http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, April 2, 2011

அன்னை அபிராமி அந்தாதி - பாகம்-3




அபிராமி அந்தாதி விளக்கவுரை 15

பாடல் ஐம்பத்தைந்து...

மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே


விளக்கம் :
ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிரும் திருமேனியையுடைய எங்கள் அபிராமி அன்னையை, என்றென்றும் மனமகிழ்ச்சியில்
திளைத்திருக்கும் ஆனந்த வடிவானவளை, வேதங்களின் துவக்கமாய், நடுவாய், அவற்றின் முடிவுமாய்த் திகழும் முதன்மையானவளை, உலக மாந்தர் எண்ணாது அழிந்தாலும், எண்ணினாலும் அதனால் அவளுக்கு ஆகவேண்டிய பொருள் ஒன்றும் இல்லை...உலக மாந்தர்கள் அன்னையின் முன்னால் துச்சம் என உணர்த்தும் பாடல்.. உலகைப் படைத்த அன்னையைத் தொழுதிடல் வேண்டும் என்பது மாந்தர் விதி... ஆயினும் அனைவரும் அதைப் பின்பற்றுவதில்லை... ஆலயங்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளில் முதன்மை வகிப்பவர் இறைவன் இல்லை எனும் கருத்தையுடையவர்...இதைப் போன்று பல்வேறு முகங்கள்... அனைத்தையும் படைத்தவள் அவள்... அவளை நீங்கள் எண்ணித் தொழுதாலும், எண்ணாமல் அழிந்தாலும், அக்காரணத்தால்,அவளுக்கு ஆகக்கூடிய நன்மைகள் ஏதுமில்லை.. தீமைகளும் ஏதுமில்லை என்பது
இதன் கருத்து..

"மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் " அழகிய கற்பனை இது... ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் ஒரு வடிவத்தைக் கொண்டவளை... எத்தனை அழகிய கற்பனை... ! ஒரு மின்னலையே கண்ணால் காண்பதற்கு இயலவில்லை... ஆனால் ஆயிரம் மின்னல்கள்.. (நண்பர்கள் "மின்னல் ஒரு கோடி "என்று காதலியை வர்ணித்த கவிஞரின் கற்பனை இதை விட மிகுதி என்று எண்ண வேண்டாம்.. ) ஒன்று சேர்ந்து வந்தால் அந்த ஒளியை நம்மால் காண இயலுமா?? முன்னர் ஒருமுறை சந்திர சூரியர்களுக்கு நடுவே நின்று ஒளிரும் சுடரொளி
என்று அன்னையைப் பாடிய அபிராமிப் பட்டர் இப்பாடலில் அவள் ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் வடிவுடையாள்.. அத்தனை பிரகாசம்...இதைக் கண்டதால்தான் மன்னரிடம் பௌர்ணமி என்றுரைத்து விட்டாரோ.? "அகம் மகிழ் ஆனந்தவல்லி " என்றென்றும் மனமகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஆனந்த வடிவுடையாளை... அன்னைக்கு ஏது துக்கம்??

சர்வலோகத்தையும் படைத்துக் காத்து இரட்சிக்கும் ஆதிபராசக்தியின் மனது என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது.. ஏனெனில் அவளே ஆனந்த வல்லி... ஆனந்தவடிவுடையாள்...முன்னர் ஒரு பாடலில் அன்னையே என் ஆனந்தம் என்று பாடிய பட்டர் இவ்விடத்து
அகம் மகிழ் ஆனந்த வல்லி எனப்பாடுவது சிறப்பு..."அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி " அருமையான
வேதங்களுக்குத் தொடக்கமாய், நடுவாய், முடிவாய்த் திகழும் முதன்மையானவளை... வேதங்களின் தலைவி, வேதங்களைத் தன் பாதச் சிலம்பாய் அணிந்தவள், வேதங்களின் தொடக்கமும் முடிவுமாய்த் திகழ்பவள் என்று பாடிய அபிராமிப் பட்டர், இவ்வரிகளில் வேதங்களின் தொடக்கமாய்.. நடு எங்குமாய்..முடிவாய்த் திகழும முதன்மையானவள் என்று வர்ணிக்கின்றார்.. (முதல்வி எனும் பதத்தை இதுவரை ஏன் தமிழக பெண் முதல்வர்கள் உப்யோகிக்கவில்லை?)  எல்லாவற்றிற்கும் முதன்மையானவள் அன்னை   அபிராமியே..."தன்னை.."அவள்தன்னை... "உன்னாது ஒழியினும் " நினையாது அழிந்தாலும் ...."உன்னினும்" எண்ணி மகிழ்ந்திருந்தாலும்... "வேண்டுவது ஒன்றில்லையே"அவளுக்கு ஆகவேண்டிய காரியம்  எதுவுமில்லையே...புகழுக்கெல்லாம் பிறப்பிடத்தைப் புவியிற் பிறந்தோர் புகழினும் என்...? புகழாது ஒழியினும் என்???

பாடல் ஐம்பத்தாறு

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே
விளக்கம் 
அன்னை அபிராமியானவள் ஒரே சக்தியாய் அரும்பி, பல்வேறு சக்திகளாய் விரிந்து, இவ்வுலகம் எங்கும் பரந்து நீக்கமற நிறைந்து நின்றாள்..பிற சக்திகளிடமிருந்து நீங்கி தனித்தும் நிற்பாள். இப்படிப்பட்ட தன்மையுடைய மஹாசக்தி... சிறியேனான என்றன் இதயத்தில் என்றென்றும் நீங்காமல் நின்று அருளாட்சி புரிகின்றாள்.. இதன் மாயமென்ன?? இம்மறைபொருளின் உண்மையை ஆலிலையில் துயின்ற திருமாலும், எம் தந்தையான சிவபெருமானுமே அறிவார்கள்...அழகிய ஒப்பீடு முதல் வரியில்... அன்னை ஆதிபராசக்தியானவள் உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் ஒரே சக்தியாய் நின்றிருந்தாள்... இதனை ஓர் அரும்பிற்கும்... பின்னர் அவளே மும்மூர்த்திகளைப் படைத்து, அவர்தமக்கு உதவிட, தானே முப்பெருந்தேவியராகப் பிரிந்த தன்மையை, அவ்வரும்பு பல இதழ் கொண்ட மலராக விரியும் நிலைக்கும் ஒப்பிட்டிருக்கின்றார்..

"ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் " உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் ஒரே பொருளாய்... தானே உலகாய்...
மஹாசக்தியாய் நின்றாள்... பின்னர் மும்மூர்த்திகளாக, முப்பெருந்தேவியராக விரிந்தாள்... உலகெங்கும் தானாய் நின்றாள்...நிறைந்து நின்றாள்... "அனைத்தையும் நீங்கி நிற்பாள்" எல்லாவிடத்தும் சக்தியாய் நின்றாலும், அவற்றினின்று நீங்கி ஆதிபராசக்தியாய் தனிந்து நிற்பாள்... எனவே அவளது தன்மையை அறிய இயலாது... இவ்விடத்திலிருப்பாள்.. இல்லாமலும் இருப்பாள்..இரண்டும் உண்மையே... எனவே இவளது தன்மையை அறிந்து கொள்ள உலகத்தோர் தவமியற்றுகின்றனர்.. தவமியற்றுவோரும் தாம் அறிந்த தன்மையை உலகுக்குப் புரியும்படி விளக்குகின்றனரா? இல்லை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவளை அறிந்து கொண்டதாக உரைத்தனர்... எனவே இவளது தன்மை... வடிவு... அனைத்தும் பாரோர் அறிந்து கொள்ள இயலாதது... இப்படிப்பட்ட தன்மையுடைய அன்னை அபிராமியானவள்.. "என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு" சிறியேன்... கடையேன்... மானுடனாய்ப் பிறப்பெடுத்தவன்..

பித்தனென்று உலகோரால் இகழப்படுபவனாகிய எந்தன் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்து அருளாட்சி செய்கின்றாள்... மறை நான்கையும் தெளிவுற உணர்ந்த பேரறிஞர்களாலும் அறிய இயலாத வடிவினலான என் அன்னை...எனது நெஞ்சத்தில் நீங்காது நின்று அருளாட்சி புரிகின்ற தன்மையின்.... இரகசியத்தின்..."இப்பொருள் அறிவார்" பொருளை அறிவோர்கள் யாரெல்லாம்??? எங்கும் நிறைந்து, நீங்கி நிற்கும் ஆதிபராசக்தி என்றன் நெஞ்சத்தில் நீக்கமற நிலைத்து நின்று அருளாட்சி புரியும் தன்மையின் மறைபொருளை அறிந்தவர்கள் யாரெனின்..."அன்று
ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே" யுகங்கள் முடிவடையும் வேளையில் ஆலிலையில் துயில் கொண்டு எழுந்தருளிய திருமாலும், எம் தந்தையான சிவபெருமானுமே.. .வேறு யாருக்கும் இம்மறைபொருள் தெரிவதில்லை....ஈசனுக்கும், மாலுக்கும் மட்டுமே தெரியும்... அபிராமிப் பட்டரின் நெஞ்சில் நிலைந்து நின்று அருளாட்சி புரிந்த அன்னை அபிராமியானவள் நம் நெஞ்சத்திலும் கொஞ்சம் நிற்க அவளின் திருப்பாதங்களை வேண்டுவோம்..

பாடல் ஐம்பத்தேழு

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே
விளக்கம் :
எம் தந்தையான சிவபெருமான் அளந்து உனக்களித்த இரு நாழி நெல்லைக் கொண்டு உலகம் எல்லாம் காக்கும்படி அறம் செய்யும் உன்னைப்
போற்றிப் பாடிவிட்டு பின்னர் வேறொருவரிடம் அதே பசுந்தமிழ்ப் பாமாலையைக் கொண்டு சென்று அவரைப் போற்றிப் பொய்யையும் மெய்யையும் சொல்லவைத்தாயே...இதுதான் உனது உண்மையான அருளா? வறுமையை நம்வாழ்விலிருந்து களையும் பாடல் இது... என்ன ஆனாலும் சரி..அன்னையைத் தவிர வேறுயாரையும் போற்றிப் பாடமாட்டேன் என்று ஒரு புலவன் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.. உலக பந்தத்திலே அவன் ஈடுபட்டிருக்கின்றான். மனைவி, மக்கள் என்று குடும்பம் பெரிதாகி விட்டது... அன்னையை மட்டுமே துதிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் வேளை.. அவன் மனைவி இல்லத்தின் வறுமையைச் சுட்டிக் காட்டுகிறாள். பசியால் வாடும் குழந்தைகளின் முகம் பார்க்கும் புலவன், புரவலரைத் தேடுகின்றான். அவரிடம் இருப்பதை ஏற்றியும், இல்லாததை இருப்பதாகவும் பாடுகின்றான். பொருள் பெறுகின்றான். தன் இல்லத்து வறுமையை ஒழிப்பதற்கு அவனுக்கு அதை விடுத்து வேறு வழி இருப்பதில்லை... அதைத்தான் சுட்டிக் காட்டுகிறார் அபிராமிப் பட்டர்.. (விட்டலனைப் பாடிவந்த துக்காராமின் கதையைக் கேட்டிருக்கின்றீர்களா.??)

இதை வேறு விதமாகவும் காணலாம். மானுடராய்ப் பிறந்து விட்டோம்.. கவி எழுதும் ஆற்றலைக் கலைமகள் தந்துவிட்டாள்.. ஆனால் மனது அவளை மட்டுமா பாடுகின்றது.? அழகுள்ள மங்கையரைப் பாடுகிறது.. அவர்தம் அன்பைப் பெற இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றது... (அதாங்க மின்னல் ஒரு கோடி...) காமம் விளையாடுகின்றது... அதையும் அபிராமிப் பட்டர் காண்கின்றார்..அன்னையே... நீயே தமிழைப் படைத்தாய்.. எனக்குக் கொடுத்தாய்.. என்னைப்போல் அவனுக்கும் கொடுத்தாய்... என்னிடம் வந்த தமிழ் உன்னைப் பாடுகின்றது...
அவனிடம் சென்ற தமிழோ எவளையோ பாடுகின்றது.., இதுதான் உன்னருளா? என்று அவளிடமே கேட்கின்றார்..

"ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு " எம் தந்தையான ஈசன் அளந்த இரு படி நெல்லைக் கொண்டு ... அய்யன் அளந்த கதை காஞ்சியில் நிகழ்ந்தது.. அதைக் கொண்டுதான் அன்னையானவள் உலகுக்கு அன்னமளித்தாள் என்பார்கள்.. (வரலாற்றை அறிந்தவர்கள் விரிவாக எழுதுங்களேன்.....) "அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி " அகிலத்தைக் காப்பதற்காக அறம் செய்யும் உன்னையும் போற்றிப் பாடிப் பின்னர்....""ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு " இன்னொருவரிடத்திலும் செம்மையான
பசுந்தமிழ்ப் பாமாலையைக் கொண்டு சென்று... தனது தேவைகளுக்காக இன்னொருவரிடத்திலே சென்று... "பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் "பொய்யையும் உண்மையையும் பாட வைத்தாயே... "இதுவோ உந்தன் மெய்யருளே "இதுதான் உனது அருளா?? இது உனக்குத் தகுமா? என அன்னையை வேண்டிக் கேட்கின்றார்..

