ABIRAMI ANTHATHI
These are the poems composed by Abiraami Pattar.
The 100 poems praise the Goddess Abiraami.
Abirami Pattar was enjoying with his immersed thoughts about the praise of the Goddess Abirami. Someone approached him and asked him what the day it was. Without realizing the actual day as a New Moon Day, Abirami Pattar mentioned to others that the day was a Full Moon Day. Every one laughed at him. He was brought before the King. When King repeated the question, he still replied the same answer as Full Moon day. The King went angry and ordered to burn him alive if his words (i.e., Full Moon Day) fail. He was put to test from a hanging platform with lots of fire underneath. Abirami Pattar realized his statement and put the blame on Goddess. He said to her that I made this mistake only because of you as I was immersed in your thoughts. He started singing about the Goddess Abiraami in 100 slokas, so beautifully sung. The songs come under a class of Tamil poetry called "Andhaathi". This means, the next poem should start with the ending from the previous one. One should be able to appreciate the talents and God's grace in Abiraami Pattar to sing all the 100 songs in one night. The end of the story goes like this: Goddess Abirami pleased and appeared (kaakshi) before him and thrown her ear-ring (kundalam) in to the sky which enlightened the whole sky like a full bright moon (This event happened when he was singing songs around 65-70). Everyone worshiped the Goddess and her majestic powers. The king requested his apologies to Abiraami Pattar.
சீர்காழியின் இனியமயான குரலில் அந்தாதியைக் கேட்க இங்கே கிளிக்கவும்
http://www.youtube.com/watch?v=aUYuc4UdDbQ
http://www.youtube.com/watch?v=5Jy3_wXQ6_A

உண்மை நிகழ்வு ஒன்றை படியுங்கள்.
நெல்லையப்பர் கோவிலில் விளக்கேற்றும் தொழிலை ஒருவர் செய்து வந்தார். விளக்குகளை ஏற்றுவதும், இரவு கோவிலைச் சார்த்தப் போகிற நேரத்தில் ஒரு சில விளக்குகளைத் தவிர மற்றவைகளை அணைப்பதுமான தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார். வேலை செய்த நேரம் போக மற்ற நேரமெல்லாம், அவர் அம்பிகையின் சன்னதியிலேயே உட்கார்ந்திருப்பார். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது.
ஒருநாள்,
அம்பாள் உபாசகரான அனுபவசாலி ஒருவர் அக்கோவிலுக்கு வந்தார். அமைதியாக தரிசனத்தை முடித்துக் கொண்ட அவரது பார்வை அம்பாள் சன்னதியில் அமர்ந்திருந்த விளக்கேற்றும் தொழிலாளியின் மீது பதிந்தது.
அத்தொழிலாளியை அழைத்தார் அம்பாள் உபாசகர்." அப்பா! நான் ஒரு பாடலை உனக்கு சொல்லித் தருகிறேன். அதை நீ தினந்தோறும் சொல். நேரம் கிடைக்கும் போதெல்லம் சொல்" என்று சொல்லிப் பாடலை உபதேசித்தார்.
அப்பாடல்;
வையம் துரகம் மதகரி மா மகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
என்ற அபிராமி அந்தாதியின் 51ம் பாடல்.
அம்பிகையின் அடியார்களுக்கு உண்டான ஐஸ்வர்ய அடையாளங்களைச் சொல்லி, அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் என்பதே இப்பாடலின் கருத்து.
அம்பாள் உபாசகர் சொன்ன பாடலைக் கருத்தோடு கேட்ட விளக்கேற்றும் தொழிலாளி அதை இதயத்தில் பதிவு செய்து கொண்டார். அன்று முதல் அவரது வாய் அப்பாடலையே முனுமுனுத்துக் கொண்டிருந்தது.
உபதேச மந்திரத்தை சொல்லும் போது. உதடுகள் அசையலாமே தவிர, அது என்ன மந்த்திரம் என்பது அடுத்தவர் காதுகளில் விழக் கூடாது
சாஸ்திரங்கள் சொல்லும் இந்த வழிமுறையை சாதாரணத் தொழிலாளியான அவர் கடைபிடித்தார் என்றால், அதற்கு அம்பிகையின் கடைக்கண் பார்வை அத்தொழிலாளியின் மீது படிந்து விட்டது என்பது தானே பொருள். பொருள் புரிந்தால் போதுமா? அந்த தொழிலாளிக்கு பொருள் கிடைக்க வேண்டாம?
அதற்குண்டான செயலை அம்பிகை, திருநெல்வேலியில் அரசரின் முன்னால் அரங்கேற்றி, தன் சன்னதியில் விளக்கேற்றும் தொழிலாளிக்குப் பொருட் செல்வத்தை வாரி வளங்கினாள்; நமக்கு அபிராமி அந்தாதியின் பெருமையை விளக்கினாள். மெய் சிலிர்க்கும் நிகழ்ச்சி அது.
அரசவையில் இருந்த அரசருக்கு, தலைமை அமைச்சரின் அக்கிரமங்கள் அனைதும் நிருபணம் ஆயின. அரசர் கவலை கொண்ட உள்ளத்தோடு நெல்லையப்பர் கோவிலுக்கு போனார். அவர் பின்னாலேயே அக்கிரமக்கார அமைச்சரும் ஓடினார்.
அரசரைக் கண்டதும்,கோவிலில் இருந்த சிறு சிறு சலசலப்புகளும் கூட அடங்கின. அம்பாள் சன்னதியில் அரசர் வழிபட்டுக் கொண்டிருந்தார். அவர் முன்னால் நீட்டப்பட்ட கற்பூர ஜோதி காற்றில் ஆடிய சத்தம் கூடக் கேட்டது. அவ்...வளவு நிசப்தம். கற்பூரஜோதியை கண்களில் ஒற்றிக் கொண்ட மன்னர் "ஏதோ சப்தம் கேட்கிறதே! என்ன சப்தம் அது?" என்ற வாறே நடந்தார். கூட இருந்த கும்பலும் போனது.
ஒரு இடம் வந்ததும் அரசர் நின்றார்."இங்கு தான் ஏதோ சப்தம் கேட்கிறது. அது ஏதோ மந்திரம் போல் இருக்கிறது" என்றார். கூட வந்தவர்களும் அப்பகுதியை அலசினார்கள். அங்கே, முனுமுனுத்தவாறே விளகேற்றிக் கொண்டிருந்த தொழிலாளி மட்டும்தான் இருந்தார். அவரை அரசரின் முன்னால் நிறுத்தினார்கள். அரசர் விபரம் கேட்டார். விளக்கேற்றும் தொழிலாளி தனக்கு உபதேசம் ஆனதையும், அன்று முதல் அதைச் சொல்லி வருவதையும் விவரித்தார்.
"அப்படியா? என்று ஆச்சரியத்தை முகத்தில் காட்டிய அரசர், அக்கிரம அமைச்சரை அழைத்து அவரது அதிகார முத்திரையைப் பறித்தார். அதை விளக்கேற்றும் தொழிலாளியிடம் வழங்கினார். "இன்று முதல் நீதான் தலைமை அமைச்சர்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
சற்று நேரத்தில் ஒரு தங்கப் பல்லக்கு கோவில் வாசலில் வந்து நின்றது. புதிய தலைமை அமைச்ச்சரான விளக்கேற்றும் தொழிலாளியை அதில் அமர வைத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றது. அபிராமி அந்தாதியின் 51 ம் பாடலில் சொல்லப்பட்ட அனைத்து ஐஸ்வரியங்களும் அவரை வந்து அடைந்தன.
அபிராமி அந்தாதியின் ஒரு பாடலே இவ்வளவு தந்தது என்றால், நூறு பாடல்களும் தரும் பலன்கலைச் சொல்ல நமக்கேது சக்தி/ அது அபிராமி அன்னையால் தான் முடியும்.
அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்யுங்கள். பலனை அவள் தருவாள்.
* * *
எழில் உதயம்.
உலகம் முழுவதும் எழில்மயம் .இறைவன் படைத்த படைப்பு அத்தனையும் அழகுப் பிழம்பு. மனிதன் செயற்கையினால் அழகை அழுக்கு ஆக்குகிறான். இயற்கையில் எல்லாமே அழகு தான். குழந்தை அழகாகப் பிறந்து அழுக்காக மடிகிறது. தளிர் அழகாகத் தோன்றி அழுக்கேறிச் சருகாக உதிர்கிறது.
இந்த அழகை தோற்றுவிக்கும் இணையில்லாச் சக்தி இறைவியாகிய இராஜராஜேசுவரி. அவள் பேரழகி. அவள் தூய அழகிலே சொக்கிப் போன அன்பர் பலர். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத அவளை அபிராமி என்று வழங்குவர். அவளுடைய பேரருளிலே ஈடுபட்டவர் அபிராமிப் பட்டர். அவர் அபிராமியை அழகிய நூறு பாடல்களால் பாடியிருக்கிறார். அன்னையின் அழகையும் அருளையும் ஆற்றலையும் திருவிளையாடல்களையும் வீரச் செயல்களையும் திருநாமங்களையும் எண்ணி எண்ணி இன்புற்று, நம்மையும் எண்ணி எண்ணி வழிபாடு பண்ணி நல்ம் பெறச் செய்கிறார். எழில் உதயமானால் அதைக் கண்டு இதய மலர் மலருமல்லவா?
அபிராமியின் பேரெழில் உதயமாக, அதை அகத்தும் புறத்தும் கண்டு காட்டியவர் அபிராமிப் பட்டர். அவர் தந்த எழில் தமிழ்க் கவிதை அபிராமி அந்தாதி.
உ
விநாயகர் காப்பு.
தார் அமர் கொன்றையும் சன்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத் துமைமைந்த னே, உல கேழும் பெற்ற
சீர் அபிராமி அந் தாதிஎப் போதுமென் சிந்தையுள்ளே,
கார் அமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே.
அன்னை அபிராமியைப் பாடத் தொடங்குகிறார் அபிராமிப் பட்டர். அந்தப் பெருமாட்டியின் திருவருளால் பாடத் தொடங்கினாரானாலும், அப்பிராட்டியின் குமாரனாகிய கணபதியைத் தொழுதுதானே எதையும் தொடங்க வேண்டும்?
"எந்தக் காரியம் யார் செய்தாலும் உன்னை வழிபட்டால் விக்னத்தை நீக்கவும், வழிபடாமல் இருந்தால் விக்னத்தை ஆக்கவும் செய்யும் அதிகாரம் உனக்கு உண்டு" என்று தாயும் தந்தையும் சேர்ந்து அருளியபடி விநாயகர் விக்கினேசுவரராக எழுந்தருளி யிருக்கிறார்.முப்புரம் எரித்த போது இந்தச் சட்டத்தை மீறி விக்கினேசுவரரை வழிபடாமல் சிவபெருமான் புறப்பட்டபோது அவருடைய தேரின் அச்சு விநாயகரின் ஆணையால் ஒடிந்து விட்டது என்பது புராண வரலாறு. சட்டத்தை உண்டாக்கியவனானுலும் அவன் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்ற உண்மையை இந்தத் திருவிளையாடலால் இறைவன் உணர்த்தினான்.
ஆகவே அபிராமி அந்தாதியை பாடுவதற்கு அப்பெருமானுடைய கருணையும் இருந்தால் அது எளிதாக நிறைவேறும் அல்லவா?
அந்தக் கணபதியிடம் "பெருமானே, உன்னுடைய அன்னையாகிய அபிராமியைப் பாடப் போகிறேன். அதற்கு வேண்டிய உதவியெல்லாம் புரிய வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு, முதலில் விநாயகர் காப்பைச் சொல்கிறார் அபிராமிப் பட்டர்.
விநாயகர், சிவபெருமான், அம்பிகை, எல்லோரையும் ஒருங்கே
தியானிக்கிறார் இந்தப் பேரன்பர்.இறைவன் எல்லாக் கோயில்களிலும் எழுந்தருளியிருக்கின்றான். திருக்கடவூரிலும் அமிர்தகடேசுவரன் என்ற திருநாமத்தோடு விளங்குகிறான். முதலில் பெரிய தலமாக ஒன்றை நினைக்கலாம் என்று தோன்றியது. சிவபெருமானுடய தலங்களில் சிறந்த்தாகக் கருதப் பெறுவது தில்லை. மற்றவற்றையெல்லாம் பெயர் குறிப்பிட்டுச் சொன்னால் தான் விளங்கும். கோயில் என்று சொன்ன மாத்திரதில், அதனைத் தன் பெயராக உடைய சிதம்பரந்தான் நினைவுக்கு வரும். இவர் இயற்றப்புகும் அந்தாதிக்கு உரியவள் அபிராமி. அவ்வம்பிகை திருகடவூரில் எழுந்தருளியிருப்பவள்.அபிராமிப் பட்டர் அங்கே எழுந்தருளியிருக்கும் அர்ச்சாமூர்த்தியை மாத்திரம் பாட வரவில்லை.எங்கும் நிறைந்திருக்கும் மகா மாதாவாகிய திரிபுர சுந்தரியையே பாடப்போகிறார். அவளுக்கு திருக்கடவூர் மாத்திரமா சொந்தம்? ஆகயால் அவள் எழுந்தருளியிருக்கும் இடங்களிற் பலவற்றையும் இடையிடையே சொல்லப் போகிறார். முதலில் எல்லாத் தலங்களிலும் சிறந்த சிதம்பரத்தைப் போற்றத்
தொடங்குகிறார்.
அபிராமி அந்தாதி
நவராத்திரி திரு விழா தொடங்கும் இவ்வேளையில்
அடியேன் இவ்விடம் அபிராமி அந்தாதி பற்றிமொழிகிறேன். நான் கல்லூரி பயிலும் வேளையில்தான் அபிராமி அந்தாதி முழுதும் கற்றேன். மனப்பாடமாகஅவற்றைப்பாடுதற்கும் அன்னை அருள் புரிந்தாள். அதற்கு முன்னர் "தனந்தரும் .." எனத்தொடங்கும் பாடலும், "ஆத்தாளை .." எனத்தொடங்கும் நூற்காப்பும், பள்ளியில் மனப்பாடச்செய்யுளாகக் கற்றது. இவ்விடம் நாம் தரும்விளக்கத்தில் பிழையிருப்பின், அறிந்தோர் திருத்தம் செய்க... பிள்ளையார்க் காப்பும், அந்தாதியின் முதல்இருபாடல்களும் இம்மடலிற்காண்க.. தொடர்ந்து அன்னையின் அருளோடு விளக்கம் எழுதுவோம்...
பிள்ளையார் காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே -
கார் அமர் மேனிக் கணபதியே - நிற்கக் கட்டுரையே.
விளக்கம்.
எச்செயலைத் துவங்கும்போதும் முதற்கடவுள் கணபதியை வணங்கி துவங்குவது மரபு. இவ்விடத்தும் அபிராமிப்பட்டர் "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சதைப்பொடி செய்த அதி தீரன்" பிள்ளையாரை வணங்கித் தம்அந்தாதியைத் துவங்குகின்றார். கொன்றைப்பூமாலையும், செண்பகப் பூ மாலையும் அணிந்த தில்லையம்பதி வாழ்நாயகன் சிவனது இடப்பாகத்தைத் தன்னிடமாகக் கொண்ட உலகம் ஏழுக்கும் அன்னையான உமையாளின் மகனே...கரிய நிறங்கொண்ட எங்கள் கணபதி பெருமானே... அன்னையின் சிறப்பை விளக்கும் இந்த அபிராமி அந்தாதியானதுஎப்போதும் என் சிந்தையில் நின்று நான் இதனை மறவாதிருக்க அருள் செய்வாயாக....
(அன்பர்களுக்கு அந்தாதி என்பதன் விளக்கம் தெரியும் என்று நம்புகிறேன்.
முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
விளக்கம்.
காரிருளை அகற்றவல்ல செங்கதிரோனின் கதிர்களைப் போன்றது அன்னை அபிராமி தன் நுதலில் அணிந்திருக்கும்திலகம். இவ்விடத்து எங்ஙனம் கதிரவன் உலகத்து இருள் நீக்கி இன்பந்தருகின்றானோ... தாயே.. உன் குங்குமம் என்மனவிருளை நீக்கி அறிவையும் ஆற்றலையும் என் வாழ்விற்கு ஒளியையும் தந்திடும்.. (இது அடியேனின் கருத்து).அறிவுநிறை ஆன்றோர்களால் போற்றப் படும் மாணிக்கம் போன்றவள் என் அன்னை அபிராமி. மாதுளை மொட்டின்நிறங்கொண்ட கமலத்தின் மீது வீற்றிருந்து அருள்புரியும் திருமகளால் போற்றப்படும் மின்னல் கொடியினைப்போன்றவள் என் அன்னை அபிராமி. மெல்லிய மணம் கமழும் குங்குமம் கரைத்த நீரைப்போன்ற மேனியினைக்கொண்ட அன்னை அபிராமியே எனது இன்பத்திலும், துன்பத்திலும் சிறந்த துணையாக இருக்கின்றாள்.
இரண்டாம் பாடல்
துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!
விளக்கம்
என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்குத் துணையாக, நான் என்றென்றும் தொழுதேத்தும் தெய்வமாக, என்னைப்பெற்ற அன்னையாக, உலகத்தின் ஆதாரங்களான வேதங்களின் கிளைகளாக, அவற்றின் இலைகளாக (சாராம்சமாக) ,அவை இப்பூமியில் நிலைபெற வேதங்களின் வேறாக இருப்பவள் குளிர்ந்த மலர்க்கணையும், கரும்பினாலானவில்லையும், மெல்லிய பாசத்தையும், அங்குசத்தைய்ம் கையில் ஏந்தியிருக்கும் திரிபுர சுந்தரியான அன்னைஅபிராமியே என்பதை நான் அறிந்து கொண்டேன்..
அந்த இருபாடல்களையும் பாடிப் பாருங்கள் நண்பர்களே... நம் மனத்தைக் கொள்ளை கொண்டது தமிழின் இனிமையா,அபிராமிப் பட்டரின் புலமையா, அன்னை அபிராமியின் பேரருளா என்பதில் நமக்கெழும் ஐயத்திற்கு அளவே இல்லை...
தொடரும் இருபாடல்களின் விளக்கத்தோடு அடுத்த மடலில் சந்திப்போம்...
அன்பர்களே... அவ்விரு பாடல்களையும் மனனம் செய்துவிட்டீர்களா? இன்றும் இரு பாடல்களைப் பார்ப்போம்....
பாடல் மூன்று
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே!
விளக்கம்.
என் தாயே... தமது முன்வினைப் பயனால், உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை நான் வெறுத்து விலகி விட்டேன். அன்பர் விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே... என் தாயே அபிராமியே... மனிதராய்ப் பிறந்த எல்லோரும்அறிய இயலாத மறைபொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன்.
அன்பர்களே... அபிராமிப் பட்டர் அன்னையின் திருவருளால் தான் ஒரு மறை பொருளை அறிந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அது என்னவாக இருக்கும்?? இதனை நாம் ஆராயுங்கால், அதற்கான விளக்கத்தை அவரே ஒரு மறைபொருளாக அடுத்த அடியில் வெளிப்படுத்துகிறார். இன்று நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு அடிப்படைக் காரணியாக இருப்பது நமது முன்வினைப் பயனே. அவையே நாம் செய்கின்ற பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கின்றன. ஆனால் இப்பிறப்பில் நாம் செய்கின்ற தீய செயல்கள நம்மை நரகத்தில் தள்ளிவிடக் காரணியாக அமைகின்றது.. ஆகையால்தான் நாம் அன்னையின் அடியவர் பெருமையை எண்ணாது நரகில் விழக் காத்திருக்கும் மனித மந்தைகளாக உள்ளோம்.. இத்தகைய மனித மந்தையை வெறுத்து விலகி விட்டதாகக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் பின்னொன்றும் குறிப்பிடுகிறார். அன்பர் விரும்புனவெல்லாம் அளித்து அருட்செய்யும் செல்வமே... என அன்னை அபிராமியை விளிக்கும் அபிராமிப் பட்டர் அன்னையின் திருவடிகளே சரணமென்று சரண்புகுந்ததாகக் குறிப்பிடுகிறார். இவ்விடத்து நமக்கு ஒரு ஐயம் எழுகிறது.. எது மறைபொருள்? அன்னையின் அன்பர் பெருமையை எண்ணுவதா?? அல்லது எண்ணாது நரகில் விழும் மனித மந்தைகளை விட்டு விலகுவதா?? அல்லது அனைத்தும் அருளும் அபிராமியின் பொற்பாதங்களைச் சரண்புகுவதா?? எது மறைபொருள்? அவர் எதை அறிந்து கொண்டார்??? ஒன்றைத் தொடர இன்னொன்று தானே தொடரும் செயல் இது... அன்னையின் அன்பர் பெருமையை அறிந்து கொண்டால், தானாகவே நம் மனது அவள் அடியவர் பெருமை எண்ணாத மனிதரை விட்டு விலகுகிறது. நரகுக்குத் தொலைவாகிறது. நரகில் விழக் காத்திருக்கும் மனித மந்தைகளை விட்டு விலகி விடும் மனது தானாகவே அபிராமியின் பொற்பாதங்களைச் சரண்புகுகிறது...
வார்த்தைகள் விளையாட்டில் ஒரு மறைபொருளை உலகறியச்செய்த அபிராமிப் பட்டரின் புலமை நம்மை வியக்க வைக்கிறது. அன்பர் திரு. மோகனரங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதைப் போல் வார்த்தைக்கு வார்த்தை எம்மால் விளக்கம் தர இயலவில்லை.. ஏனெனில் இப்பாடல்களை ஆரம்பித்தால் அதன் முழுப்பொருள்தான் என் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டு விழுகிறது. கண்முன்னே அபிராமியின் திருவுருவம் நின்று வழிகாட்டுவதைப் போன்று உணர்கிறேன்.. இந்த விளக்கத்தில் ஏதேனும் பிழையிருப்பின் அன்பர்கள் தயவு செய்து பொறுத்தருள்க.. எமது சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்கம் தந்துள்ளேன்... தங்களது விளக்கங்களையும் அன்பர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாட்ல நான்கு
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!
விளக்கம். :
மனிதர்களும், அமரர்களும், மாயாமல் வாழும் தவமுனிகளும் தலைகுனிந்து வணங்கும் செம்மைப்பாதங்களைக் கொண்ட கோமளவல்லியே.... கொன்றைப்பூவை அணிந்துள்ள தனது சடைமுடியில் மேல் குளிர்ச்சி தரும் நிலவினையும், பாம்பையும், பகீரதியான கங்கையையும் அணிந்த புனிதரான சிவபெருமானும், உமையவளான நீயும் எனது மனத்தில் என்றென்றும் நீக்கமற நிறைந்தருள வேண்டும்.
