http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, April 2, 2011

அன்னை அபிராமி அந்தாதி - பாகம்-4




அபிராமி அந்தாதி விளக்கவுரை 22

பாடல் எழுபத்தொன்பது

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

விளக்கம் 
அபிராமி அன்னையின் விழிகளிலே அருள் உண்டு. வேதங்கள் சொல்லுகின்ற வழிமுறையில் அவளை வழிபடும் நெஞ்சம் எம்மிடத்து உண்டு. ஆகவே அம்மையை வழிபடும் முறை தவிர்த்து, வீணான பழியையும் பாவங்களையுமே செய்து பாழும் நரகத்தில் அழுந்தும் கயவர்களோடு இனி நமக்கு என்ன நட்பு? அது தேவையே இல்லை...அற்புதம் நிகழ்த்திய பாடல் இது... ஒரு தை அமாவாசை இரவில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தேறியது.. அபிராமிப் பட்டரைப் பற்றி மன்னனிடம் இகழ்ந்துரைத்து அவனை ஆலயத்துள்  அழைத்து வந்தனர் கயவர்கள். அவனுக்கும் அபிராமிப் பட்டரின் பக்தி மனது புரியவில்லை. பட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது மன்னன் அன்றைய திதியைப் பற்றி வினவினான். அறியாத பட்டரோ பௌர்ணமி என்றுரைத்தார்.


கோபங்கொண்டெழுந்த மன்னனோ நிலவைக் காட்டு என்று கட்டளையிட்டான். அன்னையின் அன்பால் இன்றிரவு நிலவைக் காட்டுவோம் எனப்பதிலுரைத்த அபிராமிப் பட்டர், நெருப்பின் மீது ஒரு உறியில் நூறு கயிறுகளைக் கட்டி அதன் மீது நின்று பாடத்துவங்குகிறார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கயிற்றினை அறுத்து, நூறாவது பாடலிலும் அன்னை வெளிப்படவில்லையெனில், நெருப்பில் வீழ்ந்து
மாள்வது என்பது அவருடைய எண்ணம்.. ஆனால் மனத்திலோ அபிராமி உலகைப் படைத்தவள். சூரிய சந்திரரைப் படைத்தவள். அவள் நினைத்தால் இதெல்லாம் சிறு காரியமல்லவா என்ற அசைக்க இயலாத நம்பிக்கை.. பாடிக்கொண்டே இருக்கின்றார்.ஒவ்வொரு கயிறும் அறுபட்டுக் கொண்டேயிருக்கின்றது.. எழுபத்தொன்பதாவது பாடலான இப்பாடலைத் துவங்கும் போது அன்னையானவள் தோன்றுகிறாள். இப்பாடலை அவர் நிறைவு செய்யும் வேளையில் தனது காதணியை கழற்றி வானில் வீச அது லவென ஒளிர்கின்றது.. கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது.. கயவர்கள் முகவாட்டம் அடைகின்றனர். மன்னனோ ஓடிவந்து பட்டரின் கால்களில் விழுந்து மன்னிக்க வேண்டுகின்றான். நெருப்பின் நடுவிருந்து கீழிறங்குகின்றார் பட்டர். தம் மீது விழுந்த பழியைத் தன் அளவற்ற பக்தியின் மூலம் துடைத்தார். அன்னையும்
தன் பாலகனைக் காத்தருளினாள். அவ்வதிசயம் இப்பாடலைப் பாடும்போதுதான் நிகழ்ந்தது..


"விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு" அபிராமி அன்னையின் திருவிழிகளிலே அருள் உண்டு.. அன்னையின் அருள் அளப்பரியது.. "வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு " வேதங்கள் சொல்லுகின்ற வழிகளிலே அவளை வழிபடும் நெஞ்சம் எமக்கு உண்டு... "அவ்வழி கிடக்க" அன்னையை வழிபட்டு அவள் அருளைப் பெற்று உய்வதற்கு வேதங்கள் சொல்லும் நல்வழி இருக்க... "வெம்பாவங்களே செய்து " கொடிய பாவங்களை மட்டுமே செய்து "பழிக்கே சுழன்று" பழியில் அகப்பட்டு "பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்" பாழும் நரகக் குழியில் விழுந்து அழுந்தும் "கயவர் தம்மோடு" கயவர்களோடு... கொடியவர்களோடு..."என்ன கூட்டு இனியே" இனிமேலும் என்ன நட்பு வேண்டியிருக்கின்றது? அபிராமியின் வழியிருக்கையில் மற்ற வழிகள் ஏன் தேவை? அவ்வழியில் சென்று அழுந்தும் கயவர்களின் நட்பும் நமக்கெதற்கு? அன்னையின் வழியே உத்தமம். அவள் திருவடிகளே சரணம்...

பாடல் எண்பது

கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே

விளக்கம் :
பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகான என் அபிராமி அன்னையே... நீயே என்னை உன் அடியார்க் கூட்டத்தில் ஒருவனாக இணைத்துக் கொண்டாய். எனது கொடிய வினைகளையெல்லாம் ஓட்டிவிட்டாய். என்னை நோக்கி ஓடிவந்தாய். உன் திருவுருவை உள்ளபடியே எனக்குக் காட்டினாய். அத்திருவுருவைக் கண்ட என் கண்களையும், மனத்தையும் இன்புறச் செய்தாய். அக்களிப்பிலே என்னை நடமாட வைத்தாய்..
இதோ அன்னை வெளிப்பட்டாள்... தன் திருவுருவினைத் தன் அன்பனான அபிராமிப் பட்டருக்குக் காட்டினாள். தன் காதணியைக் கழற்றி விண்ணில் எறிந்தாள். தை அமாவாசை அன்று அன்னையின் காதணி வானில் நிலவென நின்று ஒளிர்ந்தது. இதோ இப்பாடல்களைப் பாடும் வேளையில் நம் மனத்திலும் இத்திருக்காட்சி தென்படுவதை நாமும் உணர்கின்றோமல்லவா? தன் அடியவர்க்கு வரும் துயரை
எல்லாம் துடைத்திட அன்னையானவள் தானே நேரில் வருகின்றாள்.. சந்திரனைப் படைத்ததும் அன்னைதானே... அவள் ஆணையை ஏற்று சந்திரன் அன்று வெளிப்பட்டிருக்க மாட்டானா? 

இயற்கையைப் படைத்தவள் அவ்வியற்கைக்கென்றே சில நியதிகளையும் நிர்ணயித்தாள்.. அந்நியமங்களை மீறுவதற்கு அவளுக்கு அதிகாரம் உண்டு.. ஆயினும் அவள் அதைச் செய்யவில்லை. தான் நியமித்த நியமங்களை அவள் மீறவில்லை.. ஆயினும் நிலவினை விட ஒளி படைத்த தன் காதணியை எடுத்து விண்ணில் எறிந்தாள்..சந்திர சூரியரைப் படைத்த அன்னையின் காதணியும் தன் கடமையைச் செவ்வனே செய்தது. அன்றைய நாள் உலகுக்கு நிலவென நின்ற பெருமையையும் பெற்றது.. உலகத்தோர் வியந்தனர். கள்வர்கள் வெட்கித் தலைநாணினர். மன்னனும் அதிசயித்தான். விரைந்து ஓடி நெருப்பின் நடுவே நின்றிருந்த பட்டரைக்  கீழே வரச்செய்தான். அன்னையின் திருவருளை உணர்ந்து கொண்டான். கண்கள் மூடி ஒருமுறை இப்பாடலை ஓதிப் பாருங்கள்.. அபிராமிப் பட்டரின் உள்ளத்து நெகிழ்ச்சி அவர் பாடலில் தென்படுவதை உணர்வீர்கள்..அத்தனை மகிழ்ச்சி... அபிராமிப் பட்டர் நெருப்பின் நடுவே தான் வீழுவதைக் காத்ததற்காய் மகிழவில்லை.. அன்னையின் திருவருளை அகிலம் அறிந்து கொண்டதற்காக மகிழ்ந்தார். தனக்கு அன்னையின் திருக்காட்சி கிட்டியதற்காக
மகிழ்ந்தார்... அதுதான் ஒரு பக்தனின் உண்மையான மகிழ்ச்சி..."ஆடகத் தாமரை ஆரணங்கே" பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகியே...

அபிராமி அன்னையே... "என்னைத் தன் அடியாரில்" "கூட்டியவா" என்னை உனது அடியார்களின் கூட்டத்தில் சேர்த்தவளே... "கொடிய வினை ஓட்டியவா" எனது கொடிய வினைகளை ஓட்டியவளே... "என் கண் ஓடியவா" என்னை நோக்கி ஓடி வந்தவளே.... "தன்னை உள்ள
வண்ணம் காட்டியவா" உனது திருவுருவை உள்ளபடியே காட்டியவளே... உன் திருவருளால் உன் காதணியை நிலவெனக் காட்டியவளே... "கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா" உன்னைக் கண்டதும் என் கண்களும் மனமும் இன்புறும் வண்ணம் செய்தவளே... "நடம்" "ஆட்டியவா" அவ்வின்பத்தில் என்னை நடனமாடச் செய்தவளே.... உன் கருணையே கருணை... என் விழிகளில் உன்னைக் காட்டினாய்.
என் மனத்திற்கு இன்பத்தைக் கூட்டினாய். உலகிற்கு நிலவினைக் காட்டினாய்..நீயே தெய்வம் என்பதை அனைவருக்கும் உணர்த்தினாய்.. அன்னையே... உன் கருணைப் பேராற்றில் என்னைக் கரைத்து விட்டவளே... அபிராமியே... உன்னை எப்படித்தான் போற்றுவதோ...? 

பாடல் எண்பத்து ஒன்று

அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என் கண் நீ வைத்த பேரளியே

விளக்கம் :
  அழகிய அபிராமி அன்னையே... அனைத்துத் தெய்வங்களும் உனது பரிவாரங்களே... ஆகவே அவர்கள் யாரையும் நான் வணங்க மாட்டேன். அவர்களைப் போற்ற மாட்டேன். அறிவில்லாத சிறியேன் என் மீது நீ வைத்த பேரன்பினால், நெஞ்சத்தில் வஞ்சகம் கொண்ட கொடியவரோடு நட்பு கொள்ள மாட்டேன். தங்களுடையதெல்லாம் உன்னுடையதென்றிருப்பவர்கள் சிலரே. அத்தகைய ஞானிகளோடு நான் சண்டையிட மாட்டேன். அன்னை காட்சியளித்த பின்னர் அபிராமிப் பட்டரின் பாடல்களில் உற்சாகம் கரைபுரண்டோடுகின்றது. அதுவரை அச்சத்திலும், அரிய நம்பிக்கையிலும் பாடிய பட்டர், இப்போது அளவற்ற ஆனந்தக் கூத்தாடுகின்றார். அதனால்தான் உன்னைத் தவிர வேறு யாரையும், எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டேன். ஏனெனில் எல்லாத் தெய்வங்களும் உனது பரிவாரங்கள்... எனவே அவர்களைப் போற்ற மாட்டேன். வணங்கமாட்டேன். உனது பேரன்பினால் வஞ்சகரோடு நட்பு கொள்ள மாட்டேன். உன்னையே தஞ்சமென்றடைந்த ஞானிகளிடம் பிணங்க மாட்டேன் எனப்பாடுகின்றார்.