சேர்ந்தே இருக்கும் வறுமையும் புலமையும் புலவனுக்கு மட்டுமே புரியும்... கலைமகள் குடிகொண்ட இடத்தில் அலைமகளைக் கொணர அவன்
படாத பாடு படவேண்டியிருக்கின்றது. நல்ல தமிழ்ப் புலவரான அபிராமி பட்டருக்கு இவ்வேதனை புரிகின்றது.. பார் அபிராமி... அன்றைக்கு நீ இரு படி நெல்லைக் கொண்டு உலகுக்கு அன்னமளித்தாய். மாந்தர் வாழ அறம் செய்தாய்..இன்று பார்.. .உன்னை மட்டுமே பாடிப் பிழைப்பதற்கு வழியில்லை...தமிழ்நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன... ஒரு சிலரின் பக்திப் பிடிவாதத்தால் மட்டுமே அவை உய்கின்றன... எங்கள் கிராமத்துக்கு அருகில் வைரவம் என்றொரு கிராமம் உள்ளது.. அன்னையானவள் சிவகாமியாக அருள்புரியும் பூமி அது... ஞானாதீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மனாக அவ்விடத்துக் கோயில் கொண்டுள்ளாள்.. மிகவும் பழமையான ஆலயம்.. பெரிய ஊராக
இருந்த இப்பகுதி பஞ்சம் காரணமாக மக்களே இல்லாத கிராமம் ஆகிவிட்டது..

ஆயினும் அவ்வாலயத்தில் அப்பனுக்கும் அம்மைக்கும் பணிவிடைகள் செய்து வந்த அந்தணர் குடும்பம் மட்டும் அக்கிராமத்தினை விட்டு நீங்காது இருந்தது..அவர்களுக்கும் வறுமை வந்தது.. தளரவில்லை... அம்மையையும் அப்பனையும் விட்டு அவர்கள் நீங்கவில்லை.. யாருமே செல்லாதிருந்த அவ்வாலயத்தின் மதிப்பு அவ்விடம் நிகழ்ந்த ஒரு களவால் வெளிஉலகுக்குத் தெரியவந்தது.. ஆலயத்திற்கென மன்னர்கள் அளித்ததாகக் கூறப்படும் பஞ்சலோகத்தால் செய்யப் பட்ட உற்சவ மூர்த்திகள் பல.. அவை திருடர்களால் களவாடப் பட்ட பின்னர்தான்
ஆலயத்தின் மதிப்பு பிறருக்குத் தெரிய வந்தது... அந்த ஐயரும் (அவர் பெயரை மறந்து விட்டேன்.. ஆலயத்தைப் பற்றி முன்னர் நாம் எழுதிய கட்டுரை ஒன்று இந்து முன்னணியின் பசுத்தாய் பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. திருக்கடவூரில் அபிராமிப் பட்டருக்கு நிகழ்ந்த நிகழ்வைப் போன்று இவ்வாலயத்திலும் கண்பார்வையற்ற புலவனுக்கு நிகழ்ந்த ஒரு நிகழ்வு உள்ளது..அது அடுத்த பதிவில்...) காவல்துறையினரால் சித்திரவதைக்குள்ளானார்.

அவ்வமயமும் அவர் தளரவில்லை.. பின்னர்அங்கே கிடைக்கப் பெற்ற உற்சவ மூர்த்திகள் செந்தூர் முருகன் ஆலயத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன..இன்றைய தினம் பலரும் வந்து செல்லும் பேராலயமாக அது மாறி விட்டது... இது நிகழ்ந்தது அந்த அந்தணக் குடும்பத்தின் பிடிவாத பக்தியினால் மட்டுமே...பிரதோச தினத்தன்று அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது... இடைக்காலத்தில் அக்குடும்பத்தாரை வறுமையில் வாட விட்டதுதான் உன் மெய்யருளோ?? என அபிராமி பட்டர் அன்னையைக்
கேட்கின்றார்... வந்து அருள் தந்திடம்மா.. உன் பக்தர்கள் வறுமையில் வாடுவதை நீ பொறுக்கலாமா? அன்றைக்கு உலகுக்கே படியளந்தாயே... இன்றைக்கு இவர்கள் வறுமையைக் கண் திறந்து பாரம்மா... எனப் பாடுகின்றார் அபிராமி பட்டர்.
பாடல் ஐம்பத்தெட்டு

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

விளக்கம் :
அதிகாலையில் அருணோதயத்தின் போது மலரும் தாமரையின் மீதும், எனது மனமென்னும் தாமரை மீதும் அமர்ந்திருக்கும் இளம் தாமரை மொட்டினைப் போன்ற திருமுலைகளையுடைய பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே...தகுதியுடைய உனது கண்கள் எனும் கருணைத்தாமரையும், உனது அழகிய முகத்தாமரையும், உன் திருக்கரங்களெனும் தாமரைகளும், உனது திருவடித் தாமரைகளும் அல்லாமல் வேறொருவரிடத்திலும் நான் தஞ்சம் புகேன்...கடந்த பாடலில் புலவர்களது தமிழ் பொருளுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் வேறொருவரிடத்துச் சென்று பொய்யும், மெய்யும் பாடுவதைச் சுட்டிக் காட்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து நான் உன்னைத் தவிர வேறொரு
இடத்தில் தஞ்சம் புகேன் எனப் பாடுவது அவரது பக்திப் பிடிவாதத்தைக் காட்டுகின்றது.. நெருப்பின் மீது நின்று பாடுகின்றேன்.. மன்னனைச்
சரணடைந்தால் உயிர் தப்பலாம்... ஆனால் நான் உன்னை மட்டுமே சரணடைவேன் என்பது இதன் உட்கருத்து...தாமரைகளையே  எல்லாவிடத்திலும் உவமையாகச் சொல்வது பாடலின் சிறப்பு..

"அருண அம்புயத்தும்" அருணன் என்பவன் சூரியதேவனின் சாரதி.. அவன் வரும் வேளையைத்தான் அருணோதயம் என்றழைக்கின்றோம்.. அருணன் உதயமாகும் வேளையில் மலரும் தாமரை மலரிலும்.... (அம்புயம் என்பது தாமரையைக் குறிக்கும்). "என் சித்த அம்புயத்தும்" என் மனமெனும் தாமரையிடத்தும்... "அமர்ந்திருக்கும் "வீற்றிருக்கும் ... "தருண அம்புயமுலைத் தையல் நல்லாள் " இளந்தாமரை...அதாவது தாமரை மொட்டு... தாமரை மொட்டுக்களையொத்த திருமுலைகளையுடைய பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே... "தகை சேர் நயனக் கருண அம்புயமும்" தகுதியுடைய உனது கண்களெனும் கருணைத் தாமரையும்.."வதனாம்புயமும் " உனது திருமுகத் தாமரையும் "கர அம்புயத்தும்" உனது திருக்கரங்களெனும் தாமரைகளும் "சரண அம்புயமும்" உனது திருவடித் தாமரைகளும் "அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே" அல்லாமல் நான் வேறெந்த இடத்திலும் தஞ்சம் புகேன்... எத்தனைத் தாமரைகள்.. தாமரையில் வீற்றிருப்பாள்... அவளது திருவடிகளும் தாமரைகள்... திருக்கரங்களும் தாமரைகள்... திருமுகமும் தாமரை... கருணை நிறைந்த திருக்கண்களும் தாமரை... திருமுலைகளோ தாமரை மொட்டுக்கள்....அழகிய திருப்பாடல் அல்லவா?? உன்னை விடுத்து வேறெந்தவிடத்தும்... வேறு யாரிடத்தும்... தஞ்சம் புகேன்... உன் மகனான என்னை நீ காக்க வேண்டுமானால் விரைந்து வா... வந்து நிலவைக் காட்டு...

அபிராமி அந்தாதி விளக்கவுரை 16

அடுத்த பாடலைக் காண்பதற்கு முன்...வைரவம் எனும் திருத்தலத்தில் அன்னை சிவகாமி நிகழ்த்திய திருவிளையாடலை இன்றைய தினம் உரைப்பதாக எழுதியிருந்தோம்... தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் தட்டார்மடத்திற்கு அருகே உள்ள ஊர்தான் வைரவம்
என்றழைக்கப்படும் வைராபுரி பட்டணம். இவ்வூரானது பார்புகழும் திருச்சீரலைவாயிலிருந்து தென்மேற்கில் 25 கி.மீ தொலைவில் உள்ளது.
இவ்விடத்தில் அன்னை சிவகாமி உடனுறையும் ஞானாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கி.பி 9 & 10ம் நூற்றாண்டுகளில், கொம்மடிக்கோட்டை சிற்றரசன் ராயன், அழகிய சுந்தரபாண்டியன் மற்றும் 7 மழவ சிற்றரசர்கள் கூடி இவ்வாலயத்தை அமைத்ததாக ஆலய கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தமிழகத்தில் ஈசனை மூலவராகக் கொண்ட திருக்கோயில்கள் 5200க்கும் மேற்பட்டன உள்ளன. அவ்வாலயங்களில் உறையும்
ஈசனாரின் திருநாமங்களில் ஞானாதீஸ்வரர் எனும் திருநாமத்தில் ஐயன் உறையும் ஆலயம் இது ஒன்றே என்பது ஆலயத்தின் தனிச்சிறப்பு. 
அன்னை சிவகாமி நிகழ்த்திய சிறு விளையாட்டினைக் காண்போம்.. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள், அரசு அதிகாரி ஒருவர் இவ்வாலயத்திற்கு வந்திருந்தார். தான் வழிபடும் நேரம் முடியும் வரை பிறரையெல்லாம் வெளியிலிருக்க உத்தரவிட்டார். அவ்வமயம் கண்பார்வை குறைந்த பாலசுப்பிரமணியக் கவிராயர் என்பவரும் வந்து சேர்ந்தார். அன்றாடம் அன்னையைப் பாடும் ஏழைப்புலவர்
அவர். அவர் வந்த சமயம் ஆலயத் திருக்கதவு தாளிட்டிருந்தது.. தன்னை உள்ளே அனுமதிக்கும்படி வேண்டினார். ஆனால் அனுமதி மறுக்கப் பட்டது.. உடனே கவிராயர், "சீவனுக்குத்தான் தெரியவில்லை. சிவனோ சிவனே என்றிருக்கிறான்.. சிவகாமியே உனக்குமா தெரியவில்லை?" என்று கேட்க, தாளிட்ட கதவு தானே திறந்தது. கவிராயர் உள்ளே நுழைந்ததும், அதிகாரிக்குக் கோபம் தலைக்கேறியது. தாளிட்ட கதவு தானே திறந்தது என்ற நிகழ்வை அவர் நம்பவில்லை.

கவிராயரை மிகவும் தூற்றினான். தான் ஒரு பூமாலையை அன்னையின் திருவாயிலில் கட்டுவதாகவும், பாட்டாலேயே கதவைத்திறந்த புலவன் தன் பாமாலையால்,இப்பூமாலையை மூன்று துண்டாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டான். பாடவைப்பவளின் சக்தியையும், பாடுபவனின் பக்தியையும் அறிந்தவனா அவன்?  ஆயினும் கவிராயருக்குத் தெரியாமல் ஒரு இரும்புச்சங்கிலியை பூமாலைக்குள் வைத்துக் கட்டிவிட்டான். தொங்கும் மாலை மூன்று துண்டாக வேண்டும் என்று அவன் பணிக்க, புலவனோ " நாலடி பாட மாலை நாலு துண்டாகும்" என்றான்.
இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட மாலை எங்கே துண்டாகப் போகின்றது என்றெண்ணிய அவ்வதிகாரி, நான்காவது துண்டைத் தன் தலையில்
ஏற்பதாகவுரைத்தான். கயமையை அறியாத கவிஞனும் பாட்டைத் துவங்கினான்.

"ஞாலம் புகழும் ஞானாதி ஈஸ்வரப்பா
பாதி நித்திய கல்யாணி சிவகாமி பதியில்
வாழும் சிவகாமியம்மையே நீ
வீர்சடாரி விளங்கு ரத்னமாரி வாலசிவகாமி
உன்வாசலில் கட்டிய மாலை துண்டு"

என்றதும் பூமாலையின் ஒரு பகுதி இரும்புச் சங்கிலியோடு துண்டாகி விழுந்தது. கீழே விழுந்ததும் உலோகச் சத்தம் கேட்டது. கூடியவர் அனைவரும் விக்கித்துப் போயினர்.. புலவனோ தொடர்ந்தான். "துண்டு" என்க இரண்டாம் துண்டு விழுந்தது. "துண்டு" என்க மூன்றாம் துண்டு விழுந்தது.  நான்காவது துண்டைத் தன் தலைமேல் ஏற்பதாகக் கூறிய அதிகாரி பதைபதைத்தான். ஓடிவந்தான். அறம்பாடும் கவியின் வாயைப் பொத்தினான். பாட்டை நிறுத்தும்படி வேண்டினான். தன்னைக் காப்பாற்றினால் அரச போக வாழ்வைத் தருவதாக வாக்களித்தான். புலவனோ,
"பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், பகலில் இரு கட்டி, இரவு ஒரு கட்டி" என்றான். மூன்று வேளை உணவு மட்டுமே இவ்வுயிர் வாழ்வதற்குப் போதும் என்பதை உணர்த்தினான். ஆனபோதிலும் அறப்பாட்டை முடித்தே தீருவேன் என்றும் கூறிவிட்டான். மன வருத்தத்தில்
ஆழ்ந்த அதிகாரியின் கதறல் புலவனை இரங்க வைத்தது. எனவே நான்காவது முறை "துண்டு" என்னாமல், "சாலவே" என்று பாட்டை முடித்தான். எனவே பூவோடு விழுந்த சங்கிலி அதிகாரியின் தலையைத் தாக்காமல், அன்னையின் திருவருளால் தலைப்பாகை மீது பட்டு விழுந்தது. அகங்காரத்தால் வந்த வினை, அகங்காரத்தின் அடையாளமான தலைப்பாகையுடன் புலவனின் கருணையால் நின்றது..

