http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Wednesday, July 21, 2010

செம்மை சேர் நாமம்

'இராமன்' என்னும் செம்மை சேர் நாமம்

பஞ்சம் பிழைக்க ஒரு கணவனும் மனைவியும் வெளியூருக்கு புறப்பட்டார்கள்.காட்டு வழியே போனார்கள்.கள்வர் பயம் நிரம்பிய காடு."நம்மிடம் காசா இருக்கு?" என தைரியப்படுத்திக் கொண்டு போனார்கள்.கள்வர் கூட்டம் குறுக்கிட்டது.கணவனை அடித்து போட்டுவிட்டு மனைவியை தூக்கிக்கொண்டு போய் விட்டது.

அடிபட்ட கணவன் எழுந்தான்.அழுதான்.காடெங்கும் மனைவியை தேடி பைத்தியகாரன் மாதிரி அலைந்தான்.புலியின் வாயில் சிக்கிய புள்ளிமான் மீண்டா வரும்?அவள் கிடைக்கவில்லை.பித்தனை போல் அழுதுகொண்டு இவன் வீடு திரும்பினான். அவன் தாய் தந்தையர் அவனை தேற்றினர்.இன்னொரு மணம் செய்துகொள் என்றனர்.முடியாது என்று சொல்லிவிட்டான்.நடைபிணமாக வாழ்ந்தான்.

சில மாதங்கள் ஓடின. நடுஇரவில் அவன் வீட்டு கதவு தட்டப்பட்டது.கதவை திறந்தால் நிற்பது கள்வரிடமிருந்து தப்பி வந்த அவன் மனைவி.புகை படிந்த ஓவியமாய் எதிரே அவன் மனைவி.அவன் முகத்தில் விழிக்கவே அவளுக்கு தைரியமில்லை.உயிரை விட்டுவிடத்தான் நினைத்தாளாம்.கடைசியாய் அவன் முகத்தை பார்த்து விட்டு சாக விரும்பினாளாம்.

"இங்கே ஏன் வந்தாய்?" என உறுமினர் கணவன் வீட்டார்.

"மானமிழந்தவளே போய் கிணற்றில் குதித்திருக்க வேண்டியது தானே" என்றர் மாமனார்.

"அடுத்தவன் தொட்ட வினாடியே கற்புக்கரசிக்கு உயிர் போயிருக்க வேண்டாமா?" என்றார் மாமியார்.

"இப்போதும் ஒன்றும் கெடவில்லை.சிதை மூட்டுகிறேன்.தீக்குளித்து செத்துத்தொலை" என்றான் கொழுந்தன்.

"உயிரே போனாலும் இவளை விடேன்" என பிடிவாதமாய் நின்றான் கணவன்.

அக்கம்பக்கத்தார் எல்லாரும் கூடினர்.என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை. "மகான் கபீர்தாசரிடம் போகலாம்.அவர் என்ன சொல்கிறாரோ அதை ஏற்கலாம்" என ஒருமித்த முடிவானது.நேராக கபீர் தாசரின் வீட்டுக்கு போனார்கள்.கபீர் தாசர் அங்கில்லை.அவரின் சீடரான கமலதாசர் தான் இருந்தார்.அவரிடம் விஷயத்தை சொல்லி என்ன செய்வது என கேட்டார்கள்.

"அடடே" என்றார் கமலதாசர்."எங்கே அந்தப்பெண்" என்று கேட்டார்.அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

"நான் சொல்லுவது போல் செய்.உன் பாவம் தீர்ந்துவிடும்.நீ சுத்தமானவளாகிவிடுவாய்" என்றார். "ராமா,ராமா,ராமா என 3 தடவை சொல்" என்றார்.அந்த பெண் அப்படியே சொன்னாள்.பர்ணசாலையிலிருந்து கங்கை நீரை எடுத்து வரச்சொன்னார் கமலதாசர்.அவள் தலையில் ஊற்றினார்."உன் பாவம் தொலைந்தது.சென்று உன் கணவனுடன் வாழ்க" என்றார்.மகிழ்ச்சியோடு அக்கூட்டத்தினர் வீடு திரும்பினர்.

கபீர்தாசர் வந்ததும் தாம் செய்த நல்ல காரியத்தை பெருமையோடு எடுத்துரைத்தார் கமலதாசர்.கபீர்தாசருக்கு சந்தோஷம் வரும் என நினைத்தார்.ஆனால் கபீரின் முக வாடியது.

"கமலதாசா" என்றார் கபீர்."ஒரு முறை பக்தியோடு "ராமா" என்று சொன்னாலே போதுமே?அப்படி சொன்னவனின் 7 ஜென்ம வினைகளையும் அகற்றி,இம்மை,எழுமை ஆகிய நோய்க்கும் அருமருந்தாகி, பிறப்பினை அறுத்து முக்தியையும், முக்தியை விட இன்பமயமான சச்சிதானந்தத்தையும் அருளவல்லது ராமநாமம்.அதை நீ 3 தரம் சொல்ல சொல்லியிருக்கிறாய்.அதுவும் போக கங்கை நீரை வேறு ஊற்றியிருக்கிறாய்.ராமநாமம் போக்காத பாவத்தையா கங்கை நீர் போக்கும்?ராமநாமம் மீது நீ கொண்ட நம்பிக்கை இவ்வளவுதானா?" என்றார் கபீர் தாசர்.

விக்கித்து நின்றார் கமலதாசர்.

*********
 ".....மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை,
 தானேஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை,
 'இராமன்' என்னும் செம்மை சேர் நாமம் தன்னை,
கண்களின் தெரியக் கண்டான்....."

************

No comments:

Post a Comment