உலகில் நம் வாழ்க்கை நல்வழியில் சென்று கொண்டிருந்தாலும், சிற்சில சமயங்களில் வஞ்சகரின் நட்பு - கூடா நட்பு நம்மை வந்தடைகின்றது. நம்மால் அவற்றை உதறித் தள்ள இயலாது. வல்லமையும் நல்நெஞ்சும் படைத்த கர்ணனே, துரியோதனின் நட்பை உதறித்தள்ள இயலாது அழிந்தான். ஆயினும் அன்னையின் பெருங்கருணையானது நம்மை அப்படிப் பட்ட நட்புக்களிடமிருந்து
காத்தருள்கின்றது. தங்களின் மெய், பொருள், ஆவி அனைத்தும் உனதே என்று உன் மேல் பற்றுவைத்து வாழும் ஞானியரின் நட்பை அன்னை நமக்குத் தந்தருள்கின்றாள். அந்நட்பும் அன்னையின் அன்பால் நம்மை விட்டகலுவதில்லை..."அணங்கே " அழகிய அபிராமி அன்னையே.... "அணங்குகள் உன் பரிவாரங்கள் " அனைத்துத் தெய்வங்களும் உந்தன் பரிவாரங்கள்.. "ஆகையினால் வணங்கேன் ஒருவரை " ஆகையால் அவர்களுள் யாரொருவரையும் நான் வணங்க மாட்டேன்.. "வாழ்த்துகிலேன் " அவர்கள் யாரையும் வாழ்த்த மாட்டேன். போற்றமாட்டேன்.
"நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் " நெஞ்சத்தில் வஞ்சம் கொண்ட வஞ்சகரோடு நட்பு கொள்ள மாட்டேன்.

"எனது உனது என்று இருப்பார் சிலர் " சிலர் மட்டுமே தங்களது மெய், பொருள், ஆவி அனைத்தும் உன்னுடையது என்று இருப்பார்கள்.
அவர்கள் எல்லோரும் ஞானிகள்.. "யாவரொடும் பிணங்கேன் " அவர்கள் யாரோடும் சண்டையிட மாட்டேன். அவர்களை விட்டு விலக மாட்டேன். "அறிவு ஒன்றும் இலேன் " அறிவே இல்லாதவன். அடி முட்டாள் (?) (பாருங்கள்.. அபிராமிப் பட்டர் அறிவில்லாதவராம்) "என் கண் நீ வைத்த பேரளியே" என் மீது நீ வைத்த பேரன்பினை என்னவென்றுரைப்பேன்..அன்னையே அறிவில்லாத எளியேன் என் மீது நீ வைத்த பேரன்பால், வஞ்சகர் தொடர்பில்லாது ஞானியர் தொடர்பு கிட்டியது. அவர் நட்பை நான் என்றும் விலக்கேன். உன்னைத் தவிர அனைத்துத் தெய்வங்களும் உன் பரிவாரங்களே... எனவே அவர்களை நான் வணங்கேன். வாழ்த்தேன்.. உன்னை மட்டுமே வணங்குவேன். அழகிய
அபிராமியே... உன்னை மட்டுமே வாழ்த்துவேன்.
பாடல் எண்பத்திரண்டு

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே
விளக்கம் :
வண்டுகள் மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே...அபிராமி அன்னையே... இவ்வுலகமெல்லாம் ஒளியாக நின்ற உந்தன் ஒளிரும் திருமேனியை எண்ணும்போதெல்லாம், எந்தன் ஆழ்மனது மகிழ்ச்சியுற்று விம்மி, மகிழ்வெள்ளத்தில் கரைபுரண்டு ஆகாயத்தோடு ஒன்றி விடுகின்றது. உனது சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன்...? அன்னையை மறப்பதென்பது பட்டரால் இயலும் காரியமா? அவளை எண்ணும்போதெல்லாம் அவர் ஆழ்மனங்களெல்லாம்... மகிழ்கின்றனவாம். மகிழ்ச்சி வெள்ளத்தில் விம்மி கரைபுரண்டு, வெளியாகி - ஆகாயமாகி விடுகின்றனவாம். அதாவது வெளியெல்லாம் பரவி நிற்கும் அன்னையோடு ஒன்றி விடும்போது அன்னையை... அவள்
சாமர்த்தியத்தை எப்படித்தான் மறக்க இயலும்? இப்பாடலைப் பாடும்போதே நமது அந்தக்கரணங்கள் அன்னையின்பால் செல்வதை உணரலாம்... ஆயின் அதை அனுபவித்துப் பாடிய அபிராமிப் பட்டர் எப்படிக் களித்திருப்பார்!!


"அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே" வண்டுகள் மொய்த்திருக்கின்ற தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே... அபிராமி அன்னையே... "அகில அண்டமும் " அகில உலகும் "ஒளியாக நின்ற " ஒளியாய் நின்ற "நின்" "ஒளிர் திருமேனியை" உனது ஒளிர்கின்ற திருமேனியை "உள்ளுந்தொறும்" நினைக்கும்போதெல்லாம் "அந்தக் கரணங்கள்" எனது ஆழ்மனங்களெல்லாம்..."களியாகி" மகிழ்ச்சியுற்று "விம்மி "
விம்மி "கரைபுரண்டு" கரைபுரண்டு "வெளியாய் விடில்" ஆகாயத்தோடு ஒன்றிவிடும்போது... ஆகாயமாய் நிற்கும் உந்தன் பேரொளியோடு ஒன்றி விடும்போது ... "எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே" என் மனத்தை இப்படி மகிழ்விக்கும் உனது சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன் அபிராமியே...தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி..நாம் தரும் உரைகளில் பிழைகளோ திருத்தங்களோ இருப்பின் பெரியோர்கள் மன்னித்து, அவற்றைத் திருத்தி இவ்விடம் பதிவு செய்யும்படி அன்போடு
வேண்டுகின்றோம். நன்றி..

அபிராமி அந்தாதி விளக்கவுரை 23

பாடல் எண்பத்து மூன்று

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே
விளக்கம் :
தேன் சொரியும் புது மலர்களைக் கொண்டு மணம் வீசும் உன் திருவடித்தாமரைகளை இரவும் பகலும் வணங்கும் வலிமையுடையோர், அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக்கூடிய இந்திர பதவியையும், ஐராவதம் எனும் வெண்ணிற யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை மிகு வச்சிராயுதத்தையும், கற்பக வனத்தையும் உடையவர்களாக இருப்பார்கள்..அன்னையின் திருவடியை இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையோர் எனக்குறிப்பிடுவது அது அத்தனை எளிய காரியமல்ல என்பதைக் காட்டுகின்றது. பாச பந்தங்கள் அறுத்து அன்னையை மட்டுமே எந்நேரமும் தொழுது கொண்டிருக்கும் வல்லமை அவள் அடியார்களுக்கு அவள் அருளால் மட்டுமே கிட்டும். அது ஒரு தெய்வீக அழைப்பு.. அவ்வழைப்பை அன்னை அளித்தால் மானுடன் ஒருவன் அவள் திருவடிகளை எந்நேரமும் தொழும் பக்தன் ஆகின்றான். அவன் எந்தவொரு சுகத்திற்காகவும் யாரிடத்தும் செல்லவோ வேண்டுவதோ வேண்டியதில்லை.. அவனே அனைத்தும் உடையவனாகின்றான்.

இந்திரபதவி என்பது கிடைத்தற்கரிய வரம். இந்திர பதவியில் இருக்கும் இந்திரன் அமரர்கள் அனைவருக்கும் தலைவனாகின்றான். அது ஒரு பதவி மட்டுமே.. அப்பதவியில் அவனது பதவிக்காலம் முடிந்தவுடன் இன்னொருவன் இந்திரன் ஆகின்றான். இப்படி அது தொடர்ந்து
கொண்டே இருக்கும். அனைத்து அமரர்களும் இந்திரனது கட்டுப்பாட்டில் வருவதால், இயற்கையின் செயல்கள் அவனது கட்டுப்பாட்டில் வருகின்றன. அத்தகைய பதவி அன்னையை அல்லும் பகலும் இறைஞ்சுவோரிடத்துள்ளது எனப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர். இதன் மறைபொருள் என்னவெனில், அன்னையின் அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் கிட்டும். இயற்கையால் ஏற்படும் துன்பங்கள் அவர்தம்மை நெருங்காது என்பதாகும்.


"விரவும் புது மலர் இட்டு " தேன் சொரியும் புத்தம் புது மலர்களை இட்டு "நின் பாத விரைக்கமலம்" மணம் வீசும் உனது திருவடித்தாமரைகளை "இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் " இரவிலும் பகலிலும் வணங்கிடும் வலிமை படைத்தோர் "இமையோர் எவரும் பரவும் பதமும் " அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக் கூடிய இந்திர பதவியையும், "அயிராவதமும் " அவ்விந்திரனுக்குச் சொந்தமான
ஐராவதம் எனும் வெள்ளை யானையையும், "பகீரதியும்" ஆகாய கங்கையையும், "உரவும் குலிசமும் " வலிமை மிக்க வஜ்ராயுதத்தையும், (வஜ்ராயுதம் என்பதற்கு அழகிய தமிழாக்கம் குலிசம்), "கற்பகக் காவும் " நினைத்தன நினைத்த பொழுதில் கிட்டும் கற்பக வனத்தையும் "உடையவரே" கொண்டவர்களாக இருப்பார்கள்... அவர்கள் என்றும் யாரிடத்தும் சென்று எதையும் இரங்கிப் பெறவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அனைத்தும் அவர்தம் உடைமையாக இருக்கின்றது... இதுவே அன்னையின் அன்பர்களுக்குக் கிட்டும் பெருவரம்.
ஆயினும் அவர்கள் இதையெல்லாம் மேலாக எண்ணுபவர்களா? ஒருபோதும் இல்லை...அவர்தமக்கு அன்னையின் திருவடிகளை விடுத்து வேறு எந்தச் செல்வமும் பெரிதல்ல...


பாடல் எண்பத்து நான்கு

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

விளக்கம் :
உலகத்தோரே.... அனைத்தையும் உடையவளும், அசையும் செம்மையான பட்டாடை அணிந்தவளும், ஒளிரும் நிலவினையணிந்த செம்மையான சடையைக் கொண்டவளும், வஞ்சகர்களின் நெஞ்சத்தில் தங்காதவளும், வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளும், எங்கள் சிவபெருமானின் இடப்பாகத்தமர்ந்தவளும், இவ்வுலகில் இனிமேல் என்னைப் பிறக்காதிருக்கச் செய்தவளுமாகிய அன்னை அபிராமியை நீங்களும் மீண்டும் பிறவாதிருக்கும்படி பார்த்திடுங்கள். வணங்கிடுங்கள். அழகிய வர்ணனைப் பாடல் இது... பட்டரின் மொழி அழகிய விளையாட்டை ஆடியிருக்கின்றது.. தான் மீண்டும் பிறப்பதில்லை என்பது அபிராமிப்பட்டரின் அழுத்தமான நம்பிக்கை. உலகின் மக்களுக்கு அறிவுரை தருகின்றார். மீண்டும் பிறவாதிருக்கும் நிலை வேண்டுமெனில் எங்கள் அபிராமியைக் காணுங்கள். அவள்
திருவுருவைத் தியானியுங்கள். அவளை வணங்குங்கள். அவளே உங்களுக்குப் பிறவாவரம் அருள்வாள்.


