் கொண்டு கி.பி. 574 க்கும் 655 க்கும் இடையே அப்பர் சுவாமிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கோவைகிழார் ஆராய்ந்து கூறி யுள்ளார். பழைய வெண்பா ஒன்று அப்பருக்கு வயது எண்பத்தொன்று என்று கூறுகிறது. 

திருச்ற்றம்பலம்.

1 comment:

  1. நால்வரை பற்றி வள்ளலார் என்ன?
    திருநாவுக்கரசர் தாச மார்க்கத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக தொண்டு செய்து வாழ்ந்தார்! திருஞானசம்பந்தர் சற்புத்திர மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக சிவையால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.பிள்ளை கைநோகுமோ என பொற்றாளம் ஒலிக்க அருளினாள்! சுந்தர மூர்த்திகள் சக மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! சிவனே இவனுக்காக தூது சென்றாராம்! சிறந்த தோழர் சிவனுக்கு! மாணிக்கவாசகரோ சன்மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! நானே நீ நீயே நான் என உணர்ந்தார்! உரைத்தார்! உறைந்தார் ஒளியிலே! இந்நால்வரும் வடலூரரை கவர்ந்த ஞானவான்கள்! திருவருட் பிரகாச வள்ளலார் எப்போதும் திருவாசக பெருமை பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் எனச் சொல்வர்! .... read complete article at
    http://gnanasarguru.blogspot.in/2012/11/blog-post_14.html

    ReplyDelete