கடந்த பாடலில் மனிதர்களெல்லாம் உனது அன்பரது பெருமையை உணராது நரகுக்கு உறவானவர்களாக உள்ளார்களே எனக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் இவ்விடத்து மனிதர்கள் தலைவணங்கும் செம்மைப் பாதம் கொண்ட கோமளவல்லியே என்று குறிப்பிடுவது சற்றே முரண்பாடாகக் காட்சியளிக்கின்றது அல்லவா? அன்னையைச்சரண்புகுவதற்காக மனிதர்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகின்றனரா? தனக்கென்று வேண்டுவனவற்றைத் தந்தருள்தாயே என்று வழிபாடு நடத்தவே ஆலயம் புகுகின்றனர். சிலர் மட்டுமே. அன்னையே... உன்பாதங்களின் சரணத்தை எனக்குத் தா என்று உள்ளன்போடு வேண்டுகின்றனர். அப்படிப்பட்ட எண்ணம் எழவேண்டுமாயின் அன்னையின் அன்பர்கள் துணை வேண்டும். யாராவது நமக்குக் கற்றுத்தந்தால்தானே நமக்கு இதன் மகிமை விளங்கும்? அன்னையை அனைவரும் வழிபடுகின்றனர். ஆனால் அன்னையின் பெருமையை உணர்ந்தோர் சிலர். அப்பெரியோர்களது அருளாலேயே நாம் அன்னையின் மகிமைகளை உணர முடிகின்றது. ஆக அப்படி வழிகாட்டும் பெரியோர்களது பெருமைகளை எண்ணாத மனிதர்களைப்பற்றித்தான் கடந்த பாடலில் குறிப்பிட்டார். இப்பாடலில் அன்னையும் தந்தையும் எந்நாளும் எம்மனதில் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். மனிதர்கள் வந்து உன்னை வணங்குகின்றார்கள் தாயே... அமரர்களும் உனைத் தேடி வந்து வணங்குகின்றார்கள். மரியாது வாழும் வாழ்வு பெற்ற தவசீலர்களும் உன்னை வந்து வணங்குகின்றார்கள். தலைகுனிந்து உனது செம்மை நிறப் பாதங்களை வணங்குகின்றார்கள் தாயே... அப்படிப்பட்ட சேவடிகளைப் பெற்ற தாயே... கோமளவல்லியே... என்று அன்னையை அழைக்கிறார் அபிராமிப் பட்டர். கொன்றைப்பூக்களை அணிந்த சடையிலேயே குளிர்தரும் நிலவையும், பாம்பையும், வற்றாத உயிரூற்றான கங்கையையும் அணிந்த புனிதரும் என்று அபிராமிப் பட்டர் சிவனைக் குறிப்பிடுங்காலை "மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த ..." என்று தென்னாடுடைய சிவனைக் கொண்டாடிய சம்பந்தரின் வரிகள் இவ்விடத்து நினைவுக்கு வருகின்றன. இப்படித் தொடர்ந்தால் பதிவு எப்படியெல்லாமோ நீண்டு விடும். எனவே... அபிராமி அந்தாதியை மட்டும் தொடர்வோம்.. அப்புனிதரான சிவனும், நீயும் எந்நாளும் எக்கணமும் என் புத்தியில், எனது மனத்தில் நீக்கமற நிறைந்தருள வேண்டும் என்று அன்னையைத் தொழுகிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்....
அடுத்த பாடலைப் படிப்பதற்கு முன்னர் சில துளிகள். அன்னையின் புகழ்பாடும் அபிராமி அந்தாதியைப் பற்றிய நமது இந்த மடல்களுக்கு ஆதரவளித்து வரும் அன்பர்களுக்கு நன்றி.
அபிராமிப் பட்டர் கொண்டிருந்த பக்தி கடலளவு என்றால் எமது பக்தி அதில் ஒரு துளி மட்டுமே... அவரது பக்தியின் ஒரு சிறு வெளிப்பாடுதான் அபிராமி அந்தாதி.. ஆனால் நமக்கோ அது மாபெரும் பொக்கிஷம். அவற்றை நான் சுவைத்த நோக்கில் மட்டுமே உங்களுக்குத் தருகின்றேன். மேலும் ஒரு அன்பர் அந்தாதி பற்றி விளக்குங்களேன் என்று தனிமடலில் கேட்டிருந்தார். அந்தாதியின் விளக்கம் அச்சொல்லிலேயே நமக்குக் கிடைக்கின்றது. அந்தம்+ஆதி = அந்தாதி. அந்தாதிப் பாடல்களில் முதல் பாடலின் ஈற்றுச்சீர் மறு பாடலின் முதன்மை சீராக வரும். அப்படிப் பாடப் படும் பாடல்களில் இறுதிப் பாடலின் ஈற்றுச்சீர் முதல் பாடலின் முதற்சீராக அமைந்திருக்கும். தமிழிலக்கியத்தில் அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி, கம்பன் எழுதிய சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, அருணகிரி நாதரின் கந்தரந்தாதி போன்றவை முக்கியமானவை. இவற்றுள் கம்பனின் சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும் மேலே நான் குறிப்பிட்ட நடையில் உள்ளன. ஆனால் அருணகிரியின் கந்தரந்தாதியோ வேறு நடையில் உள்ளது. ஒரு பாடலின் நான்கு அடிகளுக்கும் முதற்சீர் பொதுச்சீராக அமைந்துள்ளது.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று கம்பனின் புலமையை நாம் மெச்சுகிறோம். கம்பனோ.. கலைமகளை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவி பாடும் என்று தன்னடக்கம் பேசுகிறான்... அபிராமி அந்தாதி நிறைவு பெற்றதும் சரசுவதி அந்தாதியைத் தொடருவோம்...
பாடல் ஐந்து.
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்தியசுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே
விளக்கம்: மூன்று நிலைகளிலும் பொருந்தியிருப்பவளே, புகழுரை செய்வதற்கேற்ற அழகுடன் கூடிய முலைகளும், அதன் பாரத்தால் வருந்துவது போன்ற மெல்லிய இடையும் கொண்ட மனோன்மணியே... நீண்ட சடையைக் கொண்ட சிவபெருமான் அன்று அருந்திய நஞ்சினை அமுதமாக்கிய அம்பிகையே... தாயே அபிராமியே... அழகிய தாமரை மலர் மீது மிக அழகாக அமர்ந்திருக்கும் தாயே... ஆதியும் அந்தமுமானவளே... உன் திருவடிகளை என் தலைமேல் ஏற்கிறேன்...
எத்தனை அழகிய வரிகள் காணுங்கள்...
முப்புரைக்கும் பொருந்தியவள்... என்ற சீர்களைக் காணுமிடத்து... எம்முப்புரை எனும் வினா எழுகிறது... எல்லாவற்றையும் நாம் அதிக இடங்களில் மூன்றாகக் காண்கிறோம்.. பிரம்மா, திருமால்., சிவன் ஆகிய மும்மூர்த்திகள், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியர்கள், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்கள், கடந்த காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்கள். இவ்வாறு பல மூன்று நிலைகளைக் காண்கிறோம்... இதில் அம்மை அபிராமி எம்மூன்று நிலைகளுக்கும் பொருந்தியவள்...??? அபிராமிப் பட்டருக்கு மட்டுமல்ல... நமக்கும் தெரிந்த உண்மை அதுதான்... அன்னை அபிராமி எல்லா மூன்று நிலைகளுக்கும் பொருந்தியவள். அல்லது அவற்றைத் தனக்குள்ளே அடக்கியவள் என்று பொருள் கொள்ளலாம். பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, சிவ சக்தியாக நிற்பவளும் அவளே... முப்பெருந்தேவியராகி அவர்கட்குத் துணை நிற்பவளும் அவளே. படைப்பவளும் அவளே... காப்பவளும் அவளே... அழிப்பவளும் அவளே... முக்காலத்திலும் பூலோக மாந்தர்க்குத் தெய்வமாய் இருப்பவளும் அவளே...அதைத்தான் அபிராமிப் பட்டர் "பொருந்திய முப்புரை" என்று ஒரே சொல்லில் குறிப்பிடுகின்றார்.
" செப்புரை செய்யும் புணர் முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி.." புகழ்ந்து பாடக்கூடிய அழகுடன் கூடிய முலைகளின் பாரத்தால் வருந்தும் மெல்லிய இடையக் கொண்ட மனோன்மணித் தாயே... என்பது இதன் பொருள்... ஒருமுறை நமது நண்பர் ஒருவர் எழுப்பிய வினா இது..."ஒரு தெய்வதத்தைப் பக்தன் இப்படிப் புகழலாமா? இதைப் போன்ற அங்க வர்ணணை செய்யலாமா?" என்று.. ஒரு ஆபாசக் கதையைப் படிக்கும்போது இதைப் போன்ற வரிகளால் அல்லது இதைப் போன்ற அங்க வர்ணனைகளால் நம் மனத்தில் ஏற்படும் உணர்வுகளுக்கும், அபிராமி அந்தாதியைப் படிங்குங்காலை நம் மனத்தில் எழும் உணர்வுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கவனித்துப் பாருங்கள்.. ஓர் அரசனை அவன் தரும் பொருளுக்காகப் புகழும் புலவனே என்னென்னவோ கற்பனை செய்து பாடுகிறான்.. ஆனால் உலகையாளும் லோக மாயா அன்னை அபிராமியைத் தன் கண்குளிரக் கண்ட அபிராமிப் பட்டரால் அவளை அவள் அங்கங்களை வர்ணணை செய்யாது இருக்க இயலுமா?? கண்களை மூடி இப்பாடலைத் தியானித்துப் பாருங்கள்... அன்னையின் அழகிய உருவமே தோன்றுமன்றி அவ்விடம் காமத்திற்கிடமில்லை.
வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை" கடந்த பாடல்களிலும் சரி இந்தப் பாடலிலும் சரி அபிராமிப் பட்டர் சிவபெருமானை நினைத்தருள அவரது நீண்ட சடைகளை நினைவு படுத்துகிறார். நீண்ட சடைமீது அவருக்கிருந்த காதலோ..?? அமரர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவால் அவர்கள் கடைந்த பாற்கடலில் இருந்து நஞ்சு வெளிப்பட்டதல்லவா?? அவ்வமயம் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது.. அந்தக் கொடிய நஞ்சின் வலிமையை யாராலும் தாங்கிங்க் கொள்ள இயலவில்லை.. அனைவரும் கயிலை சென்று அப்பனை வழிபட்டனர். பக்தர்கள் குறை கண்டு பொறுப்பாரா ஈசன்? உடனே எழுந்து அந்நஞ்சைத் தம் கைகளில் எடுத்துக் குடித்து விட்டார். "ஐயஹோ... இதென்ன சோதனை... உலகைக் காக்க பரம்பொருள் நஞ்சருந்தி விட்டாரே... அவருக்கு என்ன ஆகுமோ?" என்று எண்ணிய உமையவள் தனது திருக்கரங்களால் அவரது கழுத்தைப் பிடிக்க அக்கொடிய நஞ்சி அவ்விடமே தங்கிற்று.. சிவனுக்குப் புதியதோர் அணிகலனாக, பாம்பாக அது கிடைத்தது. மேலும் அந்நஞ்சின் பாதிப்பால் அவரது கழுத்து நீல நிறமாக மாறித் திருநீலகண்டன் என்ற புதியதொரு பெயரும் வழக்கில் வந்தது. அப்பெருமைக்குக் காரணமான அம்பிகையே... அபிராமித் தாயே.. என்கிறார் அபிராமிப் பட்டர்.
"அம்புயமேல் திருந்திய சுந்தரி" நீரில் மீது காணப்படும் அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் சுந்தரியே... பேரழகியே.... தான் காணும் பெண்டிரையெல்லாம் அன்னை அபிராமியாகக் கண்டது அபிராமிப் பட்டரின் சிறப்பு.. அப்படிக் கண்ட பெண்டிரிலெல்லாம் அபிராமியே பேரழகி என்று குறிப்பிடுகிறார்.
" அந்தரி பாதம் என் சென்னியதே" ஆதியும் அந்தமுமான என் அபிராமித் தாயே... உன் பாதங்களை என் தலைமேல் அணிகிறேன்... அத்தனை பணிவு.... பாடலை முழுதும் படித்துப் பாருங்கள். நண்பர் எழுப்பிய வினா ஞாயிறு கண்ட பனி போல் காணாது ஓடிவிடும்..
பாடல் ஆறு
சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!
விளக்கம்: செந்தூர வண்ணங்கொண்ட அழகிய என் அழகிய அபிராமித் தாயே... தாமரை மலர் போன்ற அழகுடைய உன் பொற் பாதங்களை எப்போதும் என் தலைமேல் வைத்துள்ளேன்.. எப்பொழுதும் என் சிந்தையில் நிலைத்திருப்பது உனது திருமந்திரமே... நான் எப்போதும் கூடியிருப்பது உன் அன்பர்களையே... எமது செயல்கள் அவர்களை முன்னிட்டே நிகழ்கின்றன. நாள்தோறும் நான் முறையாகத் தவறாது படிப்பது உனது மேலான ஆகம வழிமுறைகளையே... தாயே
... என் தலையைப் பார்... உனது அழகிய பொற்தாமரைப் பாதங்கள் அவ்விடத்து உள்ளன... அன்னையின் பாதங்களை சிரத்தில் கொள்வது எத்தகைய புண்ணியம்... கடந்த பாடலில் உனது திருவடிகளை என் தலைமீது ஏற்கிறேன் என்றுரைத்த அபிராமிப் பட்டர், இப்பாடலில் என் தலை மீது எப்போதும் உன் பொற்பாதங்களை வைத்திருக்கிறேன் தாயே எனக் குறிப்பிடுகின்றார். மேலும் எனது சிந்தையுள்ளே எப்போது நிறைந்திருப்பது உனது திரு மந்திரம்தான். உன் புகழ் பாடும் மந்திரங்கள் தவிர எனக்கு வேறு மந்திரங்களே தெரியாது தாயே... பார் என் சிந்தைகளைப் பார்.. அவை உனது திருமந்திரங்களால் நிறைந்திருக்கின்றன. அவையே எனது வாயின் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. செந்தூர வண்ணங்கொண்ட அழகிய பெண்ணே... என் அபிராமித் தாயே... இங்கே பார்... நான் கூடியிருப்பது உன் அடியார்களிடம் மட்டும்தான்... அவர்களை முன்னிட்டே நான் செயல் புரிகின்றேன்... இதனை வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம்.. அன்னையின் அடியார்கள் மட்டுமே அபிராமிப் பட்டரைக் கூடியிருப்பார்கள். அறியாதோர் அவரைப் பித்தரென்று இகழ்ந்து கொண்டல்லவா இருந்தார்கள்... எனவே அவர் கூடியிருந்ததெல்லாம் அன்னையின் அடியார்க் கூட்டத்தோடுதான்.. அவர் செய்த செயல்களெல்லாம் அவர்களை முன்னிட்டு அன்னையின் புகழ் பாடும் செயல்கள்தான்... பின்னர் எதற்காக அவர் தன்னை நிருபிப்பதற்காக சரபோஜி மன்னரிடம் நிலவைக் கொண்டுவருவேன் பிரயத்தனம் செய்ய வேண்டும்..? அங்கும் வெளிப்பட்டு நின்றது அன்னையின் திருவருள் அல்லவா?? பக்தன் தனது பக்தியை வெளிப்படுத்துகிறானோ இல்லையோ... அன்னையானவள் உண்மைப் பக்தனின் பக்தியைப் பாரறியத் தானே வெளிப்படுகிறாள்.. தன்னை வெளிப்படுத்தி நிலவினைக் காட்டிய அபிராமியின் கதை அனைவரும் அறிந்ததுதான் அல்லவா?? அந்தக் கதையை அன்னைத் தன்னை வெளிப்படுத்திய பாடல் வரும் வேளை காண்போம். இங்கே பாருங்கள்... அபிராமிப் பட்டர் தன் செயல்களெல்லாம் அன்னையின் அன்பர்களை முன்னிட்டே நடைபெறுவதாகக் கூறுவது அவரது பரந்த பக்தியினைக் காட்டுகிறது. மேலும் அவர் குறிப்பிடுவது தான் முறையாகக் கற்கும் அன்னையின் ஆகம விதிகளை... தாயே... அபிராமியே... நான் நாள்தோறும் படிப்பது எல்லாவற்றிற்கும் மேலான உனது ஆகம நெறிமுறைகளையே....
இன்று இருபாடல்கள்
. மொத்தம் ஆறு பாடல்களைப் பார்த்திருக்கின்றோம்.. இந்த ஆறு பாடல்களையும் தினமும் தவறாது படியுங்கள்... விளக்கத்தில் ஏதேனும் பிழையிருப்பின் தயவு செய்து தெரியப் படுத்துங்கள். மீண்டும் தொடரும் பாடல்களின் விளக்கங்களோடு நாளை சந்திப்போம்...
பாடல் ஏழு
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
விளக்கம் :
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், திங்களைத் தன் சடையில் அணிந்திருக்கும் உனக்கன்பான சிவனும், திருமாலும் என்றும் வணங்கித் துதிக்கும் சிவந்த பாதங்களைக் கொண்ட செந்தூரம் அணிந்த பேரழிகியே, மத்தின் சுழற்சியில் அகப்பட்டு அங்கும் இங்கும் சுழலும் தயிரைப் போல் எனது உயிரும் பிறப்பு, இறப்பு என்னும் வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டுத் துன்புறுகிறது. தளர்வுறுகிறது. அப்படித் தளர்ச்சியடையாத ஒரு நல்ல கதியை எனக்கு அருள்வாயாக....
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி... இப்பதத்திற்குப் பல்வேறு பொருள் கொள்ளலாம். நான் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியை அபிராமிப் பட்டர் எண்ணியிருக்கலாமோ என்று எண்ணி இவ்விடம் விளக்கமளித்துள்ளேன்.. வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அன்னையின் தியானத்தில் மூழ்கி இன்பமெய்து வந்த அபிராமிப் பட்டர் சரபோசியின் அதிகாரத்தால் துன்பங்கொள்ள நேர்ந்தது. அச்சமயம் அன்னையை வரவழைத்து உண்மையை நிருபிப்பதற்காக எழுந்த பாடல்களல்லவா அபிராமி அந்தாதி..? இதே நாளில் காலையில் உன்னை எண்ணி, தியானித்து, தரிசனம் செய்து மகிழ்வடைந்திருந்தேன்.. இப்போது பார் துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்.. என்றும் பொருள் கொள்ளலாம். என் ஆவி, என் மனது தளர்ச்சியடையாத ஒரு கதியை எனக்குத் தந்தருள்தாயே... வெளிப்படு... உன்னை எண்ணி நான் மனம் மகிழ்ந்திருந்த வேளையில் நான் அளித்த ஒரு பதிலால் எனக்கேற்பட்ட இழுக்கினைப் போக்க ஓடிவா என்றும் அழைத்திருக்கலாம். பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளால் என்றென்றும் வணங்கித் துதிக்கப் படும் சேவடிகள் கொண்ட செந்தூரத் திலகம் அணிந்த பேரழகியே என்று அன்னையை விளிக்கிறார்.
சரியப்பா
.. பிரம்மன் அன்னையை வழிபடட்டும். அவள் அண்ணன் திருமால் அவளை வணங்கட்டும். அதென்ன அவளது கணவன் சிவன் அவளை வணங்குவது??? இது எப்படியாகும்?? என்ற ஒரு வினா இவ்விடத்து எழுகிறது... சக்தி வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கை அவளே ஆதி சக்தி என்பதுதான். அவள்தான் மும்மூர்த்திகளைப் படைத்து அவர்களுக்காத் தன் சக்திகளை மூன்றாகப் பிரித்து முப்பெருந்தேவியராக அருளிச்செய்தாள். எனவே அவளை எருதேரறும் எங்கள் பரமன் வணங்குவதில் வியப்பொன்றுமில்லை.. இன்னொன்றும் சொல்லலாம். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று பேசுகின்ற இக்காலத்தில் கணவனை மனைவி வணங்கும் போது, மனைவியைக் கணவன் வணங்குவதில் தவறேது.. அந்தக் காலத்திலேயே எங்கள் பரமர் உமையவளுக்கு சக உரிமை கொடுத்தார் என்றும் கொள்ளலாம்... அன்பர்களின் கருத்து இவ்விடம் என்னவோ....???
பாடல் எட்டு
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
விளக்கம்
.. என் தந்தையான சிவபெருமானின் துணையாக விளங்கும் பேரழகியான அபிராமித் தாயே... செந்தூரவண்ணங்கொண்டவளே... அன்றொருநாள் உன் அன்பர்களுக்கெல்லாம் துன்பம் விளைவித்த மகிடனின் தலைமேல் நின்று அவனை அளித்த காளியே.. நீல நிறமாய் நின்ற துர்க்கையே... இந்த உலகுக்கே நீ தாயாக இருந்தாலும், என்றும் அழியாத கன்னிகையாய் இருப்பவளே... வேதங்களைத் தம் கரத்தில் தாங்கும் பிரம்மதேவனின ஒரு முகத்தைத் தனது கரத்தில் தாங்குபவளே... உனது மலர்ப்பாதங்களே என் சிந்தையுள் நீங்காது நிறைந்துள்ளன.. எனக்கு என்றென்றும் துன்பத்தைக் கொடுக்கும் உலகத்தின் மீதான பாசம் எனும் தொடரை வந்து துண்டித்து எனக்குக் கருணை செய்....