"உடையாளை " அனைத்தையும் உடையவளை..."ஒல்கு செம்பட்டுடையாளை" அசையும் செம்மையான பட்டுடை அணிந்தவளை... "ஒளிர்மதி செஞ்சடையாளை" ஒளிரும் நிலவினைஅணிந்த செம்மையான சடையை உடையவளை.. "வஞ்சகர் நெஞ்சு அடையாளை" வஞ்சகரதுநெஞ்சத்தில் தங்காதவளை... "தயங்கு நுண்ணூல் இடையாளை " வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளை... "எங்கள் பெம்மான் இடையாளை" எங்கள் சிவபெருமானது இடப்பாகத்து அமர்ந்தவளை... "இங்கு என்னை இனிப் படையாளை"
இவ்வுலகத்தில் இனிமேல் என்னைப் படைக்காதவளை.. என் பிறவிப் பிணியை முடித்தவளை... "உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே" உங்களையும் மீண்டும் படைக்காதபடிக்கு ... நீங்கள் மீண்டும் பிறவாத படிக்கு... பாருங்கள்.. தியானியுங்கள்.. வணங்குங்கள்...
பிறவிப் பிணியை அறுக்கும் சக்தி படைத்தவள் பிறப்பைக் கொடுத்த ஆதிபராசக்தியே... அவளையே எண்ணித் தியானித்திருக்கும் போது நம் பிறவிப் பிணியை அவள் நீக்குகின்றாள். தமிழ்ப்பாக்கள் புனைய விரும்புவோர் விரும்பிப் படிக்க வேண்டிய பாடல் இது. தமிழ்ச் சொற்களை எத்தனை அழகாகக் கையாண்டிருக்கின்றார் பட்டர். காணுங்கள்.. மீண்டும் ஒருமுறை ஓதி இன்புறுங்கள்.. 

பாடல் எண்பத்தைந்து

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே

விளக்கம் 
பார்க்கும் திசைகளெல்லாம் பாசமும் அங்குசமும், பனி போன்ற சிறகுகள் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் ஐந்து மலர்க்கணைகளும், கரும்பு வில்லும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுர சுந்தரி அபிராமியின் திருமேனியும், அவளது சிறு இடையும், குங்கும நிறக்கச்சையணிந்த திருமுலைகளும், அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையையுமே காண்கின்றேன்..."எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாடினானே தமிழ்க்கவிஞன் அவனது வரிகள் நினைவுக்கு வருகின்றன. காணும் திசையெல்லாம் உந்தன்
திருவுருவேயன்றி வேறொன்றும் காண்கிலேன் அம்மையே... என்னிலும் உன்னைக் காண்கின்றேன்.. எல்லோரிலும் உன்னைக் காண்கின்றேன்.. அம்மையே... நீயே எல்லாம்.. சர்வம் சக்தி மயம்.... இதுதான் அபிராமிப் பட்டரின் எண்ணம்..பக்திக் கடலில் மூழ்கியிருக்கும் பரம பக்தனுக்கே இவ்வெண்ணம் சாத்தியமாகும்... அவ்வண்ணம் இருந்ததால்தான் அபிராமிப் பட்டரைப் பித்தனென்று உலகம் இகழ்ந்தது... ஆயினும் தன் பக்திநெறியினின்று பின் வாங்காது என்றென்றும் அன்னையின் திருவுருவைத் தொழுதேத்தித் தன் பக்தியின் பெருமையை அகிலம் அறியச் செய்தார் அவர்.


"பார்க்கும் திசைதொறும் " நான் பார்க்கின்ற திசைகளெல்லாம் "பாசாங்குசமும்" பாசமும், அங்குசமும், "பனிச்சிறை வண்டு ஆர்க்கும்
புதுமலர் ஐந்தும் " பனி போன்ற மெல்லிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் புத்தம்புதிய மலர்களாலான ஐந்து அம்புகளும், "கரும்பும்" கரும்பு வில்லும் "என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும்" என் துன்பத்தையெல்லாம் போக்கிடும் திரிபுரசுந்தரி அன்னை அபிராமியின் திருமேனியும், "சிற்றிடையும்" அவளது சிறிய இடையும் "வார்க்குங்கும முலையும் " குங்கும நிறக்கச்சையணிந்த அவளது திருமுலைகளும் "முலைமேல் முத்து மாலையுமே" அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையும் ஆகிய இவற்றையே காண்கின்றேன்.. வேறெந்தக்  காட்சிகளும் என் கண்களுக்குப் புலப்படவில்லை..அர்ச்சுனன் கவனமெல்லாம் குறிவைத்தடிக்க வேண்டிய பொருளின் மீதிருந்ததால் அவன் வில்லுக்கொரு விஜயன் எனப் பெயரெடுத்தான்.. அபிராமிப் பட்டரின் கவனமெல்லாம் அன்னை அபிராமியின் மேலிருந்ததால் அவர்தம் பக்தியால் புகழ்பெற்றார். அர்ச்சுனன் கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை.. அபிராமிப்பட்டருக்கோ காண்பதெல்லாம் அன்னையன்றி வேறில்லை...


பாடல் எண்பத்தாறு

மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே


விளக்கம் :

பாலையும், தேனையும், பாகினையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே... கோபங்கொண்ட காலதேவன், விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை என் மேல் விடும்போது, திருமால், பிரம்மன்,வேதங்கள், அமரர்கள் அனைவரும் தேடியும் காணக் கிடைக்காத உன் திருப்பாதங்களையும், வளையணிந்த உன் திருக்கரங்களயும் கொண்டு எனக்குக் காட்சியளிப்பாய்...
மீண்டும் ஒருமுறை தனது மரணவேளையைப் பற்றிப் பாடுகின்றார் பட்டர். ஆனால் இப்போது அவரது பாடலின் தொனி இனிமையாகவும், குதூகலம் நிறைந்தும் காணப்படுவதை நம்மால் உணர இயலுகின்றது. கடந்த பாடலில் எல்லாவிடத்தும் உன்னையே காண்கின்றேன் என்றுரைத்த பட்டர் இப்பாடலில், யாருக்கும் தென்படாத உன் திருப்பாதங்களையும், அழகிய வளையணியும் திருக்கரங்களையும் கொண்டு நான் மரணமடையும் வேளையில் என் முன்னே வந்து நில் என்றுரைக்கின்றார். ஆஹா எத்தனை இனிமையான பாடல் இது...கண்கள் மூடிப் பாடலைப் பாடி இன்புற்று மகிழுங்கள்..


"பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே " பாலையும், தேனையும், பாகையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே..."தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே" என முருகன் மீது புதுக்கவிஞன் ஒருவன் பாடினாலில்லையா... அவனுக்கு முருகனின் சொற்களை விடுத்து வேறெதுவும் இனிமையில்லை... அபிராமிப் பட்டருக்கு அன்னையின் சொற்கள் பால், தேன், சர்க்கரைப் பாகு இவற்றைப் போன்ற இனிமை நிறைந்தது.. "மால் அயன் தேட" திருமாலும், பிரம்மனும் தேடும். "மறை தேட" வேதங்கள் தேடும் "வானவர் தேட" அமரர்கள் அனைவரும் தேடும்.. "நின்ற காலையும்" இப்படி அனைவரும் தேடி நிற்கும் உந்தன் திருப்பாதங்களையும், "சூடகக் கையையும் கொண்டு" வளையணிந்த உந்தன் திருக்கரங்களையும் கொண்டு "வெங்காலன்" கோபங்கொண்ட காலதேவன் "கதித்த கப்பு வேலை " விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை "என் மேல் விடும்போது" என்னை நோக்கிச் செலுத்தும் வேளையில், நான் மரணமடையும் வேளையில் "வெளி நில் கண்டாய்" நீ
வந்து காட்சியளித்து அருள வேண்டும். எத்தனை அதிகாரமாக "வெளி நில் கண்டாய்" எனக் கட்டளையிடும் தொனியில் உரைக்கின்றார். பக்தி அதிகமாகும் வேளையில் அன்னையின் மேல் உரிமையும் அதிகமாகின்றது.. நம் தாயிடம் நாம் எதையும் கேட்பதற்காக இரந்து நிற்பதில்லை.. "சாப்பாடு வை" என்றுதான் சொல்லுவோமே தவிர, "அம்மா..பசிக்குது... சாப்பாடு போடுங்க" என்று சொல்வதில்லை... அதே தொனியில்தான் அபிராமிப் பட்டரும் உலகின் தாயான அன்னை அபிராமியைத் தான் மரணமடையும்வேளையில் வந்து நில் என்று அழைக்கின்றார்..




அபிராமி அந்தாதி விளக்கவுரை 24

பாடல் எண்பத்து ஏழு

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே
விளக்கம் 
தமது நெற்றிக் கண்ணால் காமதேவனை அழித்த சிவபெருமானது முடிவில்லா யோக நிலையை உலகமெல்லாம் பழிக்கும் படி செய்து அவனது இடப்பாகத்தை இடங்கொண்டு ஆளும் சிவ சக்தியே... அபிராமி அன்னையே...எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம், எளியேன் எனது கண்களிலும், செயல்களிலும் தென் படுகின்றதே... இதென்ன அதிசயம்?? மீண்டும் மீண்டும் ஈசன் அம்மையிடம் அகப்பட்டுக் கொண்டதைக் கிண்டல் செய்வதே அபிராமிப் பட்டரின் வழக்கமாகி விட்டது... ஆயினும் ஈசனுக்கு அது
பெருமையையே தருகின்றது.. தமிழால் வைதாலும் அருள் செய்யும் ஈசன் அவனது மனைவியை ஏற்றிப் பாடுவதைக் கேட்டு அருள மாட்டானா? ஒரு புதுக்கவிஞன் பாடினானில்லையா " அப்பனைப் பாடும் வாயால் தறுதலைச் சுப்பனைப் பாடுவேனோ?"என்று... அப்பாடல் முழுக்க முருக பக்தி மணக்கும்.. ஆனால் பொருள் புரியாதோர்க்கு, அது முருகனை நிந்திப்பது போல் தோன்றும்.. அதே போல்தான் இவ்விடத்தும் அப்பனைப் பழித்து அம்மையை ஏற்றுவது, அம்மையப்பன் இருவருக்குமே பெருமையைத்தான் தருகின்றது...

"விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை" தனது நெற்றிக்கண்ணால் காமதேவனைச் சுட்டெரித்த சிவபெருமானது முடிவில்லாத யோக நிலையை.. அவர்தம் தவத்தை... ஈசனது தவம் என்பது முடிவில்லாதது. பிச்சாண்டித்தேவராக வரும் நிலையில் கொடுத்தருள்பவராகவும், தனது சுடலை உலகத் தவத்தில் தன்னை யாரும் நெருங்க இயலாதவராகவும் இருக்கின்றார். தங்கள் இன்னலையெல்லாம் திருவிளையாடல்கள் மூலம் இன்புறத் தீர்த்து வைத்த ஈசன் இன்றைக்கு எங்கள் குறை தீர்ப்பாரா என்று அமரர்கள் அவர்தம் சிவலோகம் சென்று காத்திருக்கின்றனர்.. அவரோ பாரா முகமாக, மோனதவத்தில் மூழ்கியிருக்கின்றார்... சரி காம தேவனை அனுப்புவோம்... அப்பன் விழித்து இன்புற்று நம் துயரைக் களையட்டும் என முடிவாகின்றது.. காமதேவனது மலர்க்கணைகள் ஈசனுக்குக் காமத்தை வரவழைக்கவில்லை... மாறாகக்  கோபத்தை வரவழைக்கின்றது.. விளைவு .. காமதேவன் தகனம்.... இப்படித் தனது தவநிலையில் தன்னையாரும் நெருங்க இயலாது என்ற நிலையில் .... உயர்ந்த நிலையில் இருக்கின்ற பரமன்.....

