கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை ...... இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் ...... பெருமாளே. பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை ...... தனமுலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய ...... பெருமாளே. உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறமுளை செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே. விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாண ...... மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின் விளை வேதும் ...... அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி ...... வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர ...... அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம ...... முறைகூற அடையலவர் ஆவி வெருவஅடி கூர அசலுமறி யாமல் ...... அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை ...... முக |
மனித உடலின் ஆதாரங்களில் முதல் ஆதாரம் மூலாதாரம். மூலம், ஆதாரம் இரண்டும் ஒரே பொருள் தருவன்.
மனிதனில் மூலாதாரம் அழுக்குகள் நிறைந்த இடம். ஆதார சக்தியானவள் அந்த அழுக்குகளில் இருந்தே மூலவரை தொற்றுவித்து முதல் தடையை தீர்த்து வைக்கிறார். மூலாதாரம் தொடங்கி முதல் மூன்று ஆதாரங்களும் உலகியல் இச்சையை தூண்டுவன. அங்கே எழுச்சியுண்டாகும் போது உடல் இச்சை அதிகமாக இருக்கும். இவைகளை கடந்தே ஒருவரின் ஆன்ம பயணம் தொடங்கியாக வேண்டும். மூலாதாரத்தின் குண்டலின் சக்தி தன்னை அடைய இறைவன் திருவுளம் கொண்டால் அங்கே இந்த முதல் மூன்றும் முதல் தடையாக எழும். இறைவனை அடையும் வைராக்கியம் மிகப்படும் போது இத்தடைகளை அவரே தலையை கொய்து அழித்து விடுவார்.
ஆனால் இந்த முதல் மூன்று சக்திகளும் ஆன்ம பயணத்திற்கு மிகுந்த தேவைப்படுவன. அதை முழுவதுமாக அழித்தல் உடல் உள்ளவரை சாத்தியமில்லை. ஆனால் சக்தி கொள்கை படி அதை ஒரு சக்தியில் இருந்து இன்னொரு சக்தியாக மாற்றிவிட முடியும். வடக்கு நோக்கிய ஆன்ம பயணத்தை முனைப்புடன் தொடங்கும் போது இந்த சக்திகளை உடல் இச்சை தருவதை விடுத்து ஆன்ம பயணத்திற்கு முழுமனதுடன் துணை புரியத் துவங்கும்.
முதல்வன்
முறையாக குண்டலின் யோகம் பயில்பவர் எந்த புனிதச் செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் முதலில் மூல பந்தம் செய்துவிட்டால் உடல் சிலிர்த்து பிராணன் கால் முதல் தலை வரை உடல் முழுவதும் பரவும். இதைச்செயது விட்டால் ஒருவருக்கு அந்தசெயலில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு எந்த தடைகளையும் தாண்டி வரும் ஆற்றல் தானாக வந்துவிடும். இதனாலேயே விநாயபெருமாளுக்கு எல்லாவற்றிலும் தானாக முதல் இடம் கிடைத்து விடுகிறது.
முப்புரங்கள்
சிவன் தலை கொய்தது இருவருக்கு. பிரமன் மற்றும் விநாயகர். பிரமன் மற்றொரு ஆதாரத்தின் அதிபதி. இன்னொருவரை முக்கண்ணால் எரித்துவிட்டார் அவர் மன்மதன். ஆக முதல் மூன்று ஆதாரங்களையும் தாண்டி வருவதற்கு மூன்றாவது கண்ணை திறக்க வேண்டும். இது ஆக்ஞா தியானத்தால் கைகூடும்.
சிவம் முப்புரங்களை எரித்ததை திருமூலர் கூறும் போது;
அப்பணி செஞ்சுடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரோ
- பாடல் 343 - அட்டவிரட்டான ஸ்தலங்கள் - இரண்டாம் தந்திரம்
என்று முப்பரம் என்ற ஏதோ கோட்டைகளை சிவம் எரித்ததாக சொல்வார்கள், ஆனால் முப்புரம் என்பது மும்மல காரியமான ஆணவ கன்ம, மாயை போன்ற குணங்களே என்று தெளிவுற கூறுகிறார்.
அதே திருமூலர் "அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் " என்கிறார்.
.குண்டலினி
தென் குமரி முனையில் கன்னி சக்தி இறைவனை அடைய கடுந்தவம் இருப்பதாக கூறப்படுவதும் உடலின் தெற்கில் இருக்கும குண்டலி சக்தியானவள் உடலின் வடக்கில் சென்று சகஸ்ராரத்தை அடைந்து இறைவனில் இரண்டற கலக்க விரும்பி காத்திருக்கும் நிலை ஆகும்.