சரி.. இனி அபிராமியைக் கவனிப்போம்.. 

பாடல் ஐம்பத்தொன்பது

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே
விளக்கம் 
தனிப்பெருமை பெற்ற நீண்ட கரும்பு வில்லையும், ஐந்து மலரம்புகளையும் கொண்டு நிற்கும் அபிராமி அன்னையே... உன்னை விடுத்து வேறு தஞ்சம் இல்லையென்று அறிந்திருந்தும்,உன்னையடையும் தவநெறிகளை நெஞ்சத்திற்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்று நினையாமலேயே இருக்கின்றேன்..பஞ்சை விட மெல்லிய பாதங்களைக் கொண்ட பெண்டிர், தம் மக்கள் செய்த தவறுகளுக்காக அவர்களை அடிக்க மாட்டார்கள் அன்றோ?? அதுபோல் நீயும் என்னைத் தண்டியாது அருள வேண்டும். பெற்ற தாய் தாம் பெற்ற மக்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பதில்லை... அவர்களின் அன்பு மிகுதியால் அக்காரியத்தை அவர்கள் செய்வதில்லை.. மானுடக்குலத்தில் உதித்த இப்பெண்களே இவ்வாறெனின், அன்னையே... நீ உலக மாந்தருக்கெல்லாம் தாய்... என்னை நீ தண்டிப்பாயோ??? இல்லவே இல்லை..அது நீ பெருங்கருணை பெற்றவள். எனவே என்னைத் தண்டிக்க நீ விரும்புவதில்லை என்பது பாடலின் உட்கருத்து..

மனிதர்களின் அன்பு மற்றும் தெய்வத்தின் அன்பு இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.. மானுடர் என்றாகிலும் ஓர்நாள் தாம் அன்புவைத்தவர் மீது, வெறுப்பு ஏற்படும் நிலைக்குத் தள்ளப் படலாம். ஆனால் அன்னை அபிராமியானவள் நம் மீது வைத்துள்ள அன்பு கரையற்ற கடல் போன்றது. அதனால்தான் அவளை "கருணாசாகரி.."எனப் போற்றுகின்றனர்.. கருணைக் கடல் அவள்.. புனித விவிலியத்தில் இயேசு நாதர் ஓர் உவமை சொல்கின்றார்.."உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" இறைவனது அன்பு மேலானது.. "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்பது போல் அன்னை நம் மீது வைத்துள்ள அன்பை மானுடராகிய நம்மால் அறிந்து கொள்ள இயலவில்லை.. எனவேதான் மாற்றுப்பாதையில் சென்று விழுந்து விடுகின்றோம்..அவ்வமயமும் அவள் நம்மைக் கைவிடுவதில்லை.. நம்மைக் கைதூக்கி விடுபவளும் அவளேதான்.

"ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் " ஒரு நீண்ட கரும்பு வில்லையும் - அது தனித்தன்மை வாய்ந்த வில்.. ஐந்து
மலரம்புகளையும் கொண்டு நின்றவளே..அபிராமியே... ."தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று " உன்னை விடுத்து.. உன் திருவடித்தாமரைகளை விடுத்து வேறு தஞ்சமே இல்லை என்று அறிந்திருந்தும், "உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்" உன்னை அடைவதற்குரிய தவ நெறிகளைப் பயில என் நெஞ்சத்தில் நினையாதிருக்கின்றேன்.. "அறியார் எனினும்" அறியாதவர் ஆனபோதிலும் "பஞ்சு அஞ்சு மெல்லடியார்" பஞ்சை விட மென்மையான பாதங்களையுடை மானுடப் பெண்டிர் ... பஞ்சும் அஞ்சும்படியான  பாதங்களையுடையோர்....”அடியார் பெற்ற பாலரையே” தாம் பெற்ற குழந்தைகளை அடிக்க மாட்டார்களே..! அன்னையே...நீயோ உலகத்திற்கே
அன்னை... நானோ தவறிழைக்கும் கடை மானுடன்.. என்னையும் நீ தண்டிக்காது அரவணைத்திட வேண்டும்...

பாடல் அறுபது

பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே

விளக்கம் :
பாலினும் இனிய சொற்களையுடைய அபிராமி அன்னையே... குளிர்ச்சியான உன் திருவடித்தாமரைகளை வைக்க, திருமாலை விட, அமரர்கள் அனைவராலும் வணங்கப் படும் கொன்றைப் பூவை சடைக்கணிந்த சிவபெருமானின் சடையையும் விட, உன்னடியின் கீழ் நின்று உன் புகழினைப் பாடும் நான்கு வேத பீடங்களையும் விட, நாயைப் போன்ற அடியேனான எனது நாற்றம் வீசும் தலை சிறந்ததோ?? அன்னை தனது திருவடித்தாமரைகளை அபிராமிப் பட்டரின் தலைமேல் வைத்ததாகப் பலமுறை குறிப்பிட்ட அவர், இவ்விடத்து, என்றன் தலைமீது உந்தன்
திருப்பாதங்களை வைத்தமைக்கு அது என்ன சிறப்பைப் பெற்றதம்மா? என வினவுகின்றார்.. “பாலினும் சொல் இனியாய்” பாலைவிட இனிமையான சொற்களைப் பேசும் அபிராமி அன்னையே... “பனி மாமலர்ப் பாதம் வைக்க” குளிர்ச்சியான மலரினைப் போன்ற உனது திருப்பாதங்களை வைக்க... “மாலினும் “ திருமாலை விட

“தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும்” கொன்றைப்பூவை தனது சடையின் மேல் அணிந்து,அமரர்கள் அனைவராலும் வணங்கப்படும் சிவபெருமானின் சடையின் மேல் பாகத்தை விட, “கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் “ உனது திருவடியின் கீழ் நின்று பாடும் பண்பையுடைய வேத பீடங்கள் நான்கை விட, “சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே” நாயைப் போன்ற அடியேனான எனது நாற்றம் நிறைந்த தலை சிறந்ததோ? நீ உன் திருவடித்தாமரைகளை என் தலை மீது வைத்து விட்டாயே... என் தலை நாயின் தலை போன்றது... நாற்றம் நிறைந்தது... வேதங்களின் மேல் உந்தன் திருவடிகளை வைத்தாய்... ஈசனாரின்
சடைமுடி மீது உந்தன் திருவடிகளை வைத்தாய்... ஆயினும் என்றன் தலை மீதும் வைத்து விட்டாயே.. அவற்றுடன் ஒப்பிடத்தகுந்ததா அடியேனின் தலை... ? என அன்னையை வினவுகிறார் அபிராமிப் பட்டர்.

அபிராமி அந்தாதி விளக்கவுரை 17

.
தமிழகத்தில் ஞானாதீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்ட ஒரே திருத்தலம்.. தஞ்சை பெரிய கோவிலுக்கும் மூத்த ஆலயம். ஆலயத்தைப் பற்றி மேலும் சில குறிப்புகளைத் தந்துவிடுகின்றேன்.. இவ்வாலயத்தில் தென்படும் கல்வெட்டுக்கள் 36. படிக்கப்பட்டவை 17 மட்டுமே.. மற்றவை யாராலும் புரிந்து கொண்டு படித்தறியப்படவில்லை. அரசாங்கமும் அதற்குரிய முயற்சியினை மேற்கொள்ளவில்லை. இந்த பூமி வந்தோர்க்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்குவதால் ஞானாதீஸ்வரர் என்றழைக்கப் பட்டார். ஞானத்திற்கு ஆதியான ஈசுவரன் எனும் பொருள் படும் பெயர் அது. அருணகிரி நாதரின் திருப்புகழில் போற்றப்படும் முருகன் சன்னிதிகளில் "வயிரவி வனம்" என்று குறிப்பிடப்படும்
திருத்தலம் இவ்வைரவமே ஆகும்.. மழவச் சிற்றரசர்கள் இவ்வாலயத்திற்கு 26 உற்சவத் திருமேனிகளை வழங்கியிருக்கின்றனர்.

ஆயினும் பல்வேறு திருட்டுச் சம்பவங்களால் காணாமல் போய் 1951ல் 16 உற்சவத் திருமேனிகள் மட்டுமே இருந்திருக்கின்றன. பின்னர் 1969ல் 3 சிலைகள் காணாமல் போய் இருக்கின்றன. பின்னர் 1984ல் களவாடப்பட்ட 9 சிலைகளில் தூக்கிச் செல்ல இயலாத அளவுக்குக் கனமான 4 சிலைகள் கோயிலுக்கு அருகில் புதைக்கப் பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டு மீட்கப் பட்டன. பின்னர் 1994ல் மேலும் 2 சிலைகள் மீட்கப் பட்டன. தற்போது 10 உற்சவத் திருமேனிகள் மட்டுமே உள்ளன.. ஆலயத்தின் மொத்தச்  சொத்துக்களின் மதிப்பு என்ன என்பது யாருக்குமே
தெரியவில்லை. ஒரு கல்வெட்டில் சங்கலாரப்பன் என்பவர் அன்னைக்கு நவரத்தினங்கள் பதித்த 79 ஆபரணங்கள் வழங்கிய செய்தி உள்ளது. ஆனால் அவ்வாபரணங்கள் இப்போது எவ்விடம் உள்ளது என்பதே தெரியவில்லை. அந்நியர் படையெடுப்பால் அவை களவாடப் பட்டனவா அல்லது கொள்ளையருக்கு அஞ்சி ஆலயத்தில் எங்காவது புதைக்கப் பட்டதா என்பது தெரியவில்லை. ஒரு கல்வெட்டுச் செய்தி இவ்வாறு தெரிவிக்கின்றது.

"பூமாது விரும்பிப் புகழ
மயிலிறகுடந்தையுக தானினிது உயர
தாரறிவுந் தழைத்திட கயலிணையிட்ட கல்லடியில்
ஆலய தனமும் ஆபரணங்களும் அடங்குக...
"
இதன் செய்தி யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை.. எனவே அச்செய்தியின் படி ஆலயத்தில் எங்காவது மறைக்கப் பட்டிருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது.. 1961 அரசாங்க ஆவணத்தின் படி ஞானாதீஸ்வரருக்குச் சொந்தமாக 1 ஏக்கர் 84 செண்ட் நஞ்சை, 50 ஏக்கர் 35 செண்ட் புஞ்சை, 45 செண்ட் தென்னந்தோப்பு, ஒரு நந்தவனம், ஒரு வீடு ஆகியவை இருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால் அவை தற்சமயம் யாரால் அனுபவிக்கப் பட்டு வருகின்றது என்பதும் தெரியவில்லை.. சிவனடியார்களின்... அன்னை சிவகாமியின் அன்பர்களின் பெருமுயற்சியால் 07.12.1994 அன்று ஆலயத்துக்குக் கும்பாபிடேகம் நடந்தது.. ஆலயம் புனரமைக்கப் பட்டது.. அதன்பின்னரே ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை ஆரம்பமானது..அனைவரும் வைரவம் சென்று அன்னை சிவகாமியையும் ஐயன் ஞானாதீஸ்வரரையும் வழிபட்டு வளம் பெறுவோம்.. 

இங்குள்ள சிவகாமி அன்னையின் திருமேனி மிகவும் பழமையாகி விட்டதால் அதன் மூக்கின் ஒருபுறம் சிறிதளவு தேய்ந்து விட்டது.. இதனால் அத்திருமேனியை மாற்றிவிட முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அன்றைய தினமே அன்னை சிவகாமி ஆலய குருக்களின் கனவில் தோன்றி "உன் தாய் வயதாகி விட்டாள் என்பதற்காகத்  தாயை நீ மாற்றிவிடுவாயா?" என்று கேட்டாளாம். எனவே அந்த முடிவு கைவிடப்பட்டது.. இன்றும் சற்று உற்றுக் கவனித்தால் அன்னையின் திருமேனியில் அந்த பழைமையான அழகினைக் காணலாம்...


பாடல் அறுபத்தொன்று

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே
விளக்கம் 
அபிராமி அன்னையே... மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகளே..சிவந்த விழிகளையுடைய திருமாலின் அன்புத் தங்கையே... நாயைப் போன்ற கீழோனான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி, விரும்பி இவ்விடம் வந்து, நீயே நினைவில்லாது என்னை ஆண்டு கொண்டாய். உன்னை உள்ளபடியே அறிந்துகொள்ளும் ஞானத்தையும் எனக்குத் தந்தருளினாய்.. இதற்கு நான் என்ன பேறு பெற்றேன்..மணிவாசகப் பெருமான் தனது திருவாசகத்தில் குறிப்பிடும் அடிகள் நினைவுக்கு வந்தன.. "நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே"..அதன்பொருள்தான் இப்பாடலில் மறைந்திருப்பதாக உணர்ந்தேன். தெருக்கோடியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு நாய் குட்டிகளை ஈன்றிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.. நாம் அவ்விடம் போய் வரும்போது, "நம் வீட்டு நாய்க்குட்டி எவ்வளவு அழகாக இருக்கின்றது...ஆனால் இந்த நாய்க்குட்டி எவ்வளவு அசிங்கமாக இருக்கின்றது" என்று எண்ணுவோம்.. அந்நாய்க்குட்டி நம் காலைச் சுற்றி வந்தால் "தூரப்போ நாயே" என விரட்டுவோம். மாநகராட்சிக்கு அலைபேசியில் தகவல் தந்து அந்நாய்க்குடும்பத்தை இல்லாதபடி செய்து விடுவோம்..