பரமனது விரதம் என்ன ஆனது?? “அண்டம் எல்லாம் பழிக்கும் படி “ உலகமெல்லாம் பழிக்கும் படி... இவனென்ன தவத்திற் சிறந்தவன் என்று எண்ணியிருந்தோமே....அன்று காமனை அழித்தானே.... இன்று இவன் செய்த செயல் இப்படியாகி விட்டதே.... என உலகத்தான் ஈசனைப்
பழிக்கும்படி அவன் என்ன செய்தான்...? அல்லது அவனுக்கு என்ன நேர்ந்தது? “ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே” அவ்வீசனின் ஒரு பாகத்தைக் கவர்ந்து அவ்விடத்திலிருந்து கொண்டு அவனையும் அகிலத்தையும் ஆளும் சிவசக்தியே....இவனைக் காமத்தால் வெல்ல இயலாது என்று எண்ணியிருந்த உலகத்தார் அவன் அம்மையிடம் தோற்றுப் போய் தன் இடப்பாகத்தை இழந்த நிலையக் கண்டு வியந்து
அவனைப் பழிக்கின்றனர்.. அவ்வீசனுக்கே சக்தி தரும் சிவசக்தியாகி நின்றாள் உமையாள்... “மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் “எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம்...

அன்னையின் திருவுருவைச்  சொற்களால் வர்ணிக்க இயலுமா? எந்த ஒரு சொல்லால் அவளை வர்ணித்தாலும் அச்சொல்லினையும் கடந்து நிற்கும் அவளது திருவுருவம்...ஆனையைத் தடவிக்கண்ட குருடர் போலும் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு சொற்களால் அவளை வழிபடுகின்றனர்... ஆனால் அவளது திருவுருவோ எந்த ஒரு சொல்லிலும் அடைபடுவதில்லை.. யார்தம் நினைவுக்கும் அவள் எட்டுவதில்லை.... அத்தகைய பேராற்றல் கொண்டவள் அவள்.. அண்டத்தை எல்லாம் கடந்து அகிலாண்டேஸ்வரியாக நின்றவள் அவள்... அவளது திருவுருவம்..... “எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்” எனது கண்களிலும், செயல்களிலும் தென்படுகின்றதே... இதென்ன விந்தை...? அன்னையே அபிராமிப் பட்டரின் கண்களில் தென்படுகின்றாள்... அன்னையே அவர்தம் செயலாகவும் செயல்படுகின்றாள்.. இதென்ன அதிசயம் என அதிசயித்துப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர்...

பாடல் எண்பத்து எட்டு

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே

விளக்கம் :
தரமற்ற செயல்கள் புரிந்த அசுரர்களின் முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்தவனும், திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிர்ம்மனின் சிரத்தில் ஒன்றைக் கொய்து தம் கையில் ஏந்தியவனுமான ஈசனது இடப்பாகத்தில் சிறப்பாக இணைந்திருப்பவளே... தனியனாகிய நான் உன்னையே கதியென்று சரணடைந்தேன்... உன் பக்தர்கள் கூட்டத்தில் தரமில்லாதவன் என்று என்னைத் தள்ளிவிடாதே....
அன்னையின் அருள்கிடைக்க அருமருந்தான பாடல் இது... தினந்தோறும் அன்னையை நாடி வரும் பக்தர்கள் கோடி... அப்பக்தர்கள் கூட்டத்தில் தன்னைத் தரமற்றவன் என்று தள்ளிவிடாதே என்று அன்னையிடம் அபிராமிப்பட்டரே கெஞ்சுகின்றார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? தண்டிப்பது தந்தையின் குணம்.. மன்னித்து அணைப்பது அன்னையின் குணம். தரமற்ற செயல்கள் புரிந்த அசுரர்களின் முப்புரத்தை எரித்தவன் தந்தை... அகந்தையால் தன் உண்மை நிலை மறந்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து தண்டித்தவனும் அவனே...

நீயோ அவனது இடப்பாகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றாய்.. அவனது மனநிலை உனக்கு வந்துவிடுமோ?? தரந்தாழ்ந்தவன் என்று என்னைத் தள்ளிவிடுவாயோ??? அப்படித் தள்ளி விடாதே... ஏனெனில் எனக்கு வேறு எந்த கதியும் இல்லை...நீயே கதியென்று உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.. என்னைத் தள்ளிவிட்டு விடாதே... எனப்பாடுகின்றார்...“தரியலர்தம் புரம் “ தரமிழந்த செயல்களைப் புரிந்த அசுரர்களின்
முப்புரத்தினை “அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய” எரிப்பதற்காக முன்பொரு நாள் மேரு மலையை வில்லாக வளைத்தவனும் ... “போதில் அயன்” திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிரம்மனின் “சிரம் ஒன்று செற்ற கையான் “ சிரங்களில் ஒன்றைக் கொய்து தன் கையில் கொண்டவனுமாகிய சிவபெருமானின் “ இடப்பாகம் சிறந்தவளே” இடப்பாகத்தில் சிறப்புற அமர்ந்தவளே... “தமியேனும்” தனியனாகிய நானும் ... யாருமற்றவனாகிய நானும்... “பரம் என்று உனை அடைந்தேன்” நீயே கதி என்று உன்னையே சரணடைந்தேன்..”உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது “உன் பக்தர்களில் தரமில்லாதவன் இவன் என்று என்னைத் தள்ளிவிடுவது தகாது...
என்னைத் தள்ளிவிடாதே தாயே.....சுருங்கக் கூறின் “அறமல்லது அழிப்பவன் இணையாளே...அறமில்லா என்னைத் தள்ளாதே...புறமொரு கதியில்லைப் பூவுலகினிலே..மறமது மறந்தறமெனக் கருள்வாயே” 

பாடல் எண்பத்து ஒன்பது

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே
விளக்கம் : சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பெருஞ்செல்வமே...அபிராமியே... தன்னிலை கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக அமரலோகம் அருளும் உனது கணவரும், நீயும் இணைந்து வந்து, என் உடம்பிலிருந்து உயிர் பிரியும் வேளையில் நான் சுய அறிவிழந்து நிற்கும் பொழுது உனது சேவடிகளை எனது தலைமேல் வைத்தருள என் முன்னே வந்தருள வேண்டும் என உன்னை வருந்தி
அழைக்கின்றேன்...தான் மரணமடையும் வேளையில் அன்னையைத் தன் முன்னே வந்து அவள் சேவடிகளைத் தன் தலைமேல் வைக்க வருந்தியழைக்கும் அபிராமிப் பட்டர் மீண்டும் மீண்டும் இப்படி அழைப்பதற்கான காரணமும் இப்பாடலிலேயே மறைந்துள்ளது... உடலை விட்டு உயிர் பிரியும் வேளையில் தான் யார் என்பதை உயிரானது மறந்து போகின்றது..மற்ற உயிர்களைப் போலவே துடிக்கின்றது... அந்த வேளையில் அன்னையை அழைக்க இயலுமா என்பது ஐயத்துக்குரிய செயல். எனவே ... இப்போதே அவளை வருந்தி அழைத்து அச்சமயத்தில் உன் திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் என்று பாடுகின்றார் பட்டர்..

எத்தனை பெரிய பாக்கியம் இது.. அன்னையின் திருவடிகள் தலைமேல் பட்டால், அவ்வுயிர் மீண்டும் பிறப்படையுமோ???"சிறக்கும் கமலத் திருவே " சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பெருஞ்செல்வமே.... அபிராமியே... "துறக்கம் தரும் நின் துணைவரும் " வானுலகத்தை வரமாக அருளும் உன் துணைவரான சிவபெருமானும், .. "நீயும்"அன்னையாகிய நீயும்... "துரியம் அற்ற உறக்கம் தர வந்து" நான்கு
நிலைகளையும் கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக வந்து... அதென்ன நான்கு நிலைகள்.? மனித மனமானது நான்கு நிலைகளை அடைய இயலும்... விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை... விழிப்பு என்பது சாதாரண நிலை... உறக்கம் வரும் வேளையில் ஆழ்ந்த உறக்கமற்ற நிலையில் மனத்தில் உள்ள எண்ணங்கள் கனவாக வருகின்றது.. இது இரண்டாம் நிலை.. தன்னை மறந்து உறங்கும் பொழுது ஆழ்ந்த நித்திரை ஏற்படுகின்றது. இது மூன்றாம் நிலை.. சமாதி நிலை என்பது விழிப்புமற்ற, கனவுமற்ற, ஆழ்ந்த உறக்கமுமற்ற நிலை... இது ஓர் ஆழ்நிலைத் தியானம். அனுபவித்துப் பார்த்தால்தான் சமாதி நிலையின் அருமை புரியும்.. அந்நிலையில் விழிப்பும் உண்டு,,, உறக்கமும் உண்டு... நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை நம்மால் உணர இயலும்...ஆனால் நாம் அதைக் கடந்த ஒரு நிலையில் இருப்போம்.. உறங்குவது போல் இருக்கும்... ஆனால் வெளி நிகழ்வுகளை மனம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.. அந்நிலையில்தான் மனமானது தான் யார் என்பதைப் புரிந்து கொள்கின்றது.

இதை அனுபவித்தாலன்றி புரிந்து கொள்ள இயலாது..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவங்கள் சமாதி நிலையில்
கிடைத்திருக்கும்... இது நான்காவது நிலை... இந்த சமாதி நிலையையும் தாண்டிய நிலையை எனக்குத் தருவதற்காக நீயும் உன் கணவரும் என்னை நோக்கி வர வேண்டும்... எனக்கு அந்த நிலையைத் தரவேண்டும் என்கிறார். "உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது " உடம்போடு உயிரானது தான் கொண்ட உறவினை விலக்கும் சமயத்தில், நான் எனது சுய அறிவினை மறக்கும் பொழுது... அந்த
சமாதி நிலையைக் கடந்த நிலையை எனக்கு நீயும் உன் கணவரும் வந்து தந்து, என் உயிரானது பிரியும் வேளையில் என் சுயத்தை நான் இழக்கும் பொழுது....இருவித அர்த்தங்கள் இப்பாடலில் மூலம் கிடைக்கின்றன.. ஒன்று.. எனக்கு சமாதி நிலையையும் கடந்த உறக்கத்தைத் தந்து அதன் பின்னர் எனது உயிர் பிரிய வேண்டும்... இரண்டு... என் உயிர் பிரியும் வேளையில் நீ அந்த சமாதி நிலையைக் கடந்த நிலையை எனக்குத் தந்தருள வேண்டும்... வார்த்தைகள் விளையாடுகின்றன...

அபிராமிப் பட்டரின் பாடல்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலைக்கேற்ற பொருளைத் தருகின்றன.... "நின் சேவடி சென்னி வைக்க" உனது சேவடிகளை என் தலை மீது வைப்பதற்காக.. "என் முன்னே வரல் வேண்டும் " என் முன்னே நீ வர வேண்டும்... நீயும் உன் கணவராகிய சிவபெருமானும் எனக்கு அந்த ஐந்தாம் நிலை உறக்கத்தைத் தந்து அதன்பின்னர் என் உயிரானது என் உடம்பை விட்டுப் பிரியும் படி செய்ய வேண்டும்... அச்சமயத்தில் உயிர் பிரிந்து நான் என் சுய அறிவினை இழந்து கிடப்பேன்... அச்சமயத்தில் அம்மா என உன்னை அழைக்கும் அறிவும் இருக்காது... அப்பொழுது நீ உனது சேவடியை எனது தலை மீது வைப்பதற்காக என் முன்னே வர வேண்டும்.. "வருந்தியுமே" இதற்காக இப்பொழுதே உன்னை வருந்தியழைக்கின்றேன் அம்மா.....