இரண்டு மனைவிகள்
விநாயகருக்கு இரண்டு மனைவிகளாக கூறுவார்கள். இறைவனிடத்தில் கூறப்படும் மனைவி என்ற ஸ்தானம் அவர்களது ஆற்றல் சக்தி ஆகும். சக்தியை பெண்மைக்கு உதாரணமாக கூறுவதால் அதை நாம் மனித நிலையில் இருந்து பகுத்துப்பார்க்கிறோம்.
விநாயருக்கு சித்தி, புத்தி என இரண்டு சக்திகள் உண்டு. இவை முறையே இச்சா சக்தி, ஞான சக்தி எனப்படும். இச்சா சக்தி மோகத்தை, ஒருவித தூண்டுதலை கொடுக்கும். ஞான சக்தி புத்தியை வளர்க்கும். இவைகள் இயல்பாக பிரமனுடன் படைப்புத்தொழிலுக்கு உதவும். எனவே தக்க தருணத்தில் இறைவனை நோக்கி திருப்பினால் நல்ல செயல்களை செய்ய. உதவிடும்.
ஆனைமுகத்தான்
ஆனை முகம் ஓங்காரத்தின் வடிவம். அதுவே மதம் என்ற ஆணவத்தின் அடையாளமும் ஆகும். ஒருபக்கம் ஒடிந்த தந்தம் ஆணவம் அழிந்த நிலை. ஆணவம் அழிந்து அதுவே ஞானத்திற்கும் பயன்படுகிறது. அதனால் அதை கையில் எழுதுவற்காக வைத்திருக்கிறார். அவரே இன்னொரு கையில் அங்குசம் வைத்திருப்பது ஆனையை (ஆணவத்தை) அடக்கும் கருவி. ஞாபக சக்திக்கும் ஆனையின் ஞாபகத்தை குறிப்பிடுவது கருத்தில் கொள்ளத்தக்கது.
ஞான சக்தியால் இச்சா சக்தியை இறைவன் துணையுடன் அடக்கி ஆள வேண்டும். ஆணவ அசுரனை அழித்ததும் இதே முருகனின் ஞானவேல் ஆகும். முழுவதும் அழிக்காமல் அதுவே ஆக்க சக்தியாகவும் பயன்படுகிறது. இது சக்தி உருமாற்றம்.
கணங்களின் அதிபதியான கணபதியின் பொருள் உணர்ந்து இறைவனை நாடி அவன் அருள் பெறுவோம்
நன்றி : இணையம்.
பெரியோர்களே, இது என்னுடைய அறிதல், புரிதல் மட்டுமே. தவறு இருப்பின் திருத்தவும்.
அவருடைய அவதாரங்களில் அவருக்கு இடத்திற்கேற்ற பெயர்கள் பல உண்டு. கணபதி, கணேசன், மூலகாரணக் கடவுள், அனந்தர், பூரணர், மூலாதாரர், ஞானக்குன்று, வேதவித்து, பரிபூரணர்... மேலும் பல பெயர்கள் உண்டு. பெயர்தான் இடத்துக்கு இடம் மாறிக் கொண்டிருந்ததே தவிர, முழு முதற் கடவுளாக அவர் மட்டுமே இருக்கிறார்.
வைணவக் கோயில்களிலும் விநாயகர் திருஉருவம் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. அப்படி வைணவத் தலங்களில் இருத்தப்பட்ட பிள்ளையாரை "தும்பிக்கையாழ்வார்" என்று வணங்குகின்றனர். எல்லாக் கோயில்களிலும் பிள்ளையாருக்கு ஒரு சன்னதி இருக்கும் அல்லது ஒரு மாடத்திலாவது பிள்ளையாரை அமர்த்தி இருப்பார்கள். தமிழகம் முழுவதும் பிள்ளையாருக்கென பல கோயில்கள் உண்டு. ஆனால், ஊரின் பெயரிலெயே பிள்ளையாரைக் கொண்டிருப்பது பிள்ளையார்பட்டி.
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில்.
பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலையும் சுற்றியுள்ள வயல்வெளிகளையும் நகரத்தார்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.
இத் தலம் காரைக்குடியிலிருந்து 12 வது கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடியை அடுத்து அமைந்திருக்கிறது. திருப்பத்தூரிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது.
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இத் தலத்தில் அமர்ந்திருப்பவர் கற்பக விநாயகர். இத்தலத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை மக்கள் கற்பக விநாயகர் என்றே அழைக்கின்றனர். ஆனால், அவருக்கு தேசி விநாயகர் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க விநாயகர், அழகுள்ள விநாயகர் என்று பொருள். தேசிகன் என்ற சொல் வணிகர்களைக் குறிப்பிடும் சொல். வணிகர் குலம் தழைக்க அருள் புரியும் விநாயகர், கற்பக விநாயகர்.
"கற்பக விநாயகர்" திரு உருவம் காலத்தால் பழைமை வாய்ந்த வடிவமாகும். வலது கையில் ஒரு சின்ன லிங்கமும் இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கும். வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும் தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல், வயிற்றை முப்பட்டையாலான உதரபந்தம் அலங்கரிக்க தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் இடமே பிள்ளையார்பட்டி.
