திருச்சிற்றம்பலம்
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி!
வீரட்டத் தலங்கள்
(1) திருக்கோவலூர்
(2) திருப்பறியலூர்
(3) திருக்கண்டியூர்
(4) திருவிற்குடி
(5) திருவதிகை
(6) திருவழுவூர்
(7) திருக்கடவூர்
(8) திருக்கொறுக்கை
கடவுள் வாழ்த்து :
ஒன்று அவன்தானே: இரண்டு அவன் இன்னருள்:
நின்றனன் மூன்றினுள்;நான்கு உணர்ந்தான்;ஐந்து
வென்றனன்;ஆறு விரிந்தனன்;ஏழு உம்பர்ச்
சென்றனன்;தான் இருந்தான்; உணர்ந்து எட்டே.
சிவன் ஒரு பொருளாக உள்ளான். சிவபெருமானே இனிய சக்தியுடன் இரண்டாய் உள்ளான். அவனே நான்முகன் - திருமால் - உருத்திரன் என்ற மூன்று நிலைகளில் நிற்கிறான். அறம்-பொருள்-இன்பம்-வீடு என்ற நான்கையும் அவன் உணர்ந்தவன். மெய்-வாய்-கண்-மூக்கு-செவி என்ற ஐந்தையும் வென்றவன் சிவபெருமான். மூலாதாரம்-சுவாதிட்டானம் -மணிப்பூரகம்-அநாகதம்-விசுத்தி-ஆஞ்சை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவன். அதற்கு மேல் ஏழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன் எம்பெருமான் சிவனே ஆவார்.
எம்பெருமான் சிவபெருமான் ஒருவனே சக்தியுடன் இரண்டாகவும், மூன்று மூர்த்திகளாயும், படைப்புத் தொழிலை நான்கு வேதங்களால், உண்மையை விளங்கச் செய்பவனாயும், ஐந்து பொறிகளையும், அளிப்பவனாயும், ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும், சகசிரதளத்தில் பொருந்தி அட்ட மூர்த்தமாயும் விளங்குகிறான்.
திருமந்திரம் :
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலர் ;
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்;
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் /
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. [முதல் தந்திரம்-18-1]
அனுபவம் அற்றவர் அன்பாகிய சக்தியும் , அறிவாகிய சிவமும் இரண்டு என்பர். அன்பின் முதிர்ச்சியால் சிவமாகிய அறிவு விளங்கும் என்பதை உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய எவரும் உணர்வதில்லை. அன்புதான் சிவத்தை விளங்கச் செய்வது என்பதை எல்லோரும் அறிந்தபின்பு அன்பே வடிவமாய்ச் சிவமாம் தன்மையை அடைந்திருந்தார்.
அன்புதான் சிவத்தை விளங்கச் செய்யும்.
பதிவலியில் வீரட்டம் எட்டு
பதி = சிவபெருமான் ; வீரட்டம் = வீரத்தால் வென்ற இடம் ; வீரம் + அட்டம் = வீரட்டம் ; இறைவன் மறக்கருணை காட்டிய இடங்கள் எட்டு. அவையாவன : திருக்கோவலூர் - திருப்பறியலூர் - திருக்கண்டியூர் - திருவிற்குடி - திருவதிகை - திருவழுவூர் - திருக்கடவூர் - திருக்கொறுக்கை.
முதல் வீரட்டத் தலம் : திருக்கோவலூர்.
திருச்சிற்றம்பலம்
திருமந்திரம் :
கருத்துஉறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக்,
குருத்துஉயர் சூலம் கைக்கொன்டு கொன்றானே. [2-2-1]
இயமனைப் போன்ற கொடிய எண்ணம் உடைய “அந்தகன்” என்ற பெயர் கொண்ட அசுரன் இறைவனிடம் பெற்ற வரத்தால் உலகத்தின் உயிர்களை எல்லாம் வருத்தி வந்தான். நல்ல பண்பு என்று கூறப்படும் வானவர் அக் கொடுமை தாங்காமல் இறைவனிடம் போய்க் குறை இரந்தனர். சிவபெருமானும் வெண்மையும் கூர்மையும் உடைய ஞானமான சூலம் கைக்கொண்டு கொல்லும் தொழிலைச் செய்து அருளினான்.
அந்தகன் = அந்தகாசுரன்.
குருத்து = கூர்மை.
‘கருத்துறை அந்தகன்’ = அந்தகன் புறத்தே இல்லை.அகத்தே உள்ளத்தில் இருந்து
அறியாமையைச் செய்கிறான்.
இறைவன் “ அறியாமையான அந்தகாசுரனை “ “ஞானம்” என்ற “சூலம்” கொண்டு அழித்தான் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இது நிகழ்ந்த இடம் “திருக்கோவலூர்”
இறைவர் பெயர் : வீரட்டேஸ்வரர்
இறைவியர் பெயர் : சிவானந்த வல்லி
பெரிய நாயகி
பிருகந்நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : தென்பெண்ணையாறு
(தட்சிண பிநாகினி)
வழிபட்டோர் : மெய்ப்பொருள் நாயனார்.
நரசிங்கமுனையரையர். (சுந்தரை வளர்த்தவர்)
தேவாரப் பாடல்கள் :
திருஞான சம்பந்தர் : படைகொள் கூற்றம் .. 2 / 100
திருநாவுக்கரசர் : செத்தையேன் சிதம்பநாயேன் … 4 / 69
தலவரலாறு :
● திருக்கோவலூர் என்பது ஊர் பெயர்.
● தலத்தின் பெயர் ‘வீரட்டம்’
● திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என வழங்குகிறது.
● இந்த இடம் “அந்தகாசுரனை” க் கொன்ற இடம்.
● அட்டவீரட்ட தலங்களுள் ஒன்று.
● மெய்ப்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திரு உருவச்சிலை கோயில் உள் பிரகாரத்தில் உள்ளது.
● சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையினை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்த தலம். [ நரசிங்கமுனையரையரை நாயனார் வேறு ]
● திருமுறை கண்ட “இராஜ ராஜ சோழன்” அவதரித்த ஊர். இவரது தமக்கை “குந்தவை” சுவாமிக்கு பொன், பூ மற்றும் பிற பொருள்கள் வழங்கிய ஊர்.
● கலிலர் உயிர் நீத்த இடம்.
● ஔவையார் இத்தலத்து விநாயகரை பூஜித்து, அவரது துதிக்கையால் கயிலை அடைந்த பதி.
● 64 பைரவர்கள் தோன்றிய வாஸ்து பூஜை மூலவர்கள் தலம். இங்கு வழிபட்டு பூர்வ ஜென்ம சாப விமோசனம் பெறலாம்.
● அஷ்டபுஜ விஷ்ணு துர்கை தரிசனம்.
● சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன.
● தேவாரப் பாடல் பெற்ற நடு நாட்டு [ 8 ] எட்டாவது தலம்.
அமைவிடம் :
தமிழ் நாட்டில் திருவண்ணாமலையிலிருந்து 35 கிலோ மீட்டர் .
தென்பெண்ணையாற்று பாலம் கடந்து கடலூர் பண்ருட்டி பாதி திரும்பி கீழையூர் (கீழூரில்) கோயில்.
திருவண்ணாமலை , பண்ண்ருட்டி, விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம் : மு.ப : 6.30 - 12.00 & பி.ப : 5.00 - 8.30
No comments:
Post a Comment