பாடல் தொண்ணூறு

வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

விளக்கம் :
விண்ணில் வாழும் அமரர்களுக்கு விருந்தாக பாற்கடலில் தோன்றிய அமுதத்தைத் தந்திட்ட மென்மையான அபிராமியானவள் அவளே வந்து நான் வருத்தமடையா வண்ணம் என் இதயக் கமலத்தில் புகுந்து அதுவே அவளது பழைய இருப்பிடமாக எண்ணி அமர்ந்தாள்.. இனி எனக்கு கிடைக்காத பொருளென்று எதுவும் இல்லை....அன்னையே என் இதயத்தில் வந்து அமர்ந்த பின்னர் அதை விடப் பெரும் பொருள்
ஏது உண்டு? சகல செல்வங்களையும் உள்ளடக்கிய அபிராமி எனும் பெருஞ்செல்வம் என் இதயத்து வந்தமர்ந்ததே...அதுவும் தானாக வந்தாள்...நான் கொஞ்சமும் வருத்தமடையா வண்ணம் என் இதயத்தை அவள் இதுவே தன் பழைய இருப்பிடம் என்று அமர்ந்தாள்... வேறென்ன வேண்டும் எனக்கு?? இந்த பாடலைப் பாராயணம் செய்தால் பிரிந்த தம்பதியர் கூடி வாழ்வர் என்று பெரியோர் சொல்வார்கள்..
.
"விண் மேவும் புலவருக்கு" விண்ணில் வாழும் அறிவிற் சிறந்த அமரர்களுக்கு "விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே" விருந்தாக பாற்கடலில் கிடைத்த அருமருந்தான அமுதத்தை அளிக்கும் மென்மையானவளே... அமுதம் வேண்டிஅமரர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வெளிப்பட்ட வேளையில் சண்டையும் வரத் தொடங்கிற்று... அது அமரர்களுக்கா..
அல்லது அசுரர்களுக்கா... என... யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை...ஏனெனில் பாற்கடலைக் கடைந்த நோக்கமே அதுதான்.. அச்சமயத்தில் அமரர்களுக்கு நல்லுதவி புரிய திருமால் தானே மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை வஞ்சித்து அமரர்களுக்கு நன்மை புரிந்தார். அமுதமும் தேவர்களுக்குக் கிட்டியது... அம்மோகினியாக வந்தது திருமாலே ஆயினும், அத்திருமால் அன்னையின் ஒரு அம்சம் அல்லவா? திருமாலைப் படைத்தவளும் அன்னை ஆதிபராசக்தியல்லவா?? ஆக... அமரர்களுக்கு அமுதத்தை அளித்தது அன்னையே...
அப்படிப்பட்ட அன்னையாளவள்... "வருந்தாவகை என் மனத்தாமரையில் " நான் வருத்தமடையா வண்ணம் என் மனமென்னும் தாமரையில் "வந்து புகுந்து " "பழைய இருப்பிடமாக " "இருந்தாள் " தானகவே வந்து புகுந்து என் மனத்தைத் தனது பழைய இருப்பிடமாகக் கருதி இருந்தாள்...

அன்னையோ பேருருக் கொண்டவள். நானோ எளியவன். என் இதயக் கமலத்தில் அவள் அமரும்பொழுது அது வலிக்கும் என்றெண்ணியிருந்தேன்.. ஆனால் நான் வருந்தாவண்ணம், எனக்கு வலியைத் தராமல் மென்மையாக அமர்ந்தாள். அதுவும் என் மனமே அவளது பழைய இருப்பிடமாகக் கருதி அமர்ந்தாள்... "இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை " இனிமேலும் எனக்குக் கிடைக்காத பொருள் என்று எதுவும் இல்லை... எல்லாமே எனக்குக் கிட்டி விட்டது அன்னையெனும் வடிவில்..இந்த அகிலமே அவளுக்குச் சொந்தம்.
அவளோ எனக்குச் சொந்தமானாள்.. இனி இந்த அகிலமும் எனக்கே சொந்தம்...எனக்குக் கிட்டாத பொருளென்று எதுவுண்டு??  எதுவுமில்லை...அன்னையானவள் தானே தன் பழைய இருப்பிடத்தைத் தேடி அமர்ந்தது போல என் மனத்தில் குடி கொண்டாளே... ஆனந்தம் ... ஆனந்தம்.... ஆனந்தக் கூத்தாடுகின்றேன்.... வேறென்ன வேண்டும் எனக்கு... இவ்வுலகத்தோர் மதிக்கும் செல்வம் எனக்குத் துச்சம்.....



அபிராமி அந்தாதி விளக்கவுரை 25

பாடல் தொண்ணூற்று ஒன்று

மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே
விளக்கம் :
மெல்லிய நுண்ணிய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளும், விரிந்த சடைகளைக் கொண்ட சிவபெருமானோடு இணைந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட பொன்னைப் போன்றவளுமாகிய அன்னை அபிராமியைப் புகழ்ந்து வேதங்கள் சொல்லிய
படி அவளைத் தொழும் அடியார்களைத் தொழுபவர்களுக்கு, பல்வேறு இசைக்கருவிகள் இசை முழங்க, வெண்யானையான ஐராவதத்தின் மேலேறி ஊர்வலம் வரும் இந்திர பதவி வந்து சேரும்..ஆண்டவனுக்கு சேவை செய்வதை விட அவன் அடியார்க்கு செய்யும் சேவையையே அவன் பெரிதும் மதிக்கின்றான். அதையேதான் அபிராமிப் பட்டர் இங்கு உரைக்கின்றார்... அன்னையின் அடியார்களைத் தொழுது அவர்கட்கு தொண்டு செய்வோருக்கு இந்திர பதவியே கிட்டும் என்று குறிப்பிடுகின்றார். "மெல்லிய நுண் இடை மின்னனையாளை " மெல்லிய நுண்ணிய இடையினை உடைய மின்னலைப் போன்றவளை... "விரிசடையோன் புல்லிய மென்முலைப் பொன்னனையாளை " விரிந்த சடைகளைக் கொண்ட சிவபெருமான் புணர்ந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட பொன்னைப் போன்றவளை, அன்னை அபிராமியை...

"புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு" புகழ்ந்து வேதங்கள் சொல்லும் வழியில் அவளை வழிபடும் அடியார்களை வழிபடுவோர்க்கு... அதாவது அடியார்க்கடியார்க்கு.... "பல்லியம் ஆர்த்தெழ " பல்வேறு இசைக்கருவிகள் இசை முழங்க... "வெண்பகடு ஊரும் பதம் தருமே" வெண்யானையான ஐராவதத்தில் ஊர்வலம் செல்லும் இந்திர பதவி வந்து சேரும்... அதை அன்னையே தருவாள்...ஆகையால்தான் குருபக்தி அவசியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்... சாயாண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா அவர்கள் சொல்வார்கள்.. "ஈசனுக்குக் கோபம் வந்தால் நீ குருதேவரிடம் அடைக்கலம் புகலாம். ஈசனது கோபத்தைத் தடுக்கும் ஆற்றல் குருவுக்கு உண்டு... ஆனால் குருவுக்குக் கோபம் வந்தால் அதை அந்த ஈசனாலும் தடுக்க இயலாது" என்று... ஆகவே அன்னையின் அடியார்களை வழிபடுவோருக்கு அன்னை அந்த இந்திர பதவியைத் தருவாள்....

பாடல் தொண்ணூற்று இரண்டு

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே

விளக்கம் :
மும்மூர்த்திகள் முதலான தேவர்கள் யாவரும் போற்றும் புன்னகை நிறைந்தவளே... அபிராமி அன்னையே... உனது சொற்களிலே உருகி உன் திருவடிகளிலே மனம் ஒன்றி உனக்கு அன்பனாக வாழ்வதற்காக என்னை உன் அடியாக்கிக் கொண்டாய்..நான் இனி வேறு எந்த ஒரு மதத்தைக் கண்டும் மதி மயங்க மாட்டேன். அம்மதத்தைச் சார்ந்தவர் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்...அழகிய சொல் "முகிழ் நகை". தமிழில் இச்சொல் வழக்கில் இல்லாவிட்டாலும், கன்னடத்தில் "முகிழ் நகை" எனும் சொல் வழக்கில் உள்ளது... எங்கள் குருதேவர் தியானத்தில் எங்களை அழைத்துச் செல்லும் போது "முகதல்லி முகிழ் நகையிரலி" என்று சொல்வது அப்படியே நினைவுக்கு வருகின்றது. அன்னையை அழகிய புன்னகையே என வர்ணிக்கும் அபிராமிப் பட்டரின் வார்த்தைகள் நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கின்றன...

"முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே" மும்மூர்த்திகள் முதலிய தேவர்கள் அனைவரும் போற்றும் அழகிய புன்னகையே... "பதத்தே உருகி "உன் சொற்களிலே உருகி... " நின் பாதத்திலே மனம் பற்றி " உன் திருவடிகளிலேயே என் மனத்தை நிலை நிறுத்தி... :"உந்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் " உன் இஷ்டப்படி வாழ்வதற்காக... உனக்கு அன்பனாய் வாழ்வதற்காக என்னை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய்... "இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் " இனிமேல் நான் எந்த ஒரு மதத்திலும் மதி மயங்க மாட்டேன்..."அவர் போன வழியும் செல்லேன்" அம்மதத்தார் சென்ற வழியிலும் செல்ல   மாட்டேன்....அன்னை அபிராமி மதம் இருக்க அடுத்த மதம் நமக்கெதற்கு.... 

பாடல் தொண்ணூற்று மூன்று

நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே
விளக்கம் :
இந்த அகிலத்தையெல்லாம் பெற்றெடுத்த அன்னை அபிராமியின் திருமுலைகள் மொட்டினைப் போன்றுள்ளதென்றும் அவளது திருக்கண்கள் மான்களைப் போன்றுள்ளதென்றும் புகழ்வது நகைப்புக்குரிய செயல்.. எல்லையில்லாத வடிவையுடைய அபிராமியை மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகள் என்று விளிப்பதும் வம்பே. இவளது தகைமைகளை நாம் நாடிச் சென்று அறிய
விரும்புவதும் மிகையான செயல்களே...குருடர்கள் ஆனையைத் தடவிக் கண்ட கதைதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகின்றது... தான் அன்னையைத் துதித்துப் பாடிய பாடல்கள், அவளை வர்ணித்த வர்ணனைகள் இவையெல்லாம் நகைப்புக்குரியன என்றும், தகாதன என்றும் அவள் குணங்களை அறிய முற்படுவது மானுடரின் சக்திக்கு மிகையான செயல் என்றும் குறிப்பிடுவது நம்மை விழியுயர்த்த வைக்கின்றது..