கடந்த பாடலில் சிவன் வந்து வணங்கும் சேவடிகளைக் கொண்ட அபிராமியே என்று விளிக்கும் அபிராமிப் பட்டர், இப்பாடலில் நீ என் தந்தையின் துணையாக நிற்கிறாய் என்று போற்றுகின்றார். பேரழகு கொண்டு என் தந்தைக்குத் துணையாய் என்றென்றும் நிற்பவளே... (மனைவி வேறு துணைவி வேறு அல்ல என்பதை இவ்விடத்து நினைவிற்கொள்க...இருவரும் ஒருவரே....) நீ என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி.... இங்கே பார் இந்த உலகம் துன்பமயமானது... இத்துன்பங்களுக்குக்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்துபார்த்தேன் தாயே... நான் உலகம் மீது கொண்ட பற்றும் பாசமும் தொடர்வதால்தான் துன்பம் என்னைத் தொடர்கிறது.. தாயே நீ வந்து என் துன்பங்களையெல்லாம் வேறோடு அறுத்துவிடு... செந்தூரத் திலகம் அணிந்தவளே... செந்தூர வண்னங்கொண்டவளே.... அன்றைக்கு ஒருநாள் உனது அன்பர்களையெல்லாம் துன்பம் செய்தான் மகிடன் என்றொரு அசுரன்.. தனது அளவுக்கு அதிகமான அகந்தையால் அவன் அப்படிச் செய்தான். நீ அப்போது என்னசெய்தாய்.. துர்க்கையாக அவதரித்தாய்... அவனை வதம் செய்தாய். அவன் தலைமேல் நின்றாய்... நீலி... நீல நிறங்கொண்ட காளியே.... அழியாத கன்னிகை... உலகத்து மாந்தரனைவரையும் பெற்றெடுத்த தாயல்லவா நீ... ஆனாலும் என்றென்றும் அழியாத கன்னிகையாய்க் காட்சி தருகிறாய்.... ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள்... வேதநூல்களைத்தன் கையில் தாங்குகின்ற பிரம்மதேவனுக்கு ஒருமுறை ஏற்பட்ட அகந்தையை நீக்கியருள அவனது ஐந்து முகங்களுள் ஒன்றைப் பிரித்தெடுத்து உன் கையில் வைத்திருக்கிறாயே.... உனது மலர்ப்பாதங்கள் எப்போதும் என் சிந்தையில் நீங்காது நிற்கின்றன...
இருவேறு உண்மைகள் இப்பாடலில் வெளிப்படுகின்றன. துன்பத்திற்கடிப்படை பாசம், அந்த பாசத்தை அறுத்துவிடவேண்டி அன்னையிடம் முறையிடுகிறார். மேலும் இவ்விடத்து எதற்காக அகந்தை கொண்ட மகிடனைப் பற்றிய நினைவூட்டல்... ? தாயே... அன்று அகந்தை கொண்ட மகிடனை அழித்தாயே... இன்றைக்கு என் மனத்தில் இருக்கின்ற அகந்தைகளை அழித்துவிடம்மா என்று வேண்டுகிறார்... பிரம்மனின் அகந்தையை அழித்தவள் அவனது ஒரு திருமுகத்தைத் தன் கையில் தரித்தாள்... பிரம்மனை சக்தியானவள் படைக்கும் போது அவனுக்கு ஐந்து திருமுகங்களைத் தந்தருளினாள்... ஆனால் பிரம்மதேவனுக்கேற்பட்ட செருக்கினை அவரிடமிருந்து பிரித்தெடுக்க அவனது ஒரு திருமுகத்தைக் கொய்து தன் கையில் தரித்தாள்... பிரம்மனின் அகந்தைக்கும், மகிடனின் அகந்தைக்கும் என்ன வேறுபாடு... ? மகிடன் தனக்கேற்பட்ட தலைச்செருக்கால் மானுடர்க்கும், தேவர்க்கும் சொல்லொண்ணா துன்பமளித்தான்.. தன் அன்பர்களை அவனிடமிருந்து காக்க அன்னை துர்க்கையாக அவதரித்தாள் அவனை அழித்து அருட்செய்தாள்... ஆனால் பிரம்மனின் அகந்தையால் யாருக்கும் துன்பமேற்படவில்லை. அது அவருக்கே துன்பமாய் இருந்தது... கர்வம் தலைக்கேறியதால் யாரையும் மதியாதிருந்த அவரது செருக்கினை அடக்கியருள அவனது ஒரு திருமுகத்தை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டாள் அன்னை....
எனவே எனது அகந்தையால் எனக்கும் துன்பம் வேண்டாம், அது மிகுதிப்பெற்று அயலாருக்கும் துன்பம் வேண்டாம், பாசத்தின் தொடர்ச்சியால் வருந்துன்பமும் எனக்கு வேண்டாம் தாயே... என்னைக் காத்தருள்.... என்பது அபிராமிப் பட்டரின் வேண்டுதல்..
தொடரும்
பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம். நன்றி..
அபிராமி அந்தாதி 9 & 10
பாடல் ஒன்பது
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்ர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே
விளக்கம்
எமது தந்தையான சிவபெருமானின் கண்ணாகவும், கருத்தாகவும் இருப்பவளே... (இவ்விடத்து கரிய நிறங்கொண்டவளே என்றும் பொருள் பகர்வோர் உண்டு) வண்ணம் நிறைந்த பொன்மலையான மேருமலையைவிட பெரிதானதும், தாயைச்சிறிது நேரம் பிர்ந்து அழுத திருஞானசம்பந்தனுக்கு பாலை வழங்கியதுமான பாரமாகிய உனது திருமுலைகளுடனும் அதில் படரும் நீ அணிந்துள்ள மாலைகளுடனும் செம்மையாகிய உனது திருக்கரத்தில் நீ ஏந்திய வில்லுடனும், அம்புடனும் உன் அழகிய புன்னகையுடன் என் முன்னே வந்து காட்சியளித்திடுவாய் என் அபிராமித் தாயே...
கருத்தன எந்தைதன் கண்ணன... இப்பதத்திற்கு விளக்கமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறுவதுண்டு. கரிய நிறங்கொண்ட துர்க்கையே... என் தந்தையான சிவனின் கண்ணாக இருப்பவளே என்றும் பொருள் பகர்வர். உலகின் தாய் அல்லவா என் அபிராமித் தாய்... உலகில் படைக்கப்பட்ட அனைந்து மைந்தர்களுக்கும் பால் வழங்கும் அன்னையின் திருமுலைகள் மிகவும் பெரிதானது என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். அது எவ்வளவு பெரிதென்றால் மேருமலையை விட மிகப் பெரிது... அவளை லோகமாயா என்றும் மகாமாயே என்றும் வணங்குகின்றனர். ஏழைகளும், குடிசைகளில் வாழ்பவர்களும், மகமாயி என்று விளிக்கின்றனர். மகமாயியோ, மகாமாயேயோ... அன்னையவள் உலகின் தாய்... அழுகின்ற பிள்ளைகட்கு ஓடிவந்து அருட்செய்யும் உமையவள்.. அதனால்தான் அன்று பசித்து அழுத திருஞானசம்பந்தனுக்குத் தானே நேரில் வந்து தனது திருமுலைகளால் அமுதூட்டினாள்.. அத்தகைய பாரம் நிறைந்த உனது திருமுலைகளுடனும், அதில் படரும் உன் கழுத்தில் நீ அணிந்த மாலைகளுடனும், உனது செம்மைத் திருக்கரத்தில் நீ ஏந்தும் வில்லுடனும், அம்புடனும் அழகிய புன்னகையுடனும் நீ வந்து என் முன்னே காட்சியளித்திடுவாய் என்று அன்னையை அழைக்கின்றார் அபிராமிப் பட்டர். அன்னையின் புன்னகையைப் பற்றி அவர் செய்த வர்ணனை ரசிக்கத் தக்கது. முருத்தன மூரலும்.... மொட்டொன்று விரிவதைப் போன்ற புன்னகை... அன்னையே... நீ வாய் மூடி நிற்கும்போது உனது அதரங்கள் அழகிய மொட்டைப் போன்று காட்சியளிக்கின்றன... நீ புன்னகை சிந்தும்போது... அம்மொட்டு மலராக விரிவதைப் போன்று அழகாகக் காட்சியளிக்கிறது தாயே... என்று அன்னையைத் தன் முன் வந்து காட்சியளிக்குமாறு அழைக்கின்றார்.... எத்தனை அழகிய கற்பனை வளம் காணுங்கள்... கண்கள் மூடி அந்த அபிராமி அன்னையை இப்பாடல் பாடி அழைத்துப் பாருங்கள். உங்கள் குரல் கேட்டு அன்னை ஓடோடி வந்து உங்கள் சிந்தையில் புகுவாள்...
பாடல் பத்து.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே
விளக்கம்
அருளே வடிவான உமையவளே... அபிராமித் தாயே... அன்று இமயத்து அரசன் இமவான் பெற்றெடுத்த செல்வமே... எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே... நான் நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், கிடக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், எல்லா நிலைகளிலும் நான் நினைப்பது உன்னைத் தான்.... நான் வணங்குவதோ உனது மலர்ப்பாதங்களையே...
இமவான் செய்த பேறு அவனுக்கு உமையவள் மகளாகப் பிறந்தது. ஆகையால்தான் அவள் மலைமகளென்று பெயர் பெற்றாள். மலையரசன் பெற்றெடுத்த மலைமகளே... என்று அபிராமிப் பட்டர் அன்னையை விளிக்கின்றார். எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே.... வேதங்கள் எழுதப் பட்டவை, செவி வழி நின்றவை என்ற இருபெரும்பிரிவுகளாகத் தென்படுகின்றன. (இவற்றைப் பற்றிய அறிவு எமக்கு அதிகம் இல்லை.. அறிந்தோர் எழுதுங்கள்..) தாயானவள் எழுதிய மறைக்கும் எழுதப் படாத மறைக்கும் மூலமானவள்... இவ்விடம் எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே.. என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது... அந்த வேதங்கள் அல்ல என்று நான் கருதுகிறேன்... என்றும் எழுதாத மறைபொருள் அன்னையின் திருநாமமே... அந்தண குலத்திற்பிறந்து அன்னைக்குரிய மந்திரங்கள் ஓதுவோரை மட்டும்தான் அன்னை காத்தருள்கிறாளா?? இல்லவே இல்லை.. யாரொருவர் அவள் திருநாமத்தை கொச்சைமொழியில் உச்சரித்தாலும் ஓடிவந்து அருள்வது அன்னையின் பெருங்கருணை அல்லவா?? அத்தகைய எழுதா மறையில் ஒன்றியிருக்கும் அன்னையே... அரும்பொருளே என்று அன்னையை அபிராமிப் பட்டர் அழைக்கின்றார்.. அழியாத முக்திநிலையானவளே..... நான் நிற்கும் போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் அமரும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் படுத்திருக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் நடக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். என்று தனது எல்லா நிலைகளிலும் அன்னையின் நினைவுகளே தன் சிந்தையில் குடிகொண்டிருப்பதாக அபிராமிப் பட்டர் தெரிவிக்கின்றார். மேலும் நான் என்றென்றும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களைத்தான்..... அன்னையே..... எனக்கு அருளிச்செய்....... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்.
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.. நன்றி..
அபிராமி அந்தாதி 11 & 12
பாடல் பதினொன்று
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே
விளக்கம் :
அபிராமித்தாயே... நீயே என் ஆனந்தமாய்த் திகழ்கிறாய்... என் அறிவாய்த்திகழ்கிறாய்.... என்னுள் நிறைந்த அமுதமுமாய்த் திகழ்கிறாய்... வானமே எல்லையான வடிவானவளாய் விளங்குகிறாய்... ரிக், யசூர், சாம, அதர்வனமெனப்படும் நான்கு மறைகளுக்கும் எல்லையாக இருப்பது அனைவருக்கும் சரணாகதியை அளிக்கும் உனது பாதங்களே... அப்பாதங்கள் வெண்ணிறக் காட்டைத் தனது ஆடற்கலைக்கு அரங்கமாய்க் கொண்ட எங்கள் பிரான் சிவபெருமானது முடிமேல் இருக்கின்றன...
எங்கள் அபிராமித் தாயே... எனக்கு ஆனந்தம் அளிப்பவளும் நீயே... என் ஆனந்தமும் நீயே.. பாருங்கள் அபிராமிப் பட்டரின் பக்தியை....! தன் ஆனந்தமே அன்னைதான் என்று பகர்கிறார்... ஆனந்தமாகவும் தனது அறிவாகவும், நிறைந்த அமுதமாகவும் அம்மையே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும் வானந்தமான வடிவுடையாள்... வானமே அந்தமான வடிவுடையாள்... வானுக்கு அந்தமுண்டோ???? அதே போல் தாயே உன் வடிவழகிற்கு எல்லையுண்டோ..... அன்னையின் அழகிற்கெல்லையில்லை என்பதை எத்தனை அழகிய சொற்கள் கொண்டு பாடுகிறார்... தின்னத் தின்ன தெவிட்டாத தமிழமுது அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி... மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் .... ரிக், யசூர், சாம, அதர்வணம் எனப்படும் நான்கு மறைகளுக்கும் எல்லையாக , முடிவாக இருப்பது எல்லோருக்கும் சரணமளிக்கும் உன் பொற்பாதங்கள்.... இப்பாதங்கள்... தவள நிறக் கானம் .... வெண்மை நிறக் காடு... வெண்மை நிறக்காடு யாது??? அப்பன் சிவன் ஆடும் காடு எது??? பிணங்கள் எரியும் சுடுகாடு... பிணங்களின் சாம்பல்களாலான வெண்மை நிறமான சுடுகாட்டைத் தம் ஆடரங்காம் - தனது ஆடற்கலைக்கு அரங்கமாக்கிக் கொண்ட எங்கள் பிரான் சிவ பெருமானது தலைமுடி மேல் நின் பாதங்கள் உள்ளன.... அபிராமிப் பட்டர் ஒரு சக்தி வழிபாடு செய்யும் சித்தர் என்பார்கள்... இவ்விடத்து தமிழ் வார்த்தைகளால் விளையாடி தாம் ஒரு எழுத்துச் சித்தர் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
மீண்டும் இவ்விடத்து ஈசனார் தலைமீது தேவியின் திருப்பாதங்களா? என வினவுவோர் உண்டு... அன்னையும் ஈசனும் ஒரே அம்சம் என்பதைக் கருத்திற் கொள்க,.... அன்னையில்லையேல் ஈசன் இல்லை... ஈசன் இல்லையேல் அன்னை இல்லை... சக்தி வழிபாடு புரிவோருக்கு அவளே தெய்வம்... சக்தியே உலகத்தைப் படைத்தாள்... மும்மூர்த்திகளைப் படைத்தாள்... முப்பெருந்தேவியராக அவதரித்தாள்.. (முன்னர் ஒருமுறை இதைப் பற்றி எழுதியிருக்கின்றேன்)... எனவே இவ்வடிகளில் வியப்பொன்றும் இல்லை....
பாடல் பன்னிரெண்டு
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!!
விளக்கம்.
ஏழுலகும் பெற்றெடுத்த என் அபிராமித்தாயே... என்றென்றும் நான் பாடுவது உன் புகழைத்தான்... நான் கற்பது உன் திருநாமமே... நான் மனங்கசிந்து பக்தி செய்வதோ, பக்தியால் பாடுவதோ... உனது இரு திருவடித் தாமரைகளைத்தான்... பகலும் இரவும் நான் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியவர் கூட்டத்தைத்தான். எனது இப்படிப் பட்ட செய்கைகளுக்கு நான் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என் அபிராமித் தாயே....
கண்ணியது உன் புகழ்.... நான் என்றென்றும் பாடுவது உன் புகழைத்தான்... அபிராமிப் பட்டருக்கு அன்னையைத் தவிர வேறு நினைவு இருப்பதாகத் தெரியவில்லை... அவரது நினைவுகள் அன்னையைச்சுற்றியே வட்டமிடுகின்றன... எப்போதும் அன்னையின் நினைவாலேயே அவர் நின்றிருப்பதால் அவருக்கு வேறேதும் தோன்றவில்லை... அதனால்தான் பலர் அவரைப் பித்தனென்று இகழ்ந்தனர். காணும் பெண்டிரையெல்லாம் அவர் அன்னையாகவே கண்டார். அதனால் அவரைப் பெண்பித்தர் என்றும் இகழ்ந்தனர்... ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை... அன்னையின் புகழைப் பாடுவதிலேயேயும் அவளைத் தியானித்திருப்பதிலேயுமே தன் வாழ்நாளைக் கழித்தார்.. நான் கற்பதும் உனது திருநாமத்தைத் தான்... என்று பகர்கிறார்.. அன்னையின் திருநாமத்தைக் மீண்டும் மீண்டும் கற்பதில் உள்ள இன்பத்தை அனுபவித்து எழுதிய வரிகள் இவை.. கண்கள் மூடி அவள் திருநாமத்தைத் தியானித்துப்ப்பாருங்கள்.. உங்கள் மனத்துள் எழும் ஆனந்தத்திற்கு எல்லையே இருக்காது. நான் மனங்கசிந்து பக்தி செய்து பாடுவது உன் இரு திருவடித் தாமரைகளைத்தான். நான் பகலும் இரவும் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியவர் கூட்டத்தைத்தான்... எனது இப்படிப் பட்ட செய்கைகளுக்கு என்ன காரணம் தாயே... நான் என்ன புண்ணியம் செய்தேன் ஏழுலகையும் பெற்றெடுத்த என் அபிராமித் தாயே...
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.... மீண்டும் சந்திப்போம் நன்றி...
அபிராமி அந்தாதி 13 & 14
பாடல் பதின்மூன்று
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
விளக்கம் : பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த அபிராமித்தாயே... ! அப்பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த வண்ணம் காத்து வருபவளே... பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொண்டவளே... நீலநிறங்கொண்ட கழுத்தினையுடைய சிவனுக்கும் மூத்தவளே... என்றென்றும் இளமையாகக் காட்சியளிக்கும் கண்ணனுக்கும் இளையவளே.. மாபெரும் தவம் செய்பவளே... உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவது முடியுமா????
கடந்த பாடலில் ஏழுலகையும் பெற்றெடுத்தவளே என்று அபிராமியன்னையை விளிக்கும் அபிராமிப் பட்டர் இப்பாடலில் புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே... என்று விளிப்பது சற்றே முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.. நமது சிற்றறிவுக்குத் தோன்றிய சிறு விளக்கத்தை இவ்விடத்துத்தந்துள்ளேன்... அன்பர் மோகனரங்கம் போன்ற பெரியோர் இது தவறெனில் திருத்தி, சரியான கருத்தைப் பதிவிடுக (வலைப்பதிவிலும்தான்...) நாம் சிறுவயதில் பள்ளியில் பயிலும் நேரத்தில் கதை சொன்ன பெரியோர்களெல்லாம் ஏழு என்ற எண்ணைக் கணக்கில் கொண்டனர். ஏழு கடல், ஏழு மலை... என்றெல்லாம் இளவரசியைத் தேடும் கதைகள் அவை... அவை போல் அச்சமயத்தில் மாந்தர் வாழும் பூவுலகம் ஏழு என்ற கணக்கு வழக்கில் வழக்கில் இருந்தது.. மேலும் அமரலோகம் ஏழு என்ற கணக்கும் வழக்கில் இருந்திருக்கலாம் என்பது நமது கணிப்பு... எனவேதான் மாந்தர் வாழும் ஏழுலகையும் படைத்தவளே என்று கடந்த பாடலில் குறிப்பிடும் பட்டர்... இவ்விடத்து மாந்தர் வாழும் பூலோகம் ஏழு, அமரர் வாழும் தேவலோகம் ஏழு என்று கருதி புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே... என்று பாடியிருக்கலாம்... இது எமது ஒரு கணிப்புதானேயன்றி, இதைத்தாண்டி விளக்கமளித்திட தேர்ந்த வேத ஞானம் எமக்கு இல்லை... அறிந்தோர் பெரியோர் அறிவித்தால் அறிந்து கொள்வோம்.... (ஈரேழுலகும் எனக்குறவாக... கந்தர் சஷ்டி கவசம்)
பூத்தவண்ணம் காத்தவளே... ஈரேழு பதினான்குலகையும் எங்ஙனம் பெற்றெடுத்தாயோ... அவ்வண்ணவமே காப்பவளே.... முன்னர் ஒரு பாடலில் குறிப்பிட்டது போல் உலகைக்காக்க நஞ்சுண்டு, தமது கழுத்து நீல நிறமானதால், திருநீலகண்டர் எனப் பெயர் பெற்ற சிவபெருமானுக்கும் மூத்தவளே.... அவ்விடத்துச் சொல்ல மறந்ததொரு செய்தியை (?) இவ்விடத்துத் தருகிறேன்... கல்லூரி பயிலும்போது மொழிப்பாடத்தில் கோளறு திருப்பதிகத்தின் "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்.." எனும் பாடல் இருந்தது... இதற்கு விளக்கமளிக்கும்போது எமது தமிழாசிரியர் திரு. பெரியநாயகம் ஜெயராஜ் ஒரு தமாசான செய்தியைக் கூறினார். வேடிக்கைக்காக மட்டுமே.. சிவனையும் சக்தியையும் இன்றைய தம்பதியருக்கு ஒப்பிட்டுக் கூறினார் ஒரு முறை சிவனுக்கும் சக்திக்கும் ஏதோ கருத்து வேறுபாடு... அவ்வமயம் சிவனை சக்தி துரத்தி கொண்டு வர (அதே சமயம் அங்கே பாற்கடலைக் கடைந்த விடம் துரத்திவர அமரர்களும் அசுரர்களும் சிவலோகத்தை நோக்கி ஓடி வர... ) அவ்விடத்து வந்த நஞ்சைக் கையால் அள்ளி சக்தியின் தொல்லையிலிருந்து மீண்டு விடலாம் என்று குடித்து விட்டார். நின்று விட்டார். இதையறியாத அன்னையோ... சிவனை மாய்த்துவிட அவர் கழுத்தை நெறித்தாள்... இதனால்தான் அந்த நஞ்சு அவ்விடத்து நின்று சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற அழகியதொரு பெயரைப் பெற்றுத் தந்தது....விடமும் ஒழிந்தது. அனைவரும் காப்பாற்றப் பட்டனர்... சக்தியும் சிவனும் சிரித்து மகிழ்ந்தனர்... என்று குறிப்பிட்டார்...
ஆக அப்படிப்பட்ட சிவனுக்கும் மூத்தவள் என் அபிராமி அன்னை என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர் (பலமுறைக் குறிப்பிட்ட செய்திதான்... அன்னை சக்தியே அகிலத்தைப் படைத்தாள்.. அவளே ஆதிசக்தி என்பது சக்தி வழிபாடு செய்வோரின் கருத்து).
என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே... இவ்விடத்துப் பாருங்கள்... என்றும் ஆனந்தமளிக்கும் திருநாமத்தைக் கொண்ட கண்ணபிரானை நினைவூட்டுகிறார். ஊழிக்காலத்து உலகம் அழியும் வேளையில் கண்ணபிரான் சிறு குழந்தையாக ஆலிலையில் மிதந்து வருவார் என்பது வைணவர்களின் நம்பிக்கை... எனவே என்றென்றும் இளமையாகத் தோற்றமளிக்கும் முகுந்தனுக்கு மலைமகள் தங்கைமுறையாவாள்... எனவேதான் என்றும் மூப்பெய்தாத முகுந்தனுக்கு இளையவளே... என்று விளிக்கின்றார்...