மாநகராட்சி வண்டி வந்து அந்நாய்க்குட்டிகளைத் தூக்கிச் செல்லும் காட்சியைக் கண்டு அந்தத் தாய் நாய் சும்மா இருக்குமா? நாம் நமக்கென்ன என்று இருப்போம். அல்லது தெரு சுத்தமாகிறதே என்று மகிழ்வோம்.. ஆனால் அந்தத்  தாய் நாய்.?? குரைக்காதா?? விரட்டாதா?? நாயாக இருப்பினும் அதற்கும் ஒரு தாய் உண்டல்லவா? அத்தாயின் அன்பு தன் குட்டி நாய்மீது குறைவதுண்டோ? இன்னொரு உதாரணம்.. தெருவிலே பிச்சை எடுக்கின்ற அழுக்கு உடைகளை அணிந்த சிறு குழந்தைகளைக் காணுங்கள். நம் மகிழ்வுந்தை நோக்கி அவர் வரும் வேளை, நாம்
அவர்களை விரட்டி விடுவோம்.. ஆனால் அவர்களின் தாய் அவர்களை வெறுப்பதுண்டோ? நீ குளிக்கவில்லை.. அழுக்குப் பிள்ளை அருகே வராதே ! எனத் தடுப்பதுண்டோ? இல்லையல்லவா?? ஆனால் இறைவன் அத்தாயை விட சிறந்த குணம் படைத்தவன். தாயின் அன்பைவிட இறையன்பு உயர்ந்தது... அன்னை அபிராமியானவள் அபிராமிப் பட்டரை ஏன் தேடி வந்தாள்? அவர் மீது அவள் கொண்ட அன்பினாலேயே...

"தாயே" அபிராமி அன்னையே... "மலைமகளே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகளே... "செங்கண்மால் திருத்தங்கச்சியே" சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே..."பவள வாய் கமலச் செங்கண்" என்னும் ஆழ்வார்ப் பாசுரம் நினைவுக்கு வந்தது... தங்கையை தங்கச்சி என்று சொல்லலாம். அதென்ன திருத் தங்கச்சி..?? ஆதிபராசக்தியாக திருமாலைப் படைத்த தேவிதான் மலைமகளாக அவதரித்து ஈசனை மணந்து கொண்டபோது திருமாலின் தங்கையாகின்றாள். அச்சமயத்தில் அவளுக்குரிய மதிப்பை ஏற்றியுரைக்க "திருத்தங்கச்சி" என
அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். மேலும் மற்ற தங்கையரிடமிருந்து நாராயணனின் தங்கை வேறுபட்டவள். உயர்ந்தவள் என்று குறிப்பதற்காகவும் இவ்வண்ணம் உரைத்தார். "நாயேனையும் இங்கு ஒரு பொருளாக " நாயைப் போன்ற கேவலமான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி... இந்த காலத்தில் நாயையெல்லாம் கேவலம் என்று எண்ணுதல் தவறு என்று நினைக்கின்றேன் (தெருநாய்களைத் தவிர..
ஆனால் அவைதான் அன்பு மிக்கவை)..

நம் கிராமத்தில் ஆடுகள் நிறைய வைத்திருப்போர் அவ்வாடுகளை மந்தையாக மேய்ப்பதற்கு அழைத்துச் செல்வதுண்டு.. ஆனால் ஒரேயொரு ஆடு வைத்திருப்போர், அதை ஒரு கயிற்றால் கட்டி அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, மேய்ப்பதற்கு அழைத்துச் செல்வார்கள்.. பெருநகரில் அதிகாலை, சங்கிலியால் நாயைப் பிடித்துக் கொண்டு  நடைப் பயிற்சி மேற்கொள்ளும் அன்பர்களைக் கண்டால் எனக்கு, கிராமத்துக்
காட்சிகளே நினைவுக்கு வரும்.. "ஏன் நாயை மேய்க்கிறாங்க...?" என்று வியப்பேன். மேலும் நமக்கு வீட்டுக் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்
கொடுக்கக் கூட பணம் இருக்காது.. ஆனால், அவர்கள் நாயை மகிழ்வுந்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர்... சரி.. இந்த இடத்தில் நாம
பழையகாலத்தில் நாய்களுக்கு இருந்த நிலையை மனத்தில் கொள்வோம்.. "நயந்து வந்து" விரும்பி இங்கே வந்து "நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் " நீயே நினைவில்லாது தன்னை மறந்து என்னை ஆண்டு கொண்டாய்...அதுதான் அபிராமி  பட்டர் பெற்ற பேறு "பேயேன்" பேயேனாகிய எனக்கு ... இந்த வழக்குச் சொல் கிராமத்து மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.

. யாரையாவது திட்டும்போது "அட பேயா" எனத் திட்டுவதுண்டு.. எங்காவது ஏமாந்து வந்து நின்றால், " நீ பேயன் தான.." என்று சொல்லும் வழக்கும் உண்டல்லவா? பேயேன் என்றால் அறிவில்லாதவன்... பேயைப் போன்றவன்... என்று பொருள் கொள்க.."நின்னை உள்ள வண்ணம்" உன்னை உள்ளபடியே...."அறியும் அறிவு தந்தாய் "அறிந்து கொள்ளும் அறிவினை எனக்குத் தந்தருளினாய்.. "என்ன பேறு பெற்றேன்" இதனைப் பெறுவதற்கு நான் என்ன பேறு பெற்றேனோ...?

பாடல் அறுபத்திரண்டு

தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே
விளக்கம் 
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தை அழித்து, மதங்கொண்டு சிவந்த கண்களையுடைய யானையின் தோலை தன் மேனியில் போர்த்திய சிவபெருமானின் திருமேனியை அடைய, உன் திருமுலைகளை அம்பாகக் கொண்டு குறிவைத்த நாயகியே...பொன்னைப் போன்ற சிவந்த திருக்கரங்களில், கரும்பு வில்லையும், மலரம்புகளையும் கொண்ட உனது திருக்கோலம் எப்போதும் என் சிந்தையில் நிற்கின்றது... அபிராமிப் பட்டர் அடிக்கடி ஈசனை அம்மையானவள் தோற்கடித்த விதத்தைப் பாடுகின்றார்.. யாராலும் வெல்லப்படாதவனாலும் (மன்மதனாலும்) கூட வெல்லமுடியாத ஈசனை உன் திருமுலைகளால் வெற்றி கொண்ட அன்னையே .. எனப் பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அன்னையின் கொங்கைகளை அம்புக்கு ஒப்பிடுகின்றார்..

ஈசன் பொன் நிறைந்த மேருமலையை வில்லாக வளைத்தான்..முப்புரங்களை அழித்தான்.. மதங்கொண்ட யானையின் தோலையுரித்து தன்
ஆடையாக்கிக் கொண்டான்.. நீ என்ன செய்தாய்.. அவனை எதிர்த்து இரு அம்புகளை விட்டாய்.. அவை... உன் கொங்கைகள்... அவனும் வீழ்ந்தான்.. அவனது இடப்பாகம் நீ குடியேறிவிட்டாய்.. என்று பாடுகின்றார்... அன்னையின் வெற்றி, ஈசனது வெற்றியை ஒன்றுமில்லாதது ஆக்கி விடுகின்றதே என வியக்கின்றார்..(இன்னிக்கு நாட்டுல பலபேர் நிலை அதானே அப்படின்னு சிலர் முணுமுணுப்பது கேட்கின்றது)
"தங்கச் சிலை கொண்டு தான் அவர் முப்புரம் சாய்த்து" பொன்மலையாம் மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை அழித்து, "மத வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் " மதம் நிறைந்த, வெம்மையான கண்களைக் கொண்ட யானையின் தோலை தன் மேனியின் மீது போர்த்திய செஞ்சேவகனான ஈசன் "மெய்யடையக்" திருமேனியையடைய.. அவனது திருமேனியின் இடப்பாகத்தை அடைய... "கொங்கைக்
குரும்பைக் குறியிட்ட நாயகி" கொங்கையெனும் அம்பினைக் கொண்டு குறிவைத்த நாயகியே...

அபிராமி அன்னையே... ஆதிபராசக்தியே... "கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் " சிறந்த பொன்னையொத்த உனது சிவந்த திருக்கரங்களில் நீ ஏந்திய கரும்பு வில்லும், மலர் அம்புகளும்.. "எப்போதும் என் சிந்தையதே" எச்சமயமும் என் சிந்தையில் நீங்காதிருக்கின்றன....அன்னையை உன் உருவம் என் சிந்தையில் நீங்காது எனக் குறிப்பிடுகின்றார். ஏன் கரும்பு வில்லையும், மலரம்புகளையும் குறிப்பிடவேண்டும்..? ஏற்கெனவே
சொன்னது போல், என் மனமென்னும் கரும்பை நீ வில்லாகக் கொள்... என் இந்திரியங்களை உன் கணைகளாகக் கொள்...அப்படி உன்னைக் காணும் திருக்கோலம்தான் நான் என்றென்றும் சிந்தையில் கொண்டிருக்கும் திருக்கோலம். என் மனமும் உன் கையில்.. என் இந்திரியங்களும், அவற்றின் இச்சைகளும் உன் கையில்... அபிராமி... நீயே வழி நடத்து....தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்


அபிராமி அந்தாதி விளக்கவுரை 18

பாடல் அறுபத்து மூன்று


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்

கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே

விளக்கம் :
நற்கதிக்குச் செல்லவேண்டிய இடத்திற்கு நாம் தேறிச் சென்றடைவதற்குரிய வழியைக் காட்டுபவள் அன்னை அபிராமியே ஆகும். ஆறு
சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் இவளே என்று அறிந்திருந்தும், வேறு சமயங்கள் உண்டு என்று கொண்டாடும் வீணர்களின் செயலானது ஒரு மலையை சிறு தடியினைக் கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலைப் போன்றதாகும்..சமயச் சண்டைகள் அக்காலத்திலேயே மிகவும் பயங்கரமானதாக நடைபெற்றிருக்கின்றன.. பெரும்பாலும், சமண சமயத்திற்கும், சைவ சமயத்திற்கும் இடையேயான பூசல்கள், சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையேயான பூசல்கள் என சமயப் பூசல் தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றன... இந்து சமயத்தை நெறிப்படுத்திய ஆதி சங்கரர் ஆறு வகையான வழிமுறைகளை முறைப்படுத்தினார், அவை, சக்தியை முதன்மைப் படுத்தும் சாக்தம், சிவபெருமானை முதன்மைப் படுத்தும் சைவம், திருமாலை முதன்மைப் படுத்தும் வைணவம், கணபதியை முதன்மைப் படுத்தும் காணபத்யம், முருகனை முதன்மைப் படுத்தும் கௌமாரம், சூரியனை முதன்மைப் படுத்தும்
சௌரம்.


அபிராமிப் பட்டர் இவ்வாறு சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் அன்னை அபிராமியே எனக் குறிப்பிடுகின்றார். "தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் " நற்கதிக்குச் சென்றடைவதற்கு, தேறுவதற்குரிய நெறிமுறைகளைத் தருபவள் அன்னை
அபிராமியே.... "சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்" அவளால் நெறிப்படுத்தப் பட்ட ஆறு சமயங்களுக்குத் தலைவியாய் இவளே இருப்பதை அறிந்திருந்தும்... “வேறும் சமயம் உண்டு என்று” வேறு சமயங்கள் உண்டு.. அவையே உயர்ந்தது என்று ..”கொண்டாடிய வீணருக்கே..” கொண்டாடும் வீணர்களின் செயலானது... “குன்றில் கொட்டும் தறி குறிக்கும்” மலையை சிறு தடியைக்
கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலுக்கு ஒப்பானதாகும்..இன்றைக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரக்கூடிய மோசமான நிகழ்வு இதுதான்..



கல்லையும் மண்ணையும் கடவுளென்று வணங்காதீர்கள்.. எங்களிடம் வாருங்கள்..உண்மையான கடவுளைக்காட்டுகிறேன் என்று பேசி மதமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி பெரும்பாலும் நடந்து வருகின்றது.. அந்தக் காலத்திலேயும் இதைப் போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.. அதைத்தான் அபிராமிப் பட்டர்.. எங்கள் அன்னை வழிப்படுத்திய சமயங்கள் ஆறு... அவை ஆறுக்கும் தலைவி இவளே...

இதை விடுத்து வேறு சமயங்களைப் பரப்ப நினைக்கும் அறிவிலிகளே... உங்களால் அது முடியாது... உங்கள் செயல் முட்டாள்த்தனமானது.. மலையை சிறுதடியைக் கொண்டு தகர்க்க நினைக்கும் செயலைப் போன்றது.. எனவே அம்முட்டாள்த்தனத்தை விட்டொழியுங்கள்.. என்கிறார்..