ஒரு கோயிலைக் கட்டி அதனுள் ஒரு விக்கிரகத்தை வைத்து அதுதான் அன்னை அபிராமி என்று வழிபடுவதும் கூட ஒருவகையில் நகைப்புக்குரிய செயல்தான். ஏனெனில் அவள் முடிவற்ற வடிவுடையவள்.. அப்படியாயின் கோவிலகள் எதற்கு?? வழிபாட்டு முறைகள்
எதற்கு??? இவை அன்னையைப் பற்றிய சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்தவும், அவளே நம்மைப் படைத்தவள் என்பதை நமக்கு நினைவூட்டவும்தான்... ஆலயங்கள் மனித மனங்களை நெறிப்படுத்தவும், மனித சிந்தனைகளை ஒரே நேர்க்கோட்டில் கொணரவுமே
கட்டப்பட்டன... ஆனால் அன்னையானவளோ இவற்றையெல்லாம் தாண்டி நிற்பவள்..இருக்கும் இடத்திலிருந்து "அபிராமி" என்றழைத்தால், ஓடிவந்து கருணை செய்யும் அன்னை எளியவள்... இவள் எளியவள் என்றெண்ணி இவளை நான் அறிந்து கொண்டேன்.. என்று பெருமை பேசும் மூடருக்கு அவள் பெரியவள்.. அகிலமே அன்னையாக இருக்கையில் அங்கென்றும், இங்கென்றும் அவளைத் தேடி, அவள் அழகை
மற்றவற்றோடு ஒப்பிட்டு வர்ணித்தல் அபிராமிப் பட்டருக்கு நகைப்பை ஏற்படுத்துகின்றது...

உலகைப் பெற்றெடுத்தவளை, இவள் மலையரசன் பெற்றெடுத்த மலைமகள் என விளிப்பது தகாத செயல்.. அது வம்புக்குரிய செயல் என்று
பகர்கின்றார். பெரியோர் ஒருவரது உரையில் கேட்டது. இராமனைப் பற்றி அவர் உரைத்ததன் சாரத்தை இவ்விடத்துப் பதிவுசெய்கின்றேன்.. "எந்த இடத்தில் பெருமையும்,எளிமையும் இணைந்திருக்கின்றதோ அதுதான் இறைவன்.. இறைவன் பெருமை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். அதே சமயம் நாம் அழைத்தால் வந்து அருள் செய்யும் எளியவனாகவும் இருக்கின்றான்.. உலகத்து வழக்கில் பெருமை
இருக்குமிடத்தில் எளிமை இல்லை... எளிமை இருக்கும் இடத்தில் பெருமை இல்லை... இந்த தேசத்து உயர் பதவியில் இருப்பவர் பெருமை பெற்றவர்.. ஆனால் அவரை நம்மால் அவ்வளவு எளிதில் சந்திக்க இயலுமா? இயலாது. எனவே பெருமை இருக்கும் இடத்தில் எளிமை இல்லை... தெருவோரம் குப்பை நிறைந்திருக்கின்றது. எளிதில் நெருங்கி விட எளிமையாக இருக்கின்றது என்று அதனைப் பெருமை கொண்டாட இயலுமா? எனவே எளிமை இருக்குமிடத்தில் பெருமை இல்லை... ஆனால் இறைவனின் திருவடிகளோ மிகப் பெருமை வாய்ந்தது... அதே சமயம் நமக்கருள் செய்யும் வகையில் அத்தனை எளிமையானது...

இது அந்த பெரியவர்  இராமனின் பெருமையையும் எளிமையையும் பற்றி உரைத்தது... அதையே இவ்விடத்து நினைவு கூர்கின்றேன்... அன்னையானவளை நாம் எளிமையான சொற்கள் கொண்டு வர்ணனை செய்கின்றோம்.. அது நகைப்புக்குரிய செயல்...ஆனால் அதையே ஏன் பட்டரும் செய்தார்... ? அன்னை அத்தனை எளிமையானவளாக அவருக்குக் காட்சியளித்ததால்தான். அவள் மலையரசனுக்கு மகளாகப் பிறந்தது தன் எளிமையை உலகிற்கு உணர்த்துவதற்கேயன்றி வேறெதற்கும் அல்ல..."இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு" இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்த தலைவிக்கு.. அபிராமிக்கு.... "முகையே முகிழ் முலை " அரும்பும் மொட்டினைப் போன்ற முலைகள் உள்ளன என்பதும்... "மானே முதுகண் " மருளும் மானைப் போன்ற விழிகள் உள்ளன என்பதும் "நகையே இது" நகைப்புக்குரிய செயலே இது..
"முடிவுயில் " எல்லையில்லாத வடிவுடையவளை... எங்கள் அபிராமியை..."மலைமகள்" "பிறவியும்" "என்பதும்" "அந்த வகையே" "வம்பே"

மலையரசன் பெற்றெடுத்த மகளல்லவா என்று மலைமகள் என்று விளிப்பதும் அதைப் போன்ற நகைப்புக்குரிய செயலே... மேலும் அது வம்புக்குரிய செயல்.... ஏனெனில் இந்த அகிலத்தைப் பெற்றெடுத்தவளும் அவளே.... அவளை இன்னொரு மானுடனுக்குப் பிறந்தவள் என்பது
வம்புக்குரிய செயலல்லவா?? "நாம்" "இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே""மிகையே" எளியோர்களாகிய நாம் இவளது அருங்குணங்களையும், பெருமைகளையும் நாடி விரும்பி அறிந்து கொள்ள முயல்வதும் மிகையான செயலே... ஏனெனில் நம்மால் அது இயலாது.. இவள் இத்தன்மையள் என்றுரைத்தால், இன்னோரிடத்து அவள் வேறு தன்மையளாய் நிற்கின்றாள்... ஓ அதுவே அவளது தன்மை என அவ்வழி சென்றால், பிறிதோரிடத்தில் அவள் இன்னொரு தன்மையளாய் நிற்கின்றாள்.. ஆக அவளை,.. அவளது தன்மைகளை வரையறுக்க இயலாது.. அவளை நம்மால் அறிந்து கொள்ளவும் இயலாது...

பாடல் தொண்ணூற்று நான்கு

விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே
விளக்கம் 
அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள் கண்களெல்லாம் கண்ணீர் மல்கி, உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, சுய அறிவினை இழந்து, தேனுண்ட வண்டைப் போல் களித்து, சொற்கள் தடுமாறி இப்படிச் சொல்லப்பட்ட செயல்கள் எல்லாம் கொண்ட பித்தரைப் போல் ஆவார்கள் என்றால் அன்னை அபிராமியை வழிபடும் சமயம் நல்லதே....அன்னையை முழுமனதோடு எண்ணி வழிபடும் பக்தர்கள் ஆலயம் சென்று அவளைக் காணும்போது இது போன்ற செயல்களைச் செய்வது இயற்கையானதுதான்... குலசேகரன் பட்டினத்தில் கோயில் கொண்டுள்ள முத்தாரம்மனைக் காணச் செல்லும் போதெல்லாம் நானும் இது போன்ற செய்கைகளுக்குள்ளாகின்றேன்.. காரணம் புரிவதில்லை..அதற்குரிய காரணம் அன்னை மேல் நாம் கொண்டுள்ள அதீத அன்பே... சொல்லொண்ணா ஆனந்தம் அதிகமாகி அவளையே நேரில் கண்டது போன்ற உணர்வு மேலோங்கும்போது விழி தானே நீரைச் சொரிகின்றது... மெய்யோ மயிர்சிலிர்த்து ஆடுகின்றது... சுய அறிவு அற்றுப்போகின்றது...

தேனுண்ட வண்டைப் போல் மனம் ஆனந்த நடனமாடுகின்றது... இவற்றையெல்லாம் காண்போர் இவனென்ன பைத்தியக்காரனைப்
போல் செயல்படுகின்றானே என இகழ்ந்துரைக்கின்றனர். அபிராமிப் பட்டரை அப்படித்தான் பித்தனென்றனர்.. ஆனால் பட்டரோ இப்பித்த நிலையை அபிராமி சமயம் எனக்குத் தருமானால் அது நல்ல சமயமே... என்றுரைக்கின்றார்...கிறித்தவ நண்பர்களும் இதைப் படித்து வருகின்றீர்கள்... இந்துக்களின் ஆலயங்களில் தன்னை மறந்து ஆடும் பக்தர்களைப் பேய் பிடித்து ஆடுகின்றான் எனக் கிண்டல் செய்கின்றார்கள்... ஆனால் இதையேதான் "பரிசுத்த ஆவி"நிறைந்து ஆடுவதாக அவர்களும் அனுபவிக்கின்றனர்.. ஆக ஆழ்ந்த இறையனுபவம் இதைப் போன்ற செயல்களைத் தருவதாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அது தன்னை மறந்த ஆனந்த நிலை என்பது அனுபவிக்காதோருக்குப் புரியாது...

"விரும்பித் தொழும் அடியார்" அன்னை அபிராமியை விரும்பித் தொழுகின்ற அடியவர்கள் "விழி நீர் மல்கி" கண்களில் கண்ணீர் வழிந்தோட "மெய் புளகம் அரும்பித்" உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து... (இதைத்தான் கிராமத்தில் "புல்லரிப்பது" என்பார்கள்). "ததும்பிய ஆனந்தம் ஆகி" ஆனந்தம் ததும்பி "அறிவு இழந்து" தங்கள் சுய அறிவினை இழந்து "கரும்பின் களித்து" தேனுண்ட வண்டினைப் போல் களித்து "மொழி தடுமாறி" சொற்கள் தடுமாறி "முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால்" இவ்வாறு சொன்ன செய்கைகளை எல்லாம்
செய்யும் பித்தர்கள் ஆவர் என்றால்.... உலகத்தோரின் பார்வையில் பைத்தியக்காரனைப் போல் ஆவார்கள் என்றால் "அபிராமி சமயம் நன்றே" அபிராமியை வழிபடுவதற்கு வழிகாட்டும் இந்த அபிராமியின் சமயம் மிகவும் நல்லதே.. உயர்ந்ததே....இந்த பாடலைப் பாடும்போதே அந்தப் பரவச நிலை ஏற்படுகின்றது... கண்கள் மூடி அபிராமியை மட்டுமே மனத்தில் எண்ணி அவள் திருவுருவை மனத்தில் நிறுத்தி ஒரு
நொடி இருந்தால் போதும் .. நம் கண்கள் பனிக்கும்... இதயம் இனிக்கும்.

அபிராமி அந்தாதி விளக்கவுரை 26

பாடல் தொண்ணூற்று ஐந்து

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே
விளக்கம் :
அழியாத நல்ல குணங்களின் குன்றாக விளங்குபவளே... அருள் நிறைந்த கடலாக இருப்பவளே... மலையரசன் இமவான் பெற்ற கோமளமே... எங்கள் அபிராமி அன்னையே.... எனக்கென்று உள்ளதெல்லாம் நான் அன்றே உனக்கென்று அர்ப்பணித்து விட்டேன்.. இனி எனக்கு நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.... எனக்கு நீயே கதி...அனைத்தையும் அன்னைக்கே அர்ப்பணித்து விட்ட பின்னர் நன்மையால் வரும் மகிழ்வும் இல்லை... தீமையால் வரும் துன்பமும் இல்லை.. அன்னையையே பரம் என்று கொண்ட மனம் விருப்பு, வெறுப்பு அற்ற நடுநிலை கொண்டதாகின்றது..குணங்களில் குன்றாகவும், அருட்பெருங்கடலாகவும் இருக்கும் அன்னை அத்தகைய
நல்மனத்தினை நமக்குத் தந்தருள்கின்றாள். அன்னையே நம்மை வழி நடத்தும்போது நம் வாழ்வில் தீமைகள் ஏது..? எல்லாம் நன்மையே அல்லவா?