இவ்விடத்தும் ஒரு முரண்பாடு... சிவனுக்கு மூத்தவளாம், முகுந்தனுக்கு இளையவளாம்... எப்படி இது திண்ணம்?? என்று வினவுவோர் உண்டு... மீண்டும் பழைய பல்லவிதான்... ஆதிசக்தியே அகிலத்தைப் படைத்தாள்... மும்மூர்த்திகளைப் படைத்தாள். அவர்களுக்குத் துணையாகத் தாமே முப்பெருந்தேவியராக உருவெடுத்தாள்...புரிந்ததல்லவா???
மாத்தவளே... மா தவம் புரிபவளே.... மாபெரும் தவ வலிமை கொண்ட என் அபிராமி அன்னையே.... உனைவிடுத்து வேறொரு தெய்வத்தை நான் வணங்க முடியுமா??? உன்னை மட்டும்தான் வணங்க இயலும் என்று இப்பாடலை முடிக்கிறார் அபிராமிப் பட்டர்...
பாடல் பதினான்கு
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே
விளக்கம் : எங்கள் பிராட்டியான அபிராமி அன்னையே... என்றும் உன்னை வணங்கும் தேவர்கள், அரக்கர்கள் . உன்னை என்றும் தியானத்தில் கொண்டு திசைகொரு முகம் கொண்டிருக்கும் பிரம்மன், நாராயணன், உன்னைத் தன் அன்பால் பந்தமெனக் கொண்ட என்றும் அழிவில்லாத பரமானந்தரான பரமசிவன் இவர்களெல்லாம் தவமிருப்பது உன்னைத் தரிசனம் செய்வதற்காகத்தான். உன் கருணையைப் பெறுவதற்காகத்தான்... ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த பூவுலகில் உன்னை வணங்கித் தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது.
அன்னையே.. அபிராமித்தாயே... பார்... அமரர் அனைவரும் உன் கருணையைப் பெற்வதற்காக உன்னை எண்ணித் தவமியற்றுகின்றனர். அவர்களைப் போலத்தான் அசுரகுலத்துதித்தோரும் உன் கருணைக்காகக் காத்திருக்கின்றனர். சிந்திப்பவர் நற்றிசை முகர்... என்றென்றும் உன்னை எண்ணியே தியானம் செய்யும் நல்திசை முகர்... நான்கு திசைகளுக்கும் ஓரொரு முகமாகக் கொண்ட நான்முகர் பிரம்மரும் உன் கருணைக்காகத்தான் காத்திருக்கின்றார்... காத்தற்கடவுளான அத்திருமாலும் காத்திருப்பது உனது அருளுக்காகத்தான். தனது அன்பால் உன்னைப் பந்திப்பவர்... கட்டிப் போடுபவர்... என்றும் அழியாப் பரமானந்தரான பரமசிவனும் உன்னருளைப் பெறக் காத்துக் கிடக்கின்றார்.. ஆனால் இவர்களையெல்லாம் விட இந்தப் பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு - உன்னைத் தரிசனம் செய்வோருக்கு...வணங்குவோருக்கு.... எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே... மிக எளிதாக உன் கருணை கிடைக்கின்றது எங்கள் பிராட்டியான அபிராமியே....
காணுங்கள்.. யாருக்குமே கிடைத்திடாத அருமையான தேவியின் கருணை இவ்வுலகில் பிறந்த மாந்தருக்குக் கிடைப்பதை எண்ணி அபிராமிப்பட்டர் வியப்பதை....! அதுதான் அபிராமி அன்னையின் பெருங்கருணை... அவள் அருளைப் பெறுவதற்கு மந்திரங்கள் செபிக்க வேண்டாம்... மறைகள் ஓத வேண்டாம்... விரதங்கள் காக்க வேண்டாம்... அன்னையின் திருநாமத்தையே மனத்தில் தியானித்து அவளது உருவைத் தரிசித்தாலே போதுமானது.. அவளது கருணை மிக எளிதில் நமக்குக் கிடைத்துவிடும்... இது அபிராமிப் பட்டரின் வாக்கு... நாமும் நம் மனத்தில் இவ்வழகிய நவராத்திரி நாட்களில், அன்னையைத் தியானித்து அபிராமி அந்தாதியைப் பாடி அவள் அருளைப் பெறுவோமாக...
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்... நன்றி... தங்களது மேலான கருத்துக்களைப் பின்னூட்டம் இடுங்கள்... எங்கேனும் நமது விளக்கத்தில் தவறு இருப்பின், தயவுசெய்து தெரியப் படுத்துங்கள்.. திருத்திக்கொள்ளலாம். நன்றி...
அபிராமி அந்தாதி 15 & 16
பாடல் பதினைந்து
தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
விளக்கம் : இன்பமான பாடல்களைத்தரும் சொற்களின் பிறப்பிடமாகிய எங்கள் அபிராமித் தாயே.... நறுமணம் வீசும் தன்மை கொண்டவளே... ஈசனின் தோழியான பசுங்கிளியே... மலைமகளே... உனது குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்களைச் செய்ய்யும் தவமுனிகள், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? அறிவுடைய அமரர்கள் வாழும் விண்ணுலகம் தன்னில் வாழக்கூடிய செல்வத்தையும், என்றும் அழியாத முக்தியையும், வீடுபேற்றையும் அல்லவா பெறுவார்...
இவ்விடத்து அன்னையின் திருவருளை தண்ணளிக்கும் என்று அபிராமிப் பட்டர் மொழிவது சிறப்பு... அன்னை என்றென்றும் தாம் வெப்பமுடன், ஆங்காரத்தோடு இருந்தாலும், அவள் தன் மக்களான உலகின் மாந்தருக்கு அருளும் அருளோ குளிர்ச்சியானது... மிக மிக குளிர்ச்சியானது... இதனால்தான் அவள் தமிழகத்தில் மழையின் பெயரால் மாரியம்மன் என்றழைக்கப் பட்டாள்.. வெம்மை நோயை நீக்கி குளிர்ச்சியான இன்பத்தைத் தருபவள் அன்னை அல்லவா? அதனால்தான் அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவளது திருவருளை மிகக் குளிர்ச்சியானது என்று குறிப்பிடுகிறார். அக்குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்கள் செய்யும் மாமுனிகள் இவ்வுலகத்தின் இன்பத்திற்காக அத்தவங்களை இயற்றுகின்றனரா??? அவர்களது எண்ணமெல்லாம் வீடு பேற்றை அடைவதென்னாளோ என்பதல்லவா?? ஆயினும் மண்ணுலகில் தன் மைந்தர் படும் துயரங்கள் கண்டு அன்னை பொறுத்திடுவாளோ??? அவர்களுக்கு இவ்வுலகில் தேவையான செல்வங்களையும் ஈந்திடுவாள்... அறிவுடைய அமரர் வாழும் விண்ணுலகில் அவர்கள் வாழக்கூடிய தகுதியையும் அதற்கான செல்வங்களையும் வழங்கிடுவாள்.. அவர்கட்கு முக்தியை அளித்து வீடுபேற்றையும் அளித்திடுவாள் எங்கள் அபிராமி அன்னை... மேலும் இவ்விடத்து அன்னையைக் குறிப்பிடும் சொல் "பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே" என்பது... இச்சொற்களை இவ்விடத்து ஆய்ந்து நோக்குவோம்... பண்ணளிக்கும் சொல்.... பண் + அளிக்கும் சொல்... இனிமையான பாடல்களைத் தரும் சொல்லே.... சொல்லின் பிறப்பிடமே... என்று அன்னையைத் தமிழாக வடிக்கிறார்... பரிமள யாமளைப் பைங்கிளியே... என்பதை நோக்கினால்.... யாமளை என்பதற்கு பச்சை நிறங்கொண்ட இளமையான ஈசனின் தோழி என்று பொருள் கூறுவர்... நறுமணங்கொண்டவள்... பச்சை நிறங்கொண்ட மலைமகள் (மீனாட்சி), சிவனின் தோழி, என்றும் பைங்கிளியே.. என்றும் அன்னையை வர்ணனை செய்கிறார் அபிராமிப் பட்டர்....
பாடல் பதினாறு
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
விளக்கம் : கிளியைப் போன்ற நிறங்கொண்ட (பச்சை நிறங்கொண்ட) எங்கள் அபிராமி அன்னையே... உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அன்பர்கள் மனத்தில் எப்போதும் ஞானமாய் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் ஒளியும் நீயே... அவ்வொளிக்கான இடமும் நீயே... (ஆன்மாவும் நீயே) எண்ணிப் பார்த்தால் ஒன்றுமில்லாத சூன்யமாய் இருக்கும் வெளியானவளே! வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் விரிந்து நின்ற எங்கள் அபிராமித் தாயே! எளியவனான என் அறிவுக்கும் எட்டும் அளவிற்கு நீ நின்றது அதிசயமே!
அன்னையின் திருஅவதாரங்கள் பலவற்றை இவ்வந்தாதியில் நினைவூட்டுகிறார் அபிராமிப் பட்டர்... கருமை நிறக் காளி, நீல நிறத் துர்க்கை, பச்சை நிற மீனாட்சி என்று பல்வேறு அவதாரங்களையும் நினைவூட்டுகிறார். இவ்விடத்து பச்சை நிறங்கொண்ட மீனாட்சியே... என்கிறார். அவளும் அபிராமியும் ஒருவளே... சக்தியின் அம்சங்களே... அதனால்தான் அன்னையைக் கிளியே என்று விளித்தார்.. கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்த்தொளிரும் ஒளியே... இவ்விடத்து கிளைஞர் என்றால் என்னவென்று முதலில் எமக்குப் புரியவில்லை... இளைஞர் என்ற பதம் உண்டு, இதென்ன கிளைஞர் என்று ஒரு பெரியவரைக் கேட்ட சமயம் அவர் சொன்ன பதில் இது... இவ்விடத்துக் கிளைஞர் என்பது அன்னையின் அடியவரைக் குறிக்கும். அன்னை ஒரு மரமெனில் அதன் கிளைகளாக அவளது அன்பர்கள் உள்ளனர்... எனவே அவளது அடியவரை கிளைஞர் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிட்டிருப்பதாக விளக்கம் அளித்தார்... அப்படிப் பட்ட அடியவர் மனத்தில் என்றும் சுடர்விடும் ஞான ஒளியாக இருப்பவளே... என்று அபிராமி அன்னையை வர்ணணை செய்கிறார் அபிராமிப் பட்டர்... அவ்வொளி ஒளிரும் இடமான அத்தனை உள்ளங்களின் ஆன்மாவும் நீயேதான்...... உன்னை என்னதான் சொல்லி வர்ணணை செய்தாலும், உன்னை நான் தியானம் செய்யும் செய்ய எண்ணும் போது நீ ஒன்றும் இல்லாதவளாக அரூபியாக அல்லவா காட்சியளிக்கிறாய்... மனிதர்கள் தங்கள் மனத்திற்கேற்ப பற்பல வடிவங்களில் அன்னையைக் கண்டாலும், ஆன்மீகத்தில் நாம் முன்னேறிச் செல்லச் செல்ல இறைவடிவம் என்பது ஒன்றுமில்லாததாக வெளியாகத் தென்படுவதை நாம் அறிய இயலும்... இதனை ஏற்கெனவேக் கண்டவர் அல்லவா அபிராமிப் பட்டர் ஆகையால்தான் அன்னைய் "எண்ணில் ஒன்றுமில்லா வெளி" என்கிறார். இவ்விடத்து இரு பெரும் மகான்களின் கருத்துக்களை முன்வைக்க விழைகிறேன்.. இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு நாத்திகர் இறைவனைக் காண்பி என்று கேட்ட பொழுது அவர் இறைவனைக் காற்றுக்குவமையாக்கினார். காற்றுக்கு வடிவமில்லை... ஆனால் அது எல்லாவிடத்திலும் பரவியிருக்கிறது. அதனை நம்மால் உணர முடிகிறது... அதையே நாம் வெவ்வேறு வடிவ பலூன்களில் அடைக்கும் பொழுது, காற்றின் வெவ்வேறு வடிவ நிலைகளைக் காண இயலுகிறது... இறைத் தன்மை என்பது இதுதான். அதுவே எல்லாமானது... எல்லாவிடத்தும் உள்ளது... ஆனால் அதற்கென்று குறிப்பிட்ட வடிவமில்லை... வடிவங்களில் காண்பதும் இறைத்தன்மையே.... என்பதுதான்... காஞ்சி மகா பெரியவர் மின்சாரத்தை தன் உவமையாக்கினார். மின்சாரத்துக்கு வடிவமில்லை... ஆனால் அதன் சக்தி பல்வேறு வடிவங்களில் நமக்குத் தென்படுகிறது.. விளக்காக, விசிறியாக, இன்னும் பல சாதனங்கள் வடிவில்... இவ்விடத்தும் அதேதான் அபிராமிப் பட்டரின் கருத்து...
"வெளி முதல் பூதங்களாகி விரிந்த அம்மே.." வெளி முதலான ஐம்பூதங்களாகி விரிந்து நிற்கும் என் தாயே... அண்டசராசரங்களையெல்லாம் படைத்த அகிலாண்ட கோடி நாயகி அன்னை அபிராமியே ஐம்பூதங்களாகவும் அருள்பாலிக்கிறாள்.. விண், மண், நீர், காற்று, தீ என்று விரிந்து நிற்கின்றாயே... என் தாயே.. அப்படி விரிந்த பெரும் பரம்பொருளான் நீ.... நிற்க... இவ்விடத்து அன்னையின் பெருங்கருணையை ஓர் அதிசயம் என்று குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... "அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே" என்கிறார். என்னைப் போன்ற எளியவன், சிறியவன் அறிவுக்கும் எட்டுமளவுக்கு நீ உன்னைக் குறுக்கி என்னை உன்பால் ஈர்த்தாயே... பஞ்சபூதங்களாகி விரிந்த அன்னை, இந்த எளியவன் அறிவுக்கும் எட்டுமளவிற்கு சிறியவளானது ஓர் அதிசயம் என்று வியக்கும் அபிராமிப் பட்டர் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அன்னையின் பெருங்கருணையைப் பெற பக்தி மட்டுமே போதுமானது... பக்தி வந்திடில் மற்றன எல்லாம் தொடரும்... அன்னை நம்க்கு அருளிச்செய்த அருமறைகள் எல்லாம் தாமே புலப்படும்... இதுதான் அன்னையின் கருணை... அன்னை அபிராமி நம் அறிவுக்கும் எட்டுவாள் என்பதை இப்பாடல் நமக்கு புலப்படுத்துகிறது... அன்னையின் மீது பக்தி கொள்ளுங்கள்.. அவள் அருள் நம்மெல்லாருக்கும் கிட்டட்டும்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. நன்றி..
நண்பர்களே... அடுத்த பாடல்களைப் பார்ப்பதற்கு முன் சில துளிகள்...
இன்று துர்காஷ்டமி.. இன்றைய தினம் வாழும் கலை ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன்.. எங்கள் ஆசிரமத்தின் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுவது நவராத்திரி தினங்களே... அதிலும் துர்காஷ்டமி அன்று நடைபெறும் மஹா சண்டி யாகத்தைக் காணவரும் கூட்டம் அதிகம். கடந்த வருடம்தான் முதன்முறையாக அந்த யாகத்தைக் காணும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது. எனவே இந்த ஆண்டும் கலந்து கொண்டேன்.. சக்திப் பிரவாகத்தைக் கண்டேன்.. யாகத்தை நிறைவு செய்யும் வேளையில் அன்னையின் சக்தி அவ்விடம் குருதேவர் வடிவில் தாண்டவமாடுவதைக் கண்டு அடியேனின் கண்களில் கண்ணீர்... அபிராமிப் பட்டரின் "நான் முன் செய்த புண்ணியம் எது என் அம்மே!" என்ற வரிகளே என் மனத்தின் முன் நின்றன.. நாம் செய்வதெல்லாம் அயோக்கியத்தனம். ஆயினும் இக்கடையேனையும் கடைத்தேற்ற அன்னையே நின் திருவருளைக் காணும் பாக்கியத்தைத் தந்தருள் செய்தாயே... என்ற நினைவு வந்தபோது அழுகையைக் கட்டுப் படுத்த இயலவில்லை... குருதேவர் உருவில் அன்னைத் தன் திருக்காட்சியைக் காட்டி விட்டுச் சென்று விட... அன்னையே... நின் பேரருளைக் கண்டபின் ஏது வேண்டும்..? நின்னடியாரோடு கூடி இன்று நின்னருளைக் கண்டேனே... அம்மையே...என்று பாடிக்கொண்டே இருந்தேன்... இறுதியில் கும்பத்தை வேத பாடசாலையின் முதல்வர் திருமிகு. சுந்தரேச ஐயர் தன் தலைமீது சுமந்து சுற்றி வந்த போது சக்தியின் திருவருள் அவர் மீதும் வந்தாடியது.. அதைக் காண்கையில் எனக்கு அவ்விடம் காளியே நேரில் ஆடிச்செல்வது போல் தோன்றியது... இன்றைய தினத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... "புண்ணியம் செய்தனமே மனமே" என்ற பட்டரின் வரிகளைத் திரும்ப திரும்ப எனது நா உச்சரித்துக் கொண்டே இருந்தது... அன்னையின் திருவருளோடு இன்றைய பதிவு இதோ உங்கள் பார்வைக்காக....
அபிராமிப் பட்டரின் பாடலுக்கு முன்னர் அவ்விடத்து எம் மனத்தில் எழுந்த கவி ஒன்று அன்பர்களின் பார்வைக்காக...
"நெஞ்சத்துப் பொய்யனடி...
நேயங்கெட்ட பாவியடி.....
தஞ்சமென்று நின்பதந்தாழ்
தொண்டர்க்கெல்லாம் தூரனடி...
வஞ்சனையே பணியென்னும்
வல்லரக்கர் நேசனடி...
அஞ்சேலென் றெனையேற்க
அம்மை நீ வந்ததென்ன??"
இனி அபிராமிப் பட்டரோடு செல்வோம்...
பாடல் பதினேழு
அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
விளக்கம் :
அபிராமி அன்னை மிகவும் அதிசயமான வடிவத்தைக் கொண்டவள் (அதென்ன அதிசயம் ? விடை பாடலின் இறுதியில் வருகிறது) அழகிய தாமரை மலர் முதற்கொண்டு அனைத்து மலர்களும் வணங்கிப் போற்றும் வெற்றித்திருமுகத்தைக் கொண்ட கொடிபோன்ற பேரழகி.. அவளின் துணைவர் யாரெனில் ரதியின் கணவனான மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியென்றாக தன் பார்வையாலேயே அவனை எரித்தவர். அப்படிப்பட்ட சிவபெருமானது மதியை வென்று அவரது இடப்பாகத்தைப் பெற்றுக்கொண்டாயே... இதுவல்லவோ அதிசயம்...
முந்தைய பாடலில் அபிராமிப் பட்டர் அதிசயம் என்று குறிப்பிட்டது எங்கும் விரிந்த பரப் பிரம்மமான அன்னை அடியேன் அறிவிற்கு எட்டும் அளவிற்கு குறுகிய அவளது பெருங்கருணை... இவ்விடத்து அவர் சிவனும் சக்தியும் இணைந்து தோற்றமளிக்கும் சிவசக்தி உருவத்தைக் குறிப்பிடுகிறார். அர்த்த நாரீஸ்வரராக, அம்மையப்பனாக அவளின் தோற்றத்தைக் கண்ட அபிராமிப் பட்டருக்கு அது ஒரு அதிசயமாகத் தோன்றுகிறது... அபிராமியை இதுவரை பெண்ணுருவிலேயேக் கண்டுவந்த அவருக்கு அம்மையப்பனாக அன்னை காட்சியளிக்கிறாள்... இதென்ன திருக்கோலம்... ? இடப்பாகம் பெண்ணுரு... வலப்பாகம் ஆணுரு.... விந்தையாக இருக்கிறதே... இதுவரை இதைப் போன்ற உருவத்தை நாம் கண்டதே இல்லையே... என்று அவர் வியக்கும் போது அது அவருக்கு அதிசயமாகப் படுகிறது...
இவ்விடத்து இன்னொரு நோக்கும் உள்ளது... அன்னையின் திருவுரு அம்மையப்பனாகக் கண்டதை அதிசயம் என்று உரைத்தாரோ அல்லது.... மன்மதனைத் தன் பார்வையால் எரித்த ஈசனது மதியை வென்று அவரது இடப்பாகத்தைத் தன்னதாக்கிக் கொண்டாளே... அதனை அதிசயம் என்று உரைத்தாரோ என்பது அபிராமிப் பட்டருக்கே வெளிச்சம்... மூன்றாவது நோக்காக... இவ்விரண்டையும் சேர்த்து அன்னையின் திருவுரு ஓர் அதிசயம் என்றும் அழைத்திருக்கலாம்...
"அரவிந்தம் எல்லாம் துதி சய ஆனன சுந்தர வல்லி" தாமரை முதலான மலர்கள் எல்லாம் போற்றி வணங்கும் வெற்றித் திருமுகத்தைக் கொண்ட சுந்தரவல்லியே... கொடியைப் போன்ற மென்மையான பேரழகியே.... நீயோ கொடியைப் போன்றவள்... ஆனால் மலர்கள் உன்னைத் துதி செய்கின்றன.. அதற்குரிய வெற்றித் திருமுகத்தைக் கொண்டவள் நீ... இது ஒரு அதிசயம் அன்னையே... என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்....
"துணை" நின் துணைவன் யார் தெரியுமா? "இரதி பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்" இரதியின் பதியான மன்மதனது வெற்றியானது தோல்வியாகத் தன் கண்களால் பார்த்தவர்... தன் கண்களால் அவனை எரித்து அரூபியாக்கியவர்.... மன்மதனின் மலர்க்கணைகளால் தீண்டப் பட்டோர் மீள்வது இல்லை... அவன் செல்லுமிடமெல்லாம் வெற்றிதான். (அதிக விளக்கம் தேவை இல்லை என்று எண்ணுகிறேன். சுருக்கமாக "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" போதும் அல்லவா) அப்படிப் பட்ட மன்மதன் எவ்விடம் தோற்றுப் போனான் தெரியுமா??? ஒரு முறை அமரர்கள் ஈசனது தயை வேண்டி நிற்கையில் அவரோ தியானத்திலிருந்து எழுந்த பாடில்லை... அவ்வமயம் மன்மதனை அழைக்க அவன் செருக்கோடு முன்வந்து தன் மலர்க்கணைகளால் ஆண்டவனைத் தொடுகிறான்... ஆனால் நிகழ்ந்ததோ வேறு... அவன் எல்லாவிடத்தும் பெற்று வந்த வெற்றிகளெல்லாம் ஈசனது முன்னே தோல்வியாயிற்று... அவருக்கு வந்ததே கோபம். தனது நெற்றிக் கண்ணால் அவனைக் கண்டார்... அதன் வெப்பம் தாளாது மன்மதன் தன் உருவிழந்தான்... ஈசனுக்கு அப்படிப் பட்ட பெயருண்டு... யாராலும் வெல்ல இயலாத மன்மதனையும் வென்றவர்... எனவே இவரை வெல்ல யாராலும் இயலாது... அப்படிப் பட்ட ஈசனது அறிவையும் நீ வென்று விட்டாயே தாயே... அவரது அறிவை வென்று, அவர்தம் இடப் பாகத்தை உனதாக்கிக் கொண்டாயே... என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்... தனது பாடலால் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறார்...