விநாயகர் சுயமுகாசுரனைக் கொன்றுவிட்டு, இந்தப் பழியிலிருந்து மீளவே வடக்கு முகமாக அமர்ந்து சிவனை நோக்கி தவம் இருப்பதாக ஐதீகம்.
கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. கற்றளியை அமைத்த பெருமை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெரும்பணி.
தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். அமைப்பிலும் அழகிலும் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து மாறுபட்ட வடிவமுடையது. பெரும்பாலும் முகப்புத் தூண்களும் அரைத் தூண்களும் இல்லாத குடைவரைக் கோயில்கள் அமைந்ததில்லை, இது ஒன்றைத் தவிர.
விநாயகர் சந்நிதிக்கு எதிர்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாகச் சென்று வழிபாடு முடித்து கிழக்கு ராஜ கோபுர வாயில் வழியாக வெளியே வரவேண்டும். இதுவே மரபாகக் கொண்டுள்ளனர்.
வடக்கு கோபுர வாயிலின் வழியாக நுழைந்ததும் இரண்டு பக்கங்களிலும் அழகான மண்டபங்களைக் கொண்டுள்ளது. உள்ளே குடைவரைக் கோயிலைக் குடைந்து அமைக்கப்பட்ட ஆறு அடி உயர கற்பக விநாயகர் அர்த்தச் சித்திரமாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிர்புறமாக கொடிமரமும் பலி பீடமும் பெரிய மூஞ்சூறின் உருவமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.
இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. கற்றளி எனப்படும் இந்த மருதீசர் சந்நிதி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணியால் சிறப்பிக்கப்பட்டது. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.
மருதீசர் கோயிலை வலம் வருவதற்காக எழுப்பப்பட்டுள்ள திருச்சுற்றுப் பாதை நல்ல நீள, அகலத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சுற்று மாளிகையின் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களையும், மாளிகைப்பத்தியில் இருக்கும் பரிவார தெய்வங்களையும் நேரில்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைக்கப்பட்டிருப்பதைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகளே இல்லை.
மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. நகரத்தாரின் முதல் திருப்பணியின்போது இச்சந்நிதி அமைக்கப்படு அம்மன் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.
கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தைவிட காலத்தால் பழைமை வாய்ந்தது இக்கோபுரம்.
விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்ப்ரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.
பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.
சதுர்த்திக்கு விரதம் இருப்பவர்கள் விரதத்தை முடித்து, உண்ணா நோன்பிருந்து, அபிஷேகம் நடத்தி விரதப் பலனை அடைகிறார்கள்.
அருகாமையிலுள்ள பேருந்து நிலையங்கள்: காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை
அருகிலுள்ள ரயில் நிலையங்கள்: காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையங்கள்: மதுரை, திருச்சி
விநாயகர் சிலை முன்பு மிகவும் பணிவுடன் உடலை சாய்த்து நின்று முதலில் வலக்கையால் நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக் கொள்ள வேண்டும். வலது கையால் இடப்பக்கத்திலும், இடது கையால் வலப்பக்கத்திலும் மூன்று முறை குட்டி ,காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட வேண்டும். தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளும் அவ்வாறே நொறுங்க வேண்டுமென அவரிடம் பணிவாகக் கேட்க வேண்டும். அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கித் திரும்ப வேண்டும். விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும். இதற்காக புராணங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?
அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.
கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.
தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.
அருகம்புல் மாலை ஏன்?
வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.
32 விநாயகர் மூர்த்தங்கள்
- பாலகணபதி
- தருணகணபதி
- பக்தகணபதி
- வீரகணபதி
- சக்தி கணபதி
- துவிஜ கணபதி
- சித்தி கணபதி
- உச்சிட்ட கணபதி
- விக்ன கணபதி
- க்ஷிப்ர கணபதி
- ஹேரம்ப கணபதி
- லட்சுமி கணபதி
- மஹா கணபதி
- விஜய கணபதி
- நிருத்த கணபதி
- ஊர்த்துவ கணபதி
- ஏகாட்சர கணபதி
- வர கணபதி
- திரயாக்ஷரகணபதி
- க்ஷிப்ரபிரசாத கணபதி
- ஹரித்திரா கணபதி
- ஏகதந்த கணபதி
- சிருஷ்டி கணபதி
- உத்தண்ட கணபதி
- ரணமோசன கணபதி
- துண்டி கணபதி
- துவிமுக கணபதி
- மும்முக கணபதி
- சிஙக கணபதி
- யோக கணபதி
- துர்க்கா கணபதி
- சங்கடஹர கணபதி
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
- விநாயகர் அகவல்
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.jaishreeganesha.com%2F&h=jAQDnN_BYAQD33y9457L9aZM6on8mtYWpicCqYVuXPXapJQ
No comments:
Post a Comment