"அழியாத குணக் குன்றே " அழியாத நற்குணங்களின் குன்றே.... "அருட்கடலே" அருளெனும் கடலே... "இமவான் பெற்ற கோமளமே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த கோமளமே.. எங்கள் அபிராமி அன்னையே... "எனக்கு உள்ளதெல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் " எனக்கென்று உரிமையுள்ள அனைத்தையும் அன்றே நான் அவையெல்லாம் உனதே என்று அர்ப்பணித்து விட்டேன்.. என்று? என்றைக்கு நீ என்னை உன் மகனென்று அறிந்தாயோ அன்று... "நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை " இனிமேல் எனக்கு நன்மை நடந்தாலும், தீமை விளைந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அவற்றின் மகிழ்ச்சியோ துக்கமோ என்னைப் பாதிக்காது... "உனக்கே பரம்" ஏனெனில் எனக்கு நீயே கதி.....ஆழ்ந்த மனத்துயரில் இருக்கும்போதெல்லாம் அறியாமல் என் மனது பாடும் பாடல் இது... இப்பாடலைப் பாடும் போது மனம் இலகுவாகி நான் துயரங்களிலிருந்து எளிதில் வெளிவருவேன்.... மிக அருமையான பாடல்.


பாடல் தொண்ணூற்று ஆறு

கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே


விளக்கம் :

மென்மையானவளை, அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறப் பேரழகியை, குற்றமில்லாதவளை, எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்டவளை, சகல கலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை, எங்கள் அபிராமியை, தம்மால் இயன்ற அளவுக்குத் தொழுபவர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்...ஆலயம் சென்று அன்னையை வணங்கும் போது கண்ணீர் மல்கி, கரங்கள் கூப்பி, சிரங்குனிந்து தொழுதிடல் வேண்டும்.. ஆனால் இன்றைய கலாச்சாரமோ ஆலயத்திற்கு வெளியில் நின்று (சிலர் நிற்பது கூட இல்லை) ஒரு கையை மட்டும் தூக்கி வணங்கி விட்டு செல்கின்றனர்... இது முறையல்ல.. தம்மால் இயன்ற அளவுக்குத்
தொழ வேண்டும்... அதனால்தான் பெரியோர்கள் தரையில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்குகின்றனர்... அப்படி அவளைத் தொழுவோர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு பெறுவார்கள்... இது அபிராமிப் பட்டர் வாக்கு...


இன்னோர் பொருளும் கொள்ளலாம்.அதை இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் உரைத்த கதை ஒன்றின் மூலம் விளக்குகின்றேன்.... பக்தியிற் சிறந்தவர் யாரென ஒருமுறை நாரதர் திருமாலிடம் வினவினார்.. ஓர் ஏழைக் குடியானவனைக் காண்பித்து "இவனே என்
பரம பக்தன்" என உரைத்தார் திருமால். "அல்லும் பகலும் இடையறாது "நாராயணா" என உன் திருநாமத்தைச் செப்பும் என்னை விட இந்த ஏழைக் குடியானவன்எவ்வகையில் உயர்த்தியானவன்?" என நாரதர் வினவ...திருமால் புன்னகை பூத்தவாறே "நீ சென்று அவனது அன்றாட நடவடிக்கைகளை ஒரு நாள் மட்டும் கவனித்து வா" என்று அனுப்பி வைத்தார். நாரதரும் சென்று கவனித்தார். அக்குடியானவன் காலையில் எழுந்தான் "ஸ்ரீ ஹரி" என்றான்.. தனது காலைக் கடன்களை முடித்தான்.. கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான்.
வழக்கம்போல் வேலைகளைச் செய்தான்.. மாலை இல்லம் திரும்பினான்..குளித்தான். தன் மனைவி மக்களோடு உரையாடினான். ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்தான். இரவு படுக்கையில் படுக்கச் சென்றான். "ஸ்ரீ ஹரி" என்றான். உறங்கிவிட்டான்..


இது நாரதர் கவனித்த தினத்தில் நிகழ்ந்தது. திருமாலிடம் திரும்பிய நாரதர் இதை உரைத்தார். திருமாலும் சிரித்தவாறே "இன்றல்ல நாரதா.
என்றுமே அவனது வழக்கமான செயல்கள் இவைதான்" என்றுரைத்தார்.. "பின்னர் எப்படி அவனைத் தங்களது பரமபக்தன் என்று உரைத்தீர்கள்?" என நாரதர் வினவ...பகவான் நாரதன் கையில் ஒரு எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து, "நாரதா. இந்த பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இதில் உள்ள எண்ணெய் ஒரு சொட்டளவும் சிந்தாமல் இந்த வைகுண்டத்தை ஒரு முறை சுற்றி வா. பிறகு பதிலுரைக்கிறேன்" என்றார். நாரதரும் சுற்றி வந்தார். "பாருங்கள் பகவானே..ஒரு சொட்டளவும் சிந்தவில்லை.. தங்கள் ஆணையை அப்படியே நிறைவேற்றி விட்டேன். இப்போது சொல்லுங்கள் யார் பக்தியில் சிறந்தவரென்று?" என பகவானிடம் வினவினார் ..பகவான் "நாரதா.. இந்த வைகுண்டத்தைச் சுற்றி வருகையில் எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை முறை என் நாமத்தை
உரைத்தாய்?" என பதிலுக்கு ஒரு வினாவை எழுப்பினார் "அதெப்படி... என் கவனமெல்லாம் இந்த எண்ணெய் துளியளவும் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது.. ஒரு முறை கூட தங்களை நினைக்கவில்லை.. அதெப்படி நினைக்க இயலும்? என் கவனம் உங்கள் மேல் வந்து விட்டால் நான் பரவசமாகி விடுவேன். எண்ணெய் சிந்தியிருக்குமே?" என்று நாரதர் பதிலுரைக்க...


"இந்தச் சிறு பாத்திரத்தைச் சிந்தாமல் சுமக்கும் வேளையில் ஒரு முறை கூட நீ என்னை நினைக்கவில்லை...ஒரு முறை கூட என் திருநாமத்தைச் செப்பவில்லை. ஆனால் அவனைப் பார்.. ஏழை... அவனுக்குச் சுமைகள் பல... குழந்தைகள் பல... ஆயினும் காலை எழுந்தவுடன் ஒரு முறை... இரவில் உறங்குமுன் ஒருமுறை ... என நாளொன்றுக்கு இருமுறை என் திருநாமத்தையுரைத்து என்னை நினைக்கின்றானல்லவா? தனது இல்வாழ்க்கையெனும் பாத்திரத்தையும் அவன் ஏந்தி வந்த பொழுதும் அவனது கவனங்களெல்லாம் மனைவி, குழந்தைகள் என்றிருந்த போதும் தினமும் மறவாது என் நாமத்தை உரைக்கின்றானே...அவனல்லவா என் பரமபக்தன்" என சிரித்தவாறே உரைத்த திருமாலைக் கண்டு நாணிக் கொண்டே வெளியேறினார் நாரதர்..நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையைத் தொழவேண்டும். உலகின் பந்தங்களில் கட்டுண்டோம்.. சுமைகள் சுமக்கின்றோம்... அந்நிலையிலும், நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையின் நினைவில் நிற்க வேண்டும்.. அவளைத் தொழுதிடல் வேண்டும்... இவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்குத் தொழும் அடியவர்கள் ஏழுலகிற்கும் அதிபர்கள் ஆவர்...

"கோமளவல்லியை " மென்மையானவளை..."அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமளவல்லியை " அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறத்தவளை...கற்பனையில் அன்னையின் திருவுருவைக் கண்டு மகிழுங்கள்... "ஏதம் இலாளை"குற்றங்குறைகள் இல்லாதவளை... "எழுதரிய சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை" எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்ட சகலகலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை... எங்கள் அபிராமி அன்னையை... "தம்மால் ஆமளவும் தொழுவார்"
தங்களால் இயன்ற அளவுக்குத் தொழுகின்ற அடியவர்கள்.. "எழு பாருக்கும் ஆதிபரே" ஏழுலகையும் ஆளும் அதிபர்கள் ஆவார்கள்.. ஏழுலகும் அவர்கட்குச் சொந்தமாகும்...அன்னையின் வழிபடுதலால் ஏற்படும் பயனைச் சொல்லும் பாடல் இது... இப்பாடலைத் தொடர்ந்து பாடி வந்தால் சென்றவிடத்தெல்லாம் வெற்றி பெறலாம் எனப் பெரியோர்கள் உரைப்பார்கள்... 


பாடல் தொண்ணூற்று ஏழு

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


விளக்கம் :

சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், அமரர்களின் தலைவன் இந்திரன், திருமாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன், முப்புரங்களை அழித்த
சிவபெருமான், முரனை அழித்த திருமால், பொதியமலை வாழ் முனிவன் அகத்தியன்,போரிடும் பெரும்படையை ஒத்த பலம் மிக்க கந்தன், அவன் அண்ணன் முதற்கடவுள் கணபதி, காமன் முதலிய சாதனை படைத்த புண்ணியம் மிக்க எண்ணற்றோர் எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்.அத்தனை தெய்வங்களையும் இப்பாடலில் குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் என் அன்னையைப் போற்றுவார்கள் எனக் குறிப்பிடுகின்றார் அபிராமிப் பட்டர்...ஒரு பாடல் உண்டு "கந்தன் காலடியை வணங்கினால், கடவுள்கள் யாவரையும்
வணங்குதல் போலே.." என்று... இவ்விடத்து அனைத்துக் கடவுள்களையும் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் அன்னையை வணங்குகின்றனர் எனக் குறிப்பிடுதலால், இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிடில் என்ன புண்ணியம் வருமோ அது அன்னையை மட்டும் வணங்கினாலே வரும் என்பது இப்பாடலின் மறைபொருள்..


"ஆதித்தன்" சூரிய பகவான், "அம்புலி" சந்திர பகவான் "அங்கி" அக்கினி, "குபேரன்" குபேரன், "அமரர் தம் கோன்" அமரர்களின் அரசன் இந்திரன் "போதிற் பிரமன்" மாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன் "புராரி" முப்புரங்களை அழித்த சிவபெருமான் "முராரி" முரன் எனும் அசுரனை வதைத்தத் திருமால், "பொதிய முனி" பொதியமலை வாழ் தமிழ் முனி அகத்தியன் "காதிப் பொரு படை கந்தன்" போரிடும் பெரும்படையை ஒத்த வலிமை மிக்க முருகன் "கணபதி" கந்தனின் அண்ணன் முழு முதற்கடவுள் கணபதி "காமன்" காமக் கடவுள் மன்மதன் "முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் " இவர்கள் முதலான சாதனைகள் பல படைத்த புண்ணியம் செய்த எண்ணற்றோர் "போற்றுவர் தையலையே" எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்... 