பாடல் பதினெட்டு
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.
விளக்கம் : அபிராமி அன்னையே... ஈசனது இடப் பாகத்தை கவர்ந்து கொண்டாயல்லவா? அவ்விறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் மனத்துள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை ஆற்கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, என் உயிரைக் கவர காலன் கோபத்துடன் வரும் வேளை தோன்றி அருள வேண்டும்.
இவ்விடத்து அபிராமிப் பட்டர் தனது மரணவேளை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார்.. இவ்வமயம் அங்கேயும் காலன் காத்திருக்கின்றான்... அபிராமிப் பட்டர் குறிப்பிட்டது போல் இவ்விரவில் முழு நிலாத் தென்படாவிடில் காலன் கட்டிய கயிற்றால் பிறவியை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை பட்டருக்கு... ஆனால் அவருக்கோ அன்னை தன்னைக் காப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.. .நூறு பாடல்கள் முடிந்த பின்னரும் அன்னையின் பதில் வராவிடில் தானே மரணத்தைத் தழுவிக்கொள்வதாக ஆணையிட்டுள்ள அபிராமிப் பட்டர் "வெவ்விய காலன்" தன் மேல் வரும்போது அன்னை இப்படிப் பட்டத் திருக்கோலத்தோடு தன்னருகே தோன்ற வேண்டும் என்று பட்டியலிடுகிறார்...
எப்படிப் பட்ட தோற்றமாம்??? கடந்த பாடலில் சொன்னாரல்லவா ஈசனது இடப்பாகத்தை நீ கவர்ந்து கொண்டாய் என்று? அவ்வீசனும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடன் வா.... என்றழைக்கிறார். ஏன்? காலன் வரும் வேளை மனித மனது இன்பத்துடன் இருப்பதில்லை... ஊழ் பிடித்த இவ்வூணுடலை விட்டு வெளியேறும் வேளை நாம் அதன் மீது கொண்ட பந்தத்தால் ஈர்க்கப் பட்டு அவதியுறுகிறோம்.. அழுகிறோம்... ஆனால் தாயே... நான் அழக்கூடாது... அதற்கு என்ன செய்ய வேண்டும்... நீ அந்த ஈசனோடு மகிழ்ந்திருக்கும் திருக்கோலத்தோடு வந்து அருள் செய்... நான் மகிழ்வேன்... என்னை அக்காலன் கவர்ந்து செல்லட்டும் என்கிறார்.. மேலும் உங்களது திருமணக் கோலத்தோடு காட்சியளியுங்கள் என்கிறார்... அம்மை மற்றும் அப்பனின் திருமணக் கோலத்தைக் காணக் கண்கோடி வேண்டுமல்லவா? மதுரை மாநகரில் நடைபெறும் சொக்கநாதார் - மீனாட்சியின் திருமணக் கோலத்தைக் கண்டு வாருங்கள் அவ்வின்பம் என்னவென்பது உங்களுக்குப் புரியும்... அப்படிப் பட்ட திருமணக் கோலத்தை முன்னரே தமது தியானத்தில் கண்டு மகிழ்ந்தவர் அபிராமிப் பட்டர். எனவே அப்படிப் பட்டத் திருக்கோலத்தைத் தனது மரணவேளையில் கண்டு இன்புற வேண்டும் என்கிறார்... மேலும் " சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும்" வேண்டுமென்கிறார். தாயே உனது பொற்பாதங்களைக் காணும் முன்னர் என் மனது அசுத்தங்களால் நிறைந்திருந்தது... உனது அழகிய பொற்பாதத்தை நான் கண்ட பின்னர் அப்பாதங்களால் அடியெடுத்து வைத்து நீ என் மனத்துள் புகுந்தாய்... என் மனத்தில் இருந்த அசுத்தங்களெல்லாம் தீர்ந்து போயின.. நீ என்னை ஆண்டாய்........ அப்படி என்னை நீ ஆள்வதற்குக் காரணமான உனது பொற்பாதங்களையும் காலன் என்னைக் கவர மிகுந்த கோபத்தோடு வரும் வேளை நான் காண வேண்டும்... நீ காட்சி தந்தருள வேண்டும் என்பது அபிராமிப் பட்டரின் வேண்டுகோள்..
தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில் காணலாம். துர்காஷ்டமி அன்று மனத்தில் எழுந்த ஆனந்தத்தோடு இம்மடலை வரைந்திருக்கின்றேன்... நீங்களும் அவ்வானந்ததோடு பாடல்களைப் படித்து இன்புறுங்கள்.. மீண்டும் சந்திப்போம்..
அன்பர்களுக்கு அடியேனின் இனிய சரசுவதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்....
தொடர்ந்து அபிராமி அந்தாதியைக் கவனிப்போம்.
பாடல் பத்தொன்பது
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
விளக்கம் : ஒளிரும் ஒன்பது கோணங்களின் நாயகியாக நவசக்தியாய் விளங்கும் அபிராமி அன்னையே.. காலன் வரும் வேளையில் நான் வேண்டியவுடன் வான வெளியில் திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும் நெஞ்சமும் அடைந்த ஆனந்த வெள்ளம் கரையற்றுப் புரண்டோடுகிறது... எனது சிந்தையுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. இப்படிப்பட்ட ஆனந்தத்தையும்
அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் உள்ளத்தை எண்ணி வியக்கிறேன்..
"ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.." அன்னை அபிராமியானவள் நவராத்திரி தினங்களில் நாளொன்றுக்கொரு சக்தியாக ஒன்பது திருஅவதாரங்கள் எடுக்கிறாள்... இவ்விடத்து ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது என்று அபிராமிப் பட்டர் குறிப்ப்டுவது சக்தி வழிபாட்டில் யாகம் செய்யப்படும் ஒன்பது யாகக் குண்டங்களாக இருக்கலாம். அப்படி யாகம் செய்யப் படும்போது வெளிப்படும் ஒன்பது குண்டங்களின் சக்தியாகத் திகழும் அபிராமி அன்னையே....என்று அன்னையை நவராத்திரி நாயகியாகக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்.
கடந்த பாடலில் தன்னை அழைத்துச்செல்ல கொடுங்கோபத்துடன் காலன் வரும் வேளையில் அன்னை தனது திருமணக்கோலத்துடன் காட்சியளித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாரல்லவா?? அவ்வாறு வேண்டியதுமே அன்னையின் திருக்கோலம் அவருக்குக் காட்சியளித்து விட்டது... வான வெளியில் அன்னையின் திருமேனியைக் கண்டதும் அவர் விழிகளிலும் மனத்திலும் ஆனந்த வெள்ளம் கரைகடந்து ஓடுகின்றது.. அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் தென்படுகின்றது.. இது அவருக்கு வியப்பை ஏற்படுகின்றது... கவனியுங்கள்... நாம் அரிதானதொரு காட்சியைக் கண்டு விட்டாலோ அல்லது நமது மனது ஆனந்தத்தால்
நிறையும்படியானதொரு நிகழ்வு நடந்து விட்டாலோ, சிந்தை தெளிவானதாக இருப்பதில்லை... ஆனந்தத்தில் குதித்துக் கொண்டே இருக்கும்... சிரித்துக் கொண்டே இருப்போம்.. அவ்வமயத்தில் நாம் செய்கின்ற செயல்களைப் பின்னர் ஆற அமர்ந்து நினைவு படுத்திப் பார்த்தால், நமக்கே அது முட்டாள்த்தனமாவும், சிறுபிள்ளைத்தனமாகவும் தெரியும்.. ஆனால் இவ்விடத்து அன்னையின் திருமேனியைக் கண்டதும் அபிராமிப் பட்டரின் கண்கள் ஆனந்த வெள்ளத்தை அடைகின்றன. அவரது மனதும் ஆனந்த வெள்ளத்தில் திளைக்கின்றது... "விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை" என்கிறார்... கரையற்று ஓடும்
காட்டாற்றைப் போன்ற ஆனந்த வெள்ளம் அது... மனமும் விழிகளும் இப்படிப் பட்ட ஆனந்தத்தில் திளைக்கும் வேளையில், அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் திகழ்கின்றது... இதென்ன அதிசயம்.. ? என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்.. உனது திருவுளமே இதற்குக் காரணம் அம்மா... உனது திருவுள்ளம் அத்தனை அளப்பரிய ஆற்றல் கொண்டதம்மா என்கிறார்..
பாடல் இருபது
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
விளக்கம் : அங்கிங்கெனாதபடி எங்கும் பூரணாமாய் நிறைந்திருந்து
மங்கலமளிக்கும் அபிராமி அன்னையே... நீ உறைகின்ற திருக்கோயில் யாது?? உன் தோழரான சிவபெருமானின் ஒரு பக்கமா? அல்லது ஓதப் படும் நால்வகை வேதங்களின் தொடக்கமா அல்லது முடிவா? அமிழ்தத்தால் நிறைந்து குளிர்ச்சியைத் தருகின்ற வெண்மதியா? ஆயிரம் இதழ்களைக் கொண்ட வெண்தாமரை மலரா? அல்லது அடியேனின் உள்ளமா?? அல்லது செல்வங்களெல்லாம் மறைந்திருக்கின்ற திருப்பாற்கடலா???
அன்னை எவ்வெவ்விடத்திலெல்லாம் கோயில் கொண்டுள்ளாள் என்பதை இப்பாடல் தெளிவாகக் கூறுகின்றது.. "நின் கேள்வர் ஒரு பக்கமோ.." உனது தோழரான ஈசனது ஒரு பக்கமோ? கேள்வர் எனும் பதமானது மிக நெருக்கமான தோழர்களைக் குறிக்கப் பயன்படுகிறது... அன்னைக்கும் அப்பனுக்கும் இடையேயான தோழமை அளப்பறியது அல்லவா? ஈசனை விடுத்து உமையும், உமையை விடுத்து ஈசனும் பிரிந்திருப்பது மிக மிக அரிது... பிரிந்திருந்தாலும் அவர்தம் மனத்தளவில் ஒன்றியிருப்பதே வாடிக்கை... அப்படிப்பட்ட ஈசனைத் தான் அம்மையின் கேள்வர் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றா. ஒரு தமிழாசிரியர் வேடிக்கைக்காகக் கூறிய செய்தி... ஈசனை என்ன காரணத்தால் அபிராமிப் பட்டர் கேள்வர் என்று குறிப்பிட்டார் தெரியுமா? அன்னை சொல்வதையெல்லாம் சரி சரி என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதற்காகத்தான் என்று... ஆம் அன்னையின்திருச்சொல்லை அப்பன் கேளாதிருந்திடுவாரோ? அந்த ஈசனின் ஒருபக்கத்தில், இடப் பாகத்தில் இருக்கின்றாயல்லவா?? அதுதான் நீ உறையும் திருக்கோவிலா?? "அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ?" ஆலயம்தோறும் உன்னை வழிபடுவதற்காக நால்வகை வேதங்களை ஓதுகின்றார்களே.... அந்த வேதங்களில் நீ எவ்விடத்துக் கோயில் கொண்டுள்ளாய்? அதன் தொடக்கத்திலா? அல்லது முடிவிலா? அமுதத்தால் நிறைந்திருக்கும் வெண்மை நிற நிலவிலா? "கஞ்சமோ?" கஞ்சம் எனும் பதம் ஆயிரம் இதழகளைக் கொண்ட வெண்தாமரை மலரைக் குறிக்கின்றது... நீ அந்த தாமரை மலரில் கோயில் கொண்டுள்ளாயா? அல்லது என்றென்றும் உனையே எண்ணித் தவிக்கும் இந்த அடியவனின் நெஞ்சத்திலா? "மறைகின்ற வாரிதியோ?" செல்வங்கள் எல்லாம் மறைந்திருக்கக் கூடிய திருப்பாற்கடலோ? "பூரணாசல மங்கலையே!" எங்கும் முழுமையாய் நிறைந்திருக்கும் மங்கலையே... மங்கலத்தை அருள்பவளே... இவ்விடத்துப் பாடலினை இன்னொரு நோக்கிலும் காணலாம்... அம்மையே நீ எங்கெங்கோ உறைகிறாய் என்று பட்டியலிட்டுக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் அவள் எங்கும் நிறைந்தவள் எனவே அவளைத் தேடி எங்கெங்கோ எதற்காக அலைய வேண்டும் என்று குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்....தொடரும் பாடல்களின் விளக்கத்தோடு அடுத்த மடலில் சந்திப்போம்... நண்பர்கள் இந்தத் தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பூவிலும் படிக்கலாம். தங்களது மேலான பின்னூட்டத்தை அவ்விடத்தும் பதிவு செய்யுங்கள்.. நண்பர் பிரசாத் வேணுகோபால் அவர்கள் இத்தொடர் முடிந்தவுடன் அவற்றைத் தொகுத்து பின்னூட்டங்களுடன் கூடிய ஒரு மின் நூலாகத் தருவதற்கு முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார். எனவே தனி இழை ஒன்றும் உருவாக்கியின்றார். அவ்விடத்திலும் தங்களது மேலான கருத்துக்களையும், திருத்தங்களையும் பதிவு செய்யுங்கள்... நன்றி...
.அன்பர்களுக்கு அடியேனின்
இனியவிஜயதசமித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
பாடல் இருபத்தொன்று
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே
விளக்கம் : என்றென்றும் மங்கலத்தை வழங்கக் கூடிய மங்கலையான அபிராமி அன்னையே... செம்மையான கலசம் போன்ற திருமுலைகளை உடையவளே, மலைமகளே, வருணபகவான் அளித்த சங்காலான வளைகளை அணிந்த செம்மையான திருக்கரங்களை உடையவளே.. அனைத்துக் கலைகளும் அறிந்த மயிலே... பாயும் கங்கையின் பொங்கு அலைகள் தங்கும் சடைமுடிகளைக் கொண்ட ஈசனைத் தன் துணையாகக் கொண்டவளே..
அவ்வீசனைத் தன் உடையவனாகக் கொண்ட உமையவளே... பொன் போன்று ஒளிர்பவளே...
நீல நிறங்கொண்ட நீலியே... செம்மையானவளே... வெண்மை நிறங்கொண்டவளே, பச்சை நிறமான பெண் கொடியே....
இந்த பாடல் அன்னையின் வெவ்வேறு குணங்களையும், நிறங்களையும் போற்றிப் பாடுகிறது... மங்கலையே... என்பதற்கு என்றும் மங்கலமாக இருப்பவளே....என்றும் பக்தர்களுக்கு என்றென்றும் மங்கலத்தை வழங்குபவளே... என்றும் பொருள் கொள்ளலாம்.. செம்மையான கலசம் போன்ற திருமுலைகளைக் கொண்டவளே...இவ்விடத்து அன்னையின் தாய் நிலையைக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... மலையாள்... மலைமகளே... இமவானிடத்துதித்த மலைமகளே... "வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில்" சங்கின் பிறப்பிடம் எது? கடல்... கடலின் அதிதேவதை...? வருணபகவான்... அன்னைத் தன் திருக்கையில் சங்காலான வளைகளை அணிந்திருக்கின்றாள்.. அவ்வளைகள் நீ பக்தருக்கு அருளும்போது அங்கும் இங்கும் அலைகின்றன... அப்படிப்பட்ட செம்மையான கரங்களைக் கொண்டவளே...அனைத்துக் கலைகளும் அறிந்தவளே... மயிலைப் போன்றவளே...."தாவு கங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்" பாய்கின்ற கங்கையின் பொங்கு அலைகள் தங்கும் நீள்முடிகளைப் பிரித்துக் கட்டக்கூடிய ஈசனைத் தன் புடையாக... துணையாகக் கொண்டவளே... அவ்வீசனைத் தன் உடையவனாக............
கணவனாகக் கொண்டவளே..... "பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே" இவ்விடத்து அன்னையின் ஐந்து நிறங்களைக் கொண்டு காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... பிங்கலை என்பதற்கு பொன்போன்று ஒளிர்பவளே... சுவர்ண தேவியே.... என்று பொருள் கொள்ளலாம்.. நீல நிறங்கொண்ட நீலியே.. துர்க்கையே...செய்யாள் - செம்மை நிறமானவளே... அருணாதேவியே... வெளியாள்... வெண்மையானவளே.... ஸ்வேதா தேவியே.... பசும் பெண்கொடியே - பச்சை நிறங்கொண்ட பெண்கொடியே... அன்னை மீனாட்சியே... அன்னையின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு பெயர் உண்டு...
வடமொழியில் காணப்படும் அன்னையின் ஆயிரத்திருநாமப் போற்றிகள் இதைப்பற்றித் தெளிவாகக் கூறுகின்றது.. நமக்கு அதைப் பற்றிய ஞானம் குறைவு... நமக்குத் தெரிந்தவற்றை இவ்விடத்துப் பதிவு செய்துள்ளேன்.. அன்னையின் ஆயிரந்திருநாமங்களைக் கற்றோர் இவ்விடத்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.. மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் ஈசனை "நிறங்களோர் ஐந்துடையாய்" என்று குறிப்பிடுவதும் இவ்வைந்து நிறங்களையே...ஈசன் கொண்ட நிறங்களுக்கு வெவ்வேறு திருநாமங்கள் உண்டு....மேலும் இப்பாடல் அன்னையைத் துதி செய்யத் தகுந்த பாடல்... வேறெந்த நினைவுகளும் இன்றி வேறெந்த வேண்டுதலும் இன்றி அன்னையைத் துதிப்போருக்கு இப்பாடல் மகிழ்வு தரும்...
பாடல் இருபத்திரண்டு
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
விளக்கம் : கொடியைப் போன்ற மென்மையான என் அபிராமி அன்னையே... இளமையான வஞ்சிக் கொம்பே, தகுதியற்ற எனக்குத் தானே வந்து கனிந்த கனியைப் போன்றவளே... வேதங்களின் நறுமணமே, பனி உருகும் இமயத்துதித்த பெண்யானையைப் போன்றவளே... பிரம்மன் முதலான அனைத்து தேவர்களையும் பெற்றெடுத்த என் அபிராமி அம்மையே...உனக்கு அடியேனாகிய நான் மரித்த பின்னர் இனிமேல் இவ்வுலகில் பிறவி எடுக்காத வண்ணம் நீ வந்து என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும்..
பிறவிப் பெருங்கடல் நீந்துதலின் கொடுமை அபிராமிப் பட்டருக்குப்
புரிந்திருக்கின்றது.. எத்தனை துன்பம் அம்மா... பிறந்தது முதல் இறப்பு
வரை இன்பங்களாலும், துன்பங்களாலும் அல்லாடும மனது...என்செய்வதென்று புரியவில்லை.. பிறப்பை நீத்த பின்னர் மீண்டும் பிறவாத வரம் வேண்டுமென்றே ஆன்றோர்கள் வேண்டியிருக்கின்றனர்... அவ்வண்ணமே அபிராமிப் பட்டரும் தான் மரித்த பின்னர் மீண்டும் பிறவாதிருக்க அன்னை வந்து தன்னை ஆண்டுகொண்டருள வேண்டும் என்று வேண்டுகிறார்...
கொடியே... கொடியைப் போன்ற மென்மையானவளே... இளவஞ்சிக் கொம்பே... வஞ்சி என்பது ஒருவகைச் செடி... (வஞ்சிப்பூ...?) அதன் இளங்கொம்பைப் போன்றவளே...மிக மிக மென்மையானவளே... என்பது இதன் பொருள்..."எனக்கு வம்பே பழுத்த படியே.." தானாக வந்து கனிந்த கனியைப் போன்றவளே... உனது அருளைப் பெறுவதற்கு எவ்விதத் தகுதியும் எனக்கில்லை....ஆயினும் நீயே வந்து உனதருளை என் மீது பொழிந்தாய்.. யாம் விரும்பிய காலையில், காலம் மறந்து தானே கனிந்த கனியைப் போல அருள் பொழிந்த அபிராமி அன்னையே... "மறையின் பரிமளமே " வேதங்களின் நறுமணம் ஆனவளே... இறையருள் பெற்றிட வேதங்கள் ஓதுகின்றனர்... ஆனால் அவ்வேதங்களின் சாரம்சம் உனது திருநாமமே... நீயே அவ்வேதங்களை உள்ளடக்கியிருக்கிறாய்.. உன்னை வணங்கினாலே போதும்.. உனது திருநாமத்தை உச்சரித்தாலே போதும்... அவ்வேதங்களை ஓதும் பலன், உன்னைத் தொழுவதாலேயே..
உன் திருநாமத்தை உச்சரிப்பதாலேயே கிட்டுகிறது.... "பனி மால் இமயப் பிடியே" பனி உருகும் இமயமலையில் நீ ஒரு பெண்யானையாகக் காட்சியளிக்கிறாய்.. மென்மையானவளே என்று அன்னையை வர்ணித்த அபிராமிப் பட்டர் வலிமை பொருந்திய பெண் யானைக்கு அம்மையை ஒப்பிடுகிறார்... மென்மையானவளும் நீ... வலிமையானவளும் நீ... என் போன்ற அடியவரைத் தன்பக்கம் ஈர்த்து அருள் செய்யும் மென்மையானவள் நீ... எமக்குத் துன்பம் வரும் வேளையில் அதைத் துடைத்தழிக்கும் வலிமையானவளும் நீயே... என்றுரைக்கிறார் அபிராமிப் பட்டர்.. பிரம்மன் முதலிய தேவர்களையெல்லாம் பெற்றெடுத்த அபிராமி அம்மையே... எனக்கு இன்னொரு பிறப்பு வேண்டாம் என்று வேண்டுகிறார்... "இன்னுமோர் தாய் கருப்பையூர் வாராமல் கா" என்று ஈசனை வேண்டினார் பட்டினத்தார். ஆனால் அபிராமிப் பட்டரோ.... பிரம்மன் முதலிய தேவர்களையெல்லாம் பெற்றெடுத்த அம்மையே... எனக்கு இனிப் பிறவி வேண்டாம். என் பிறவியைத் தடுத்து என்னை ஆண்டருள்புரி என்று வேண்டுகிறார்..