.
பாடல் அறுபத்து நான்கு


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு

பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே



விளக்கம் :

வீணாகப் பலிகளை வாங்கும் மற்ற தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு செய்ய மாட்டேன்.. உன்னிடம் மட்டுமே அன்பு செய்வேன்.
உன்னைப் புகழும் புகழ்ச்சியைத் தவிர வேறு யாரையும் புகழ மாட்டேன்.. மண்ணிலும், விண்ணிலும், நான்கு திசைகளிலும்,  எல்லாவிடத்திலும் உனது திருமேனிp  பிரகாசத்தையன்றி வேறெதுவும் பார்க்க மாட்டேன்..கடந்த பாடலில் வேறு சமயங்கள் உயர்ந்தவை எனப்பேசும் வீணர்களின் செயலைப் பற்றி விமர்சித்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், மற்ற தெய்வங்களின் செயல்களைப் பற்றிப் பேசுகிறார்.. தேவையான நற்பலன்களை அளிக்க இயலாத தெய்வத்திற்கு செய்யப்படும் பூசனைகள், பலிகள் அனைத்தும் வீணே... அதைத்தான் வீணே பலிகவர் தெய்வம் எனக் குறிப்பிடுகின்றார்.



“வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று “ தனக்கு பலி கொடுப்பவனின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் வீணாக பலிகளை வாங்கும் சிறு தெய்வங்களிடம் சென்று “மிக்க அன்பு பூணேன் “ அவர்கள் மேல் அன்பு பூண மாட்டேன்.. எனக்குத் தேவையானவற்றைத் தருவதற்குரிய சக்தியில்லாத வேறு தெய்வங்களிடத்து நான் ஏன் அன்பு பூணவேண்டும். நான் அதைச் செய்ய மாட்டேன்.. ஏனெனில் “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் “ நான் உன்மேல் அன்பு பூண்டு கொண்டேன்.. எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் அன்பு அன்னையே...அபிராமியே... உன்மேல் மட்டுமே அன்பு பூண்டிருக்கின்றேன்.. “நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும்” எப்போதும் உன்னைப் புகழ்வதைத் தவிர வேறெதுவும் செய்ய மாட்டேன்.. வேறு யாரையும் புகழ மாட்டேன்..



“திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே”மண்ணுலகிலும் சரி..விண்ணுலகிலும் சரி.. நான்கு திசைகளிலும் சரி...எல்லாவிடத்திலும் சரி. உனது திருமேனிப் பிரகாசத்தையன்றி வேறெதுவும் காண மாட்டேன்... “எங்கெங்கு நோக்கினும் சக்தியடா” எனும் முண்டாசுக் கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன... அன்னையின் திருமேனிப் பிரகாசமே எல்லாவிடத்திலும் தனக்குத் தென்படுவதாக உரைக்கும் அபிராமிப் பட்டரின் இப்பாடல் நம் பக்தியின் பலத்தை அதிகரிக்கும்... பாடிப் பாருங்கள். பக்தியில் இன்புறுங்கள்...

மீண்டும் சந்திப்போம்..


பாடல் அறுபத்தைந்து..


ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்

தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே

விளக்கம் :
மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட பெருவெளியும் காணும்படி மன்மதனின் தேகத்தை தகனம் செய்த தவத்திற் சிறந்த சிவபெருமானுக்கு, நீண்ட வலிய திருக்கரங்கள் பன்னிரண்டும், செம்மையான திருமுகங்கள் ஆறும் கொண்ட சிறந்த அறிவுடைய திருமகனான முருகன் மகனாகப் பிறக்கும் சக்தியைக் கொடுத்தது அபிராமி அன்னையே உன் வல்லமை அல்லவா? காமதேவன் மன்மதனை ஐயன் தம் நெற்றிக்கண் திறந்தெரித்த திறமும், அத்திறம் அம்மையிடம் தோற்றுப் போன விதமும் மீண்டும் மீண்டும் அபிராமிப் பட்டரால்
பாடப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? வாழும் கலை ஆழ்நிலைத் தியானப் பயிற்சி முகாமுக்குச் சென்றிருந்தபோது குருதேவர் கூறிய சில செய்திகள் இதற்குப் பொருந்துகின்றன. நம் உடலின் சக்திச் சக்கரங்களைப் பற்றி விளக்கும் போது சொன்ன சில செய்திகளின் சாராம்சம் இது.. ஒவ்வொரு சக்கரத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை விளக்கிய அவர் ஒன்றிருந்தால் மற்றொன்றில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். காமம் இருக்கும் இடத்தில் ஆக்க சக்தி இருப்பதில்லை.. ஆக்க சக்தி இருக்குமிடத்தில் காமம் இருப்பதில்லை. இது ஸ்வாதிஷ்டனா சக்கரத்தின் இருபக்கங்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார்.



காமனின் தேகத்தை அழித்த ஐயனால் ஓர் அறிவுள்ள, அழகிய திருக்குமரனைப் பெற்றெடுக்க இயன்றது. காமனை அழித்த அதே நெற்றி நெருப்பே குமரன் பிறப்புக்கும் காரணமாய் அமைந்தது.. நம் மனத்தில் இருக்கும் காம இச்சைகளை, மன்மதக் கணைகளை நாம் விலக்கும் போது அவ்விடத்தில், அறிவு ஒளிபெற்ற கந்தன் பிறக்கின்றான். காமன் இடத்தைக் கந்தன் நிரப்புகின்றான்.. காமம் முற்றிலும் குடிகொண்டிருந்தால், கந்தன் பிறப்பதில்லை. இப்பாடலின் மூலம் நாம் பெறவேண்டிய கருத்து இதுதான். உலகம் மன்மதனுக்கு அடிபணிகின்றது.. எனவேதான் யாராலும் வெல்லப்படாத தன்மை அவனுக்குக் கிட்டியது... ஆயினும் அவன் ஈசனிடம் தோற்றான். தோற்றவன் அம்மை மூலம் அவ்வீசனையும் வென்றான்.. அது அம்மையின் சக்தி... "ககனமும் வானும் புவனமும் காண " மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட உலகமும் காணும்படி...



ககனம் எனும் பதத்தைப் பற்றி கடந்த பதிவில் நாம் விளக்கவில்லை..இப்பதமானது சித்தர்களின் உலகத்தைக் குறிக்கின்றது. அவர்கள் மண்ணுலகிலும் இருப்பதில்லை.. விண்ணுலகிலும் இருப்பதில்லை. இடையில் அவர்களுக்கென்று ஒரு உலகம் உள்ளது. மண்ணுலகில் வாழ்வோருக்கும், விண்ணுலகின் அமரர்களுக்கும் ஒரு பாலமாக இவர்கள் செயல்படுகின்றனர். ஆகவே அனைவரும், அண்டசராசரத்தில்

உள்ள அத்தனை ஜீவராசிகளும் காணும்படி... " விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு " கரும்பினாலான வில்லையுடைய காமனின் உடலை அன்று தனது நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த, தவத்திற்சிறந்த ஈசனுக்கு..."முந்நான்கு" "தடக்கையும்" நீண்ட வலிய பன்னிரு திருக்கரங்களும்,"இருமூன்று" "செம்முகனும்" ஆறு அழகிய சிவந்த திருமுகங்களும், "எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது " கொண்ட பெருமைகளையுடைய அறிவில்  முதிர்ந்த சிறந்த மகனான முருகன் மகனாகப் பிறந்தது "வல்லி நீ செய்த
வல்லபமே" "அன்றோ" அபிராமியே... அன்னையே.... உனது வல்லமையால் அன்றோ....? அழகிய திருக்குமரன் ஈசனுக்கு மகனாகப் பிறந்தது அம்மையின் வல்லமை என்பதை அழகுற விளக்கும் பாடல் இது..

.
பாடல் அறுபத்தாறு


வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்

பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே

விளக்கம் :
பசும்பொன்னாலான மேருமலையை வில்லாக வளைத்த ஈசனுடன் வீற்றிருக்கும் அபிராமி அன்னையே... நான் அருஞ்செயல்கள் செய்யும் வல்லமை ஒன்றும் இல்லாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்த்திருவடிகளை விடுத்து வேறொன்றின் மீதும் பற்றில்லாதவன். தீவினைகள் புரிபவனாகிய நான் பாடுகின்ற பாடல்கள் குற்றமுடையதாக இருப்பினும் அவை உன் திருநாமங்களைப் போற்றும் துதிப் பாடல்கள் என நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்..அபிராமி அந்தாதி எனும் களஞ்சியத்தை நமக்களித்த அபிராமிப் பட்டர் தம் பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக் குறிப்பிடுவது நமது அகங்காரத்தின் மீது சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போன்றுள்ளது. பாடல்கள் பாடி அம்மையை நேரில் வரச்செய்யும் வல்லமை படைத்த அவர் தான் வல்லமை ஒன்றும் அறிந்ததே இல்லை என்கிறார். பக்தியிற் சிறந்த பெரியார் (இவ்விடத்துப் பெரியவர் எனப்
பொருள் கொள்க...), தம்மை சிறியவன் என்கிறார்.. ஆயினும் அன்னை மேல் கொண்ட பக்தியை உரைக்கையில் மட்டும் உண்மையை உரைக்கின்றார். உனது திருப்பாதங்களை விடுத்து வேறெந்த பொருள்மீதும் பற்றில்லை என்கிறார். தன் பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக் குறிப்பிட்டவர் அவை அன்னையைத் துதி செய்யும் தோத்திரப் பாடல்கள் எனக் குறிப்பிடுகின்றார்.


"பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் " பசும்பொன்னாலான மேரு மலையை வில்லாக வளைத்த ஈசனோடு வீற்றிருக்கும் அபிராமி அன்னையே.. "வல்லபம் ஒன்றறியேன் " அருஞ்செயல்கள் புரியும் வல்லமைகள் ஒன்றும் அறியாதவன். "சிறியேன்" சிறியவன்." நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் " செம்மையான உனது மலரடிகளை விடுத்து வேறெந்த பற்றுமில்லாதவன். "வினையேன்" தீவினைகள் பல புரிந்தவனாகிய நான் "தொடுத்த சொல்" தொடுத்துத் தரும் இப்பாமாலை.."அவமாயினும்" குற்றம் நிறைந்ததாயினும், " நின் திருநாமங்கள் தோத்திரமே" அவை உனது திருப்பெயர்களை துதிசெய்யும் பாடல்களே... எனவே நீ அவற்றை வெறுக்காது, தள்ளாது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அபிராமி அந்தாதி விளக்கவுரை 19

பாடல் அறுபத்து ஏழு


தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு

மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே

விளக்கம் :
அபிராமி அன்னையே.. உன்னைத் துதித்து, தொழுது, மின்னலையொத்த உன் திருமேனித் தோற்றத்தை ஒரு மாத்திரைப் பொழுதாவது தம் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள், தங்களின் வளமை, குலம், கோத்திரம், கல்வி, குணம் எல்லாவற்றிலும் குறைவுற்று, உலகெங்கிலும், தினந்தோறும் வீடுவீடாகச்  சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்பார்கள். அன்னையின் அன்பர்களின் பெருமையை ஏற்றியுரைத்த அபிராமிப் பட்டர் அன்னையை மனத்தில் வையாதவர் நிலை எங்ஙனம் ஆகும் என இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.
"தோத்திரம் செய்து " அபிராமி அன்னையே உன்னைத் துதித்து "தொழுது" வணங்கி.."மின் போலும் நின் தோற்றம் " மின்னலையொத்த நின் திருமேனித் தோற்றத்தை "ஒரு மாத்திரைப் போதும் " ஒரு மாத்திரைப் பொழுதாவது .. "மனத்தில் வையாதவர் " மனத்தில் வைத்து தியானிக்காதவர் "வண்மை" தங்களது வளமை, "குலம்" குலப் பெருமை "கோத்திரம் " கோத்திரப் பெருமை "கல்வி" கல்வியறிவு,
"குணம்" நற்குணங்கள் இவை எல்லாவற்றிலும் "குன்றி" குறைவுற்று "நாளும்" தினந்தோறும் "குடில்கள் தொறும்" வீடுகள் தோறும், "பாத்திரம் கொண்டு" பிச்சைப் பாத்திரமான திருவோட்டைக் கொண்டு "பலிக்கு உழலா நிற்பர் " தேவைகளுக்காக ஏந்தி நிற்பார்கள். காத்து நிற்பார்கள்.. பிச்சைக்காகக் காத்திருப்பார்கள்.. “பார் எங்குமே” உலகெங்கிலுமே....

பாடல் அறுபத்தெட்டு


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்

ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே
விளக்கம் :
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், அவற்றின் தன்மைகளான, மணம், சுவை, ஒளி, தொடு உணர்வு, ஒலி இவையெல்லாம் ஒன்றுபடச் சேரும் சிறிய திருவடிகளையுடைய தலைவியான அழகி சிவகாமியின் திருவடியைச் சார்ந்திருக்கும் தவத்தினை உடையவர்களிடத்து இல்லாத செல்வம் இல்லை... கடந்த பாடலில் அன்னையை நினையாதோர் நிலையையும், இப்பாடலில் அன்னையின் திருவடிகளைச் சார்ந்தோர் நிலையையும் அபிராமிப் பட்டர் விளக்கியுள்ளார். அன்னை சிவகாமியானவள் அழகு நிறைந்தவள். சிறிய பாதங்களையுடவள்.. ஆனால் அவளது சிறிய பாதங்கள் ஐம்பூதங்களையும், அவைகளின் தன்மைகளையும் ஒன்று சேரப் பெற்றவை.. அவளது திருப்பாதங்களைச் சேருவோரிடம் எல்லாச்  செல்வங்களும் வந்து சேரும்.. அன்னையின் திருவடி மட்டுமே போதும். வேறெந்தச் செல்வங்கள் நமக்கு வேண்டும்?