அபிராமி அந்தாதி விளக்கவுரை 27

பாடல் தொண்ணூற்று எட்டு

தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே
விளக்கம் : உண்மை நிறைந்த நெஞ்சத்தைத் தவிர்த்து ஒரு போதும் வஞ்சகரின் பொய் நெஞ்சில் புகுதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி
அன்னையே... உனது திருவடித் தாமரைகளைத் தனது தலைமேல் அணிகலனாகச் சூட்டிய சங்கரனாரின் கையிலிருந்த அக்கினிச் சட்டியும், தலைமேலிருந்த கங்கையும் எங்கே மறைந்தன? அன்னையை மணம் முடிக்க சங்கரனார் வருகின்றார்.. எந்நேரமும் சுடலையில்
தியானத்தில் மூழ்கியிருக்கையில் அவர் பெருஞ்சடையில் கங்கையானவள் ஒட்டிக் கொண்டாள். அவரது கையிலோ அவரது கோபத்தையொத்த அக்கினிச் சட்டி... அன்னையின் திருப்பாதங்களைத் தனது சிரசில் சூடி அவளையே மணம் முடிக்க வேண்டி
வருகின்றார்.. காண்போர் என்ன பகர்வர்? இவனா மணம் முடிக்கச் செல்லும் மணமகன்.? இதென்ன தவக்கோலம்? சுடலைக் கோலம்? என எள்ளி நகையாட மாட்டார்களா? எனவே தனது தவக்கோலத்தை மறைத்து இராச அலங்காரத்தில் வருகின்றார்...

அவர்தம் கையில் நெருப்புச் சட்டியிருந்தால் அழகிய பூங்குயில் போன்ற அன்னைக்குத் தகுமா? எனவே அதை எங்கேயோ மறைத்து விட்டார்... தனது சடைமுடிமேல் கங்கையிருந்தால் அன்னை பொறுப்பாளா? இவள் எனக்குச்சக்களத்தியா? என்று சங்கரனாரிடம் சண்டை பிடிப்பாளில்லையா? அதற்காக கங்காதேவியையும் எங்கேயோ மறைத்து விட்டார்.. இப்போது அழகிய அரசகோலத்தில் அன்னையை மணம் முடிக்க வந்து கொண்டிருக்கின்றார்... பட்டருக்கு இக்காட்சித் தென்படுகின்றது.. என்னடா இது இவர் கையில் ஓர் அக்கினிச்சட்டியைக் கண்டோமே? இவர் சடையில் கங்கை குடிகொண்டிருந்தாளே...? எங்கே போயின அவை? என் அன்னையை நீ உன் தலையில் சூடிக்கொண்டதால் அவை எங்கே மறைந்து போயினவோ?? என சங்கரனாரிடம் கேட்கின்றார்... நீ இப்படிச் செய்கின்றாயே... என் அன்னையோ உண்மை பேசுவோர் நெஞ்சத்துள் மட்டுமே குடிபுகுவாளேயன்றி ஒருபோதும் பொய்யுரைக்கும் வஞ்சசர் நெஞ்சத்தில் குடிபுகுவதே இல்லையே... உன்னை எப்படியடா தன் கணவனாக ஏற்றாள்? என ஈசனைக் கிண்டலடிக்கின்றார்...

அகிலத்தைப் படைத்த ஆதிபராசக்தியே ஆனாலும் அவளுக்கும் பெண்ணுக்குரிய குணங்கள் இருப்பதாலேயே நீ இப்படிச் செய்கின்றாயோ? எனவும் வினவுகின்றார். அன்னையிடமும் நீ உண்மை பேசுவோரை விடுத்து, வஞ்சகர்களின் பொய் பேசும் நெஞ்சத்தில் குடியிருப்பதில்லையே...உன்னை ஏய்க்கும் பொருட்டு சங்கரனார் வேடமிட்டு வந்திருக்கின்றானே... இவனை நீ எப்படி ஏற்றாய்? அன்னையிடமும் கேள்விக்கணையைத் தொடுக்கின்றார்."மெய் வந்த நெஞ்சின் அல்லால் " உண்மை பேசுவோர் நெஞ்சத்தைத் தவிர்த்து
"ஒருகாலும்" ஒருபோதும் "விரகர் தங்கள்" வஞ்சகர்களின் "பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே" பொய் பேசும் நெஞ்சத்தில் புகுவதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி அன்னையே... "தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு" உன் திருவடித் தாமரைகளைத் தனது சிரசின் மேல் அணிகலனாக சூடிய சங்கரனாரின் "கை வந்த தீயும் " கையிலிருந்த அக்கினிச்சட்டியும் "தலை வந்த ஆறும்" சடைமேலிருந்த கங்கை நதியும் "கரந்ததெங்கே?" எங்கே மறைந்து போயின? அன்னை உன்னைக் கோபித்துக் கொள்வாளென்று எங்கே மறைத்து விட்டு வநதீர் சங்கரனாரே..? உம் கோலம் எல்லோருக்கும் தெரியுமய்யா... எங்கள் தாயை நீர் எப்போதும் ஏமாற்ற இயலாதய்யா....

பாடல் தொண்ணூற்றொன்பது

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

விளக்கம் :
கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய்..அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில் காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில் குயிலாகவும், கயிலையில்
மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.

சிறு வயதில் கற்ற ஓர் பாட்ல் நினைவுக்கு வருகின்றது. "அழகிய மயிலே அபிராமி... அஞ்சுக மொழியே அபிராமி... ஆதிக்கடவூர் அபிராமி... ஆனந்த வடிவே அபிராமி" என்று தொடரும் அப்பாடல்... மதுரை மாநகரில் இன்னிசை பாடும் குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும் காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய வடிவில் தென்படுகின்றாள் அல்லவா? "அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள் கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே... "கடம்பாடவியிடை
"குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்..."இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய் இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.

பாடல் நூறு

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே

விளக்கம் :
காதில் அணிந்துள்ள குண்டலங்களைத்த் தொடும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையை அணிந்து அம்மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே. கழையை ஒத்த நின் அழகிய நெடுந்தோள்களும், உன் கரும்பு வில்லும், இன்பப் போருக்குத் தேவையான திறனுடைய தேன் நிறைந்த ஐந்து மலர்க் கணைகளும், வெண்ணிறப் புன்னகையும், மானையொத்த விழிகளும் என் நெஞ்சத்தில் எப்போதும் இருக்கின்றன...உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கிய அந்தாதியை உதிக்கின்றவே என அழகுற
நிறைவு செய்தார் அபிராமிப் பட்டர். அன்னையின் திருவுரு எப்போதும் என் நெஞ்சத்தில் உதித்துக் கொண்டே இருக்கும். அவளை எப்போதும் நான் தொழுது கொண்டே இருப்பேன். இதை விடுத்து எனக்கு வேறு எதுவும் இல்லை என்பது பட்டரின் கொள்கை...

"குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி" காதில் அணிந்துள்ள குண்டலங்களைத் தொடும்படியான கொன்றை மாலையை அணிந்து அக்கொன்றை மலர்களால் மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே... தடித்ததொரு
கொன்றை மாலையை அன்னை அணிந்திருப்பதாக அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். அதன் பருமனால் அது அவள் காதில் அணிந்த குண்டலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது. அவளது மார்பகங்கள் கொன்றை மாலையைச்சுமப்பதால், கொன்றை மலரின் மணம் அவளது திருமுலைகளில் வீசுகின்றது...இவ்வரிகளை இன்னொரு நோக்கிலும் பொருள் கொள்ளலாம். கொன்றை மலரினை தன்
சடையில் அணிந்த சிவபெருமான் அழகிய குண்டலங்களை அணிந்த அன்னை அபிராமியைத் தழுவும்போது அக்கொன்றை மலர்கள் இருவர் நடுவிலும் வீழும்போது அது அன்னையின் மார்பில் பட்டு அதனால் அது கொன்றை மலரின் மணம் வீசுகின்றது என்றும் பொருள் பகர்வோர் உண்டு.

"கழையைப் பொருத திருநெடுந்தோளும் "கழையை ஒத்த உனது நெடுந்தோள்களும்... கழை என்பது மூங்கிலைக் குறிக்கும். இது கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ள சொல். "கருப்பு வில்லும்" உனது திருக்கரத்தில் நீ ஏந்திய கரும்பு வில்லும், "விழையப் பொரு திறல் வேரி அம்பாணமும் " இன்பப் போருக்குத் தேவையான திறன் கொண்ட தேன் நிறைந்த ஐந்து மலர்க்கணைகளும், "வெண் நகையும்" வெண்ணிற உன் புன்னகையும்... முத்து போன்ற உன் பற்கள் உன் புன்னகையால் வெளி தோன்றுவதால் உன் புன்னகை வெண்ணிறமெனத்
தோன்றுகின்றது... "உழையைப் பொரு கண்ணும் " மருளும் மானையொத்த உன் திருவிழிகளும், "நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே" எனது நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொரு காலையும் கதிரவன் எங்ஙனம் புதிதாய்த் தோன்றுகின்றானோ, அது போல் உன் திருவுருவும் என் நெஞ்சத்து எப்போதும் புதிதாய் உள்ளது... அன்னையே நீ என் நெஞ்சத்தை விட்டு நீங்குவதில்லை... உன்னை நான் என்றும் மறப்பதில்லை...அம்மா. அபிராமியே... அபிராமிப் பட்டரின் நெஞ்சத்தில் நிலையாகக் குடிகொண்ட நீ எங்கள் நெஞ்சத்திலும் வந்து எங்களை அருளாட்சி செய்தருள்வாயாக...

நூற்பயன்

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே
விளக்கம் 
அன்னையை, எங்கள் அபிராமி தேவியை, இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்தவளை, மாதுளம் பூ நிறங்கொண்டவளை, இப்பூமியைக் காப்பவளை, ஐவகை மலரம்புகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் தன் திருக்கரங்களில் ஏந்தியவளை, முக்கண்ணியை வணங்குவோர்க்கு எந்தத் தீங்கும் இல்லை....அபிராமி அந்தாதி நூலைத் தினமும் ஓதுவதால் கிட்டும் பலனை இப்பாடல் மொழிகின்றது... அன்னையைத் தொழுவோர்க்கு ஒரு தீங்குமில்லை...விளைவதெல்லாம் நன்மையே... ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக பலன் சொல்வார்கள்... அனைத்தும் அறியேன்.. அறிந்தவற்றை அப்பாடல்களிலேயே குறிப்பிட்டுள்ளேன். அறிந்தவர்கள் நமக்குரைத்தால் மகிழ்வேன்.

"எங்கள்" "ஆத்தாளை" எங்கள் அன்னையை "அபிராம வல்லியை" அபிராமியை "அண்டமெல்லாம் பூத்தாளை" இந்த அண்ட சராசரங்களைப் பெற்றெடுத்தவளை...."மாதுளம் பூ நிறத்தாளை" மாதுளம் பூவின் நிறங்கொண்டவளை... "புவி அடங்கக் காத்தாளை" இப்பூமியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து காப்பவளை.."ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை " தனது திருக்கரங்களில் ஐந்துவகை மலர்க்கணைகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் ஏந்தியவளை.. "முக்கண்ணியை" மூன்று நயனங்கள் கொண்டவளை... "தொழுவார்க்கு" தொழுதிடும் அடியவர்களுக்கு.. "ஒரு தீங்கில்லையே" எந்த ஒரு தீங்கும் இல்லவே இல்லை... அவர்கட்கு
விளைவதெல்லாம் நன்மையே என்னும் உறுதியோடு தனது அபிராமி அந்தாதியை நிறைவு செய்கின்றார் அபிராமிப் பட்டர்...அண்டமெல்லாம் படைத்து அதனைக் காத்து, தீயனவற்றை அழிக்கும் மூன்று நயனங்கள் படைத்த எல்லாம் வல்ல அன்னை அபிராமியே நம் அனைவருக்கும் வரும் தீங்கினை விலக்கிக் காத்திடட்டும். எங்களைக் கடைக் கண் கொண்டு பார் தாயே..... உன் திருவடி இணைகளே சரணம்... சரணம்......