பிறவியைக் கொடுப்பவளிடம் நீயே அனைவரையும் பெற்றெடுத்தாய்.... எனவே ...எனக்குப் பிறவியளிப்பதும், அளியாதிருப்பதும் உன் திருவருளே... தாயே...போதும்... என்னை தடுத்தாட்கொள்... நான் இறந்த பின்னர் மீண்டும்
பிறவாதிருக்க வரமளி..... என்று அன்னையிடம் தன் பிறவிவேண்டா விருப்பத்தைத் தெரிவிக்கிறார் அபிராமிப் பட்டர்...
அன்பர்களே... தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில்
காணலாம்...மீண்டும் சந்திப்போம் நன்றி..
.பாடல் இருபத்து மூன்று
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
விளக்கம் : எளியேன் எனக்கு எந்தன் கண்மணியைப் போன்ற என் அபிராமித்
தாயே...மூவுலகுக்கும் உள்ளே இருந்துஅதனைஇயக்குபவளே..அம்மூவலகையும்
தாண்டி வெளியிலும் இருப்பவளே... என் உள்ளத்துள் விளைந்த கள்ளே...
அமுதமே... ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... என் மனத்தில் நின் திருவுருவையன்றி வேறொன்றும் நினைக்க மாட்டேன். உனக்கு அன்பான அடியவர் கூட்டத்தை விட்டு என்றும் விலக மாட்டேன். உனை விடுத்து வேறொரு தெய்வத்தை வணங்கும் பிற சமயங்களை நான் விரும்ப மாட்டேன்.
அன்னையின் திருவுருவத்தை மனத்தில் நிலை நிறுத்தி தியானத்தில் ஈடுபடத்
துவங்கி விட்டால், அவளின் உருவமன்றி எந்த நினைவுகளும் மனத்தில் எழாது... இது அன்பர்களுக்கு அன்னை வழங்கும் திருவரம்.. அவ்வரத்தைத் தன்
வாழ்க்கையாகப் பெற்ற அபிராமிப் பட்டர் தன் மனநிலையை இவ்விடத்துத் தெளிவு படுத்துகிறார். உன் உருவம் மட்டுமே என் மனத்தில் நிலை நிற்கிறது. வேறெந்த உருவும் அவ்விடத்து வர இடமில்லை... உன்னடியார்களை விட்டு நான் என்றும் விலகவே மாட்டேன்.. எனக்கு உற்றார்கள், சுற்றார்கள் எல்லாரும் நின் அடியார்களே... என்னருகே யார் வந்தாலும் அவர்களெல்லாம்
உனக்கடியார்களாகத்தான் இருக்கின்றார்கள்.. மகாபாரத்தின் ஒரு சம்பவம்
நினைவுக்கு வருகிறது. ஒருமுறை தர்மன் உலகில் உள்ள கெட்டவர்களைத் தேடிப் புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாரும் கெட்டவர்களாகத் தென்படவே இல்லையாம். துரியோதனன் உலகில் உள்ள நல்லவர்களைத் தேடிப் புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாருமே நல்லவர்களாகப் படவில்லையாம்... ஆக அவரவர் மனத்தில் எழும் எண்ணங்களாகவே இவ்வுலகம் தென்படுகிறது. இவ்விடத்து அபிராமிப் பட்டர் அன்னையின் அன்பராகவே இருப்பதால், காண்போரெல்லாம் அவருக்கு அன்னையின் அடியவராகவேத் தோற்றமளிக்கிறது. அப்படிப்பட்ட அடியவரின் கூட்டத்தை விட்டுத் தான் என்றும் விலகுவதில்லை என்று அன்னையிடம் தெரிவிக்கிறார். "பர சம்யம் விரும்பேன்" வேறு சமயங்களை நான் விரும்புவதில்லை.. .எத்தனையோ சமயங்கள் இந்த உலகில் உள்ளன தாயே...ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை இறைவன் என்று உரைக்கின்றன... ஆனால் என் கண்ணிற்குஉன்னை விடுத்து வேறு யாரும் தெய்வமாகத் தோன்றாததால், உன் சமயத்தை விட்டு வேறு சமயத்தை நான் விரும்ப மாட்டேன். "வியம் மூவுலகுக்கும் உள்ளே" என்ன இது குழப்பம்.? ஓரிடத்து ஏழுலகங்கள் என்றார். பிரிதோரிடத்தில் பதினான்கு உலகங்கள் என்றார்.. இப்பாடலிலோ மூவுலகம் என்று பாடுகிறாரே... இதென்ன? என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது.. ஆனால் அவ்விடத்திருந்து நீ இயக்குகின்றாய் என்ற விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகின்றது.. பூவுலகின் இயக்கங்களுக்குக் காரணமாக மூன்று உலகங்கள் உள்ளன.. அவை பிரம்மனின் சத்தியலோகம், திருமாலின் வைகுண்டம், சிவபெருமானின் கயிலாயம். இவ்வுலகங்களே உலகின் முக்கிய இயக்கங்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந்தொழில்களை இயக்குகின்றன... ஆனால் தாயே.. நீ அந்த மூவுலகினையும் இயக்குபவள் அல்லவா....? என்கிறார்... மேலும் அங்கு மட்டுமல்ல, அண்டசராசரங்கள் எல்லாவிடத்தும் நிறைந்து நிற்பவளே... என் உள்ளத்தே விளையும் கள்ளே... அமுதமே... "களிக்கும் களியே.." ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... நீ இன்பத்திற்கும் இன்பம்.. கள்ளை அருந்துவோருக்கு அது மயக்கத்தை இன்பத்தைத் தருகின்றது... ஆனால் அக்கள்ளே களிக்கும் களி... அக்கள்ளையே இன்பத்தால் மயங்க வைக்கும் பேரின்பம் நீயேஅம்மா..... எளியவன் எனக்கு நீ என் கண்ணின் மணியைப் போன்றவள்....
பாடல் இருபத்து நான்கு
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
விளக்கம் : மாணிக்கமாக விளங்குபவளே... அம்மாணிக்கம் உண்டாக்கும் ஒளியாக விளங்குபவளே.. ஒளிரும் மாணிக்கங்களால் ஆன அணிகலனாக விளங்குபவளே.. அவற்றை நீ அணிவதால் அவ்வணிகளுக்கே அழகு சேர்ப்பவளே.. உன்னை வணங்காது விலகி நிற்பவர்களுக்குப் பிணியானவளே... உன்னைத் தேடி ஓடிவரும் பக்தருக்கு அப்பிணிக்கான மருந்தைப் போன்றவளே.. அமரர்களுக்கும் மாபெரும் விருந்தாய் தோன்றி நிற்கும் என் அபிராமி அன்னையே... அழகிய தாமரை மலரைப் போல்விரிந்திருக்கும் உனது பாதங்களை வணங்கிய பின்னர், இன்னொருவரை நான் வணங்க மாட்டேன்..
இந்த பாடலைத்தான் ஆதிபராசக்தித் திரைக் காவியத்தில் திரு. சௌந்தரராஜன்
பாடுவார். இப்பாடலைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் இயற்றிய "சொல்லடி அபிராமி" எனத் துவங்கும் பாடல் வரும். கண்ணதாசனுக்கு மிகவும் பிரியமான பாடல் இது... (அபிராமி அந்தாதிக்கு, கவியரசர் அவர்கள் உரை எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது). ஆனால் அப்பாடலில் மணியே... என்று தனது சிம்மக் குரலில் சௌந்தர ராஜன் துவங்குவதற்கு முன்னர் ஒரு மணி ஒலி கேட்கும்...அபிராமி அந்தாதியைக் கற்பதற்கு முன்னர் நான் அம்மணியொலியைத்தான் மணியே...மணியின் ஒலியே... என்று பாடுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. பின்னர் அபிராமி அந்தாதியைக் கற்ற பின்னர் அவ்வெண்ணம் நகைச்சுவையாகி விட்டது..மணியே - மாணிக்கமே... மணியின் ஒளியே... மாணிக்கம் சிந்தும் ஒளியைப் போன்றவளே... அவ்வொளிதரும் மாணிக்கங்களால் செய்யப் பட்ட அணிகலனைப் போன்றவளே... "அணியும் அணிக்கு அழகே" அவ்வணிகலன் அணிவதால் அணிகலனுக்கு அழகு சேர்ப்பவளே... உன்னை அழகு செய்ய மாந்தரெல்லாம் உனக்கு மாணிக்கத்தால் அணிகலன் செய்தார்.. ஆனால் தாயே... அவ்வணிகலன்களால் உனக்கு அழகு அல்ல...உன்னால் அணியப் பட்டதால்தான் அவ்வணிகலனே அழகு பெற்றது.... எத்தனை அழகிய உண்மை..... அன்னையை மட்டுமே எண்ணும் கண்களுக்கு அவளை விடுத்து வேறெந்த ஒன்றும் திருப்தியைத் தராது.. அன்னை.. அன்னையின் திருநாமம்... அவளது புகழ்... இவை மட்டுமே அபிராமிப் பட்டருக்கு அழகாய்த் தோன்றுகிறது.. ஆகையால்தான் அம்மையால் அவ்வணிகலன் அழகு பெற்றதாய்ப் பாடுகிறார்.
"அணுகாதவர்க்குப் பிணியே" உன்னை அணுகாதவர்க்கு, உன்னைத் தொழாதவர்களுக்கு, அவர்களது கர்மவினைப் பயனால் ஏற்படும் பிணி நீதான்... நம் கிராமப் பகுதிகளில் வெப்பு நோயை "அம்மை நோய்" என்றழைப்பது வழக்கு... "ஆத்தா வந்திருக்காப்பா..." என்றுதான் குறிப்பிடுவார்களே விடுத்து அதற்கு வேரொரு பெயரைத் தருவதில்லை... இவ்வாறு உன்னை அணுகாதவர்களுக்கு ஏற்படும் பிணியானவளே... அப்பிணிக்கும் மருந்தானவளே... வெப்பு நோயினால் ஏற்படும் துன்பத்தைத் தீர்க்க அனைவரும் மீண்டும் அன்னையையே நாடி வருகின்றனர்.
இதனால் பிணியுமானாள்... அப்பிணிக்கு மருந்துமானாள் அன்னை அபிராமி...
அமரர்களுக்கெல்லாம் பெரும் விருந்தாக விளங்கக் கூடியவளே... அழகிய தாமரை மலர் போன்று தோற்றமளிக்கும் உன் அழகிய பொற்பாதங்களை வணங்கிய பின்னர் இன்னொருவரை நான் பணிவது இல்லை... எத்தனை வைராக்கியம் அபிராமிப் பட்டருக்கு... அன்னை அபிராமி மட்டுமே தன் தெய்வம் .. அவள் விடுத்து வேறொரு தெய்வத்தை அவரால் கற்பனை கூட செய்ய இயலாது... அப்படிப்பட்ட வைராக்கிய பக்தி நிலையில் நின்றிருந்தார் அபிராமிப் பட்டர்... பிற தெய்வங்களை மட்டுமல்ல... யாரையுமே வணங்க மாட்டேன்... உலகில் பிறங்கு உலக இன்பங்களால் துன்புற்றிருக்கும் மாந்தர், தம் இன்பங்களுக்காக மாந்தரை வணங்குகின்றனர்.. பிற கடவுள்களையும் வணங்குகின்றனர்.. ஆனால் நான் உன்னைத்தவிர வேறொருவரையும் வணங்குவதில்லை ... என்று தன் உறுதிநிலையைத் தெளிவு படுத்துகிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களுக்கான விளக்கம் அடுத்த மடலில்... அன்பர்கள் நமது
விளக்கத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து, அவற்றை திருத்தித்
தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.. நன்றி...

பாடல் இருபத்தைந்து
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே
விளக்கம் : மும்மூர்த்திகளுக்கும் அன்னையான அபிராமித் தாயே... இந்த உலகத்தாருக்குக் கிடைத்த அரிய மருந்தான என் அபிராமியன்னையே... இப்பிறவியில் உன்னடியார்களைப் பின் தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய திருப்பணிகளைச் செய்து என் பிறவித் துன்பத்தை வேரறுக்கும் வாய்ப்பினை நான் முற்பிறப்பில் செய்த தவங்களின் வாயிலாக அடைந்தேன். என்னே உன் பெருமைகள்... ! இப்பொழுது மட்டுமல்ல... இனிமேல் எக்கணமும் உனை நான் மறவாது தொழுது கொண்டிருப்பேன்.
"பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்"... உலகத்தோர் இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் அடுத்த பிறப்பில் தமது தகுதியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்.. இதற்கெனவே தான தர்மங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.. ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடும் போது இப்பிறப்பின் எதிர்கால நன்மைகளுக்காக வேண்டுகின்றனர்.. இனி எனக்கு பிறவி கிடையாது என்று முழங்கும் அபிராமிப் பட்டர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். உன் திருவடியைப் பற்றியிருக்கக் கூடிய உனது அடியார்களைப் பின் தொடர்ந்து அவர்கட்கு வேண்டிய திருப்பணிகளை நான் செய்து வருகிறேன். எனவே எனக்கு இனிமேல் பிறவி கிடையாது.. இத்திருப்பணிகளை நான் மேற்கொள்ள வேண்டிய புண்ணியம் எனக்கு எங்ஙனம் கிடைத்தது தெரியுமா? நான் முற்பிறப்பில் பல தவங்களை இயற்றி இவ்வரத்தினைப் பெற்றேன். பொருட்செல்வம் மிகப் பெற்றோர், தாம் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இந்நிலையை அடைந்ததாகப் பெருமைப் பட்டுக்கொள்கின்றனர்.. ஆன்மீக வழியில், உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர் யாரும் தமது முற்பிறவிப் பயனால் இது எமக்குக் கிட்டியது என்று முழங்கியதில்லை.. ஆனால் அபிராமிப் பட்டர் மிக உறுதியாக தனது கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். மூன்று உண்மைகள்.. ஒன்று. தான் முற்பிறப்பில் செய்த தவங்கள். இரண்டு. அத்தவங்கள் வாயிலாக இப்பிறப்பில் அபிராமி அன்னையின் அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு. மூன்று. அத்திருத்தொண்டின் வாயிலாக இப்பிறப்புத் துன்பத்தை நீக்குதல். வேறெந்த பிறப்பும் ஏற்படாத உன்னத நிலையை அடைதல். இம்மூன்று உண்மைகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது அன்னையின் அடியாருக்குச் செய்யும் திருத்தொண்டுதான். எங்கள் குருதேவர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறுவார் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். இவற்றுள் நிகழ்காலம் மட்டுமே நிதர்சனமான உண்மை. எனவே நீ எக்கணமும் இக்கணத்தில் இரு.. என்று... அபிராமிப் பட்டரும் தன் நிகழ்கால நிலைக்குக் காரணத்தையும், அதனால் வருங்காலத்தில் தனக்கு ஏற்பட இருக்கும் உன்னத நிலையையும் இவ்விருவரிகளில் தெளிவுபடுத்திவிடுகிறார். முன்னர் ஒரு பாடலில் "நான் முன் செய்த புண்ணியம் எது என் அம்மே" என்று பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்துத் தான் செய்த புண்ணியம் என்ன என்பதை உணத்துகிறார்.
"முதல் மூவருக்கும் அன்னே" அன்னை அபிராமியே மும்மூர்த்திகளைப் பெற்றெடுத்தாள் என்பதை இன்னுமொருமுறை தனது பாடலின் வாயிலாகக் கூறுகிறார். "உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே" எதுவும் தேவையில்லை அன்னை அபிராமியை விடுத்து... என்னும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் அபிராமிப் பட்டர் அன்னை அபிராமி உலகத்தாருக்குக் கிடைத்த ஒரு அரிய மருந்து என்கிறார். அபிராமியை எண்ணித் துதித்தால் எந்தவித காயமும் ஆறிப்போகும். எல்லாவித நல்நிலையும் தேடிவரும் என்பதே நிச்சயமான உண்மை. உலகத்தார் செய்த புண்ணியம் அவ்வருமருந்தினைப் பெற்றிருப்பது. "என்னே.?" உனது பெருமைகளையெல்லாம் எங்ஙனம் உரைப்பேன்...? "இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே" அன்னையை மறப்பது அபிராமிப் பட்டரால் இயலுமா? எக்கணமும் உன்னை மறவாது தொழுவேன் என்று பறைகிறாரே.... துன்பத்தில் இறைவனை நினைப்பது, இன்பத்தில் இறைவனை மறப்பது .. இதுதான் உலகத்தார் வாடிக்கை.. எனவேதான் குந்தி தேவி, கண்ணனிடம் தனக்கு எப்பொழுதும் துன்பங்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டினாள். அத்துன்பங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தால், இறைவனை என்றும் மறவாது தேடிக்கொண்டே இருப்போம் என்பது அவரது கருத்து.. ஆனால் அபிராமிப் பட்டரால் அன்னையை மறப்பது முடியுமா? என்றும் மறப்பதில்லை... ஆயினும் தொழுதல் என்பது வேறு... மறவாதிருத்தல் என்பது வேறு.. அன்னையை மறவாது நினைப்பது மட்டுமே புண்ணியம் தரும் செயலல்ல... நாத்திக அன்பர்கள் தினம் ஒருமுறையாவது "இறைவன் இல்லை" என்று சொல்லி இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இறைவனின் திருவருள் கிட்டுமா? எனவே தொழுதல் முக்கியம்.. இனிமேல், எக்கணமும் உன்னைத் தொழுது கொண்டேயிருப்பேன் என் அன்னை அபிராமியே... என்று அபிராமிப் பட்டர் மொழிகின்றார்.

பாடல் இருபத்தாறு
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
விளக்கம் : அபிராமித் தாயே... உன்னை என்றும் தொழும் அடியவர் யாரெனில் பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழித்துத் தொழில் புரியும் அந்த மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் சிவபெருமான். நறுமணம் வீசும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் அழகிய என் அபிராமித் தாயே... மணம் வீசுகின்ற உனது திருவடிகளில் எளியேனான என் நாவிலிருந்து தோன்றிய கீழான சொற்களை சாத்துகிறேன். அக்கீழான சொற்கள் நின் திருவடிகளில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது நல்லதொரு நகைச்சுவை..
"ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்" கடந்த பாடலில் அன்னையின் அடியவர்க்கு திருத்தொண்டு புரிதலைப் பற்றிப் பேசிய அபிராமிப் பட்டர் அவ்வடியவர்களில் சிறந்த மூவரைப் பற்றி இவ்விடம் பேசுகிறார். பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழிக்கும் தொழில் புரியும் அம்மும்மூர்த்திகள். நீ அவர்களைப் படைத்தாய்.. அவர்கள் இவ்வுலகினைப் படைத்தனர். அவர்கள் படைத்த உலகோரும் உன்னைத் தொழுகின்றனர். நீ படைத்த அம்மும்மூர்த்திகளும் உன்னைத் தொழுகின்றனர்... மும்மூர்த்திகளும் உனக்கு அடியவர்கள்... "கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே" நறுமணம் கமழும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் அழகிய பெண்ணே... " மணம் நாறும் நின் தாளிணைக்கு" மும்மூர்த்திகள் உனக்கு அடியார்கள்.. உன் கூந்தலில் இருப்பதோ நறுமணம் வீசும் கடம்பப் பூ.. நீயோ அழகிற்சிறந்தவள். இது போன்ற பெருமைகளால் மணம் வீசும் உன் திருவடிகளில்..... "என் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே" என் நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் உன் பாதங்களில் ஏற்பு பெற்றிருப்பது நல்ல நகைச்சுவை... இவ்விடத்து தனது நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது அபிராமி அந்தாதியை... நமக்கெல்லாம் அபிராமி அந்தாதியே வேதம்.. அன்னையின் புகழ்பாடும் சிறந்த பாடல் நூல். ஆனால் அதை எழுதிய அபிராமிப் பட்டரோ எளியவன் என் நாவில் இருந்து புறப்பட்ட கீழான வார்த்தைகள் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதையும் நீ ஏற்றுக் கொண்டாயே... இது சிறந்த நகைச்சுவை என்கிறார். மும்மூர்த்திகளாலும் தொழப் படுபவள் நீ.. அவர்கள் உன்னை என்ன சொல்லித் துதிப்பார்கள்?? நாமறியோம்... தேவாதிதேவர்களெல்லாம் உன்னை என்ன சொல்லித் துதிப்பார்கள்?? நாமறியோம்.. எம் சிற்றறிவுக்கெட்டிய சிறு சொற்களால்,, கீழான சொற்களால் உன்னைத் துதிக்கிறேன்... அதையும் நீ ஏற்றுக் கொள்கிறாயே... இதென்ன நகைச்சுவை... ? என்கிறார். இவ்விடத்து அன்னை அபிராமி எளியோர் சொல்லையும் தம் கவனத்தில் ஏற்கும் கருணையுடைவள் என்ற அவளது பெருமையும், அன்னையைத் துதி செய்ய மிகச்சிறந்த பாடல்களைப் பாடிவிட்டு இதெல்லாம் மிகவும் கீழான சொற்கள் என்று கூறும் அபிராமிப் பட்ட்ரின் எளிமையும் தன்னடக்கமும் இப்பாடலின் மூலம் வெளிப்படுகின்றன..அபிராமிப் பட்டரின் பாடல்களையே அவர் அவ்வாறு சொல்லும்போது, அறியாது விளக்கமளிக்கும் இவ்வடியேனின் சொற்களெல்லாம் எவ்விடம்தான் போகும்?
அபிராமி அந்தாதி தொடர்ந்து படியுங்கள்.
பாடல் இருபத்தேழு.
உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே
விளக்கம் : அபிராமி அன்னையே... நீ என்னை வஞ்சனை செய்யும் இப்பிறவி நோயை உடைத்தெறிந்தாய். என் உள்ளமெலாம் உன்னையே நினைத்து உருகும் அன்பினைப் படைத்தாய். இந்த யுகத்தில் நின் திருவடித்தாமரைகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியினையே எனக்கு அளித்தாய். என் மனத்துள் உண்டான அழுக்கையெல்லாம் உனது அருளெனும் நீரால் துடைத்தழித்தாய். பேரழகியே... உன் பேரருளை நான் என்னவென்று உரைப்பேன்.