“பாரும்” நிலமும், “புனலும்” நீரும், “கனலும்” நெருப்பும் “வெங்காலும்” காற்றும், “படர் விசும்பும்” எல்லாவிடத்தும் படர்ந்த ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களும் “ஊரும் “ அவற்றின் தன்மைகளாக நிற்கும் “முருகு” மணம், “சுவை” சுவை “ஒளி” ஒளி “ஊறு” தொடு உணர்வு “ஒலி” ஒலி “ ஒன்றுபடச்சேரும்” இவையெல்லாம் ஒன்று பட்டுச் சேரும் “தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார்” சிறிய திருவடிகளைப் படைத்த உலகத்தின் தலைவி, அழகிய சிவகாமி அன்னையின் திருவடிகளைச் சார்ந்திருக்கும் தவத்தை உடையவர்கள்,
“படையாத தனம் இல்லையே” இல்லாத செல்வம் ஏதுமில்லை.. அதாவது எல்லாச் செல்வங்களும் அவர்களிடத்திருக்கும். அவர்கள் செல்வம் நிறைந்தோர்களாக,தனம் நிறைந்தோர்களாக இருப்பார்கள். 

பாடல் அறுபத்தொன்பது


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

விளக்கம் :
பூவினைச்சூடிய குழலினையுடைய அன்னை அபிராமியின் கடைக்கண்கள், எல்லாச்  செல்வங்களையும் தரும், நற்கல்வி தரும், ஒரு நாளும் தளர்ச்சியடையாத திட மனத்தினைத் தரும், தெய்வீக வடிவினைத் தரும், மனத்தில் வஞ்சமில்லாத சுற்றத்தைத் தரும், நல்லவை எல்லாவற்றையும் தரும். அன்னையின் அடியவர்களுக்குப்  பெருமையைத் தரும்.மிகச்சிறந்த பாடல் இது.. பள்ளி நாட்களில் மனப்பாடச் செய்யுளாகக் கற்றது.அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை ஓதவேண்டும். எல்லாவளமும் பெறலாம்.

"பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே" பூவினைத் தன் கூந்தலிலே அணிந்த அன்னை அபிராமியின் கடைக்கண்கள்.."தனம் தரும்" எல்லாவித செல்வங்களையும் அள்ளித்தரும். "கல்வி தரும்" சிறந்த கல்வியைத் தரும். "ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் " ஒரு நாளும் தளர்ச்சியடையாத திடமான மனத்தினைத் தந்திடும். "தெய்வ வடிவும் தரும் " தெய்வீகமான வடிவழகைத் தரும். "நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் " நெஞ்சத்தில் வஞ்சமில்லா நல்ல சுற்றத்தைத் தரும். "அன்பர் என்பவர்க்கே" அன்னையின் அன்பர்களுக்கு "கனம்
தரும்" பெருமையைத் தரும். இந்த கால கட்ட சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளைப் பாருங்கள்.. முதலில் எல்லாவித செல்வங்களையும் அன்னையின் திருக்கண்களின் கடைப்பார்வை தந்திடும். செல்வம் இருந்தால் மட்டுமே நற்கல்வி கிட்டும் இந்தக் காலத்தில்... நற்கல்வியும், செல்வமும் இருந்தால், தளர்ச்சியற்ற மனது தானே வந்து சேரும். தெய்வீகமான வடிவழகை அன்னையின் கடைக்கண்கள் தரும். தெய்வீக
வடிவுடையோரிடம் நட்பு பூணுவோர் மனத்தில் வஞ்சம் இருக்காது.. வஞ்சமற்ற மனமுடையோரின் நட்பை அவளது கடைக்கண்களே தரும். இவை எல்லாம் கிட்டிய பின்னர் நல்லன எல்லாம் தாமே தேடி ஓடிவரும். பின்னர் ஒரு புள்ளி வைக்கிறார் அபிராமிப் பட்டர்..

"அன்பர் என்பவர்க்கே கனம் தரும் " எல்லாவித செல்வங்கள், கல்வி, திட மனது, தெய்வீக வடிவு, வஞ்சமில்லாச் சுற்றம், நல்லன எல்லாம் அன்னையின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே கிடைத்து விடும். அன்னையை வேண்டித் தொழுது அவள் சிறிதளவு தன்
திருக்கண்களைத் திறந்து நம்மைப் பார்த்தால், மேற்சொன்ன எல்லாம் கிடைத்து விடும்.. ஆனால் நற்பெருமையானது யாருக்குக் கிடைக்கும்? அன்னையிடத்து அளவற்ற அன்பு பூண்டுள்ள அடியவர்களுக்கு மட்டுமே கிட்டும். அவள் யாரிடத்து அன்பு செலுத்துகிறாளோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும்... செல்வம் அதிகமிருந்தால் பெருமை கிட்டும்... ஆயினும் எங்காவது ஓர் மூலையில் யாராவது ஒருவர் நம்மைப் பற்றிக்  குறைப்பட்டுக் கொண்டிருப்பார்.. நற்கல்வி கிட்டினால் பெருமை கிட்டும். ஆயினும் அகங்காரம் மனத்தில் குடி கொண்டு
அப்பெருமையைத் தகர்த்துவிடும். தளர்ச்சியற்ற மனதிருந்தாலும் அகங்காரமே நம் மனத்தில் குடியேறும். தெய்வீகமான அழகைப் பெற்றிருந்தால் நம் மனத்தின் நிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அது அகங்காரத்தின் மொத்த உருவமாய்த் திகழும். நெஞ்சில் வஞ்சமற்ற சுற்றம் கிடைத்தாலும், நம் மனத்தில் வஞ்சம் புகுந்து அவர்தம்மை ஏய்க்க வாய்ப்பு தேடும்.. நல்லன எல்லாம் கிட்டிய
பின்னரும் நற்பெருமை என்பது கிடைப்பது கடினமே..

ஆனால் அன்னையின் மேல் அளவற்ற பக்தி செய்யும் அன்பர்களுக்கு இவை எல்லாவற்றிற்கும் மேலான "கனம்" நற்பெருமை கிட்டும்.. அபிராமிப் பட்டர் தனது செல்வங்களால் அறியப் படுகின்றாரா? அவர் தமது கல்வியால் அறியப் படுகின்றாரா? தளர்வற்ற தம் மனத்தால் அறியப் படுகின்றாரா? தனது தெய்வீக வடிவழகால் அறியப் படுகின்றாரா? தனது வஞ்சமற்ற சுற்றத்தால் அறியப்படுகின்றாரா? தான் பெற்ற
நல்லன எல்லாவற்றாலும் அறியப்படுகின்றாரா? இல்லவே இல்லை... அன்னை அபிராமியின் மீது தான் கொண்ட அளவற்ற அன்பால்... அன்னையின் அன்பன் என்றே அறியப் படுகின்றார். அக்கனத்தைக் கொடுத்தது அன்னை அபிராமியின் கடைக்கண் பார்வை மட்டுமல்ல... அவளும் அபிராமிப் பட்டர் மீது கொண்ட அன்பே... நாமும் அன்னையின் கடைக்கண் பார்வையை வேண்டி எல்லாம் பெற்று அவளுக்கே அன்பு செய்து, அவள் அன்பை நாமும் பெற்று கனம் பெற்று இன்புறுவோம். அதுவே என்றும் நிலைத்திருக்கும்..

பாடல் எழுபது.


கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்

பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

விளக்கம் :
அன்னை அபிராமியே.. பாடல் இன்புறும் குரலும், இன்னிசை எழுப்பும் வீணையைத் தாங்கிய திருக்கரங்களும், அழகிய திருமுலைகளும் கொண்டு மண்மகள் இன்புறும் பச்சை வண்ணத்தில் மதங்க மாமுனியின் குலத்தில் தோன்றிய எம் தலைவியே உன் பேரழகை மீனாட்சி எனும் திருவுருவில் மதுரையம்பதியில் என் கண்கள் இன்புறும் வண்ணம் கண்டேன்.. ஆஹா... இத்திருப்பாடலைப் பாடும்போது நம்மையறியாமல் அன்னை மீனாட்சியின் திருவுருவத்தை நம் கண்கள் கண்டுவிடுகின்றன... கடம்ப வனம் என்பது நான்மாடக் கூடலான மதுரையம்பதியைக் குறிக்கும். அன்னையானவள் பாண்டி நாட்டின் பெருமையை உலகறியச் செய்ய அவ்விடத்து மலையத்துவசனுக்கு மகளாக...தடாதகைப் பிராட்டியாக அவதரித்தாள். பச்சை நிறங்கொண்ட பேரழகியான அவள் பொருட்டு ஈசனும் சொக்கநாதனாக வந்தருளி அவளை மணம் புரிந்து மதுரை மாநகருக்கு மாமன்னன் ஆனான். சொக்கனும், மீனாட்சியும் குடியிருக்கும் மதுரை மாநகரத்தின் அழகே அழகு.. அவ்விடத்து அன்னை மீனாட்சியின் பேரழகைக் காண நமக்குக் கண்கள் கோடி வேண்டும்.
அத்திருக்காட்சியையே தனது கண்கள் களிக்கும்படி கண்டதாக அபிராமிப் பட்டர் உரைக்கின்றார். கண்கள் எப்போது களிக்கின்றன? அழகிய திருக்காட்சிதனைக் காணும்போது... அதுவும் அன்னை மீனாட்சியின் பேரழகைக் கண்ட கண்கள் வேறெவ்விடத்தும் இன்புறுவதில்லை...
"பண் களிக்கும் குரல்" பாடலே இன்புறும் குரலையும், ... பாடலைக் கேட்டால் நாம் இன்புறுகின்றோம்.. ஆனால் அப்பாடலையே இன்புறச் செய்யும் இனிய குரலினையுடையவள் அன்னை மீனாட்சி.... "வீணையும் கையும்"... இன்னிசை எழுப்பும் வீணையை ஏந்திய திருக்கரங்களையும், "பயோதரமும்" அழகிய திருமுலைகளையும், "மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி " மண்மகள் இன்புறும்
பச்சை வண்ணத்தையும் கொண்டு... மண்மகள் இன்புறும் இடமானது விவசாயம் செய்யும் பூமி... அவ்விடத்தில்தான் மண்மகள் இன்புறுகிறாள். போற்றப் படுகின்றாள். நமக்கெல்லாம் வாரி வாரி அன்னத்தை அளிக்கின்றாள்... அவள் இன்புறும் வண்ணம் பச்சை வண்ணம்.. பச்சை வண்ணத் திருமேனியைக் கொண்டவள் அன்னை மீனாட்சி... "மதங்கர் குலப் பெண்களில் எம்பெருமாட்டி தன் பேரழகே"
மாதங்க மாமுனியின் குலப் பெண்ணாகத் தோன்றிய எங்கள் தலைவி அன்னை மீனாட்சியின் பேரழகை... "கடம்பாடவியில்" கடம்ப வனத்தில்... மதுரை மாநகரில் "கண் களிக்கும்படி கண்டு கொண்டேன்" எந்தன் கண்கள் இன்புறும் வண்ணம் கண்டேன்...எத்தனை முறை பாடினாலும் சலிப்பு தட்டாமல் அன்னையானவள் மீனாட்சியாக நம் கண்கள் களிக்கும்படி காட்சி தருகின்றாள்.. நாமும் மதுரை மாநகரம் சென்று அன்னை மீனாட்சியின் பேரழகைக் கண்டு களிப்போம்..


அபிராமி அந்தாதி விளக்கவுரை 20

பாடல் எழுபத்தொன்று


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே

விளக்கம் :
தன் அழகுக்கு ஒப்புமையாக யாருமே இல்லாதவள் அன்னை அபிராமி. அருமையான வேதங்கள் எப்போதும் பழகிக் கொண்டிருப்பதால் சிவந்த திருவடித்தாமரைகளையுடையவள். குளிர்ச்சியான இளம்பிறையைத் தன் திருமுடியிலே அணிந்த பச்சை நிறங்கொண்ட கோமளவல்லியான அன்னை உனக்குக் கொம்பு போல் துணையாக இருக்க, மனமே நீ எதையும் இழந்து ஏக்கம் கொள்ள வேண்டாம்.
உனக்கென்ன குறையுண்டு? அருமையான பாடல். மனக்குறையைத் தீர்க்கும் அருமருந்தான பாடல். அன்னை அபிராமி அருகிருக்க ஏன் அழுகிறாய் நெஞ்சே... மனமே உனக்கென்ன குறையுண்டு...? என மனத்தினை அமைதி செய்யும் அருமையான பாடல் இது..."அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" தன்னுடைய பேரழகுக்கு இணையாக ஒப்புமை கூறும்படி இவ்வுலகில் யாருமில்லாத தன்னிகரற்ற அழகுடைய அன்னை அபிராமி...