பிறப்பு ஒரு வஞ்சனை என்பது அபிராமிப் பட்டரின் கருத்து.. எனவேதான் பெரும் மகான்கள் எல்லோரும் மீண்டும் பிறவியே வேண்டாம் என்றுரைத்தனர்.. பிறந்த பின்னர் உலகில் பல்வேறு கட்டுக்களால் நாம் கட்டப்பட்டு வஞ்சனைக்குள்ளாகிறோம். ஆசை, ஆணவம், சினம், மாயை இவற்றால் கட்டுண்டு நம் பிறவிப் பயனை மறந்து போகிறோம்... ஆனால் என் அபிராமி அன்னையே.. நீ இவ்வஞ்சனையை உடைத்து என்னைக் காத்தாய். "உள்ளம் உருகும் அன்பு படைத்தனை" உன்னையே எண்ணி உருகிக் கொண்டிருக்கும் அன்பு உள்ளத்தை என்னுள் படைத்தாய்... அன்னையை எண்ணி உருகிக் கொண்டிருக்கும் உள்ளம் அன்பு செய்ய மறுக்குமோ? பின்னர் ஏன் அபிராமிப் பட்டர் இவ்விடத்து உருகும் அன்புள்ளம் என்று குறிப்பிடுகிறார்.? இறைவனை வணங்குதலும், அவனுக்குத் தொண்டு செய்தலும், அவன் ஆலயத்திருப்பணிகளை மேற்கொள்வது மட்டுமே இறைப்பணி என்றாகி விடுமா? உள்ளத்து அன்பு வேண்டாமா? யார் மீது அன்பு வேண்டும்? எல்லார் மீதும் வேண்டும்... அன்னையைத் தொழுவோர், அன்னையை மறுப்போர் என்று அனைவர்பாலும் அன்பு செலுத்தும் உள்ளம் வேண்டும். இறைமறுப்புக் கொள்கையை பரப்பிவந்த பேரறிஞர் அண்ணாவோ "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்" என்றுரைத்தார். "இந்தச் சிறியோரில் யாருக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்" என்றுரைத்தார் இயேசு நாதர். அன்னையை உண்மையாக எண்ணி உருகும் உள்ளத்தில் மட்டுமே இத்தன்மை கொண்ட அன்பு பெருகி வரும்.. அன்னை மேல் அன்பு கொள்ளும் உள்ளம் எல்லார் மீதும் அன்பு செலுத்தும். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றுரைத்த வள்ளலார் உள்ளத்திலுள்ள அன்பு கிடைக்கும். நண்பர்களெல்லாம் ஒரு முறை நவதிருப்பதி ஆலயங்களுக்குச் சென்றிருந்தோம். எங்கும் நிறைந்த அந்த திருமாலை ஓர் ஆலயத்தில் கண்டு (எத்திருப்பதி என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை) மகிழ்ந்திருந்த வேளை, திடீரென யாரோ யாரையோ திட்டும் குரல் கேட்டு கண் திறந்தேன். என்னவென்று நோக்கினால், ஒரு குருக்கள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரிய துளசி மாலையைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்பக்கம் நின்று கொண்டிருந்த விதவைப் பெண்ணொருத்தி தற்செயலாகத் திரும்ப அவளது கரம் அம்மாலை மீது பட்டுவிட்டது.. "நீ எப்படிப்பட்டவள் தெரியுமா? நீ தொட்ட இந்த மாலையை என் பெருமாளுக்கு நான் எப்படி சாத்துவேன்?" என்று கத்த ஆரம்பித்து விட்டார். அந்த பெண்ணோ அழத்தொடங்கி விட்டார்.. நமக்கோ மனமெல்லாம் கோபம் பொங்கி வந்தது.. எல்லோர் மனத்திலும் குடியிருக்கும் பெருமாள் அப்பெண்ணின் மனத்திலும் குடியிருக்க மாட்டானா? எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று வியந்தேன். இதைப் போன்ற நிகழ்வுகளும், பல்வேறு சாதியினருக்கு ஆலயநுழைவு மறுக்கப்பட்ட நிகழ்வுகளுமே இறைமறுப்புக் கொள்கையாளர்களை நம் தேசத்தில் பிறக்கச் செய்தது.. ஆனால் இறைவன் மீது நாம் உண்மையான அன்பு கொண்டிருந்தால், நம் மனத்தில் அனைவர் மீதும் பாராட்ட வேண்டிய உண்மை அன்பு வந்து சேரும்.. இதைப் போன்ற குருக்கள் எத்தனை காலம் பணிசெய்தாலும், அவர்தம் பணியை இறைவன் அன்போடு ஏற்றுக் கொள்வதேயில்லை..
"பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை " நின் திருவடித் தாமரைகளுக்கே பணிசெய்யும் பணியை எனக்கு அளித்தாய்.. எத்தனை பாக்கியம்... ! அன்னையின் திருப்பாதங்களுக்குத் திருத்தொண்டு செய்யும் பணியை மட்டுமே தன் பணியாகக் கொண்டிருந்தார் அபிராமிப் பட்டர். வேறெந்த பணியும் இல்லை.. காலை கண் விழிக்கும் வேளை முதல் இரவு கண் அயரும் வேளை வரை அன்னையைக் காண்பது, அவள் நினைவுகளால் தியானத்தில் மூழ்கியிருப்பது, அவளை அலங்கரிப்பது, அவளைத் தொழுவது என்று என்றென்றும் அவளது திருவடிகளுக்கே திருத்தொண்டு புரிந்து கொண்டிருந்தார். அதனை சற்றே கர்வத்தோடு இவ்விடத்து உரைக்கிறார்.
"நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை" என் மனம் பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்தது.. கோபம், வஞ்சகம், பொறாமை, காமம், களவு, .... இன்னுமிது போன்ற பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்த என் மனத்தை நீ உன் அருளென்னும் நீரால் துடைத்து அழித்தாய்.. அன்னையின் அருள் மனத்துள் வந்துவிட்டால், அவ்விடம் குடிகொண்ட கசடுகள் மாயமாகி விடும்.. இதுவே அன்னை தரும் பேரருள்..
பேரழியே.. உன் பேரருளை என்னவென்றுரைப்பேன்.. !? அவள் பெருமையெல்லாம் சொல்லிவரும் அபிராமிப் பட்டருக்கு அன்னையின் அருளாட்சியால் அவளது பல்வேறு பெருமைகள் நினைவுக்கு வருகின்றன. இத்தனைதான் சொன்னோம்...இன்னும் சொல்லவேண்டியன பல உள்ளனவே... அன்னையே... இதனை நான் எங்ஙனம் உரைப்பேன்.! என்று வியந்து பாடுகிறார்..
பாடல் இருபத்து எட்டு
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
விளக்கம் : சொல்லோடு எங்ஙனம் அதன் பொருள் கூடி வருகின்றதோ, அதைப் போன்று ஆனந்த நடனமாடும் உனது துணைவரான ஈசனோடு இணைந்து ஓருடலாய் நிற்கும் நறுமணம் வீசக்கூடிய பூங்கொடியைப் போன்றவளாகிய அபிராமி அன்னையே... அன்றலர்ந்த மலரைப் போன்ற உன் திருவடிகளை இரவும் பகலும் எப்பொழுதும் தொழும் அடியவர்களுக்கே, அழியாத அரச போகமும், முக்தி நிலைக்குச் செல்லவேண்டிய தவநெறிகளும், அதன் பயனான சிவலோக வாழ்வும் கிட்டும்.
"சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே." பொருளற்ற சொற்கள் சொற்களில்லை.. சொல்லெனச் சொல்ல வேண்டுமெனில் அச் சொல்லிற்குப் பொருள் வேண்டும். ஈசனைச் சொல் என்று சொன்னால் நீயே அதன் பொருள்.. சொல்லும் பொருளும் எவ்வண்ணம் இணைந்தே இருக்கின்றனவோ அதைப் போன்று ஆனந்த நடனமாடும் நின் துணைவரான ஈசனுடன் என்றென்றும் இணைந்து ஓருடலாய் நிற்கும் நறுமணம் வீசும் பூங்கொடியைப் போன்ற என் அபிராமி அன்னையே...
"நின் புதுமலர்த் தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே" இன்று மலர்ந்த புத்தம்புது மலரினைப் போன்று தோன்றும் உனது திருவடிகளை அல்லும் பகலும் தொழுகின்ற அடியவர்களுக்கே.... பல பாடல்களில் அன்னையின் திருவடியைத் தாமரை மலருக்கு ஒப்பிட்டு வந்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவை புது மலரினை ஒத்தவை என்பது சிறப்பு.. புத்தம் புது மலர் எவ்வாறு இருக்கும்? என் அன்பு மகளைக் காணும்போது இவ்வெண்ணமே என் மனத்துள் தோன்றியது.. தலை முதல் பாதம் வரை அத்தனையும் புதுத் தளிரைப் போன்றது... அத்தனை மென்மையாக இருக்கின்றது.. என் மனைவியிடம் கூட "எவ்ளோ அழகா செஞ்சிருக்காங்க பாரு" என்று சொல்லி சொல்லி வியந்தேன்.. எல்லாமே புதிதாய்க் காணும்போது அழகுதான். மென்மைதான்.. அன்னை அபிராமியின் பாதங்கள் புத்தம் புது மலரினைப் போன்று அபிராமிப் பட்டருக்குத் தோன்றுகிறது... அப்படிப் பட்ட உன் பாதங்களை இரவென்றெண்ணாது, பகலென்றெண்ணாது எந்நேரமும் தொழுகின்ற அடியவர்களுக்கு....
என்னவெல்லாம் கிட்டும்? அழியாத அரசு... எல்லா அரசுகளும் ஓர்நாள் அழிந்து விடும்.. (இன்றைய மொழியில் கவிழ்ந்துவிடும்.. !!!!) பாண்டியப் பேரரசு, சோழப் பேரரசு, சேரப் பேரரசு என்று தமிழகத்தை ஆண்ட அரசுகளும் சரி, உலகையே ஆளப் புறப்பட்ட ஆங்கிலேய அரசும் சரி... எத்தனை பெரிய சக்தி படைத்த அரசுகளும் ஓர் நாள் அழிந்தே போய்விடும்... ஆனால் அழியாத அரசு என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது யாது?? அது ஆன்மீகத்தால் உள்ளத்தை ஆளுகின்ற அன்பு அரசு.. இன்றைக்கும் நம் உள்ளங்களையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கக் கூடிய அபிராமிப் பட்டருக்குக் கிடைத்த உன்னத அரசு...
வேறென்ன கிட்டும்? செல்லும் தவநெறி.. எங்கே செல்வதற்கான தவநெறி.? இறப்புக்குப் பின்னான உலகு சொர்க்கமா? அல்லது நரகமா? என்பதைத் தீர்மானிப்பவை நாம் செய்யும் புண்ணிய பாவங்களே.. எனவே நல்லுலகமான சொர்க்கத்துக்குச் செல்வதற்குரிய அரும்பணியான தவநெறிகள் அன்னையைத் தொழுவோர்க்கு வந்து சேரும்.
வேறு? சிவலோகம்... அம்மையுடன் அப்பன் அருளாட்சி செய்யும் சிவலோகத்தில் வாழக்கூடிய வாய்ப்பு.. சிவலோக பதவியடைந்தார் என்று நாம் மரித்த பின்னர் நமது நினைவிடத்தில் கல்வெட்டில் எழுதிவைத்தால் மட்டும் சிவலோக பதவி நமக்குக் கிட்டிவிடுமா? இல்லவே இல்லை... அன்னையின் கருணை நமக்குக் கிட்டினால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அறிந்தோர் தயவு செய்து மடல் எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம் நன்றி...
பாடல் இருபத்தொன்பது
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே
விளக்கம் : அபிராமி அன்னையே... நீயே சகல சித்தியாகத் திகழ்கிறாய், சகல சித்திகளையும் வழங்கும் தெய்வமாகிய பராசக்தியும் நீயே.. பராசக்தி
தழைக்கக் காரணமான பரமசிவமும் நீயே. அப்பரமசிவத்தை எண்ணித் தவம் செய்யும் அடியவர்களுக்குக் கிடைக்கும் முக்தியும் நீயே.. முக்திக்குக் காரணமும் நீயே.. முக்திக்குக் காரணமாக மனத்துள் தோன்றிய புத்தியும், புத்தியின் உட்பொருளும் என சகலமும் ஆகி நின்று எம்மைக் காக்கும் திரிபுரசுந்தரி நீயே அல்லவா? சகலமும் அபிராமி... எங்கும் அபிராமி. எதிலும் அபிராமி என்று சகலத்தையும் அபிராமி மயமாகவேக் காட்டும் பாடல் இது. எட்டுவித சித்திகளைச் சொல்வார்கள். அணிமா (அணு அளவிற்கு சிறிய உருவை எடுத்துக் கொள்ளுதல்),மஹிமா (பிரபஞ்சத்தின் அளவிற்கு உருவை பெரிதாக்கிக் கொள்வது), கரிமா (எடையை அதிகரித்தல்) லஹிமா (இலகுவான எடையைக் கொண்டிருப்பது), ப்ராப்தி (நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்வது), ப்ராகாம்யா (எண்ணியதெல்லாம் அடைதல்), ஈசித்வா (எல்லா பொருட்கள் மேலும் ஆதிக்கம் செலுத்துவது), வசித்வா (எல்லா பொருட்களையும் எல்லாரையும் வசப்படுத்துவது). இவையே அவ்வெட்டு சித்திகள். தவமுயற்சியில் நெடுங்காலம் ஈடுபட்டு வருவோர்க்கு இவ்வெண்சித்திகளில் ஏதேனும் ஒன்று கிட்டும் என்பது
நம்பிக்கை... இச்சித்திகள் பெற்றோரை சித்தர் என்றழைப்பர்... அபிராமிப்
பட்டர் அன்னை அபிராமிதான் இவ்வெட்டு சித்திகளாகக் காணப்படுகிறாள்
என்கிறார். மேலும் சித்திகளை அளிக்கக்கூடிய தெய்வமாகிய பராசக்தியும்
நீயே...பராசக்தி தழைத்தெழும் பரமசிவமும் நீயே... சக்தியும் நீயே...
சிவமும் நீயே... முன்னர் ஒருமுறை அன்னையே சிவத்தைப் படைத்தாள் என்று பகர்ந்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து சிவத்திலிருந்து சக்தி தழைத்தாள் என்கிறார். மேலும் அப்பரமசிவத்தை நோக்கித் தவமிருக்கும் தவமுனிகளுக்குக் கிடைக்கக் கூடிய முக்தியும்... பிறப்பிலிருந்து விடுதலை... பந்த பாசங்களிலிருந்து, அனைத்துக் கட்டுக்களிலிருந்தும் விடுதலையளிக்கும் முக்தியும் அன்னை அபிராமியே... அம்முக்திக்கு வித்தும் நீயே.. முக்திக்கு வித்தாவது யாது?? தவநெறி.. எனவே தவநெறிகளும் நீயே... "வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும்..." அத்தவநெறிகளுக்குச் செல்லும்படி முனிவர்களை அறிவுறுத்திய ஞானமும் அன்னை அபிராமியே... "புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே" ஞானத்தின் உட்பொருளும் என சகலமும் ஆகி நிற்பது என் தாயான
திரிபுர சுந்தரி அன்னை அபிராமியே... உன்னையன்றி யார்? அன்னையை விடுத்து அபிராமிப் பட்டருக்கு வேறு யாரையும் தெரியாது.... எல்லாம் அன்னை அபிராமியே... "சர்வம் சக்தி மயம்" என்று எளிதில் இப்பாடலுக்கு உரை எழுதிடலாம். எல்லாம்அன்னை... காணுமிடமெல்லாம், கவனம் உறையுமிடமெல்லாம் அன்னையைக் காண்பது அபிராமிப் பட்டரின் பக்தி... அன்னை அபிராமியே... இவர் கொண்டிருந்த பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது எங்களுக்கும் அருளிச் செய்வாயாக....
பாடல் முப்பது
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
விளக்கம் : அபிராமி அன்னையே... பராசக்தித் திருவுருமாக ஒரே இறைசக்தியாகத் தோற்றமளிப்பவளே... அவரவர் எண்ணங்களுக்கேற்ப பல்வேறு இறைவுருவுகளிலும் காட்சியளிப்பவளே... இறைசக்தியை உருவமற்றது என்றென்னும் அன்பர்களுக்கு அரூபமாக நின்று அருள்பவளே... என் தாயான உமையவளே... பாவக் கடலில் வீழ்வதற்கு முன்னரே என்னைத் தடுத்தாட்கொண்டாய். என்னை நின் அடிமையாகக்
கொண்டபின்னர் இல்லை என்று சொல்வது உனக்குத் தகுமோ? இனி நான் என்ன செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளமன்றோ....?
"அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய்" பாவம் இது புண்ணியம் எது என்று நான் அறியாத காலத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே... நான் பாவக் கடலில் விழவிருந்த வேளையிலே.... என்னை விழாது தடுத்து உனது பேரருளால்ஆட்கொண்டாய்... இதனால் நான் பாவக் கடலில் விழுந்து விடவில்லை அம்மா...உனக்கு ஆட்பட்டு உன்னடிமையாக நான் இருக்கையிலே நான் எப்படி விழுந்திடுவேன்... "கொண்டது அல்ல என்கை நன்றே உனக்கு?" ஆனால் இன்று பார்... உன்னை எண்ணி நான் தியானித்திருந்த வேளையில் அறியாது உரைத்த வார்த்தைகளுக்காக என்னைக் கொடுந்தீயில் தள்ளிவிட இம்மாந்தரெல்லாம் காத்திருக்கின்றனர்... இதோ இருபத்தொன்பது பாடல்களைப் பாடிவிட்டேன்..
இருபத்தொன்பது கயிறுகள் உரியிலிருந்து அறுக்கப் பட்டுவிட்டன.. இது
முப்பதாவது பாடல். இப்பாடல் முடிந்தபின் இன்னொரு கயிறும் அறுபடும்..
ஆனால் நீ இன்னும் வெளிப்படவில்லையே... நீ என்னை உன் அடிமை இல்லை என்றுரைக்கப் போகிறாயா? வெளிப்படாது மறைந்தே இருக்கப் போகிறாயா? அவ்வாறு என்னை மறுதலித்தல் உனக்குத் தகுதியான செய்கையா அம்மா? மாறுபட்ட வழியில் வேண்டுதல் செய்யும் தந்திரம் இது... நம் பகுதியில் ஆலயத்துக்கு நன்கொடைசேகரிக்கச் செல்வோர் செய்யும் தந்திரம் போன்றது.. "அண்ணாச்சி... இவ்ளோ செலவு ஆகும்னு உத்தேசிச்சிருக்கு... உங்கள மாதி பெரியாளுங்கதான் இதத் தாங்கிக்கிடனும்.. அதனால இதெல்லாம் நீங்க ஏத்துக்கிடாம யார் ஏத்துக்கிடுவா? உங்களுக்கு மனசில்லாட்டாலும், உங்க அந்தஸ்த காப்பத்துறதுக்காகவாவது இதச் செஞ்சே ஆவணும்" இப்படிப் பேசும் பேச்சுக்களுக்கு உடனே பலன் கிடைப்பதுண்டு... தன்னைக் காத்திட அன்னை விரைந்து வரவேண்டும் என்று அபிராமிப் பட்டரும் இப்படி வேண்டுகிறார். "இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின்
திருவுளமோ" இனி நான் என்ன செய்தாலும், மன்னிக்கவே இயலாத
பெருங்குற்றத்தைப் புரிந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு நடுக்கடலில் சென்று விழுந்தாலும், காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் அல்லவா? மிக நல்ல வேண்டுதல் இது.. கொடிய பாவங்களிலிருந்து மீள இயலாத அன்பர்கள் இப்பாடலைத் தொடர்ந்து பாடி வாருங்கள்.. அன்னையே உங்களைக் காத்தருள்வாள். என்னை உன் அடிமை என்று சொன்னாயே அம்மா... இனிமேல் என்னைப் பாவங்கள் செய்யாது காக்க
வேண்டியது உன் திருவுள்ளம் அல்லவா? அப்படி நான் செய்தாலும் கூட என்னைக் காத்துக் கரையேற்றவது அன்னையே உனக்குக் கட்மையல்லவா? நான் நடுக்கடலில் சென்று விழுந்தாலும் கரையேற்றுவது உன் பொறுப்பு அல்லவா?? "கற்றூணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று அப்பர் பெருமான் ஈசன் மீது நம்பிக்கை வைத்து பாடியதும், ஈசன் அருளால் அக்கற்றூணே மிதவையாகி அவரை மீட்டு வந்த வரலாறு இவ்விடம் நினைவுக்கு வருகிறது..
இறைவன் மீது நம்பிக்கை... முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென இப்பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.. என்னதான் நடந்தாலும் சரி... நம்மைக் காக்க அன்னை கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையை நம் மனத்துள் விதைக்கும் பாடல் இது... அன்னையின் பேரருள் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் நம்மைக் காக்க நம்மோடு இருக்கும்... "என் வாயின் வார்த்தைகள் புறப்படுகிறதுக்கு முன்னமே நீர் அதை அறிந்திருக்கின்றீர்" புனித விவிலியத்தில் ஒரு கவிஞனது பாடல் இறைவனைப் பற்றி மேற்கண்டவாறு உரைக்கின்றது. இறைவனை விடுத்து நாம் எங்கும் செல்ல இயலாது... நம்மை இறைவன் எப்போதும் நம்மோடு இருந்தே
காக்கின்றான்... அபிராமிப் பட்டரின் இப்பாடல் அப்படிப் பட்ட பரிபூரண
நம்பிக்கையை நம் மனத்துள் ஏற்படுத்துகிறது.. எனது பள்ளி
வாழ்க்கையின்போது, ஒரு கிறித்தவ அன்பர் உரைத்த கருத்துக் கதை இது..ஒரு சிறுவன் தன் தந்தையோடு திருவிழாவுக்குச் சென்றான்.. அங்கேயோ மிக அதிகமான நெரிசல்.. புதிதாய் முளைத்த பொம்மைக் கடைகள்.. மிட்டாய்க் கடைகள்.. இராட்டினம் என்று வேடிக்கை பார்க்கவே சிறுவனுக்கு ஆர்வம். தந்தை உரைத்தார் "மகனே. என் கைகளை இறுகப் பற்றிக்கொள்.. கூட்டத்தில் நீ தொலைந்து விடுவாய்... என்னையே பற்றிக் கொண்டு நட" என்று.. மகனோ.."அப்பா..நான் உங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில் கை வலியெடுத்து விட்டாலும் விட்டு விடுவேன்.. அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது என்னை மறந்து விட்டு விடுவேன்.. அல்லது நெரிசலில் நாம் போகும்போது வலிவிலந்த என் கை கூட்ட நெரிசலில் தானாகவே விலகிவிடும்..