அன்னையின் பேரழகுக்கு யாரையாவது ஒப்புமை சொல்ல இயலுமா? அவளின் அழகு ஈடு இணையில்லாதது.. "அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்" அருமையான வேதங்கள் பழகுவதால் சிவந்த திருவடித் தாமரைகளையுடையவள்.. வேதங்களைத் தனது சிலம்பாக அணிந்தவள் என முன்னர் குறிப்பிட்ட அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவை எப்போதும்  அவளின் திருவடிகளை ஒன்றியே இருப்பதால், அன்னையின் திருப்பாதங்கள் சிவந்தன என்று குறிப்பிடுகின்றார். "பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க "குளிர்ச்சியான இளம் பிறையைத் தன் திருமுடியிலே அணிந்த பச்சை வண்ணக் கோமளவல்லி எனும் கொம்பு போன்ற துணையிருக்க.. இளம் நிலவை இத்தனை அழகாக யாரேனும் பாடியுள்ளனரா என்பது ஐயமே... "பனிமாமதியின் குழவி" குளிர்ச்சியான பெரு நிலவின் குழந்தை எனும் பொருள் பொருள் படுகின்றது. அன்னையின் திருமுடியில் காணும் பிறை நிலவு அபிராமிப் பட்டருக்கு பெருநிலவின் குழந்தை எனத் தோன்றுகிறது..

அதைத்தான் இவ்வண்ணம் உரைக்கின்றார். "இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் " இழந்து இழந்து வருத்தமுறும் என் மனமே... ஏக்கம் கொள்ளாதே... மனத்தின் இயல்பு இது.. சிறுவயது தொடங்கி மரணமடையும்வரை மனமானது இழந்தவற்றிற்கெல்லாம் ஏக்கம் கொண்டு அழுகின்றது. ஏ மனமே... நீ ஏன் அழுகின்றாய்...எல்லாவற்றையும் நீ இழந்தாலும், உன்னைத் தாங்க கொம்பு போன்ற துணையாக அன்னை
அபிராமி இருக்கின்றாள்.. ஏக்கம் கொள்ளாதே... "உனக்கு என் குறையே" உனக்கு என்ன குறையுண்டு? உன்னைத் தாங்கும் கொம்பாக அன்னை அபிராமியிருக்க உனக்கென்ன குறையுண்டு என் மனமே... நீ கலங்காதிரு.... இளம் கொடி பற்றிப் படரக் கொம்பொன்று அவசியம். கொம்பில்லையெனில் அக்கொடியின் நிலை பரிதாபமே... மனமே...நீ பற்றிப் படர உனக்கு அபிராமி எனும் கொம்பு உன் அருகேயுள்ளது. பற்றிக் கொள்.. நீ இழந்த எதை எண்ணியும் வருந்தாதே..அழாதே.. உனக்கெந்தக்  குறையும் இல்லை...

பாடல் எழுபத்திரண்டு


என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்

நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே
விளக்கம் :

நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றும் மின்னலை விட மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையான அன்னை அபிராமியே... தன் குறைகள் எல்லாம் தீர்வதற்காக எங்கள் ஐயன் சங்கரனார் தன் திருமுடி மீது வைந்த உந்தன் திருவடித் தாமரைகளையே நானும் எனது குறைகள் எல்லாம் தீர்ந்து போகும் படி நின்று வணங்கிப் போற்றுகின்றேன். இனிமேலும் எனக்கு ஒரு பிறவி வந்தால் அது உன் குறையே... வேறு யார் குறையுமல்ல...அன்னை மேல் எவ்வளவு உரிமை கொண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பார்.? உன்னை.. உன் திருவடித் தாமரைகளை நான் போற்றி வணங்குவதால் இனி எனக்குப் பிறவி இல்லை... மீண்டும் நான் பிறந்தால், அது உன் குற்றம்தான்... வேறு
யாருடைய குற்றமுமல்ல என அன்னை மேல் தான் கொண்டிருக்கும் உரிமையைப் பறைசாற்றுகிறார். "இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்" நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றுகின்ற மின்னலையும் குறைசொல்லும்படி மெலிந்த சிறந்த இடையினைக் கொண்ட மென்மையான அன்னை அபிராமி.. மின்னல் தனது ஒளியின் தன்மையில் வலிமை பெற்றிருந்தாலும், அதை நாம் நோக்கும் போது அது மிகவும் மெலிந்தது என்பதை அறிகின்றோம். எனவேதான் முன்னர் ஒருமுறை மின்னலையொத்த  இடையையுடையவளே எனப் பாடினார் அபிராமிப் பட்டர்.

நம் கவிஞர்கள் பலரும், பெண்ணின் இடையை மின்னலுக்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கின்றனர். ஆனால் இப்பாடலில், அம்மின்னலைக் குறை சொல்லும்படி இன்னும் மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையானவள் என்று அம்மையைப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர். "தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே " தனது குறைகள் எல்லாம் தீர்ந்து போக எங்கள் தலைவனான சிவபெருமான்
தனது சடைமுடி மேல் வைத்த உனது திருவடித் தாமரைகளையே... "என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் " நானும் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போகும்படி நின்று வணங்கிப் போற்றுகின்றேன்.. "இனி யான் பிறக்கின்" இனிமேலும் நான் பிறந்தால்... எனக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டானால்... "நின் குறையே அன்றி யார் குறை காண்" அது உனது குறையே அன்றி வேறு யாருடைய குறை? இப்பிறவியில் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போக உனது திருவடித் தாமரைகளை வணங்கிப் போற்றுகின்றேன்.. உன்னை வணங்குவதால் எனக்கு மீண்டும் பிறவி உண்டாகாது..நான் மீண்டும் பிறந்தால் அது வேறு யாருடைய குற்றமுமல்ல... உன்னுடைய குற்றம்தான்.. அன்னையே.. என் குறைகளெல்லாம் தீர்த்து என் பிறவியை அறுத்துவிடு.. மீண்டும் என்னை பிறவாமல் செய்து விடு.... 

பாடல் எழுபத்து மூன்று


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே
விளக்கம் :
அபிராமி அன்னையே.. நீ அணியும் மாலை கடம்ப மலர்களால் ஆனது. உனது படைகளோ ஐவகை மலரம்புகள். உனது வில் கரும்பு வில். வைரவர் உன்னை வணங்கும் நேரம் நள்ளிரவு. நீ எனக்கென்று வைத்திருக்கின்ற செல்வங்களாவன..உனது திருவடித் தாமரைகள், செம்மையான உனது நான்கு திருக்கரங்கள், ஒளிபொருந்திய செம்மையான தாயே உன் திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்,
இவற்றோடு உனது மூன்று திருக்கண்கள். அன்னை கொண்டுள்ள வில், அம்புகள், அவள் அணியும் மாலை, வைரவநாதர் அவளை
வணங்கும் நேரம் இவையெல்லாம் அன்னையே உன் பெருமைகள்.. எனக்கென்று நீ தந்துள்ள செல்வம்.. நீதான்.. நீயே பெரும் செல்வம்... என அபிராமிப் பட்டர் உரைப்பது சிறப்பு. குழந்தைப் பேற்றை வேண்டுவோர் இத்திருப்பாடலைத் தினமும் பாட வேண்டும் எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.

"தாமம் கடம்பு" அன்னையே நீ அணிந்துள்ள மாலையானது கடம்ப மாலை.. "படை பஞ்ச பாணம்" உனது படைகளோ ஐவகை மலரம்புகள்... "தனுக்கரும்பு" உனது வில்லோ கரும்பு வில். "யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது" வைரவர் உன்னை வணங்கும் நேரமானது நள்ளிரவு... சிவாலயங்களை இரவில் காக்க வேண்டிய பொறுப்பு வைரவரிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே வைரவர் அன்னையை வணங்கும் நேரம் நள்ளிரவே.. "எமக்கு என்று வைத்த சேமம்" இத்தனை பெருமைகளையுடைய அன்னையே..நீ எமக்கென்று வைத்துள்ள செல்வங்களாவன... "திருவடி" உனது திருவடிகள்..."செங்கைகள் நான்கு" அபயந்தந்து வரமளிக்கும் உனது செம்மையான நான்கு
திருக்கரங்கள்..."ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை " ஒளிபொருந்திய,செம்மையான அம்மையே... உனது திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்.."ஒன்றோடு இரண்டு நயனங்களே" உனது மூன்று திருக்கண்கள்.. இவையே நீ எமக்களித்த செல்வங்களாகும்...உனது பெருமைகள் நீ கடம்ப மாலை அணிந்து, பஞ்ச பாணங்களை படைகளாகக் கொண்டு, கரும்பு வில்லையேந்தியிருப்பது.. அகிலத்தைக் காக்கும் உந்தன் ஆலயத்தைக் காக்கும் வைரவர் உன்னை வணங்கும் நேரமோ நள்ளிரவு... எனக்கு நீ அளித்த செல்வமோ... நீதான்... நீயே என் செல்வம்.... என் சேமம்.... உன் திருவடிகள், உனது திருக்கரங்கள், உன் திருநாமம், உன் திருக்கண்கள்..அபிராமியே... காத்தருள்வாய்....

பாடல் எழுபத்து நான்கு


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்

அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே?
விளக்கம் :

மூன்று கண்களையுடைய சிவபெருமானும், வேதங்களும், திருமாலும், பிரம்மனும் போற்றி வணங்கும் அபிராமி அன்னையின் திருவடிகளையே தங்கள் பயன் என்று கொண்டவர்கள், தேவமகளிர் ஆடிப்பாட, பொற்கட்டிலுடைய பொற்காட்டில் தங்கி மகிழும் பயனை விரும்புவரோ? "இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று அரங்கனைப் பாடிய ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது..பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும், வேதங்களும் போற்றி வணங்கக்கூடிய அன்னையபிராமியின் திருவடிகளைப் பற்றினோர்க்கு எல்லாச்  செல்வங்களும் கிட்டும். ஆயினும் அவர்களுக்கு அச்செல்வங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல... அவர்கள் அவற்றை விரும்புவதும் இல்லை..."நயனங்கள் மூன்றுடை நாதனும் " மூன்று கண்களையுடைய சிவபெருமானும், "வேதமும்" நால்வகை வேதங்களும், "நாரணனும்" நாராயணனும், "அயனும்" பிரம்மனும் "பரவும்" வணங்கிப் போற்றும் "அபிராமவல்லி அடியிணையைப்" அபிராமி அன்னையின் திருவடிகளை... "பயன் என்று கொண்டவர்" தங்களின் பயன் என்று கொண்ட அடியவர்கள் "பாவையர் ஆடவும் பாடவும்" மகளிர் ஆடிடவும், பாடிடவும், "பொன் சயனம் பொருந்தும் " பொன்னாலான கட்டிலினையுடைய
"தமனியக் காவினில்" பொற்காட்டினில், இந்திரலோகத்தில்.... "தங்குவரே?" தங்கி இன்புறும் மகிழ்ச்சியினை விரும்புவார்களோ???

மானுட மனமானது சிற்றின்பத்தை நாடுகின்றது.. இந்திரலோகம் என்பது சிற்றின்பத்தின் கனவு.. பொன் நிறைந்த காட்டினில், பொன்னாலான படுக்கையில் படுத்திருக்கும் வேளையில், தேவ மகளிர் வந்து ஆடிப்பாடி நம்மை மகிழ்விக்கும் ஒரு நிகழ்வு என்பது சிற்றின்பத்தை நாடும் மனது வேண்டுவது... ஆனால் அதுவோ நிலையான இன்பம்? அன்னை அபிராமியின் திருவடிகளை அபயம் எனப் பற்றி, அவளுக்கே அன்பு செய்து, அவள் அன்பைப் பெற்று அவள் அடியாராகும் இன்பமே பேரின்பம்.. அதுவே நிலையானது.. ஆகவேதான் உலகம் போற்றும் நால்வகை வேதங்களும் அவள் திருவடிகளே சரணமென்று பாடுகின்றன.. படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலைப் புரியும்
மும்மூர்த்திகளும் அவள் திருவடிகளையே போற்றிப் பாடுகின்றனர்.. மனமே...நீயும் அவள் திருவடிகளையே பற்று.. அவளே அபயம் என்பதை உணர்... அவளையே சரணடை... அவளே உன்னைக் காப்பாள்.. உன்னைத் தன் அன்பர்க் கூட்டத்தில் ஒருவனாக ஆக்கி பேரின்ப வாழ்வுதனை உனக்களிப்பாள்... அபிராமியின் திருவடியிணைகளே சரணம்........ 

அபிராமி அந்தாதி விளக்கவுரை 21

பாடல் எழுபத்தைந்து


தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி

மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே



விளக்கம் :


பெரிய மலைகளையும், பொங்கும் கடலையும், பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்தவளும், மணம் வீசும் மலர்களைத் தன் கூந்தலில் அணிந்தவளுமான அபிராமியின் திருமேனியை எண்ணித் தியானித்திருக்கும் அன்பர்கள், கற்பக மரத்தின் நிழலிலே தங்குவார்கள். மீண்டும் பிறப்பற்ற நிலை எய்துவார்கள். கடந்த பாடலில் அன்னையை எண்ணி வணங்குவோர் வேறெந்த போகத்தையும் விரும்புவதில்லை எனவுரைத்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், அன்னையின் திருவுருவை எண்ணித் தியானிப்போருக்கு நினைப்பதையெல்லாம் உடனே வழங்கும் கற்பக மரத்தின் நிழலில் தங்கும் பேறு கிட்டும் என்று உரைக்கின்றார். அன்னையின் அருள் அத்தகையது."மால் வரையும்" பெரிய மலைகளையும், " பொங்கு உவர் ஆழியும் " உவர்ப்புச் சுவை நீரைக் கொண்ட அலை பொங்கும் கடல்களையும், "ஈரேழ் புவனமும்" பதினான்கு உலகங்களையும் "பூத்த" பெற்றெடுத்த "உந்திக்" வயிற்றினையுடையவளும், "கொங்கு இவர் பூங்குழலாள்" மணம் வீசும் மலர்களைத் தனது கூந்தலிலே சூடியவளுமான அபிராமி அன்னையின் "திருமேனி குறித்தவரே" திருமேனியை எண்ணித்  தவமியற்றுபவர்கள்... தியானித்திருப்பவர்கள்..."தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்" நினைத்ததை நினைத்த பொழுதிலேயே வழங்கிடும் கற்பக மரத்தின் நிழலிலே தங்கும் பேற்றினைப் பெறுவார்கள்.. "தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை" தங்களுக்கு மறு பிறப்பின்றி.... மீண்டும் பெற்றெடுக்க ஒரு தாய் இல்லாது... இருப்பார்கள்.. அவர்களுக்கு மீண்டும் பிறவி வாய்க்காது....