எனவே.. நீங்கள் என் கையைப் பற்றிக் கொள்ளுங்கள்." என்று உரைத்தான். மகன் கரத்தைத் தந்தை பற்றிக் கொண்டார்..மகனோ எவ்விதக் கவலையுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தான்... பாதுகாப்பாக இருந்தான்.. "இறைவா நான் உன்னைப் பற்றிக் கொண்டேன். என்னை வழி நடத்து" என்று வேண்டும்போது, மாயை நிறைந்த உலகில் நாம் வழி தவறிச் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. இதையே " இறைவா.. நீயே என் கரத்தைப் பற்றி வழி நடத்து" என்று வேண்டும்போது அவனே நம் கரங்களைப் பற்றிச் செல்கிறான். எல்லாவித மாயையையும் நாம் எளிதில்
கடந்து விடலாம். பரிபூரண நம்பிக்கையை நாம் அன்னைமேல் வைத்தால் மட்டுமே இது சாத்தியம்.. அபிராமிப் பட்டருக்கு அன்னை மேல் அப்படிப் பட்ட நம்பிக்கை இருந்ததை இப்பாடல் சுட்டிக் காட்டுகிறது.
"ஒன்றே பல உருவே, அருவே, என் உமையவளே. " உலகமெல்லாம் பரவி நிற்கும் ஒரே இறைசக்தியான அன்னை பராசக்தியே... அன்பர் விரும்புமிடத்து அவர் விரும்பும் வடிவில், கலைமகளாக, அலைமகளாக, மலைமகளாக, நான்முகனாக, நாராயணனாக, முக்கண்ணனாக, ஆனைமுகனாக, ஆறுமுகனாக, என பல்வேறு வடிவுகளிலும்
காட்சியளிப்பவள் நீயே... இறைவனுக்குக் குறிப்பிட்ட உருவமில்லை.. அவன் அரூபமானவன் என்று உரைப்போரிடத்து நீயே அவ்வருபமாகத் தோன்றுகின்றாய்...அனைத்தும் என் தாயாகிய உமையவள் நீயே.... என எல்லா சக்திகளும், பராசக்தியான அன்னை அபிராமியே.. நீதான் என்றுரைக்கிறார் அபிராமிப் பட்டர்..
இனிமேல்;
அன்னையின்திருநாமங்களிலஒன்று “ஸ்ரீகண்டார்த்த சரீரிணி’ என்பது.
பரமசிவனுடைய இடப் பாதியில் எம்பெருமாட்டிவீற்றிருக்கிறாள்.
இந்த அர்த்தநாரிசுவரத் திருக்கோலத்தில் இருவர் இருந்தாலும் ஒரு மூர்த்தியாகவே கொள்வார்கலள். இருவரும் சேர்ந்த ஏக உருவம் அது. அந்த வடிவத்தைக் கண்டு, ”இந்த மூர்த்தியை ஒருமையாக வைத்துக் கொள்வதா? பன்மையாக வைத்துக்கொள்வதா? ஆண்பால் என்று சொல்வதா? பெண்பால் என்று சொல்வதா?” என்ற சந்தேகங்கள் இலக்கணப் புலவர்களுக்கு எழலாம். எப்படித்தான் சொல்வது/? விடைகூறுவது கொஞசம் சங்கடமான காரியமே.
இதைப்பற்றிக் குமரகுருபர சுவாமிகள் ஒரு அழகான பாட்டைப் பாடியிருக்கிறார்.” நல்ல வேளை! இருபாலுக்கும் பொதுவாக ஒருவர் என்ற சொல் இருக்கிறது! அதையே சொல்லிவிடலாம். அப்படி ஒரு சொல் இருப்பது எவ்வளவு உபயோகமாக இருக்கிறது” என்று அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஒருவர் என்ற சொல் பகுதியினால் ஒருமை; விகுதியினால் பன்மை.அதை வாக்கியத்தில் வைத்துச் சொன்னால் அது பனமைக்குரிய பயனிலையோடு முடியும். ”ஒருவர் நிற்கிறார்” ந்ன்று சொல்லும்போது சொல் உருவத்தால் பன்மை.
ஒருவர் எனபது உயர்இரு பாற்றாய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற்று என்ப
என்பது நன்னூல் சூத்திரம். ஆண்பாலையும் பெண்பாலையும் மதிப்பாக குறிக்கும்போது ஒருவர் என்றும் அவர் என்றும் சொல்கிறோம். அதற்கு இலக்கணம் இது ஒருவனாகவும் ஒருத்தியாகவும் இல்லாமல் இரண்டும் கலந்த ஒற்றைத் திருவுருவத்தைக் குறிக்கவும் அந்தச் சொல் பயன்படுகிறது.இதைத்தான் குமரகுருபரர் பாடுகிறார்.
அருவருக்கும் உலகவாழ்வு அடங்க நீர்தோர்க்கு
ஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்ட
மருவருக்கன் மதிவளியான் யமானன் தீநீர்
மண்ணெனும்எண் வகைஉறுப்பின் வடிவுகொண்ட
ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன் றால்அவ்
வுருவைஇஃ தொருத்தன்என்கோ ஒருத்தி என்கோ
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
இயற்சொல்இல தெனின்யான்மற் றென்சொல் கேனே.
(சிதம்பரச் செய்யுட் கோவை,54)
இந்த அர்த்தநாரிசத் திருக்கோலமே முதல் முதல் சகுண மூர்த்தியாகத் தோன்றிய வடிவமாதலின் இதை “தொமைக்கோலம்” என்று மாணிக்கவாசகர் கூறுவார்.
அபிராமிப்பட்டர் பாதியும் பாதியும் இணைந்த ஒரு திருக்கோலமாகிய அர்த்தநாரிச மூர்த்தியை எண்ணுகிறார்.அம்பிகையும் அவளைத் தன் பாகத்தில் வைத்த பெருமானும் ஒறே வடிவில் இணைந்து வந்து ஒன்றுக்கும் பற்றாத எளியேனையும் என் போன்ற பிறரையும் தம்பால் பக்தி பண்னும்படி அருள் பாலித்தார்கள் என்று மன நிறைவுடன் சொல்கிறார்.
உமையும் உமை ஒரு பாகனும்
ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்.
ஏக உருவில் வந்தவர் யார்? அர்த்தநாரிசுவரர் என்று போறும் சைவர்கள் அந்த மூர்த்தம் மாகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தில் ஒன்று என்று கொண்டாடுவார்கள்.ஆகவே அவர்கள் “ எங்கள் பெருமான் அர்த்தநாரிசனாக எழுந்தருளினான்” என்பார்கள். அன்னையின் பக்தர்களோ “ அன்னையின் அருள் வடிவான கோலங்களில் அர்த்தேசுவரநாரியாக ஸ்ரீகண்டார்த்த சரீரினியாக இருப்பது ஒன்று. எம்பெருமாட்டியே அந்த வடிவில் எழுந்தருளுவாள்” என்று கூறுவார்கள். அபிராமிப் பட்டரும் அப்படிச் சொல்கிறவர்தாம். ஆனால் இங்கே இரண்டு சாரார்க்கும் பொருத்தமாக, இருவரும் ஏக உருவில் வந்தனர் என்றார். ’எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்’ என்பதில் உள்ள எமையும் என்றது தம்மையும் தம்மைச் சார்ந்த அன்பர் கூட்டத்தையும் சேர்த்துச் சொன்னபடி’ அன்னையிடமும், அப்பனிடமும் அன்பு செய்வது எங்கள் கடமையாக இருக்க, அதனை மறந்து யார் யாரிடமோ அன்பு செய்தோம்.இந்த அவலநிலையில் கிடந்த எங்களைக் கரையேற்றத் திருவுள்ளங் கொண்டனர் அவ்விருவரும்.

பாடல் முப்பத்தொன்று.
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே
விளக்கம் : அன்னை அபிராமியும் அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஏக
உருவில் வந்து கீழோனான என்னையும் தங்கள்மேல் அன்பு செய்ய வைத்து அருள்
புரிந்தார்கள். ஆகவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்களும் இல்லை..
என்னைப் பெற்றெடுக்க வேறு தாயும் இல்லை.. அழகிய தோள்களுடைய பெண்கள்
மேல்வைத்த காம ஆசையும் இல்லாமல் போனது.
"உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து " உமையவளாகிய அன்னை
அபிராமியும், அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஓர் உருவில் வந்து...
சிவசக்தி சொரூபமாய், அர்த்த நாரீஸ்வரராய் எனக்குக் காட்சியளித்தார்கள்.
கிடைத்தற்கரிய பேறு அல்லவா? முன்னர் ஒரு பாடலில் இவ்வுருவைத்தான் அதிசயம்
என்று பாடினார் அபிராமிப் பட்டர். அன்னையையும் அப்பனையும் ஏகவுருவில்
காணும் பேறு பெற்றது அபிராமிப் பட்டர் செய்த பாக்கியம் அல்லவா...?
அவர்கள் வந்து என்ன செய்தார்கள் தெரியுமா? "இங்கு எமையும் தமக்கு அன்பு
செய்ய வைத்தார்" அவர்கள் இருவரும் ஓருருவாக இங்கு வந்து, எம்மையும் -
இவ்விடத்து அழுத்தம் கொடுக்கிறார் அபிராமிப் பட்டர். கீழோனான என்னையும்
தம் மேல் அன்பு செய்ய வைத்தார்கள். எந்தவிதக் கெட்ட எண்ணங்களும் இன்றி,
அன்னையின் மேல் முழு பக்தியாக இருந்த அபிராமிப் பட்டர், தன்னை மிகக்
கீழோன் என்று குறிப்பிடுவது வியப்புக்குரியது. "இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை" இனி நான் வேறு சமயங்களைப் பற்றிச்
சிந்திப்பதற்கில்லை... அன்னையின் பேரன்பு கிடைத்த பின்னர் வேறெந்த
சமயங்கள் வேண்டும்? இந்த பூஜையை செய்தால் இறையருளைப் பெறலாம்.. இந்த
மந்திரங்களைப் படித்தால் இறையருளைப் பெறலாம். இந்த வழியில் நின்றால்
இறையருளைப் பெறலாம். என்று பல்வேறு சம்யங்கள் உரைக்கின்றன.. ஆனால் உங்கள்
மேல்வைத்த அன்பு ஒன்றே எனக்கு உங்கள் பேரருளைப் பெற்றுத்தந்து விட்டது.
இனி நான் சிந்தித்துப் பார்ப்பதற்கு வேறு சமயங்கள் இல்லை..
"ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை" இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாய் இல்லை..
இதன் பொருள் நான் பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்டேன். இனி எனக்கு
மறுபிறப்பு இல்லை என்பது.. பலமுறை பிறப்பறுப்பைப் பற்றி அபிராமிப் பட்டர்
பாடுவது குறிப்பிடத்தக்கது. இனி என்னை ஓர் தாய் ஈன்றெடுப்பாளோ? இல்லவே
இல்லை.. இத்துடன் என்பிறவி முடிந்தது.. ஏனெனில் என் அன்னை அபிராமியின்
பேரன்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது என தனக்கு மீண்டும் பிறவி இல்லை என
அபிராமிப் பட்டர் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். அது அவரது பரிபூரண
நம்பிக்கையைக் காட்டுகிறது. "அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த
ஆசையுமே" அழகிய தோளுடைய பெண்டிரின் மேல்வைத்த காம ஆசையும் அமைதியுற்றது.
மனிதரைப் பின் தொடர்ந்து துன்பமளிக்கும் ஓர் நோய் இக்காம நோய்..
அவற்றிலிருந்து எவ்வண்ணம் வெளிவருவது என்பதே இன்றைக்குப் பலருடைய
கேள்வி.. அன்னையின் அன்பு நமக்குக் கிட்டி விட்டால் அக்காம ஆசை தானே
அமைதியாகிவிடும். அன்னையே நீ உன் தரிசனத்தை எனக்குக் காட்டி என்னை
உன்பால் அன்பு செய்ய வைத்து விட்டாய். இனி என் மனத்தில் நான் பெண்டிரின்
மேல் கொண்ட ஆசை அப்படியே அமைதி பெற்றுவிடும்...
பாடல் முப்பத்திரண்டு
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே
விளக்கம் : அபிராமி அன்னையே.. ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்த என்
அம்மா... நான் கொடிய ஆசையெனும் கடலில் மூழ்கி, கொஞ்சம் கூட இரக்கமற்ற
எமனது கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டப்பட்டு துன்பம் மிக அடைய இருந்தேன்.
என்னை, மணம் வீசும் அழகிய தாமரை போன்ற நின் திருப்பாதங்களை நீயே வலிய
வந்து என் தலை மீது வைத்து ஆண்டு கொண்டாய். உன் பேரன்பினை நான்
என்னவென்று சொல்லுவேன்?
இவ்வுலகில் நாம் பெறும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நம் மனத்தில் உள்ள
ஆசையே.. ஆசையை ஒழித்தார் மட்டுமே துன்பமின்றி வாழ இயலும். அன்னை
அபிராமியே நான் ஆசையெனும் கடலில் அகப்பட்டுக் கொண்டேன்.. அவ்வமயம் அங்கே
அருளற்ற - கொஞ்சமும் இரக்கமற்ற கூற்றுவனின் கையிலுள்ள பாசக் கயிறு
என்னைப் பிடிக்க வந்தது. நான் அப்பாசத்தில் அகப்பட்டிருந்தால் என்
துன்பம் இன்னும் மிகுதியாக இருந்திருக்கும்.. அவ்வயமம் எனக்கு அதைப்
பற்றிய எண்ணமே இல்லை.. கண் அது போன போக்கு.. கால் அது போன போக்கு...
என்றே போய்க்கொண்டிருந்தேன்... ஆனால் உனது பேரன்பு என்ன செய்தது
தெரியுமா? "நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு
கொண்ட நேசத்தை என் சொல்லுகேன் " உனது பாதங்கள் எனும் மணம் வீசும் அழகிய
தாமரை மலர்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்தாய்.. உனக்கு
அடியவனாக்கினாய்... அப்பேரன்பை நான் என்னவென்றுரைப்பேன்.. எனக்கு உன்னைத்
தெரியவே தெரியாது.. நீயே உலகைப் படைத்தவள் என்ற ஞானம் எனக்கு இல்லவே
இல்லை... நீதான் தெய்வம் என்ற உணர்வு என்னுள் இல்லவே இல்லை... ஆயினும்
நீயே வலியவந்து உன் திருவடித் தாமரைகளை என் தலைமேல் வைத்தாய். அன்னையே
உன் திருவடித் தாமரைகள் என் தலைமேல் பட்டவுடன் நான் உனக்கு அடியவனானேன்..
நீ என்னை அருளாட்சி செய்து கொண்டாய்... உனது அன்பு அளப்பறியது.. என்ன
காரணத்தாலோ நீ என்மீது இப்படிப் பட்ட அன்பினை வத்து அருட்செய்தாய். அளவிட
இயலாத உன் அன்பினை நான் எவ்வாறு உரைப்பேன்...ஈசனது இடப்பாகத்தில்
அமர்ந்திருக்கும் என் அபிராமித் தாயே......?
பாடல் முப்பத்து மூன்று
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே
விளக்கம் : எம் தந்தையான சிவபெருமானின் சித்தமெல்லாம் குழையச்
செய்யக்கூடிய மணம் வீசும் குவிந்த திருமுலைகளையுடைய இளமையான
கோமளவல்லியே... என் அபிராமி அன்னையே... நான் செய்யும் தீய செயல்களுக்காக
எனைத் தண்டிக்க காலதேவன் வந்து அழைக்கும் போது.. அன்னையே என உன்னைத் தான்
நான் அழைப்பேன்.. நீயும் ஓடி வந்து அஞ்சாதே மகனே என்பாய்.
முன்னர் ஒரு பாடலில் தன்னை அழைக்க எமன் வந்திடும் வேளையில் அம்மையும்
அப்பனுமாகத் தனக்குக் காட்சியளித்தருள வேண்டும் என்று வேண்டிய அபிராமிப்
பட்டர் இவ்விடத்து ஓடிவந்து எம்மை அஞ்சாதே என்று சொல் தாயே என்கிறார்.
"இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது"
யாருக்கு அஞ்சுகிறோமோ இல்லையோ... மரண தேவனுக்கு எல்லோரும் அஞ்சுகிறோம்.
நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளுக்கேற்ப காலதேவனும் நமக்கு மரண
நேரத்தில் தண்டனைகளைத் தருகின்றான். எனது கர்மங்களுக்கேற்ப கொடுமையான கால
தேவன் என்னை நடுங்கச் செய்ய அழைக்கும் போது... என்னை மரணம் நெருங்கும்
போது... "வந்து அஞ்சல் என்பாய்" நீ வந்து அஞ்சாதே என்பாய். "அத்தர்
சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே" என் தந்தையான
ஈசனின் சித்தத்தையெல்லாம் குழைப்பவளே... மணம் வீசும் சந்தனங்களைப் பூசிய
குவிந்திருக்கக் கூடிய உனது அழகிய திருமுலைகளால் என் தந்தையின்
சித்தத்தைக் குழைக்கும் இளமையான கோமளவல்லியே.... அபிராமித்
தாயே...."உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே" காலன் என்
வாயில் வந்து நிற்கின்றான். என் மனம் அஞ்சுகிறது. என் உயிர் உடலோடு
கொண்ட நட்பைப் பிரிய இயலாத வ்ண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.
எக்கணமும் விட்டுப் பிரியலாம் என்ற நிலை... இவ்வேளையில் நான் உன்னையே
நினைத்து அன்னையே என்பேன். நீ ஓடி வந்து என்னை நோக்கி அஞ்சாதே மகனே
என்று என் மரண பயத்தைப் போக்குவாய்.
மரணவேளை மிக முக்கியமானது.. எதிர்பாராமல் மரணமடைபவர்களை விடுங்கள்.
வயதாகி மரணப் படுக்கையில் விழுந்த பெரியோர்களிடம் சென்று ஆசி வாங்குவது
நம் பகுதி மக்கள் பழக்கம். அச்சமயங்களில் அவர்களின் செவிகளிலும்
இறைவனுடைய திருநாமம் விழும்படிப் பார்த்துக் கொள்வார்கள். ஒரு வேடிக்கைக்
கதை உண்டு. ஒரு கொடியவன் தான் மரணமடையும் வேளையில் தனது இளைய மகனான
கோவிந்தனை அவன் பெயர் சொல்லி அழைத்தானாம். கோவிந்தா என்று மரண தருவாயில்
கூவிய படியால் அவனது ஆன்மா திருவைகுண்டம் சென்றடைந்ததாம். அழியும்
வேளையில் அறியாது அழைத்த ஒருவனுக்கே இறைவனது பெருங்கருணை
கிடைக்கிறதென்றால், அவனை முழுமனதோடு அழைப்பவ்ர்களுக்கு எப்பேர்ப்பட்ட
புண்ணியம் கிட்டும்? இவ்விடம் அவள் பெயரைச் சொல்லி அழைப்பேன் என்றும்
பட்டர் கூறவில்லை... 'அம்மா.." இது நாம் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் பயமேற்படும்போது நம் வாயினின்று புறப்படும்
வார்த்தை... அபிராமி அன்னையே... நான் மரணநேரத்தில் என்னை அறியாது அம்மா
என்றழைத்தால்... அது வேறு யாரையோ குறிப்பிடும் சொல் அல்ல... நான்
அழைப்பது உன்னைத்தான்... என்பதைப் புரிந்து கொள் தாயே என்று முன்
கூட்டியே சொல்லி வைக்கிறார் அபிராமிப் பட்டர்.
பாடல் முப்பத்து நான்கு
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே
விளக்கம் : தன்னை நோக்கி வந்து சரணம் என்று அடிபுகும் அன்பர்களுக்கு
அன்போடு விண்ணுலகம் தரும் அபிராமி அன்னை தங்கியிருக்கும் இடங்களாவன...
நான்முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனின் நான்கு முகங்களாக, கலைமகளாக...
தேன் ஊறும் மலர்கள் கொண்ட மாலைகளையும் பெரிய மாணிக்கங்களையும் தன்
மார்பின் மீது அணிந்த திருமாலின் மார்பாக... திருமகளாக... ஈசனின் ஒரு
பாகமாக... மலைமகளாக... பொன்னிறத்துடன் கூடிய சுவைமிகுந்த தேனூறுகின்ற
தாமரை மலரிலும், விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிடத்திலும்,
சந்திரனிடத்திலும் தங்கியிருக்கின்றாள்..
எங்கும் நிறைந்த அன்னை பராசக்தியை இவ்விடம் உள்ளாள் என்று குறிப்பிடத்
தேவையில்லைதான். ஆயினும் உயரிய இடத்து உன்னைக் காணும்போது அவ்விடத்தில்
நீ தங்கியிருப்பதை எங்ஙனம் உரையாமல் இருப்பது? நீயே கதி என்று உன்னைச்
சரணமடையும் உன் அடியவர்களுக்கு நீ விண்ணுலகில் இடமளிக்கிறாய். அதுவும்
மிகுந்த கருணையோடும் அன்போடும்... அவர் செய்த தீவினைகள் எல்லாம் உன்
பரிவின் முன் பலனற்றுப் போய்விடுகின்றன. நீ எங்கெங்கே இருக்கிறாய்...?
"சதுர் முகமும்" நான்முகங்களைக் கொண்ட பிரம்மதேவனின் நான்கு
முகங்களிலும்... அவரது படைப்புத் தொழிலாக.... கலைமகளாக... "பைந்தேன்
அலங்கல் பருமணி ஆகமும..." நறுந்தேன் ஊறக்கூடிய அழகிய மலர்களையும் , பெரிய
மாணிக்கங்களையும் தன் மார்பிலே அணிந்த திருமாலின் திருமார்பிலும்...
அலைமகளாக... "பாகமும்" ஈசனது இடப்பாகத்திலும்... மலைமகளாக... "பொற்
செந்தேன் மலரும்" பொன்னிற நறுந்தேனைக் கொண்டிருக்கும் தாமரை மலரிலும்...
"அலர் கதிர் ஞாயிறும்" விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிலும்... உனது
கதிர்கள் எங்கள் மனத்தில் உள்ள அறியாமையைப் போக்குகின்றன தாயே...
"திங்களுமே" சந்திரனிடத்திலும்... நீ தங்கியிருக்கின்றாய் தாயே.,..உனது
கருணை சந்திரனைப் போன்று குளிர்ச்சியானது தாயே.
No comments:
Post a Comment