பாடல் எழுபத்தாறு


குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே



விளக்கம் :

வண்டுகள் கிண்டுவதால் தேன் வெளியேறும் கொன்றைப் பூக்களைச் சூடும் சிவபெருமானது உடம்பின் ஒரு பாகத்தைப் பறித்து அவ்விடத்துக் குடிபுகுந்த ஐவகை மலரம்புகளைக் கொண்ட பைரவித் தாயே... எங்கள் அபிராமியே... உனது திருக்கோலத்தையே என் மனத்தில் எப்போதும் நிறுத்தி தியானித்திருக்கின்றேன்.. உனது திருவருளால், கூற்றுவன் என்னை அழைக்க வரும் வழியைக் கண்டுபிடித்து அதனை மறித்து விட்டேன்... இனி எனக்கு மரணமில்லை அன்னையே... சத்தியத்தை உரைக்கும் பாடல் இது... அபிராமிப் பட்டர் மறைந்து விட்டாரா? இல்லவே இல்லை...தனது அழகிய தமிழ்ப் பாமாலைகளால் இன்றும் நம் இதயத்துள் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றார். திருக்கடவூர் உள்ள வரை.... அகிலத்தை ஆளும் அபிராமி இருக்கும் வரை.... என்றும் இளமை குன்றாத சங்கத்தமிழ் இருக்கும் வரை.... அவர் என்றென்றும் நிலைத்திருப்பாரன்றோ...? ஆகவேதான் மிகவும் தைரியமாக.. அன்னையே... உனது திருவருள் கொண்டு காலதேவன் வரும்
வழியை அடைத்து விட்டேன்.... என்று பகர்கின்றார்... இந்த பாடலைத் தினமும் பாடிவந்தால்... நமக்குச் சொந்தமான பொருள் ஏதாவது காணாமல் போயிருந்தாலோ அல்லது நமக்கு வந்து சேர வேண்டிய பொருள் வருவதில் தாமதமாகியிருந்தாலோ,..அது விரைவில் நம்மை வந்து சேரும் எனப் பெரியோர்கள் மொழிவார்கள்...



"வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் " வண்டுகள் கிண்டுவதால் வெறியூட்டும் தேன் வெளியேறும் கொன்றைப் பூக்களைத் தன் திருச்சடையில் அணிந்த சிவபெருமானின்.... எத்தனை அழகிய வர்ணனை... கொன்றைப் பூக்களைச் சடைக்கணிந்த எம்பிரான் திருமுடிகள்... அப்பூக்களிடம் தேனெடுக்க படையெடுக்கும் வண்டுக் கூட்டம்...இவற்றால் வெளியேறி வழியும் தேன்... அட..

அட... கற்பனையில் எண்ணினாலே களிப்பூட்டும் காட்சியது... "ஒரு கூற்றை மெய்யில் பறித்தே " உடம்பின் ஒரு பாகத்தைப் பறித்து.... பெண்ணுரிமை கேட்கும் அன்புச் சமுதாயமே...அன்று ஈசன் தானாக முன்வந்து அன்னைக்கு அரும்பாகத்தைத் தந்து விடவில்லை...அன்னை அதனைப் பறித்து கொண்டாள்... ஏனெனில் ஈசனைப் படைத்தவளும் அவளேயன்றோ... ? ஆனால் இன்றைக்கோ இந்தியத் திருநாட்டில் மூன்றில் ஒரு பங்கிடத்தைக் கூட மகளிருக்குப் பெற்றுத்தரப் போராட வேண்டியுள்ளது... ஆனால்... அன்றே அன்னையானவள் சரிபாதியிடத்தைத் தனக்கெனப் பறித்துக் கொண்டாள்.."குடி புகுதும்" அவ்விடத்திற் குடி புகுந்த... "பஞ்ச பாண பயிரவியே..." ஐவகை மலரம்புகளை ஏந்தும் பைரவித் தாயே..


பைரவி என்பது அன்னையின் இன்னொரு திருநாமம்.. பைரவன் ஈசனது திருவவதாரம்... அவனது இடப்பாகத்தைப் பறித்து அவ்விடத்துக்
குடிபுகுந்ததால் அன்னை பைரவி எனும் திருநாமத்தைப் பெற்றாள்.. பஞ்ச பாணங்களை ஏந்தும் விளக்கத்தை முன்னரே கேட்டிருக்கின்றோம் அல்லவா? "குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்" உனது திருக்கோலத்தையே என் மனத்தில் எப்போதும் நிறுத்தி தியானித்திருக்கின்றேன்... அன்னையும் தந்தையும் சரிபாதியாய்த் தோன்றும் சிவசக்தித் திருவுருவை...திருக்கோலத்தையே... எல்லாப் பொழுதுகளிலும் என் மனத்தில் நிலைநிறுத்தி தியானித்திருக்கின்றேன்... "நின் குறிப்பு அறிந்து" உனது திருவருட்குறிப்பினை அறிந்து... "மறலி வருகின்ற நேர் வழி" மரணதேவன் வருகின்ற வழியினை... "மறித்தேன்" மறித்து விட்டேன்... காலதேவன் வரும் வேளை உனது திருமணக்கோலத்தில் வந்து நின்று திருவருள் புரிந்து அஞ்சாதே மகனே என்று என்னை ஆற்றவேண்டும் என வேண்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்துத் தானே மரணம் வரும் வழியை அறிந்து கொண்டு அதனை அடைத்தும் விட்டதாகப் பகர்வது சற்றே விழியை உயர்த்த வைக்கின்றது... இதுதான் பக்தியின் பாதை...



பக்தன் தான் பக்தி செய்யும் துவக்க நாட்களில், அன்னையை இறுகப் பற்றிக் கொள்கிறான்.. தன் பயத்தைத் தெளிவிக்க வேண்டுகின்றான்.. பக்தி நெறியில் வளர வளர அச்சம் மறைகின்றது.. அன்னையானவள் தெளிவைத் தந்தருள்கின்றாள்..அவ்வமயம் எல்லாம் புலப்படுகின்றது... எதிர்வருந்துன்பங்களிடமிருந்து எங்ஙனம் தப்புவது என்பதை அன்னையின் திருவருட்குறிப்பு பக்தனுக்கு

உணர்த்துகின்றது... எனவே தனது பக்தியெனும் சக்தியால் அத்துன்பங்கள் தனக்கு வராமல் தடுத்தும் விடுகின்றான்... உண்மையான பக்தி கொள்வோர்க்கு இது சாத்தியமே... இதை அபிராமி அந்தாதியைக் கொண்டு உணரலாம்... மரணதேவன் வரும் வழியைத் தானே அடைத்து விட்டதாக அபிராமிப் பட்டர் உரைப்பது அவரது தைரியத்தை... பேராற்றலை... அப்பேராற்றல் பெற அவர் கொண்ட பெரும்பக்தியை
உணர்த்துகின்றது... நாமும் அபிராமி மேல் அளவற்ற பக்தி கொள்வோம். வரும் துன்பங்களிலிருந்து உய்வோம்... அன்னையே நம்மைக் காத்து வழி நடத்தட்டும்... ஓம் சக்தி...



மிகச் சிறந்த கல்வி ஞானம் கொண்ட பெரியோர்களெல்லாம் இதைப் படித்து வருகின்றீர்கள்.. அடியேனின் கருத்தில் பிழையிருந்தால் மன்னித்து...சரியான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.. மேலும் அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வெவ்வேறு பலன்கள் உள்ளன.. அவற்றுள் அடியேன் அறிந்தவை சில மட்டுமே... அவற்றை இவ்வுரைகளில் தெரியப் படுத்தியும் வருகின்றேன்.. முற்றும் அறிந்தோர் தயவு செய்து அவற்றைப் பட்டியலிட்டுப் பதிவு செய்யும்படி அன்போடு வேண்டுகின்றேன்... நன்றி... 

பாடல் எழுபத்தேழு


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே



விளக்கம் :

அபிராமி அன்னையே... உன்னை பைரவி என்றும், பஞ்சமி என்றும், பாசம், அங்குசம், ஐவகை மலரம்புகள் ஏந்தி வஞ்சகர் உயிரை உண்ணும் சண்டி தேவி என்றும், காளிதேவி என்றும், ஒளி வீசும் கலை பொருந்திய வயிரவி என்றும், அனைத்து மண்டலங்களிலும் இயங்கும் மாலினி என்றும், திரிசூலம் ஏந்தும் திரிசூலி என்றும், வராகி என்றும் உனது திருநாமங்கள் குற்றமற்ற வேதங்களில் சொல்லப்ப் பட்டுள்ளன.. அவற்றையே உனது அடியார்கள் போற்றுவார்கள். அன்னையின் திருநாமங்களைப் போற்றும் பாடல் இது.. எதிரிகளின் அச்சம்
நீங்குவதற்கு இப்பாடலைத் தினமும் ஓத வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு. அன்னையின் திருநாமங்கள் என்றென்றும் நம் மனத்தில் நிற்கவும் இப்பாடலினை ஓதலாம்.


"பயிரவி" பைரவி என்றும்.. "பஞ்சமி" பஞ்சமி என்றும்.. "பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி " பாசம், அங்குசம், ஐவகை மலரம்புகள் ஏந்தி வஞ்சகர் உயிரை உண்ணும் உயர்வான சண்டி தேவி என்றும்..."காளி" காளி என்றும் "ஒளிரும் கலா வயிரவி" ஒளி பொருந்திய கலைகள் கொண்ட வயிரவி என்றும்.. "மண்டலி மாலினி" சூரிய சந்திர மண்டலங்களின் நாயகியாக
விளங்கும் மாலினி என்றும்... "சூலி" திரிசூலம் ஏந்தும் சூலி என்றும் "வராகி" வராக முகம் கொண்ட வராகி "என்றே" என்றெல்லாம் "செயிர் அவி நான்மறை சேர்" குற்றங்கள் இல்லாத நால்வகை வேதங்களில் சேரும் அதாவது வேதங்களில் இடம்பெறும்... "திருநாமங்கள்" உனது திருநாமங்களை... "செப்புவரே" உனது அடியார்கள் சொல்லுவார்கள்.. மீண்டும் மீண்டும் ஓதிப்பாருங்கள். அன்னையின் திருநாமங்கள் நம்
மனத்திலுள்ள அச்சத்தை நீக்கித் தெளிவினைத் தருவதை உணருங்கள். எதிரிகளிடமிருந்து அன்னை நம்மைக் காத்தருளட்டும்

பாடல் எழுபத்தெட்டு


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்

அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே

விளக்கம் :
போற்றத்தக்க பொற்கலசம் போன்ற திருமுலைகள் மேல் மணம் வீசும் சந்தனத்தைப் பூசிய அபிராமி அன்னையே... நீ அணிகின்ற முத்துக்களால் ஆன காதணியும், வைரத்தால் ஆனக் குண்டலமும், கருணைமிகு உனது கடைக்கண்களையும், குளிர்ச்சியைச்  சிந்தும் நிலவினைப் போன்ற உனது திருமுகத்தையும் கொண்ட உனது அழகிய திருவுருவினை எனது இரு விழிகளிலும் எழுதி வைத்தேன்...
அன்னையின் அழகிய திருவுருவை வர்ணணை செய்யும் பாடல் இது.. என் கண்களில் எப்போதும் நிலை நிற்கும் வண்ணம் உனது அழகியத் திருவுருவை என் மனத்தில் வரைந்து வைத்தேன்.. ஆகையால் எப்போதும் நீ எந்தன் விழிகளை விட்டு மறைவதில்லை... தாயே...உன் பேரழகுத் திருவுரு எப்படி என்னை விட்டு நீங்கும்? "செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்" போற்றத்தக்க பொற்கலசங்களைப்
போன்ற உனது திருமுலைகளின் மேல் "அப்பும் களப அபிராம வல்லி" மணம் வீசும் சந்தனத்தைப் பூசிய அபிராமி அன்னையே... "அணி தரளக் கொப்பும்" நீ அணிகின்ற முத்தாலான காதணிகளும், "வயிரக் குழையும்" வைரத்தால் ஆன குண்டலங்களும், "விழியின் கொழுங்கடையும்" கருணை மிகு உந்தன் கடைக்கண் பார்வையும், "துப்பும் நிலவும்" குளிர்ச்சியை உமிழும் நிலவையொத்த உனது அழகிய
திருமுகமும் "எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே" எந்தன் இருவிழிகளிலும் என்றென்றும் நான் கண்டுகொண்டிருக்கும் வண்ணம் எந்தன் மனத்தில் வரைந்து வைத்தேன்... அன்னையின் அழகிய திருவுருவை நம் கண்களால் காணாது இருக்க இயலுமா?? 









No comments:

Post a Comment